
Mannikkavasagar's
Thiruvasagam
திருவாசகம் - திரு அம்மானை (மாணிக்க வாசகர் அருளியது)
This Etext file initially prepared in Mylai format by K. Kalyanasundaram,
Lausanne, Switzerland. This webpage presents Etxt in Tamil script but in Unicode encoding.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website
http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
திரு அம்மானை
(திருவண்ணாமலையில் அருளியது -
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )
செங்கண் நெடுமாலுஞ்
சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள்
பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன்
பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே
பாடுதுங்காண் அம்மானாய். 175
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான்
பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய்
மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176
இந்திரனும்
மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும்
ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண்
அம்மானாய். 177
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று
வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178
கல்லா மனத்துக்
கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப்
பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண்
அம்மானாய். 179
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் திIட்டார்
மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச்
சிவங்காட்டித் தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி நாட்டார்
நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன்
பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை
ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானப்
பாடுதுங்காண் அம்மானாய். 181
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி
வியன்மண்ட லத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து
கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.
182
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா
ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான்
அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம்
வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய
வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந்
தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார்
கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார்
நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா
ருள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட
என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்தந் தானேயாய்
யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய்
வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ்
செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா
றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த்
தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை ஊனையும் நின்றுருக்கி
என்வினையை ஒட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல்
வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண்
அம்மானாய். 188
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும்
அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே
பாடுதுங்காண் அம்மானாய். 189
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குந்
தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய்
அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடிமுயங்கி
மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச்
சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி ஆடுவேன்
சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும்
பாதியானை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறாலச் சீரார்
பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென்
உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞசுனைப்
பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக்
காவானைத் தெண்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193
பெற்றி பிறர்க்கரிய
பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்
வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே
ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194
திருச்சிற்றம்பலம்
|