|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Culture & the Tamil Contribution to World Civilisation > Spirituality & the Tamil Nation > Saiva Mystics > The Twelve Thirumurai > Mannikkavasagar's Thiruvasagam & tirukkOvaiyAr >1. சிவபுராணம் > 2. கீர்த்தித் திரு அகவல் > 3. திருவண்டப் பகுதி > 4. போற்றித் திருஅகவல் > 5. திருச்சதகம் > 6. நீத்தல் விண்ணப்பம் > 7. திருவெம்பாவை > 8. திரு அம்மானை > 9. திருப்பொற் சுண்ணம் > 10. திருக்கோத்தும்பி > Hymns 11-51 > திருக்கோவையார்
This Etext file initially prepared in Mylai format by K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
© Project Madurai 1998-2001. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பொருள் அடக்கம்
11. திருத்தெள்ளேணம் (235 - 254)
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)
13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)
14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)
15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)
16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)
17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)
18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)
19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377) மின்பதிப்பு
21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)
22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)
23. செத்திலாப் பத்து (398 - 407)
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)
25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)
26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)
27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)
28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)
29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)
30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (468 - 474)
31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484)
32. பிரார்த்தனைப் பத்து (485 - 495)
33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505)
34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலாடுதல் (506 - 515)
35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525)
36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (526 -535)
37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545)
38. திருஏசறவு (546 - 555)
39. திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558)
40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568)
41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578)
42. சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588)
43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598)
44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604)
45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)
46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616)
47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627)
48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 - 634)
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642)
50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649)
51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661)
திருச்சிற்றம்பலம்
11. திருத்தெள்ளேணம்
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 237
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 238
அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 239
அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 240
ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 241
கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242
கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244
கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 245
முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 246
பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247
மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால்
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 248
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம்
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249
புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 252
விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253
குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254
திருச்சிற்றம்பலம்
Back
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்
(தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257
அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258
தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266
மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267
தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274
திருச்சிற்றம்பலம்
Back
13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல்
(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275
எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277
பண்பட்ட தில்லைப் பதிfக்காசைப் பரவாதே
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ. 280
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 282
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294
திருச்சிற்றம்பலம்
Back
14. திருஉந்தியார் - ஞான வெற்றி
(தில்லையில் அருளியது- கலித்தாழிசை)
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழந்தன முப்புரம் உந்தீபற. 297
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற. 298
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற. 299
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற. 302
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற. 303
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306
நாமகள் நாசி சிரம்மி மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 307
நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314
திருச்சிற்றம்பலம்
Back
15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317
கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால்
நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318
நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321
மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324
காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325
பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால்
பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328
திருச்சிற்றம்பலம்
Back
16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி
(தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
திருச்சிற்றம்பலம்
Back