தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > மனோன்மணீயம் - சுந்தரம் பிள்ளை

manOnmaNIyam (a poetical play)
by cuntaram piLLai

மனோன்மணீயம்
ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை (1855-1891)



Etext Preparation and Proof-reading: Mr. Siva Kumar Pillai,.Shangai, Republic of China
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



பாயிரம்

கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)

வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர்
போதமும் போய் தீண்டாப் பூரணமே - பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

எனவாங்கு

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.

(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.

பாயிரம் முற்றிற்று.



மனோன்மணீயம்
முதல் அங்கம் : முதற் களம்

(நேரிசை ஆசிரியப்பா)

1ம் சேவ:

புகழ்மிகு அருமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின். சீரிதே

2ம் சேவ:

அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்
எவ்விடம் வைத்தனை?

3ம் சேவ:

ஈதோ! நோக்குதி.

4ம் சேவ:

அவ்விடத் திருப்பதென்?

3ம் சேவ:

ஆரம் பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்,
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
"சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது, கேண்மின்!"

2ம் சேவ:

முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்!

4ம் சேவ:

எத்தனை பத்தி! எத்தனை கூட்டம்!
எள்விழற் கிடமில்லை. யான்போய்க் கண்டேன்!

3ம் சேவ:

உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்.

1ம் சேவ:

அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர்!
ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!
[ஜீவகன் வர]

யாவரும்: (தொழுது)

ஜய! ஜய! விஜயே! பவரா ஜேந்திரா!!
[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,
நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவராஜேந்திரா!!

ஜீவகன்

வருக! வருக! குருகிரு பாநிதே!!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்? தீதற வாதனத்து
இருந்தருள் இறைவ! என்பவ பாசம்
இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
[ஜீவகன் பாதபூஜை செய்ய]

சுந்தர:

வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க!
சுகமே போலும், மனோன்மணி?

ஜீவ:

சுகம். சுகம்.

சுந்தர:

இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?

ஜீவ:

உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
கூடல் மாநகர் குடிவிட்டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன நின்வரண். இமைப்பரு தேவருங்
கடக்கரும் இதன் றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமெக்கெலாம்
அத்த! நின் அருள்போல் அரணெது! குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே.

குடிலன்

ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தி!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்.
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ;

தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர்; அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது

மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
ஒருதலை யாக, உருவஞ் சிறிய

குருமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்.

வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழ்வெண் மருப்பும் வீசிக் காழகிற்
சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்

குங்கும முறித்துச் சங்கின மலருந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,

எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பொலிவுறல் கண்டனை
தொடுகடலோவெனெத்துணுக்குறும் அடையலர்
கலக்கத் தொல்லையுங் கட்செவிச் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவகழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந்தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந்த் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங்கிறிகளு மெண்ணில.

சுந்தர: (எழுந்து)

சம்போ! சங்கர! அம்பிகா பதேஎ!
நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெலாம் கண்டுளேம்.
அல்லா துறுதி யுளதோ? சொல்லுதி!

ஜீவ:

என்னை! என்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகை
கொள்ளுவ ரென்பதும் உள்ளற்பா ற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே

சுந்தர:

காலம் என்பது கறங்குபோற் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முன்மனம்
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்
உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்
அத்திரு வுறையும் அப்புறம் போதல்
கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.

ஜீவ:

ஆம்! ஆம்!சேவக அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.
[அரசனும் முனிவரும், சீடரும் அப்புறம் போக]

குடிலன்: (தனதுள்)

நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!
(சேவகனை நோக்கி)
சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி

சேவ:

சுவாமி!
[குடிலன் முதலியோர் போக]

முதல் நகர்வாசி :

கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை ஆ!ஆ! வியப்பே மிகவும்
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?

2ம் நக:

கேட்டோம்; கேட்டோம் நாட்டிற் கென்குறை
விடு!விடு! புராணம் விளம்பினன் வீணாய்.

3ம் நக:

குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே

1ம் நக:

ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.

2ம் நக:

முனிவரங் கோதிய தென்னை? முற்றுந்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்

3ம் நக:

யாதோ
மனோன்மணி எனப்பெயர் வழங்கினர், அறிவைகொல்?

4ம் நக:

வாழ்த்தினர் போலும், மற்றென்?

2ம் நக:

பாழ்த்த இத்
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்.

3ம் நக:

ஐயமற் றதற்கேன்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையு னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரோ?

2ம் நக:

அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர், தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே

4ம் நக:

ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே

[நகர்வாசிகள் போக]
முதல் அங்கம்: முதற் களம் முற்றிற்று


முதல் அங்கம்: இரண்டாம் களம்

(ஆசிரியத் தாழிசை)

மனோன்மணி:

(கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூற்பவன்
அணைகில னரன்மின்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றனானென் றாடாய் கழல்

வாணி:

நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்

மனோன்:

இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்

வாணி:

எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்ததது பாதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்

மனோன்:

தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல்.

வாணி:

உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
(அந்நட ராஜரென்) றாடாய் கழல்
[பெருமூச்செறிய]
(நேரிசை ஆசிரியப்பா)

மனோன்: (சிரித்து)

ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே!

வாணி:

ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.

மனோன்:

மறையேல்! மறையேல் பிறைபழி நுதலாய்!
திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபொற்
சிவந்தவுன் கபோல நுவன்று நின்மனக்
களவெலாம் வௌியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.

வாணி:

ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான்கண் டேநாள் நாலைந் தாமே.

மனோன்:

ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேனெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணோய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.

வாணி:

(கண்ணீர் ச்ிந்தி)
எதனையான் இயம்புகோ! என்றலை விதியே
வா விளை யாடுவோம் வாராய்
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே

மனோன்:

ஏனிது! ஏனிது! வாணி! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக
மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.

வாணி:

எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா
தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய
அனுபவித் தன்றோ அகலும் மனையில்
தந்தையுங் கொடியன்! தாயுங் கொடியள்!
சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை
என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்
யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கடல் உலகில் வாழ்கிலன்
மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.

மனோன்:

முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
காட்டுங் கைரவ வாயாய்? உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
சூடிடிற் கேடென்? காதால்
வள்ளையி னழகெலாங் கொள்ளைகொ ளணங்கே!

வாணி:

அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்
இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரே?
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள வளவுமென் உளமே!

மனோன்:

வலம்புரிப் புறத்தெழு கலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய்! வாணீ!
பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன்மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்ன னுக்கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
பேய்கொண் டனையோ? பேதாய்?
வேய்கொள் தோழி விளம்பா யெனெக்கே.

வாணி:

அறியாயொன்றும், அம்மா! அரிவையர்
நிறையழி காதல் நேருந் தன்மை.
ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
ஆற்றவும் ஒக்குமென் றறைவர்
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே!

மனோன்:

புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
காதல் கொள்ளுதற் கேதுவும் இல்லையாம்!
தானறி யாப்பே யாட்டந் தானாம்!
ஆயினும் அமைந்துநீ ஆய்ந்திணர்ந்தோ துதி
உண்டோ இவர்தமி லொப்பு?
கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே!

வாணி:

ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்மா!
அம்மா போயிறந் ததுவே
மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே

மனோன்:

பித்தே பிதற்றினை. எத்திறமாயினும்
தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்.
காந்தள் காட்டுங் கையாய்!
தவிர்ந்து சாடியோடும் வகையே?

வாணி:

ஈதெல்லாம் உனக்குயா ரோதுதற் கறிவர்!
மாதர்க்குறியதிக் காதல்,
என்பதொன் றறியும் மன்பதை யுலகே.

மனோன்:

மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே
சுந்தர முனிவன் சிந்துர அடியும்.
வாரிசம் போல மலர்ந்த வதனமும்
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால் போல்
நரைதரு தலையுன் புரையறும் உடலும்,
மாந்தளிர் வாட்டு மேனி வாணி
எண்ணுந் தோறுங் குதித்து
நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே.

வாணி:

சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம் மட்டள வின்றிக்
காதல் கதவுங் காலை
ஓதுவை நீயே யுறுமதன் சுவையே.

மனோன்:

வேண்டுமேற் காண்டி அவையெலாம் வீண், வீண்
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினால் நாய்போ லோடிடும் வெருவில்
துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை
அடிக்கடி முனிவரிங் கணுகுவர் அஃதோ
அடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை
படர்சுழி யோடு பாய்திரை காட்டும்
வடதள வுதர வாணீ! மங்காய்!
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே

வாணி:

நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்?
நீறா கின்றதென் நெஞ்சம். நாளை
என்னுயில் தாங்குவ தெவ்விதம்
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?

மனோன்:

உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும்
மன்றல் வழுதிக் குரைக்க வருவதும்
மையின் புறச்சார் பலவ னொதுங்குவது
ஏயு மெழிற்கால் வாணி!
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே?

வாணி:

அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது
வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்
ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி.
நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை
பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே!
இனியென் செய்வேன்? என்நினைப் பாரோ?
மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள்
ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன்
யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்?
உயிரே யெனக்கிங் கொருதுணை
அயிரா வதத்தனும் அறியா வமுதே!
(அழ)

மனோன்:

அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெரிஞ்சிலா
அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண்
அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கருத்தே! ஏனிது! கருணைக் கடவுள் நின்
கருத்தே முடிப்பக் காண்டி. அஃதோ
மணங்கமழ் கோதையர் வந்தனர்.
அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே!
[செவிலியும் தோழிப் பெண்களும் வர]

செவிலி:

தாயே! வந்துபார் நீயே வளர்த்த
முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை
காதலிற் கவிழ்வை போலும்!
போதுநீத் தெம்மனை புகுந்த நற்றிருவே!

மனோன்:

போடி! நீ யாது புகன்றனை? தவத்தை
நாடிநா னிருக்க நணுகுமோ என்மனத்
துச்சமாம் இச்சையாற் சோர்வு?
நெருப்பையுங் கறையான் அரிக்குமோ நேர்ந்ததே!

முதற்றோழி:

பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு சந்தமார் முல்லை
நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை
இன்றிரா வலரு மெல்லாம்.
துன்றிரா நிகர் குழற்றோகாய்! வருகவே.

[எல்லோரும் போக]

முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


முதல் அங்கம்: மூன்றாம் களம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஜீவகன்:

நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியா மிடத்திற் றங்குக.
எங்கே யாகினுந் தங்குக நமக்கென்?
ஆவலோ டமைத்த நம் புரிசைய யவர்மிகக்
கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்?
குறைவென்? குடில! கூறாய் குறித்தே.

குடிலன்:

குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ!
நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
கூட லன்றெனுந் குறையொன் றுளது
நாடி லஃதலா னானொன் றறியேன்.
மேனுந் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலயம் ஒன்றையே அறிவர் முன்னொரு
கோவி லமைத்ததிற் குறைவிலா உற்சவம்
ஓவ லிலாதே உஞற்றுமி னென்றவர்
ஏவினர். அஃதொழித் தியற்றின மிப்புரி.
தலா லிங்ஙனம் ஓதினர். அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றோ குருவன் றோவவர்?

ஜீவ:

ஐயரும் அழுக்க றடைந்தார் மெய்ம்மை
கோவில் தானா காவலர் கடமை?
கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ!

குடில:

அதிசய மன்றுபூ பதியே! இதுவும்
துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
மனோகர மாகிய சினகர மொன்றில்
உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
நிலைபெறா நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னவர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்
கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன்
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்
இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?

ஜீவ: :

ஒவ்வும்! ஒவ்வும்! நீ உரைத்தது முற்றும்.

நாராயணன்:

(தனதுள்)
ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப்
பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை, தடுப்பார் யாரோ?

(நேரிசை வெண்பா)

நாரா:

(அரசனை நோக்கி)
கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா
வெறுமெலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
உறுமுவதென் நீயே யுரை
[சேவகன் வர]

(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)

சேவகன்:

மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.

ஜீவ:

வரச்சொல் சேவக!
(நாராயணனை நோக்கி)
உரைத்தநின் உவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா!

குடில: (தனதுள்)

அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்.
(அரசனை நோக்கி)
வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
குற்றங் காணக் குறுகுதல் முற்றும்
மணற்சோற் றில்கல் தேடுதல் மானும்
[சகடர் வர]

ஜீவ:

(சகடரை நோக்கி)
சுகமோ யாவரும் முதிய சகடரே!
மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றோ?

சகடர்:

ஆம்! ஆம்! அடியேன்.

ஜீவ: :

மேயின விசேடமென்? விளம்புதிர். என் குறை

சகடர்:

அறத்தா றகலா தகலிடங் காத்துப்
பொருத்ததோட் புரவல! உன்குடை நீழற்
பொருந்து மெங்கட் கரந்தையு முளதோ?
சுகமிது காறும் அகமகிழ் வுற்றுன்
மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது
முடிக்கநின் கருணையே முற்றும் வேண்டுவனே.

ஜீவ:

சீலஞ் சிந்தை கோல் மனைத்துஞ்
சாலவும் பொருந்தும் சகடரே! அதனால்
களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில!
ஒளித்ததென் நீ உரையா தெமக்கே?

குடில:

ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?

ஜீவ:

இடையூ றென்கொல்? இடியே றன்ன
படையடு பலதே வன்றான் ஏதோ
விரும்பினன் போலும் வேறோர் கரும்பே!

குடில:

இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்!
சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக

ஜீவ:

என்னை? சகடரே இடையூ றென்னை?

சகட:

பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும்
அடியனேன் சொல்பழு தாயின தில்லை.
முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள்.
ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
விரிதலைப் பேய்போல் வேண்டிய விளம்பியும்.
ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்;
நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை;
என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்
மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்
எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ!
உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்.
நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல்
தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை.
என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின்
இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச்
[கண்ணீர் துளிக்க]
செல்ல விடையளி செல்லதுங் காசி.

ஜீவ:

ஏனிது சகடரே! என்கா ரியமிது!
தேன்மொழி வாணி செவ்விய குணத்தான்
காணி லுரைப்பாம் வீணிவ் வழுகை.

நாராயணன்: (தனதுள்)

பாதகன் கிழவன் பணத்திற்காக
ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்,
ஓதுவங் குறிப்பாய், உணரி னுணர்க.
(நேரிசை வெண்பா)
(அரசனை நோக்கி)
மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
ஏற்றியநாண் விற்பூட்டுமேந்தலே- சோற்றதற்காய்த்
தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்
என் மகிமை யுள்ளா னினி.

(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)

ஜீவ:

தனிமொழி யென்னை?

நாரா:

சற்றும் பிசகிலை.
நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும்.

ஜீவ:

காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய்
கிழவனின் அழுகை.

நாரா:

சிலவரு டந்தான்
நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை

ஜீவ:

விடு,விடு, நின்மொழி யெல்லாம் விகடம்.
[நாராயணன் போக]
(சகடரை நோக்கி)
அறிவிர்கொல் அவளுளம்?

சகட:

சிறிதியா னறிவன்
திருநட ராசனென் றொருவனிங் குள்ளான்
பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.

குடில:

(அரசனை நோக்கி)
நல்லதப் படியே நடக்கிலேன்? இவர்க்கும்
பொல்லா முரண்டேன்?

சகட:

(குடிலனை நோக்கி)
போம்! போம்! உமது
குழந்தையேல் இங்ஙனங் கூறீர்! முற்றும்,
இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
பூவையை வளர்த்துப் பூனைக்கீயவோ?
(அரசனை நோக்கி)
காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான்;
தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்;
எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்;
பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்;
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

ஜீவ:

ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சிலகால்
நின்றால் நின்ற படியே; அன்றி
இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்;
சிரிக்கினும் விழிக்கினும் நலமலை தீயதே.
அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில்..

குடில:

அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்.

ஜீவ:

அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே;
எங்கவன் இப்போது?

குடில:

இங்குளன் என்றனர்.
சிதம்பரத் தனுப்பினேன்; சென்ரிலன் நின்றான்;
இதந்தரு நின்கட் டளையெப் படியோ?

ஜீவ:

மெத்தவும் நன்மை அப்படி யேசெய்

குடில:

சித்தம்; ஆயினும் செல்கிலன்; முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்,

ஜீவ:

சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
(சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம் விடுமினித் துயரம்;

சகட:

இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி;
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
[சகடர் போக, செவிலி வர]

ஜீவ:

(செவிலியின் முக நோக்கி)
என்னை இவள் முகம் இப்படி இருப்பது
தோற்றம்நன் றன்றே!

செவிலி:

நேற்றிரா முதலா-

ஜீவ:

பிணியோ என் கண்மணிக்கு?

செவிலி:

பிணியா
யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்

ஜீவ:

சுரம்! சுரம்! ஓ! ஓ! சொல்லுதி யாவும்
அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்
வந்துவா றென்னை? நடந்தவா றென்னை?

செவிலி:

அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
நம்மனை புகுந்த செல்வி, எம்முடன்

மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
நிலவொளி நீந்திநம் நெடுமுற் றத்துப்

பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
துணைபுண ரன்னத் தூவி யணை மிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ -
"நண்ப! என்னுயிர் நாத' வென் றேங்கிப்
புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்

துண்ணென யாந் துயி லகற்றப் புக்குழி
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெரியும்;

நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி வவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம்; செய்கட நேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம்; பூதி;
மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்,
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவா மம்மர் வளர்க்கக் கண்டு
நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
"கா கா இவளைக் கா' வெனக் கரைந்த;
சேவலுந்த் திகைத்துத் திசை திசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
அரச! நீ அறியிலெஞ் சிரசிரா வென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்;
எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்;

பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்;
ஏது மறியாப் பேதை! நேற்றுத்
தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
காதனோய் காணவோ ரேதுவு மில்லை,
எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ

வந்தே காண்குதி மன்னவ ரெறே!

ஜீவ:

ஆ! ஆ! நோவிது காறுமொன் றறிகிலள்
இதுவென் புதுமை? என்செய் கோயான்?

குடில:

தவஞ்செய சை யென்றுதாய் நவின்ற
வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்

செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ?

ஜீவ:

வறிதவ் ஐயம்
மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி
அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்;
ஆசி பேசியங் ககலுங் காலை
ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
அறையுட நங்கணந் திறவுகோ லோடு
தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே.
நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
என்னோ அறியேன் விளைவு?
[ஜீவகனும் செவிலியும் போக]

குடில:

(தனதுள்)
யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்
எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின்
இத்திறங் காமம் என்பதிங் கறியான்;
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.

[குடிலன் போக]
முதல் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.



முதல் அங்கம்: நான்காம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)

ஜீவகன்:

உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே!
உனக்குறு துயரம் எனக்குரை யாததென்?
விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்;
வருத்துவ தென்னென வழக்கின் மாய்ப்பன்
உறுத்துங் கூற்றுவ நாயினும் ஒறுத்தே
தாய்க்கு மொழித்த சூலோ? தையால்!
வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்!
ஏதா யினுமெனக் கோதா துளதோ?
பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங்

களங்கம் வந்த காரண மெதுவோ?
பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
இசையது விரித்தோர் பிசித மரமேல்
இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன்
திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிய

போயது கண்டு, சேயதோர் போந்தையில்
தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன்
பாடிய இசையே கூவிட உன்னி
நாடி நாடிப் பாடியும் வராது
வாடி வாயது மூடி, மௌனமாய்

வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில்
தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
பேதாய்! இன்றெனக் கென்னோ
ஓதா யுன்றன் உளமுறு துயரே!

செவிலி:

உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச்
சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச்
சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில்
யாம்படுந் துயரம் அறிந் துங்,
காம்படு தோளீ! கருதாய் போன்மே.

ஜீவ:

ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ!
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி

நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்!
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
கனியென வுனையான் கண்டநாள் தொட்டு

நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
என்மிகை நீக்கி இன்பமெய்தி,
உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
உயிர்தரித் திருந்தேன்; செயிர்தீ ரறமும்
வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந்

தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன்
எங்குங் கலந்த இயல்பா லன்றோ
மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!
உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்,
எதுவோ வுறுதி யியம்பாய்?

மதிகுலம் விளங்க வருமனோன் மணியே

மனோன்:

(கண்ணீர் தளும்பி)
> எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு
வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை;
உரைக்கற் பாற்றதொன் றில்லை;
உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே?

ஜீவ:

குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ
அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரை
கண்டது மிலை; யான் கேட்டது மிலையே;
பெண்களின் பேதமை யென்னே! தங்களைப்
பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும்,
விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.

(வாணியை நோக்கி)
என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய்!
மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்
அருங்கலை யாய்ந்தநின் தந்தை சொன்மதியும்,
உன்புத் தியுமுகுத் திழல்வதென் வம்பில்?

நலமே சிறந்த குலமே பிறந்த
பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்
தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
நச்சிய தென்னை? சீச்சீ!
நகை யாகும்நீ செயும் வகையே.

வாணி:

அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே
நிகழுமென் சிறிய நினைவெலாம் விரிந்து
விநயமாய் நின்பால் விளம்ப எனது
நாணம் நாவெழா தடக்கு மாயினும்
பேணி யொருமொழி பேசுவன்,
நேசமில் வதுவை நாசகா ரணமே.

ஜீவ:

புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப்
பெற்றா ராற்றுவர்! ஆற்றிய வழியே
தையலார் மையலாய் நேயம் பூண்டு
வாழ்வது கடமை; அதனில்
தாழ்வது தகுதியோ தருமமோ சாற்றே.

வாணி:

கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்;
ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும்
ஆக்கப் படும்பொரு ளாகுமோ? நோக்கில்
துன்பே நிறையும் மன்பே ருலகாம்

எரியுங் கானல் விரியும் பாலையில்
திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
தங்கி அங்கவர் அங்கங் குளிரத்
தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்
நேருந் தாகம் நீக்குவான் நிமல

ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்
ஆறலை கள்வர் அறுபகை மீறில்
உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும்
இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி,
இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,
நின்ற காதலின் நிலைமை, நினையில்,

இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
இருவர் சிந்தையும் இயல்பா யுருகி
ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
ஆக்கப் படும்பொரு ளாமோ?
வீக்கிய சுழற்கால் வேந்தர் வேந்தே!

ஜீவ:

ஆமோ அன்றோ யாமஃ தறியேம்;
பிஞ்சிற் பழுத்த பேச்சொழி; மிஞ்சலை;
மங்கைய ரென்றுஞ் சுதந்தா பங்கர்;
பேதையர்; எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர்;
முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ

பெரிது?மற் றவர்தமில் உன்னயம் பேண
உரியவர் யாவர்? ஓதிய படியே
பலதே வனுக்கே உடன்படல் கடமை

வாணி:

இலையெனில்?

ஜீவ:

கன்னியா யிருப்பாய் என்றும்.

வாணி:

சம்மதம்.

ஜீவ:

கிணற்றிலோர் மதிகொடு சாடில்
எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்!
கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்?
அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?

வாணி:

விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்?

ஜீவ:

நானே பிடித்த முயற்கு மூன்றுகால்
ஆனால் எங்ஙனம்?

வாணி:

அரிவையர் பிழைப்பர்? (சேடி வர)

சேடி:

சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.
கால நோக்கினர்

ஜீவ:

சாலவு மினிதே;
ஆசனங் கொணர்தி.

(வாணியை நோக்கி)
யோசனை வேண்டாம்
எப்படி யாயினிஞ் சகடர் சொற்படி
நடத்து வம்மன்றல்; நன்குநீ யுணர்தி;
ஆயினுந் தந்தனம் ஐந்துநாள்;
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே.

வாணி:

இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்;
பொறுத்தருள் யானிவண் புகன்ற
மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே.
[சுந்தர முனிவர் வர]

ஜீவ:

(முனிவரை தொழுது)
வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி;
இருந்தரு ளுதியெம் இறைவ!
பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே.

சுந்தர:

(மனோன்மணியை நோக்கி)
தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்
ஏதோ மனோன்மணி, ஓதாய்
வேறுபா டாய்நீ விளங்குமாறே

மனோன்மணி:

(வணங்கி)
கருணையே யுருவாய் வருமுனீ சுரரே
எல்லா மறியும் உம்பாற்
சொல்ல வல்லதொன் றில்லை சுகமே.

செவிலி:

(மனோன்மணியை நோக்கி)
கரும்பே, யாங்கள் விரும்புங் கனியே!
முனிவர் பாலுநீ யொளிப்பையே னிலிங்கு
யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்?
(முனிவரை நோக்கி)
ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள்
தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்
மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்
மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்;
நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்;
முடியாள் குழலும்; படியாள் இசையும்;

தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்;
அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்;
மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்;
தூங்குவல் போன்றே ஏங்குவள்; எளியை
நோக்குவள் போன்றே நோக்குவள் வௌியை;

கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்;
மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்;
தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்!
விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்;
இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ?

வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள்
அரசன் கேட்டும் உரைத்திலள் அன்பாய்!
முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின்
எவருடன் இனிமேல் இசைப்பள்?
தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே!

சுந்தர:

(ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாதருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகுங்
காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும்; தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில் நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள தருவை யவாவும் அடையின்
முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும்; அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே.

ஜீவ:

எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே

சுந்தர:

உலகுள மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய
சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து
புகழ்மணங் கமழும் குணம்பல பூத்து
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
கனியுங் கருணையே கனியாக் காய்த்து;
தருமநா டென்னும் ஒருநா மங்கொள்
திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்
நீங்கி லில்லை நினது
பூங்கொடி படரப் பாங்காந் தருவே.

ஜீவ:

நல்லது தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த இறைவ!
நடத்துவன் யோசனை பண்ணை நன்றே

சுந்தர:

யோசனை வேண்டிய தன்று நடேசன்
என்றுள னொருவன்; ஏவில்;
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கலே

ஜீவ:

கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி...

சுந்தர:

(எழுத்து)
அரகர! குருபர! கிருபா நிதியே!
காவாய் காவலன் ஈன்ற
பாவையை நீயே காவாய் பசுபதே!
[சுந்தர முனிவர் போக]

ஜீவ:

தொழுதோம்; தொழுதோம்; செவிலி யவ்வறைக்
கெழுதுங் கருவகள் கொணராய்
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே

[ஜீவகன் முதலியோர் போக]

முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.



முதல் அங்கம்: ஐந்தாம் களம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)

குடிலன்:

(தனிமொழி)
புத்தியே சகல சக்தியும்! இதுவரை
நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே
உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த
மதுரையாம் முதுநகர விடுத்து மன்னனை
புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங்
கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே;
நாமே யரசும் நாமே யாவும்;
மன்னவன் நமது நிழலின் மறைந்தான்;
பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்
மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ?
இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே
அரச ராகுவர்?
[மௌனம்]
புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்
வெருளுவர். வெல்லார். ஆயினும் -
முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ?
கருவியுங் காலமும் அரியில் அரியதென்?
ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்
மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும்
அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக்
கண்டு காமங் கொண்டவ ளல்லள்;
பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள தெட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும் பலதே வனையவள்
இடமே பலமுறை யேவி லுடன்படல்
கூடும். கூடிலென் கூடா?
யாவன் அஃதோ வருமொரு சேவகன்?
[சேவகன் வர]

சேவகன்:

ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திர!
[திருமுகம் கொடுக்க]

குடில:

(வாசித்து நோக்கி)
நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ!
சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்.
(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)
அடுத்தது போலும் இம்மணம், அவசியம்
நடக்கும் நடக்கிலென்? நமக்கது நன்றே
அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்;
பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்
வாழான் வழுதி வஞ்சி நாட்டார்க்குத்
தாழார் இந்நாட்டுள்ள ஜனங்களும்

அதுவும் நன்றே - ஆயினுங்
கால தாமதஞ் சாலவு மாகும்;
வேறொரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ!
மாறன் மாண்டான்; மன்றலும் போனது;
சேரன் இறுமாப் புடையதோர் வீரன்

ஆமெனப் பலரும் அறைவர். அதனால்
நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன்
மெள்ள அவன்றான் செருக்கினைக் கிள்ளிற்
படைகொடு வருவன்; திண்ணம்; பாண்டியன்
அடைவதப் போதியாம் அறிவம்.

போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார்இற வார்கள் யார் அறிவார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்

சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும். யாரே
நாடுவர் ஆதியை? நன்றி நன்றிது!
தோடம்! - சுடு! சுடு!

தீது நன்றென ஓதுவ தெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்

கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்;
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப்படி வரும்
பார்க்குதும் ஒருகை சுந்தரன் யந்திரங்

காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரங் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
உத்தம உபாயம் ஓகோ! சேவக!

சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரைக் கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம் எ! ஏ! சேவக!
[சேவகன் எழுந்து வர]
இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல்
என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.

(நேரிசை ஆசிரியப்பா)

சேவகன்:

வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல்
ஏழுல கெவற்றிலும் உண்டோ?
வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே.

குடில:

நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில்
[சேவகன் போக]
(தனிமொழி)
மதியிலி! என்னே மனிதர் மடமை!
இதுவும் உதாரமாய் உண்ணினன்; இங்ஙனம்
தருமந் தானம் என்றுல கறியுங்
கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக்
காணின் நாணமாம்; அவரவர் தமக்கா
எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும்
பண்ணுவர் புண்ணியம் போல எல்லாந்
தந்நயங் கருதி யன்றித் தமைப்போற்
பின்னொரு வனையெணிப் பேணுவருளரோ?
புண்ணியஞ் ஜீவகா ருண்ணிய மெனப்பல
பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல்
யாத்திரை போன நூற்றுவர் சோறடு
பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக
ஒருவரு யொருவர் ஒளித்துப் பருமணல்
இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு
எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி?
ஆயினும், அரசனைப் போலிலை
பேயர் பெரிய மேதினி யெங்குமே.

முதல் அங்கம்; ஐந்தாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

முதல் அங்கம் முற்றிற்று.



இரண்டாம் அங்கம் : முதற் களம்

(நேரிசை ஆசிரியப்பா)

ஜீவகன்:

சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே!
புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு
மருமா னாகமதித் ததும் அவரே;
என்றுங் குழந்தை யன்றே; மன்றல்
விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது
வரையும் மறதியா யிருந்தது தவறே
யாம்இனித் தாமத மின்றியிம் மணமே
கருமமாய்க் கருதி முடிப்பாம்;
வருமுன் கருதும் மந்திர வமைச்சே!

குடிலன்:

இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம்
அறைவதெப் படியான்? அநேக நாளாப்
பலமுறை நினைந்த துண்டிப் பரிசே;
நலமுறப் புரிசை நன்கு முடியும்
அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்
சற்றும் மறந்தே னன்று; தனியே
கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை
விட்டுள தோஇனி வேறொரு காரியம்?
புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன்
காண்டரும் ஆண்டகை யென்றும் ஞானம்
மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந்
திரியுந் தவசிகள் உரைசெய யானுங்
கேட்டதுண்டு; மற்றவன் நாட்டிற்கு
இன்றே தூதுவ ரேவின், மங்கையை
மன்றல் செய்வான் மனதோ வன்றோ
என்றியாம் அறியலாம் எளிதில்; அறியார்
பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும்
இலை இன் றேதூ தேவுவம்
பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே
பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?

ஜீவ:

பகருதி வௌிப்படப் பண்பாய்
நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே!

குடில:

எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்;
கண்ணகன் ஞானங் கழறும் பலவிதம்.
மணஞ்செய முதன்முதற் பேசி வருதல்
இணங்கிய ஆடவ ரிலுள் ளாரே;
அன்றி யாடவர்த் தேடி மன்றல்
சாற்றிதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்
முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும்

ஜீவ:

கூடா தஃதொரு காலும்; குடில!
கேடாம் நமது கீர்த்திக் கென்றும்;
மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்;
என்னே ஆத்திரம்? நமது
கன்னியை விழையும் மன்னருங் குறைவோ?

குடில:

குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ!
மூவரும் தேவரும் யாவரும் விரும்புங்
கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்
கணக்கிட லாமோ? கலிங்கன் சோழன்,
கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர்
மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன்
குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்
கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;
வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில்
நேரான்; மகதன் தீராத் தரித்திரன்;
இன்னம்