|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன் > பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? > புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - அக்கினிப்
பிரவேசம்
| மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது... மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது. நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர். - வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது. "ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன. வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது. "பை... பை..." "ஸீ யூ!" "சீரியோ!" - கண்டக்டரின் விசில் சப்தம். அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ். பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர். மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது. வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது. அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன. பஸ்ஸைக் காணோம்! அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது. எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள். ...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது. பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது. "ஹேய்... இட் இஸ் மை பஸ்!..." அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கிறாள். "பை... பை..." "டாடா!" கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து 'பிரஸ் பட்டன்' வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... 'இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்' என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்... அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களூம் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்... "பஸ் வரலியே; மணி என்ன?" என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி. "ஸிக்ஸ் ஆகப் போறதுடீ" என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், "அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்" என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள். "ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்" என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி... "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ" என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள். பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள். "பை... பை!" "தாங்க் யூ! என் பஸ்ஸீம் வந்துடுத்து" என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸீக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களூம் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான். அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது. அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட்வரை விழிகளை ஓட்டி ஓர் ஆச்சரியம் போலப் பார்க்கிறாள். அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான். "ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்" என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான். அவனது முகத்தைப் பார்த்த அவளூக்குக் காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; "நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு... மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..." "ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்" என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை... அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான். இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே... "ம்... கெட் இன்." இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே... அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது. அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது. 'ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்' என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளூக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள். "இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?... ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இதுமேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு 'ஜம்'னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹீம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!" - "அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்" அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான். அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் 'பவரை வேஸ்ட் பண்ணப்படாது' என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள். பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள். 'ஹம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே' என்று மனத்திற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - 'டப்' என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - 'அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே'- ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான். "தாங்ஸ்" - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - 'அப்பா, என்ன வாசனை!' - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள். ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் 'அம்மா'' என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களூம் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸீம் ஒரு பக்கம் உருளுகிறது. "ஸாரி" என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள். ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள். தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...! "இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?" "ஓ! எங்க வீடு அங்கே இருக்கு" என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன. "இருக்கட்டுமே, யார் இல்லேன்னா" என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். "என்னடி இது வம்பாப் போச்சு" என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள். கார் போய்க்கொண்டே இருக்கிறது. நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது. இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது. சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது. தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளூம் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ." 'நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?... இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது... அழுதா இவர் கோபித்துக் கொண்டு 'அசடே! இங்கேயே கிட'ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே... நாளைக்கு ஜீவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணணுமே! வேலை நிறைய இருக்கு.' அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் 'வைய்ப்பரை'யே வெறித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டு விடுகிறாள். "இப்ப நாம எங்கே போறோம்" - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான். "எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்..." "நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா..." "ஓ எஸ் திரும்பிடலாம்" - கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைத்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன. காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: "ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டெளனா?" அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடிஇடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான். அப்போது ரேடியோவிலிருந்து ஒரு 'ட்ரம்ப்பட்'டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ 'ட்ரம்'களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி 'உனக்குப் பிடிக்கிறதா' என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் 'ஆம்' என்று சொல்லித் தலை அசைக்கிறாள். ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு 'காட்பரீஸ்' சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள். அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, 'ஒட்டு உசரமாய்'. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது. "ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!" சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான். "எங்கே?" என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. "எங்கே போறீங்க?" "எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்" என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான். அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான். "என்ன அது?" "சூயிங்கம்." "ஐயே, எனக்கு வேண்டாம்!" "ட்ரை... யூ வில் லைக் இட்." அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள். "நோ!" - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான். அவளூக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறான்: "தாங்க் யூ!" அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது. அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கெளரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான். "டூ யூ லைக் திஸ் கார்?" "- இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: "ஓ! இட் இஸ் நைஸ்." அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: "உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?" என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள். "ரியலி...?" "ரியலி!" அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. "டூ யூ லைக் மீ?" 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?' "ம்" விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான். வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது. "ரொம்ப நல்லா இருக்கு இல்லே?" - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான். "நல்லா இருக் |