தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன்பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? >  புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

TAMIL LANGUAGE & LITERATURE

Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - சுயதரிசனம் (1965)

அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கெளரவமாகச் சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை 'வருந்துகிறோம்' ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் - விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த நீளக் கவரின் மீது 'சிவராமன், உதவி ஆசிரியர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதம்தான்!

அந்த நீளக் கவரின் வாய்ப்புறத்தை இரண்டு விரல்களால் பிடித்து லாகவமாக வளைவு வளைவாய்க் கிழித்துப் பிரிக்கிறான் சிவராமன். அதனுள் ஒரு கத்தைக் காகிதமிருந்தும் அதன் நடுவே இருந்து 'இது கடிதம்' என்று சொல்வதுபோல் தனியாக விழுந்த ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்கிறான் அவன்.

"சிரஞ்சீவி சிவராமனுக்கு அநேக ஆசிர்வாதம். பகவான் கிருபையால் உனக்கு சகல
செளபாக்கியங்களும் உண்டாகணும்.

உங்கள் எல்லாரையும் பார்த்து நேரிடையாகச் சொல்லிண்டு வராமப் போனதை நெனைச்சா கஷ்டமாத்தான் இருக்கு... இருந்தாலும் பரவாயில்லை. யோசிச்சுப் பார்க்கச்சே, ஆசையும் உறவும் மனசிலே ஆழமா இருந்தா, உதட்டோட சொல்ற வார்த்தையெல்லாம் அநாவசியம்னு தோண்றது. ஆனாலும் அப்படி யெல்லாம் நெனைச்சுண்டு ஒரு தீர்மானத்தோட நான் சொல்லிக்காம வந்துடல்லே. சொல்லிக்கறதுக்கு எனக்குத் தைரியம் வரலே... சொல்லிக்க முடியல்லே... அவ்வளவுதான்; வந்துட்டேன். ஆமாம்; எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறதுகூட சுலபம்; சொல்றதுதான் கஷ்டமாயிருக்கு.... அதான் சிரமம். நன்னா யோசிச்சுப் பாரு. நீ யோசிக்கிறவன்; கதை எழுதறவன்... நல்லதும் கெட்டதுமா எத்தனையோ விஷயங்களைச் செஞ்சுடறோம்... அதையெல்லாம் அலசிப் பிச்சுச் சொல்றதுன்னா முடியற காரியமா? நான் இப்படி ஓடி வந்துடறதுன்னு முடிவு பண்ணிண்டு உங்ககிட்டேயெல்லாம் சொல்லிண்டு போக வந்திருந்தேன்னா... சொல்லி இருப்பேன் - கடைசியிலே மனசு கேக்காம அங்கேயே உக்காந்துண்டிருந்திருப்பேன். எனக்குத் தெரியும்; நான் போறேன்னா நீங்க யாரும் அழமாட்டேள்னு... ஆனா நான் அழுவேனே!... உன் ஆத்துக்காரி என் காதிலே விழட்டும்னே, நான் இருக்கிறது தெரியாத மாதிரி சொல்லுவாளே 'அசட்டு பிராம்ணன்'னு... அது நெஜந்தான்! சரி. இப்ப நான் வந்துட்டேன். எங்கே இருக்கேன், என்ன பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சுக்க உன் மனசிலே ஒரு துடிப்பு இருக்கும்னு எனக்குப் புரியறது. இந்தக் கடுதாசியோடு ஒரு கத்தைக் காகிதம் கிறுக்கி அனுப்பி இருக்கேனே... அதை எப்பவாவது போது இருக்கச்சே - போது போகலேன்னா படிச்சுப்பாரு. என்னை, என் மனச்சாட்சியை நீ புரிஞ்சுக்கலாம். நீ புரிஞ்சுப்பேன்னு நெனைக்கறேன்... நீ புரிஞ்சுண்டாலும் புரிஞ்சுக்கல்லேன்னாலும் எனக்குக் கவலை இல்லே... இந்த ஒரு மாசமா உனக்கு ஒரு கடுதாசி எழுதணும் எழுதணும்னு ஏனோ தோணிண்டே, எழுதலியேன்னு உறுத்திண்டே இருந்தது. சத்தியமாச் சொன்னா இந்தக் கடுதாசியைத் தவிர மீதி இருக்கற ஒரு கத்தைக் காகிதத்தை உனக்காக நான் எழுதல்லே... நானா, எனக்குத் தோணினதெ யெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே எழுதிண்டே இருந்தேன்; இன்னும் எழுதிண்டிருக்கேன்... இது என்னை நானே பார்த்துக்கற பார்வை, சுயவிமரிசனம்.... இல்லே, சுயதரிசனம்! திடீர்னு என்னமோ தோணித்து; எழுதின வரைக்கும் அந்த நோட்டு புக்கிலிருந்து பிச்சு எடுத்து உனக்கு அனுப்பறேன். இதுவும் ஒரு அசட்டுத்தனமோ என்னமோ? ஆனா ஒண்ணு, உன் ஆத்துக்காரியிடம் சொல்லு: 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... அந்தக் குலத்திலே பொறந்து, 'கணபதி'ன்னு பெத்தவா சூட்டினபேரை இழந்து 'அசட்டு சாஸ்திரி, தத்தி சாஸ்திரி'ன்னே அறுபது வருஷமா பட்டம் வாங்கிண்டு இருந்திருக்கேன். சரி, போனது போச்சு. இப்ப நான் சந்தோஷமா கெளரவமா - அறுபது வயசுக்கப்புறம் - இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன். ப்ராப்தம் இருந்தால் எங்கேயோ எப்பவோ நாம சந்திக்கலாம். என்னை நீங்கல்லாம் மறந்துட்டாலும் பாதகமில்லை. என்னால் எதையுமே மறக்க முடியல்லே...

இப்படிக்கு உன் தகப்பனார்
கணபதி..."

- கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது.

கவருக்குள்ளிருந்து அந்த ஒரு கத்தைக் காகிதத்தைப் பத்திரிகை ஆசிரியர் தோரணையில் கையில் எடுத்து எத்தனை பக்கங்கள் என்று அறிய அவன் கடைசித் தாளை நீக்கிப் பார்க்கிறான். அதில் பக்க எண் எதுவுமில்லை. அந்தக் காகிதங்கள் அனைத்தும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுக்கப்ட்டிருந்ததால் ஓரத்தில் ஒழுங்கற்ற பிசிறுகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களில் பென்சிலாலும் சில பக்கங்களில் பேனாவாலும் - தீர்க்கமான சிந்தனையோடு பல காலம் மனசில் ஊறிவரும் தெளிவு மிகுந்த கருத்துக்களானதால் - அடித்தல் திருத்தல் ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிருந்தும் ஆபிசில் அதற்கு நேரமில்லாது வேலை குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக மடித்துத் தன் கைப்பையில் வைத்துக் கொள்கிறான் சிவராமன். அதைப் பைக்குள் வைக்குமுன் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்றறிய உறையையும் கடிதத்தையும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். அனுப்பியோர் விலாசம் ஏதும் அதில் இல்லை. எனினும் தபால் முத்திரையிலிருந்து அக்கடிதம் புது டில்லியிலிருந்து வந்திருப்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்து விழிக்கிறான் சிவராமன்.

'இந்த அப்பா என்ன துணிச்சலோடு இவ்வளவு தூரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார்!' என்று எண்ணியபோது, கள்ளங் கபடு அறியாத அந்த அப்பாவி உள்ளம் இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கைத்து நொந்து போயிருக்கும் என்ற - அறிவில் விளையாத, மனத்தில் சுரந்த - உணர்வில் அவனது கண்கள் கலங்குகின்றன.

- அந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராம்மணரின் - தாடி மழிக்காத, நரைத்த ரோமக்கட்டை அடர்ந்த, முன் பல் விழுந்த, அம்மைத் தழும்புகள் நிறைந்த, மாறு கண் பார்வையோடு கூடிய கரிய முக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.

2

கணபதி சாஸ்திரிகள் போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்....

முதல் இரண்டு நாட்கள் அவரது குடும்பத்தினர் - குடும்பத்தினர் என்றால் வேறு யார்? அவரது இரண்டு பிள்ளைகளான சிவராமனும் மணியும்தான் - அவர்கள் அதற்காக அதிகம் கவலை கொள்ள வில்லை.

நான்கைந்து சாஸ்திரிகளோடு அவர் காஞ்சிபுரம் போயிருப்பதாக யாரோ சொல்லக் கேட்டு, "போகிற மனுஷர் ஆத்திலே வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகப்படாதோ? நெனச்சப்போ வரதும் போறதும்... இது என்ன சத்திரமா சாவடியா?" என்று மொறுமொறுவென அவரைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவரது மாட்டுப் பெண் ராஜம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நான்கு சாஸ்திரிகளூம் திரும்பி வந்து கணபதி சாஸ்திரிகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிவித்த அந்த நிமிஷமே ராஜம் ஒரு வினாடி திகைத்து, அந்தத் திகைப்புக்குப் பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டாள்.

'எங்கே போயிருப்பார்? எங்கே போயிருப்பார்?' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள். வேறு மகளோ, அவரை மதித்து அன்புடன் உபசரிக்கும் உறவினரோ யாருமில்லாத அவரது நிலையை எண்ணி யெண்ணித் தனக்குள் பெருமூச்செறிந்தாள். சிவராமனின் மனத்திலும் லேசான கலக்கம் குடிகொண்டது.

தினசரி மாலையில் ஆபிசிலிருந்து வரும்போது, வழியில் உள்ள தெப்பக்குளச் சுவரின்மீது வரிசையாய் உட்கார்ந்து உரத்த குரலில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திரிகளின் சபையில் தன் தகப்பனார் இருக்கிறாரா? என்று சிவராமனின் கண்கள் அலைந்து அலைந்து தேடி ஏமாந்தன.

- அவனுக்குத் தெரியுமா, ஊரில் இருக்கும்போது கூட, இந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனித்தே அவர் நிற்பார் என்பது... அது சரி, அந்த அசட்டு பிராம்மணரை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்.

நாளுக்கு நாள் தன் தந்தையின் மீது 'அவர் என்ன ஆனாரோ, எங்கே நிற்கிறாரோ, அல்லது வேறு ஏதாவது'... என்று எண்ணியெண்ணி அவர்பால் தன் மனத்துக்குள் ஒரு ரகசியமான ஏக்கம் மிகுந்து கனப்பதை அவன் உணர ஆரம்பித்தான். எனினும் அது பற்றி வெளிப்படையாய் விசாரிக்கவோ பேசவோ அவன் வெட்கப்பட்டான். தன் மனைவி ராஜம் 'லோகத்திலே இல்லாத அப்பாவைப் படைச்சுட்டேளே... ஒரேயடியா உருகிப் போகாதேங்கோ' என்று எரிந்து விழுவாளோ என்று அஞ்சினான். தன் தம்பியும் தன்னைப் போலவே உள்ளூர அப்பாவுக்காக ஏங்குகிறானோ, அல்லது, 'அந்த அசட்டுக் கிழம் எங்கே தொலைந்தால் என்ன?' என்று அசட்டையாக இருக்கிறானோ என்று அறிய முடியாமல் தவித்தான். அப்படி அசட்டையாக இருந்தால் அது மகா பாவம் என்று தோன்றியது. சின்ன வயசில் - சின்ன வயசில் என்ன - இப்போது கூடத்தான் அவரை அப்பா என்றூ சொல்லிக் கொள்ளவே தானும் தன் தம்பியும் வெட்கப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.

கணபதி சாஸ்திரிகள் போன்ற ஓர் அழகற்ற கறுப்புப் பிராம்மணர் அசட்டுச் சிரிப்புடன், மாறு கண் பார்வையோடு எதிரில் வந்து நின்றால் யாருக்குமே மதிப்பான எண்ணம் பிறக்காதுதான். அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும்; அவரும் 'ஈஈ' என்று ஓட்டை வாய்ச் சிரிப்புடன் குழந்தைபோல் எதையாவது பேசுவார். பேச்சில் பொதிந்துள்ள அர்த்தத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆகவே அது பலருக்கு ஒரு, 'போரா'கவே இருக்கும். பரிதாபத்துக்கும் பரிகசிப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளவே தன் பிள்ளைகள் வெட்கப்படுவதில் ஒரு நியாயமிருப்பதாகக் கருதி வந்தார் கணபதி சாஸ்திரிகள். மொத்தத்தில் கணபதி சாஸ்திரிகளை ஊரில் யாரும் மதித்ததில்லை. சில சமயங்களில் அவமதித்ததுண்டு....

மற்ற சாஸ்திரிகளுக்கு எதையாவது பேசி அவர் வாயைக் கிளறி மகிழ அவர் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். வீட்டில் அவரது பிள்ளைகளூக்கு அவரால் அவமானம்; வெட்கம். அவரது மாட்டுப் பெண்ணுக்கு அவர்மீது வெறுப்பு!

ராஜத்துக்கு அவர் மீது தனியாக விசேஷமான வெறுப்பு ஒன்றும் கிடையாது. சதா நேரமும் சிடுசிடுத்துக் கொண்டிருப்பது அவள் சுபாவம். அந்தச் சிடுசிடுப்பில் அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் அவர்தான் என்றால் அதற்கு அவளா பழி?

இவ்விதம் யாருக்கும் வேண்டாதவராயிருந்த கணபதி சாஸ்திரிகள் எங்கோ ஓடிப் போனதில் யாருக்கு என்ன நஷ்டம்?

"இன்னியோட பத்து நாளாச்சு. இருபது நாளாச்சு..." என்று அவர்கள் ஏன் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?

"இப்படி நம்ம தலையிலே பழியைப் போடணும்னு காத்துண்டு இருந்திருக்கார் மனுஷர். ஊர்லே என்னைத் தானே சொல்லுவா? நான் அவரை ஒரு வார்த்தை பேசினது உண்டா?... மனுஷன் இருந்தும் என் பிராணனை வாங்கினார். இப்போ இல்லாமலும் என் பிராணனை வாங்கறார்" என்று பொழுது விடிந்து பொழுது போனால் தன் மாமனாரின் பிரிவுக்காக அவளும் தன் சுபாவப்படி ஏங்கிக்கொண்டு தானிருந்தாள்...

- அவர் இருக்கும்போது, ஒரு வார்த்தை கூட அவரைக் கடிந்து தான் பேசினதில்லை என்று நிஜமாகவே நினைக்கிறாள் ராஜம்.

இந்த ஒருமாதப் பிரிவின் காரணமாக - தங்களை விட்டு விலகிப் போன கணபதி சாஸ்திரிகள் உயிருடனாவது இருக்கிறாரா? என்று அறிந்து கொள்ள விரும்பும் துடிப்பில் அவர் குடும்பத்தினருக்கு அவர் மீது ஒருவித ஏக்கமும் அன்பும் பிறந்திருக்கிறது. அவர் இப்படி எங்கோ அனாதை போலப் போய்விட்டதை எண்ணியெண்ணி 'அவர் எங்கே அனாதைப் பிணமாகக் கிடக்கிறாரோ' என்ற பயங்கரமான கற்பனைகளில் சிக்கிக் கொண்டு, 'இந்தப் பாபத்துக்கு நான் தான் காரணமோ?' என்று உள்ளூர விளைந்த நடுக்கத்துடன் ரகசியமாகக் கண்ணீர் வடிக்கிறாள் ராஜம். இந்த விஷயம் சிவராமனுக்கோ மணிக்கோ தெரியாது.

***டிடிடிடி***டிடிடிடி ****

பத்து நாட்களுக்கு முன்பு ஆபிசில் இருந்து வருகின்றபோது, தெப்பக் குளக்கரையில் கூடி நின்ற சாஸ்திரிகள் கும்பலில் சிவராமனின் பார்வை - கட்டை குட்டையாய் கன்னங் கரேலெனத் துண்டாகத் தென்படும் - தன் தந்தையைத் தேடி வழக்கம்போல் துழாவியபோது அவனைப் பார்த்துவிட்டார் வெங்கிட்டுவையர்... அவனைப் பின் தொடர்ந்து கடைத் தெருவரை வந்தார்... பிறகு தன் பின்னால் யாரும் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு "என்னடா சிவராமா..." என்றழைத்தார்.

சிவராமன் திரும்பினான்.

"என்ன, உங்கப்பாவைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதோ?" என்று நெருக்கமாய் வந்து கேட்டார். வெங்கிட்டுவையர், கணபதி சாஸ்திரிகளின் பால்ய சினேகிதர்; ஒத்த வயது.

சிவராமனுக்கு ஏனோ தான் பெரிய தவறு புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுக் குனிந்த தலையோடு, "ஒரு தகவலும் இல்லை... எங்கே போயிருப்பார்ன்னு தெரியல்லே... ஏன் போனார்னும் தெரியல்லே... ஆத்திலே கூட ஒண்ணும் வருத்தம் இல்லே... ம்... உங்களுக்குத் தெரியாதா நாங்க எப்படி அவரை வெச்சிருந்தோம்னு" என்று மென்று மென்று விழுங்கினான் சிவராமன். அவனுக்குக் குற்றமுள்ள மனசு குமைந்தது...

"அட அசடு.. அதுக்கு நீ என்ன செய்வே?... அப்படியே இருந்தாலும் தோப்பனுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்... அதுக்காக ஒருத்தன் ஆத்தை விட்டே போயிடுவானோ? அது சரி, உனக்கு விஷயமே தெரியாதா?..." என்று சுற்று முற்றும் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்தி "இப்படி வா சொல்றேன்" என்று நடுத் தெருவிலிருந்து ஓரமாய், பஜனை மடத்தருகே அவனை அழைத்து வந்தார் வெங்கிட்டுவையர்.

கணபதி சாஸ்திரிகள் ஊரைவிட்டே ஓடிப் போவதற்கு முதல் நாள் தெப்பக் குளக்கரையில் நடந்த சம்பவத்தை அவர் நினைத்துப் பார்த்தார்.

தெரு ஓரமாய் இருவரும் வந்து நின்றபின், தனது இடுப்பில் செருகி இருந்த பொடி மட்டையை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை விரல்களில் இடுக்கியவாறு அவர் சொன்னார்: "அவனுக்கு மனசே வெறுத்துப் போச்சுடா. அவனை அப்பிடி அவமானப் படுத்திட்டார் வேற யாரு, சுந்தரகனபாடிகள் தான்..." என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த பொடியைக் காரமாய் உறிஞ்சினார் வெங்கிட்டுவையர். பொடியின் காரத்தில் கலங்கிய கண்களோடு சிவராமனை வெறித்துப் பார்த்தார்.

சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரகனபாடிகள் கணபதி சாஸ்திரிகளை அவமானப்படுத்தினாரா?... ஏன்?

சிவராமனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சுந்தரகனபாடிகள் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் உண்டு. கணபதி சாஸ்திரிகளின் குருநாதர் அவர்தான். அந்தக் காலத்தில் மகா பண்டிதராய் விளங்கிய கணபதி சாஸ்திரிகளின் தந்தையான பரமேஸ்வர கனபாடிகளின் உயிருக்கு உயிரான சீடர் சுந்தரகனபாடிகள் என்கிற விஷயம், ஒரு குடும்பப் பெருமையாய்ப் போற்றிவந்த செய்தி. அவரிடம் தான் கணபதி சாஸ்திரிகள் வேதம் பயின்றார். 'எழுபத்தைந்து வயதுக்கு மேலாகிப் பழுத்த பழமாய்ப் பார்த்தவர் வணங்கும் தோற்றமும் தன்மையும் பொருந்திய கனபாடிகள், பாவம், தன் தந்தையை என்ன காரணத்தினால் அவமானப்படுத்தி இருக்க முடியும்? அப்படியே கொஞ்சம் முன்கோபியான கனபாடிகள் ஏதாவது சொல்லியிருந்தாலும், யார் என்ன கூறிப் பழித்தாலும் அதனைப் பொருட்படுத்தாத 'பரப்பிரம்மமான' தன் தந்தை, அதற்காகவா ஊரை விட்டு ஓடிப்போயிருப்பார்?' என்றெல்லாம் யோசித்த தயக்கத்துடன் "நீங்க என்ன சொல்றேள்?" என்று வெங்கிட்டுவையரின் முகத்தைப் பார்த்தான் சிவராமன்.

"நான் பார்த்ததைத்தாண்டா சொல்றேன்... நேக்கென்னடா பயம்? மத்தவாள்ளாம் ஒரு கட்சி மாதிரி, இந்த அநியாயத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறாளே... சுந்தரகனபாடிகள் ரொம்பப் பெரியவர்தான்... நான் இல்லேங்கலே.... ஆனாலும் அவருக்கு இந்த வயசிலே இப்படி ஒரு கோபம் கூடாது... மனுஷன் என்ன, இப்படியா அசிங்க அசிங்கமாப் பேசுவார்? இவர் தகுதிக்கு ஆகுமா?... சீ!" என்று படபடவென்று பேசி அலுத்துக் கொண்ட வெங்கிட்டுவையர், அதற்குமேல் விஷயத்தை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டுகிறானா என்று அறிய மெளனமாய் சிவராமனின் முகத்தைப் பார்த்தார்.

"என்னதான் நடந்தது... எனக்கு ஒண்ணுமே தெரியாதே!" பதைத்தான் சிவராமன்.

"எனக்கும்தான் தெரியாது... நான் கோயில்லேருந்து வந்துண்டிருந்தேன். குளத்தங்கரையிலே ஒரே சத்தமா, ஏக களேபரமா இருந்தது. பார்த்தா உங்கப்பன் - கணபதி தேமேன்னு நின்னுண்டிருக்கான். கனபாடிகள் அடிக்கப் போறவர் மாதிரிக் கையைக் கையை ஓங்கிண்டு ஆவேசம் வந்த மாதிரி குதிக்கறார். அவனை அவர் அடிக்கக் கூட பாத்தியதை உள்ளவர்தாண்டா, நான் இல்லேங்கல்லே... ஆனாலும் கன்னா பின்னான்னு - சீ! ஒரு பிராமணன் பேசக் கூடிய பேச்சா? அப்பிடி அசிங்க அசிங்கமா திட்டினார்... கணபதி அப்படியே கூனிக் குறுகி நின்னுண்டிருந்தான்... கடைசியிலே - அவன் மட்டும் என்ன மனுஷன் இல்லியா? நேக்கே தோணித்து... அதை அவன் கேட்டுட்டான்; அப்படி ஒண்ணும் தப்பா பேசிடலே. "ஓய்.. இப்படி அசிங்க அசிங்கமா பேசறீரே... நீர் ஒரு பிராமணனாய்யா"ன்னு கேட்டான்...! எவ்வளவு பேச்சுக்குத்தான் ஒரு மனுஷன் பேசாம இருப்பான்? நறுக்குன்னு கேட்டான்... அவ்வளவுதான்! அந்தக் கிழவரைப் பார்க்கணுமே... கணபதி கழுத்திலே போட்டிருந்த துண்டை இழுத்து முறுக்கிப் பிடிச்சுண்டார்... ஆவேசம் வந்ததுமாதிரி காயத்திரி மந்திரத்தைக் கூவினார். "சொல்லுடா, இதுக்கு அர்த்தம் சொல்லு. நீ பிராமணனுக்குப் பொறந்தவனானா சொல்லுடா.... என்னைப் பார்த்தா கேட்டே... பிராமணனான்னு?... இவன் பிராமணனான்னு எல்லாரும் கேளுங்கோ..."ன்னு அசிங்க அசிங்கமாத் திட்டினார் - ஒரே கும்பல் கூடிடுத்து... நான் போய் விலக்கப் பார்த்தேன். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன பலமோ? என்னைப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளினார் பாரு... நான் போயி குளக்கரை சுவர் மேலே விழுந்தேன்.... தள்ளிட்டுக் கத்தறார்.... மனுஷனுக்கு வெறி! ஒண்ணு மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லு.... இல்லேன்னா 'நான் பிராமணன் இல்லே'ன்னு ஒத்துக்கோ... என்னெக் கேட்டியேடா, என்ன தைரியம்?" என்று உறுமினார். அவர் பிடியிலே பாவம், கணபதிக்கு உடம்பே நடுங்கறது. நாங்க அவர்கிட்டே பேச முடியல்லே... அந்தக் கெழம்தான் மூர்க்கமாச்சேன்னு கணபதிகிட்டே கெஞ்சினோம்.... 'சொல்லுமோய்யா... மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போமே... பிடிவாதம் பிடிக்காதீர்'ன்னு நானும் கிட்டே போயி சொன்னேன்... கணபதி என் மூஞ்சியை வெறிச்சிப் பார்த்தான். பார்த்துட்டு 'ஓ'ன்னு கொழந்தை மாதிரி அழுதான்...

- 'நேக்கு மந்தரம் தான் தெரியும்... அர்த்தம் தெரியாதே'ன்னு அவன் அழறப்போ, அம்பது வருஷத்துக்கு முந்தி நானும் அவனும் ஒண்ணா படிச்சதெல்லாம் நேக்கு ஞாபகம் வந்து நானும் அழுதுட்டேன்.

திடீர்னு உங்கப்பன் கனபாடிகள் கையைத் தள்ளி உதறினான். எல்லாரும் என்ன நடக்கப் போறதோன்னு திகைச்சுப் போனோம். பல்லைக் கடிச்சுண்டு உடம்பிலேருந்த பூணூலை வெடுக்குனு பிச்சு அறுத்து, கனபாடிகள் மூஞ்சிலே எறிஞ்சுட்டு 'போங்க... நான் பிராமணன் இல்லே... நான் பிராமணன் இல்லே'ன்னு கோஷம் போடற மாதிரிக் கத்திண்டு ஓட்டமும் நடையுமா நாலுவீதியும் சுத்திண்டு அப்ப போனவன்தான்; என்ன ஆனானோ, எங்கே போனானோன்னு உன்னடை வந்து விசாரிக்கணும்னுதான் நெனைச்சிண்டிருந்தேன்... நீ என்னடான்னா இந்த விஷயமே தெரியாதுங்கறே?..." என்று, தான் சம்பந்தப்படாத - இந்தக் காலத்து பிராமணர்களாகிய தாங்கள் யாருமே சம்பந்தப்படாத - கணபதி சாஸ்திரி என்ற தனிப்பட்ட ஒருவனின் விவகாரம்போல் அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கினார் வெங்கிட்டுவையர்.

வெங்கிட்டுவையர் விவரித்த சம்பவத்தில் பொதிந்துள்ள ஒரு சமூகச் சீரழவின் கொடுமையை ஆழ்ந்து உணர்ந்த வேதனையில் வாய்மூடி மெளனியனான் சிவராமன். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளாமலேயே குனிந்த தலையோடு, கலங்குகின்ற கண்களோடு அவன் வீடு நோக்கி நடந்தான்.

வீட்டிற்குப் போனதும் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்துக் கதறி அழவேண்டும் என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே அவன் நடந்தான்...

ஆனால் அன்று அவன் வீடு சென்றதும் அவ்விதம் செய்யவில்லை. தந்தையின் பிரிவை எண்ணித் தான் அழுவதைக் கண்டு 'அவள்' கோபிப்பாள் என்ற அச்சத்தில் அவன் அந்த 'ஆசை'யைக் கைவிட்டு விட்டான்.

- தாழ்ந்த குலத்தில் பிறந்த கொடுமைக்கு அழுதால் அதற்கு ஓர் அர்த்தமும் இருக்கும்; அனுதாபமும் கிடைக்கும். உயர்ந்த குலத்தில் பிறந்தும் கலியின் விளைவால் விபரீதமாய்ப் போன இந்தக் கொடுமைக்கு அழத்தான் முடியுமா? அனுதாபந்தான் கிடைக்குமா?

3

சிவராமன் ஆபிசிலிருந்து வரும்போது வழியில் குறுக்கிட்ட தெப்பக்குளக்கரை சாஸ்திரிகள் கூட்டத்தில் அவன் பார்வை இன்று யாரையும் தேடவில்லை. வீடு சென்றதும் தபாலில் வந்த அந்தக் காகிதக் கத்தையில் பென்சிலாலும் பேனாவாலும் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் ஒரு வயோதிக இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத் துளிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் துடிப்பில் நடந்து கொண்டிருந்த அவன், அந்தக் கூட்டத்தையே கவனிக்கவில்லை.

சிவராமன் வீட்டை அடையும்போது ராஜம் அடுக்களையில் இருக்கிறாள். மணி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்கு மவுண்ட் ரோடிலுள்ள ஒரு பெரிய பாதரட்சைக் கடையில் சேல்ஸ்மேன் உத்தியோகமானதால், இரவு எட்டு மணிக்குமேல் கடை அடைத்த பின்பே வீட்டுக்கு வர முடியும்...

தனது அறையில் சென்று உடைகளைக் களைந்தபின் முதல் வேலையாகக் கைப் பையைத் திறந்து அந்த நீளக் கவரின் உள்ளே இருந்த காகிதக் கத்தையை எடுத்து அந்தரங்கமாய்ப் படிக்க ஆரம்பிக்கிறான் சிவராமன்.

அவன் படித்த முதல் வரியே ஒரு மகத்தான இலக்கியத்தின் ஆரம்ப வாசகம்போல் அமைந்து இருக்கிறது:

"இதோ! என் கண்முன்னே ஆயிரக்கணக்கான மனுஷா சஞ்சரிச்சுண்டிருக்கா. ஒவ்வொரு மனுஷாளூம் ஒவ்வொரு விதமா இருக்கா. ஒருவிதம் மாதிரி இன்னொரு விதம் இல்லே. ஆயிரமும் ஆயிரம் விதம்! இந்த மைதானத்திலே எனக்கு முன்னேயும் எனக்குப் பின்னேயும் ஆயிரம் ஆயிரமா மனுஷா போயிண்டும் வந்துண்டும் இருக்கா.... சின்ன வயசிலே குடை ராட்டினத்திலே முதல் தடவை சுத்தினப்ப ஏற்பட்ட மயக்கம் மாதிரி இந்த நிமிஷம் என்னைச் சுத்தி ஆயிரம் ஆயிரமா ஜனங்கள் சுத்திண்டு இருக்கச்சே ஒரு பிரமை தட்டறது. நானும் திருவிழாக் கும்பல்லே வழி தவறிச் சிக்கிண்ட கொழந்தெ மாதிரி திருதிருன்னு முழிச்சுப் பாக்கறேன். இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு.

இந்த டில்லி இருக்கே, ரொம்ப புராதன நகரம். அசோகன் என்ன, பாதுஷாக்கள் என்ன, வெள்ளைக்காரா என்ன - இந்த தேசத்தையே எத்தனையோ வருஷங்களா ஆண்டு வர்ர நகரம் இது. இன்னிய தேதியிலே நாமெல்லாம் உக்காந்துண்டு சொந்தம் கொண்டாடறோம். எத்தனை தலைமுறைகளை இந்த லோகம் பாத்துண்டே இருக்கு. இந்த நிமிஷம் உயிர் வாழற மனுஷ ஜாதியிலே ஒரு நபர் கூட இருநூறு வருஷத்துக்கு முன்னாலே இல்லை; இருநூறு வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த மனுஷ ஜாதியின் ஒரு ஜீவன் கூட இப்போ இல்லே. அது ஒரு பிரிவு; இது ஒரு பிரிவு. அந்தப் பிரிவு எப்போ எப்படிப் போயி இந்தப் பிரிவு எப்போ எப்படி வந்ததுன்னு யார் சொல்ல முடியும்? இது மட்டும் சத்தியம். அது முழுக்கப் போயிடுத்து, இது முழுக்க வந்துடுத்து. ஆழமா யோசிக்காம எடுத்த எடுப்பிலே பார்த்த உடனே இந்த உலகத்திலே உள்ள எல்லாமே ஒரு அதிசயமாத்தான் இருக்கு. அதுமாதிரிதான் இந்த விஷயமும் - இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவா முழுக்கப் போனதும், இப்ப உள்ளவா முழுக்க வந்துட்டதும் ஆச்சரியமாத்தான் இருக்கு - அவா கொஞ்சம் கொஞ்சமா போனா; இவா கொஞ்சம் கொஞ்சமா வந்தா. இதுமாதிரிதான் போறதும் வர்ரதும். கடவுள் விதிப்படி இந்தக் காரியம் தடங்கல் இல்லாமல்தான் நடக்கறது. மனுஷ விதிப்படியும் இப்படித்தான் நடக்கணும்; நடக்கும்.

இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... சிக்கல் விடுபடலேன்னா அதுக்கு நாமதான் பொறுப்பு..."

அந்தக் காகிதங்களில் இதுவரை பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு ஆரம்பமாகிற பக்கங்கள் பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒரு அத்தியாயப் பிரிவு போல் உருவகித்துக் கொண்டு, தான் படித்த கனமான விஷயங்களைக் கருத்தூன்றிச் சிந்திக்கிறான் சிவராமன்... அவனது சிந்தனைகளை மறித்துக் கொண்டு 'இந்த அசட்டு அப்பாவா இப்படி யெல்லாம் சிந்திக்கிறார்' என்ற வியப்புணர்