|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் - நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்று > மூன்றாம் பாகம் - கொலை வாள் > நான்காம் பாகம் - மணிமகுடம் > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41-50 > அத்தியாயம் 51-60 > அத்தியாயம் 61-70 > அத்தியாயம் 71-80 > அத்தியாயம் 81-90 >முடிவுரை

கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA © Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
எழுபத்தொன்றாம் அத்தியாயம் - 'திருவயிறு உதித்த தேவர்'
எழுபத்திரண்டாம் அத்தியாயம் - தியாகப் போட்டி
எழுபத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் திருட்டுத்தனம்
எழுபத்துநான்காம் அத்தியாயம் - "நானே முடிசூடுவேன்!"
எழுபத்தைந்தாம் அத்தியாயம் - விபரீத விளைவுகள்
எழுபத்தாறாம் அத்தியாயம் - வடவாறு திரும்பியது!
எழுபத்தேழாம் அத்தியாயம் - நெடுமரம் சாய்ந்தது!
எழுபத்தெட்டாம் அத்தியாயம் - நண்பர்கள் பிரிவு
எழுபத்தொன்பதாம் அத்தியாயம் - சாலையில் சந்திப்பு
எண்பதாம் அத்தியாயம் - நிலமகள் காதலன்
எழுபத்தொன்றாம் அத்தியாயம்
'திருவயிறு உதித்த தேவர்'
செம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று காத்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.தம் பக்கத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
"அரசர்க்கரசே! அடுத்தடுத்துத் துயரமான செய்திகளே கேட்டு நொந்திருக்கும் என் உள்ளம் தாங்கள் உடல் நலம் பெற்றிருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைகிறது. இறைவன் அருளால் நெடுங்காலம் தாங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து இந்த உலகத்தைப் பரிபாலித்து வர வேண்டும்" என்று முதிய பிராட்டியார் கூறினார்.
"அன்னையே! என் கால்கள் மீண்டும் நடக்கும் சக்தி பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறீர்கள்; அதைப் பற்றி எனக்கும் திருப்திதான்! இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரும்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆயினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை; இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள்!" என்றார் சுந்தரசோழர்.
"சக்கரவர்த்தி! தங்கள் குலத்து மூதாதையர் எல்லாரும் வீர சொர்க்கத்தையோ, சிவபதத்தையோ அடைந்தார்கள். தங்களுக்கும் பரலோகத்தில் அவர்கள் இடந்தேடி வைத்திருப்பார்கள். உரிய காலம் வரும்போது சிவ கணங்கள் வந்து தங்களை அழைத்துப் போவார்கள். ஆனால் அத்தகைய பதத்தை அடைவதற்குத் தாங்கள் அவசரப்படுதல் ஆகாது. இந்த உலகில் தங்களுக்கு இன்னும் கடமை எவ்வளவோ இருக்கிறது. நேர்மை நெறி பிறழாத தங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். சிவாலய கைங்கரியங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. சைவர்கள், வைணவர்கள், புத்தர்கள், சமணர்கள் முதலான பல மதத்தினரும் தங்கள் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்..."
"தாயே! அவர்கள் யாரும் இனி அத்தகைய பிரார்த்தனை செய்யலாகாது. என் ஆயுள் நீடிக்கப் பிரார்த்திப்பது என் மனவேதனையை நீடிக்கச் செய்யும் பிரார்த்தனையாகும். சோழ நாடு அளித்த வீரர்களுக்குள்ளே வீராதி வீரனான ஆதித்த கரிகாலனைப் பறிகொடுத்துவிட்டு, நான் இவ்வுலகில் நெடுங்காலம் உயிரோடு இருக்க வேண்டுமா? அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா?..."
"சக்கரவர்த்தி! புத்திர சோகம் மிகக் கொடியதுதான். ஆனாலும் விதியின் வலிமையைப் பற்றிப் பேதையாகிய நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுடன் இணைபிரியாத் தோழராயிருந்தார். காக்கும் கடவுளாகிய திருமாலின் அவதாரம் கிருஷ்ண பரமாத்மா. அவராலேகூட அரவானையும், அபிமன்யுவையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை. அத்தகைய வீரப் புதல்வர்கள் இறந்த பிறகும் அர்ச்சுனன் உயிர் வாழ்ந்திருக்கவில்லையா? பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன்? 'மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்' என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி! கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுக்குச் செய்த போதனை தங்களுக்கும் பொருத்தமானது."
"தாயே! அபிமன்யு போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து மரணமடைந்தான்; வீர சொர்க்கம் எய்தினான்!"
"தங்கள் குமாரன் வீரத்தில் அபிமன்யுவுக்குக் குறைந்தவன் அல்லவே! பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே! அபிமன்யுவைக் கடைசியில் பலர் சூழ்ந்து கொண்டு அவனை நிராயுதபாணியாக்கி அதர்ம யுத்தம் செய்து கொன்றார்கள். அதுபோலவே ஆதித்த கரிகாலனையும் தந்திரத்தால் தனிமைப்படுத்திச் சதிகாரர்கள் பலர் சூழ்ந்து நின்று திடீரென்று தாக்கிக் கொன்றார்கள்..."
"தாயே! அவன் இறந்தது எப்படி என்பதை மட்டும் நான் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியுமானால் என் மனம் ஓரளவு நிம்மதி அடையும்."
"சென்று போனதைப்பற்றி எதற்காக மனத்தைப் புண்படுத்திக் கொள்ள வேண்டும்? கரிகாலனுடைய விதி முடிந்தது; வால் நட்சத்திரம் விழுந்தது; சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது?"
"உண்மை தெளிவாகாதபடியால், யார் யார் பேரிலோ சந்தேகம் உண்டாகிறது. தாயே! பூமியை ஆதிசேஷன் தாங்குவது போல் சோழ சாம்ராஜ்யத்தையே தாங்கி வந்தவரான பெரிய பழுவேட்டரையர் மேலேயே சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்; வீண்பழி சுமத்துகிறார்கள்."
"அவரையே கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?"
"பெரிய பழுவேட்டரையரைக் கேட்க யாருக்குத் தைரியம் உண்டு? எனக்கு இல்லை, தாயே! எப்படியோ அவர் இதில் சிக்கிக் கொண்டு மனம் நொந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று அவராகச் சொல்லாத வரையில், அவரை யார் கேட்க முடியும்? அம்மா! தக்கோலம் போர்க்களத்தில் என் பெரிய தந்தை இராஜாதித்தர் யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் புகுந்த பின்னர், சோழ சைன்யம் சின்னாபின்னப்பட்டுச் சிதறி ஓடத் தொடங்கியது. ஓடிய வீரர்களை வழிமறித்து நிறுத்தி மறுபடியும் ஒரு சைன்யமாக்கிக் கன்னரதேவன் படைகளை விரட்டியடித்த மகா வீரர் பெரிய பழுவேட்டரையர். அன்று அவர் அவ்விதம் செய்திராவிட்டால், இன்றைக்குச் சோழ ராஜ்யமே இருந்திராது. தக்கோலத்துப் போரில் அவருடைய திருமேனியில் அறுபத்து நாலு காயங்கள் பட்டன. அப்படியும் அவர் சோர்ந்துவிடாமல் போர்க்களத்தில் நின்று வெற்றி கண்டார். அதற்குப் பிறகு அவர் போர்க்களத்துக்கே போகக்கூடாதென்று கட்டுப்பாடு செய்து தனாதிகாரியாக்கினோம். அத்தகையவரை, என் தந்தைக்குச் சமமானவரை, நான் என்ன கேட்க முடியும்?"
"உண்மை வெளியாவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா?"
"வாணர் குலத்து வந்தியத்தேவன் கரிகாலனுடைய உடலின் அருகில் இருந்தான் என்று சொல்கிறார்கள். அவனைக் கேட்டு உண்மை அறியலாம் என்று எண்ணினேன். அவனும் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதைப் பற்றிச் சின்னப் பழுவேட்டரையர் முதன்மந்திரி மேல் குறை சொல்லுவதற்கு நியாயம் இருக்கிறது."
இதுவரையில் மௌனமாக இருந்த குந்தவை இப்போது குறுக்கிட்டு, "தந்தையே! அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே?" என்றாள்.
"குழந்தாய்! இம்மாதிரி முதன்மந்திரி பல தடவை பொறுப்பு ஒப்புக்கொண்டிருக்கிறார்; ஆனால் நிறைவேற்றுவது நிச்சயமில்லை. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஓடியவனைத் துரத்திக்கொண்டு போயிருப்பதாக அறிகிறேன். கந்தமாறன் அவ்வளவு முன்யோசனைக்காரன் அல்ல; அவசர புத்தி படைத்தவன். அதிலும் சம்புவரையர் குலத்துக்குக் களங்கம் உண்டாகக் கூடாது என்ற ஆத்திரமுள்ளவன். அவன் வந்தியத்தேவனைத் தொடர்ந்து போயிருப்பது என் கவலையை அதிகமாக்குகிறது."
"ஐயா! சென்று போனதை மறந்துவிடுவதே நல்லது. இனி நடக்கவேண்டியதைப் பற்றி யோசியுங்கள்!"
"அன்னையே! அதற்காகவே தங்களை அழைத்துவரச் சொன்னேன். ஆளுக்கு மேல் ஆள் அனுப்பிக் கொண்டிருந்தேன். மேலே நடக்கவேண்டியது பற்றி எனக்கு யோசனை கூறி உதவ வேண்டும்."
"சக்கரவர்த்தி! அறிவிற் சிறந்த அமைச்சர்கள் பலர் தங்களுக்கு யோசனை சொல்ல இருக்கிறார்கள். இந்தப் பேதை ஸ்திரீ என்ன யோசனை சொல்லப் போகிறேன்? என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும்?"
"தேவி! கோபித்துக்கொள்ளக் கூடாது; எங்கள் சோழ குலத்தில் தோன்றிய பெண்கள் எல்லாரும் பேதைகளாயிருக்கவில்லை, இதோ இருக்கிறாளே, என் அருமை மகள் குந்தவை அவளுக்கு நிகரான அறிவு படைத்தவர்களை நான் கண்டதில்லை..."
"மன்னிக்க வேண்டும், சோழ சக்கரவர்த்தி! நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே? மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே?" என்றார் முதிய பிராட்டியார்.
"எந்தக் குலத்தில் பிறந்தாலும், பெண்கள் அறிவுடையவர்களாக இருக்கலாம்; பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் நன்மை உண்டாக்கலாம். பெண்கள் வெறும் பிடிவாதம் பிடித்துப் பிறந்த குலமும், புகுந்த குலமும் அழிந்து போவதற்குக் காரணம் ஆவதும் உண்டு. தாயே! தாங்கள் அத்தகைய குல நாசத்துக்குக் காரணமாகப் போகிறீர்களா?"
இவ்விதம் சுந்தர சோழர் கேட்டதும், செம்பியன் மாதேவி நெருப்பை மிதித்தவர்போல் துடித்து, "சக்கரவர்த்தி! இது என்ன வார்த்தை? என்னால் ஏன் சோழ குலம் நாசம் அடைய வேண்டும்? நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே?" என்று கண்களில் நீர் மல்க விம்மிக்கொண்டே கூறினார்.
"தேவி! சிறிது கடுமையாகப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மூத்த குமாரன் இறந்து நான் உயிரோடிருக்கிறேன் என்னும் எண்ணம் என் நெஞ்சத்தைப் பிளந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இதைக் காட்டிலும் எனக்கு ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் உண்டு. என் மூதாதையர் காலத்திலிருந்து வலுப்பெற்றுப் பரவி வரும் இந்தச் சோழ ராஜ்யம் என் காலத்தில் சின்னாபின்னப்பட்டு அழிந்தது என்றால், அதைக் காட்டிலும் கொடிய தண்டனை எனக்கு வேறொன்றும் இல்லை. மூன்று வருஷங்களாக என் அருமைக் குமாரன் கரிகாலனை நான் பார்க்காமலே இருந்தேன். எனக்காகக் காஞ்சி நகரில் அவன் பொன் மாளிகை கட்டினான்.அங்கு வந்து தங்கும்படி என்னை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான் நான் போகவில்லை. என் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையான காரணம் அதுவல்ல; நான் காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களின் சிநேகத்தில் அவநம்பிக்கை கொண்டு நான் போய்விட்டதாக அவர்களும் நினைக்கலாம். மற்ற சிற்றரசர்களும் பெருந்தர அரசாங்க அதிகாரிகளும் கருதலாம். அதிலிருந்து என்ன விபரீதம் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு ஏற்படுமோ என்று எண்ணித்தான் நான் காஞ்சிக்குப் போகவில்லை. நான் போயிருந்தால் ஒருவேளை என் அருமைக் குமாரன் கரிகாலன் இன்று உயிரோடு இருந்திருப்பான்..."
"மன்னர் மன்னா! தாங்கள் எவ்வளவோ அறிவாளி; ஆற்றல் மிகப் படைத்தவர். ஆயினும் விதியை மாற்றி எழுதத் தங்களால் கூட முடியாது!.."
"ஆம், அன்னையே! விதியை என்னால் மாற்றியிருக்க முடியாது. ஆனால் என் குமாரனை அந்திய காலத்தில் பார்க்க முடியாமலேயே போய்விட்டதே! அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன்? விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் காண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி! அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும்!" என்றார் சுந்தர சோழர்.
செம்பியன் மாதேவி தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அரசர்க்கரசே! தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனர் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும்? நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா? இராஜ்யத்தின் மக்கள் சம்மதிப்பார்களா? சக்கரவர்த்தி! உள்நாட்டுச் சண்டையினால் இராஜ்யம் அழிவதைத் தடுக்க விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீர்கள். ஆதித்த கரிகாலனைப் புறக்கணித்துவிட்டு என் புதல்வனுக்குப் பட்டம் கட்டியிருந்தால், அதே உள்நாட்டுச் சண்டை நேர்ந்திராதா? இராஜ்யம் அழிந்திராதா?" என்று கேட்டார்.
"ஆம், தாயே! அதனாலேதான் நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். எல்லாரையும் சமரசப்படுத்தி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஏற்பாடு செய்யப் பிரயத்தனப்பட்டேன். அது கைக்கூடுவதற்குள்ளே, விதி குறுக்கிட்டுவிட்டது; கரிகாலனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. தாயே! அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன? தாங்களே சொல்லுங்கள்! இந்த இராஜ்யத்தின் பொறுப்பை என்னால் இனித் தாங்க முடியாது. யாரிடமாவது ஒப்புவித்துவிட்டுக் கரிகாலனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். காஞ்சியில் எனக்காகவென்று கரிகாலன் கட்டியுள்ள பொன் மாளிகையில் தங்கி என் அந்தியக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இப்போது யாருக்குப் பட்டம் கட்டுவது என்று சொல்லுங்கள். அருள்மொழியைக் காட்டிலும் மதுராந்தகன் பிராயத்தில் மூத்தவன். என்னைவிட இளையவன் ஆனாலும், அவனுக்குச் சிறிய தந்தை முறையில் உள்ளவன். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் அருள்மொழிக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்கிறார்கள். தர்மத்துக்கும் நியாயத்துக்கும் குல முறைக்கும் விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் எப்படி உடன்பட முடியும்? அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும்? அன்னையே! எனக்கு உதவி செய்யுங்கள்! மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன்! தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்!" என்றார் சுந்தர சோழ சக்கரவர்த்தி.
செம்பியன் மாதேவி, "ஐயா! என் சம்மதத்தைக் கேட்க வேண்டாம். சிவபதம் அடைந்த என் இறைவர் எனக்கு இட்ட கட்டளைக்கு மாறாக நான் நடக்க முடியாது. ஆனால், இராஜ்ய விவகாரங்களில் நான் இனிக் குறுக்கிடுவதில்லை. மதுராந்தகனை அழைத்து அவன் சம்மதத்தைக் கேட்டு எப்படி உசிதமோ அப்படிச் செய்யுங்கள்!" என்றார்.
"ஆம், ஆம்! மதுராந்தகனை அழைத்து அவனுடைய சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் தங்கள் உதவி வேண்டும்; தேவி! மதுராந்தகன் எங்கே?" என்றார் சக்கரவர்த்தி.
செம்பியன் மாதேவி தம் தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, "மதுராந்தகன் எங்கே? சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே! என் புதல்வன் எங்கே? கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்!" என்றார்.
"சின்னப் பழுவேட்டரையர் தங்களை கேட்கவேண்டும் என்கிறார். தாங்களும், முதன்மந்திரி அநிருத்தரும் ஏதோ சூழ்ச்சி செய்து மதுராந்தகனை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அன்னையே! இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள்!" என்றார் சக்கரவர்த்தி.
"அப்படியே அழைத்துவரச் செய்யுங்கள்; நானும் அவர்களைக் கேட்கிறேன்!" என்றார் செம்பியன் மாதேவி.
குந்தவை உடனே வாசற்பக்கம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் சொல்லி அனுப்பினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முதன்மந்திரியும் சின்னப் பழுவேட்டரையரும் வந்தார்கள்.
சக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையர் நோக்கி, "தளபதி! சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். 'மதுராந்தகன் எங்கே?' என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்!" என்றார்.
சின்னப் பழுவேட்டரையர் கூறினார்: "தேவியாரின் சிவ பக்தியும் சீலமும் உலகம் அறிந்தவை. சோழ நாட்டு மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறது போல் நானும் போற்றுகிறேன். நான் இப்போது தெரிவித்துக் கொள்வதைக் குற்றம் கூறுவதாக எண்ணக் கூடாது. எந்தக் காரணத்தாலோ தேவியார் தமது குமாரர் சோழ சிங்காதனம் ஏறுவதை விரும்பவில்லை; இதுவும் எல்லாரும் அறிந்தது. மூத்த பிராட்டியாரைக் காட்டிலும், எனக்காவது மற்றவர்களுக்காவது அவருடைய புதல்வர் விஷயத்தில் அதிக அன்பு இருக்க முடியாது. ஆயினும் மர்மமாயிருக்கிற சில விஷயங்களை விளக்குதல் அவசியமாயிருக்கிறது. அதிலும் சக்கரவர்த்தி 'மதுராந்தகரைக் கொண்டு வருக!' என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று §க்ஷமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 'மதுராந்தகத்தேவர் வாழ்க!' என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை! கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார்? தேவியாரும் முதன்மந்திரியும் இப்பொழுதுதான் நான் சொல்லப் போவதற்காக மன்னிக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஏதோ சூழ்ச்சி செய்து, மதுராந்தகர் பீதி கொள்ளும்படியான செய்தி எதையோ அவரிடம் சொல்லி, இந்த நகரை விட்டும், நாட்டை விட்டுமே ஓடிப் போகும்படி செய்து விட்டார்கள் என்று ஐயுறுகிறேன். நான் சொல்வது தவறாயிருந்தால் மீண்டும் பெரிய பிராட்டியாரின் மன்னிப்பைக் கோருகிறேன்."
செம்பியன் மாதேவி தழுதழுத்த குரலில், "தளபதி! தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை; சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்!" என்றார்.
"தேவியார் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன் அப்படியானால், முதன்மந்திரிதான் இந்த மர்மத்தை விடுவிக்க வேண்டும்!" என்றார் காலாந்தகர்.
"எந்த மர்மத்தை?" என்று முதன்மந்திரி அநிருத்தர் கேட்டார்.
"தேவியின் புதல்வர் காணாமற்போன மர்மத்தைப் பற்றித்தான்!"
"தளபதி! இந்தக் கோட்டை முழுவதும் தாங்கள் நன்றாகத் தேடிப் பார்த்ததாகக் கூறியது உண்மைதானா?"
"ஆம், தங்கள் அரண்மனையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் தேடித் துருவிப் பார்த்தாகிவிட்டது."
"என் அரண்மனையை மட்டும் விட்டு விட்ட காரணம் என்ன?"
"தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி என்கிற மரியாதை காரணமாகத்தான்!"
"ஆகா! அப்படியானால் தங்கள் கடமையைத் தாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று ஏற்படுகிறது. போனது போகட்டும்; சக்கரவர்த்தி! தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன்; தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார்; அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன்!"
இவ்வாறு முதன்மந்திரி கூறியதும் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த வியப்பைச் சொல்லி முடியாது.சக்கரவர்த்தி, "முதன்மந்திரி! இது என்ன வேடிக்கை! தேவியின் புதல்வரை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்பானேன்! சீக்கிரமே வரவழையுங்கள்!" என்றார்.
முதன்மந்திரி அநிருத்தர் வாசற்படியண்டை சென்று கை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தார். அடுத்த கணம் சேந்தன் அமுதனை முன்னால் விட்டுக்கொண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தான்.
சின்னப் பழுவேட்டரையர் மிக்க ஆத்திரத்துடன், "முதன்மந்திரியின் பரிகாசத்துக்கு ஓர் எல்லை வேண்டாமா?" என்று கேட்டார்.
ஆனால் செம்பியன்மாதேவி இருகரங்களையும் நீட்டித் தம் திருமுகத்தில் அன்பும் ஆர்வமும் ததும்ப "மகனே!" என்று அழைத்ததும், தளபதிக்கு மனக் குழப்பம் உண்டாகி விட்டது.
சேந்தன் அமுதன், "தாயே! என்னை அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ? அது நான் செய்த தவத்தின் பயன்தான்!" என்று கண்களில் நீர் ததும்பச் சொல்லிக்கொண்டு செம்பியன்மாதேவியை நெருங்கினான். மதுராந்தக உத்தமச் சோழன் என்று சரித்திரத்தில் புகழ்பெற்ற சிவ பக்திச் செல்வனைத் திருவயிறு வாய்த்த தேவி அன்புடன் அணைத்துக்கொண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.பக்க தலைப்பு
--------------------------------------------------------------------------------
எழுபத்திரண்டாம் அத்தியாயம்
தியாகப் போட்டிமழவர் குலத்தில் உதித்தவரும் சிவஞான கண்டராதித்த சோழரின் வாழ்க்கைத் துணைவியுமான செம்பியன்மாதேவியை, 'ஸ்ரீ மதுராந்தகத் தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்' என்று அவர் காலத்திய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சாதாரணமாகத் தாய்மார்கள் தம் குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் வைத்துச் சுமந்தே பெறுவார்கள். சில தாய்மார்கள் வேறு பெண்மணிகளின் வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளைப் போலவே வளர்ப்பதும் உண்டு. செம்பியன்மாதேவி வேறொரு பிள்ளையை வெகு காலமாகத் தம் பிள்ளையென வளர்த்து வந்த காரணத்தினால், அந்த உண்மையை அறிந்திருந்த ஒருவர் மேற்கண்டவாறு 'உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்தவர்' என்று கல்வெட்டிலே குறிப்பிட்டார் போலும்!
உத்தம சோழர் ஐந்து பிராயத்துச் சிறுவனாயிருந்த போதே செம்பியன்மாதேவி அவனையும், வாணி அம்மையையும் பார்க்கும்படி நேர்ந்தது. பல ஆண்டுகள் கழித்து வாணி அம்மையைச் சந்தித்ததும், அவளுடைய §க்ஷம லாபங்களைப் பற்றிச் செம்பியன்மாதேவி அன்புடன் விசாரித்தார். வாணியின் குழந்தை என்று எண்ணிய சேந்தன் அமுதனிடம் இயற்கையாகவே அம்மூதாட்டிக்கு அன்பு சுரந்தது. குழந்தையைப் பற்றி விசாரித்த போது வாணி அம்மையின் முகத்தில் திகைப்பும், அச்சமும் உண்டானதைக் கண்டார். முதலில், அதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணினார். வாணி பேசத் தெரியாதவளாய் இருந்தபடியால் திட்டமாக அவளிடமிருந்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் வாணி அம்மை ஒரு காலத்தில் தமக்குச் செய்த உதவியைக் கருதியும், அவளுடைய குழந்தையிடம் ஏற்பட்ட பாசம் காரணமாகவும்; தாயும், பிள்ளையும் கவலையின்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். தஞ்சை நகருக்கு அருகில் குடியிருந்து, தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருவதற்காக மானியங்களும் அளித்தார்.
சேந்தன் அமுதன் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவ பக்தியிலும் சிறந்து வளர்ந்து வந்தான். அன்னைக்கு உதவியாகப் புஷ்பத் திருப்பணி செய்வதிலும் மிக்க ஊக்கம் காட்டி வந்தான். இதைக் காணக் காணச் செம்பியன்மாதேவிக்கு அவனிடம் இயற்கையாகச் சுரந்த அன்பு வளர்ந்து வந்தது. ஒருநாள் அவருடைய மனத்தில் விசித்திரமான ஐயம் ஒன்று தோன்றியது. அது அவருக்கு ஒரே சமயத்தில் இன்பத்தையும் வேதனையையும், இனந்தெரியாத பீதியையும் உண்டாக்கியது. எத்தனையோ விதமாக அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள முயன்றும் இயலவில்லை. பிறந்து சில தினங்களில் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றிய நினைவு அடிக்கடி எழுந்த வண்ணமிருந்தபடியால் அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை.
கடைசியாக ஒருநாள் வாணி அம்மையிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தீர்மானித்தார். வாணியைத் தனியாக அழைத்து வரும்படி செய்தார். இறந்துபோன தம் குழந்தையை வாணியிடம் கொடுத்து ஒருவரும் அறியாமல் புதைத்துவிட்டு வரச்சொன்னார் அல்லவா? அவ்வாறு புதைத்த இடத்தில் அதன் ஞாபகார்த்தமாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்று எழுப்ப வேண்டும் என்று சொல்லி, புதைத்த இடத்தைச் சொல்லும்படிக் கேட்டார். இந்தப் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றிய ஞாபகமே அவருக்குத் துன்பம் அளித்தது. செவிடும் ஊமையுமான வாணியிடம் இதையெல்லாம் சமிக்ஞை பாஷையினால் கேட்க வேண்டியதாக இருந்தது. அது அவருக்கு மேலும் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.
அவருடைய கேள்விகளுக்கு விடை கூற வாணி மிகவும் தயங்கினாள். கடைசியாக, பேரரசியின் கட்டளையை மீற முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டாள். புதைப்பதற்காகத் தன்னிடம் கொடுக்கப்பட்ட குழந்தை உண்மையில் இறக்கவில்லை என்பதையும், அதைத் தனக்குக் கருத்திருமன் என்பவன் எடுத்துக்காட்டியதையும், பின்னர் அரசியிடம் திரும்பி வந்தால் என்ன நேரிடுமோ என்று அஞ்சிக் கருத்திருமனுடன் திருமறைக்காடு சென்றதையும், சில காலத்துக்கெல்லாம் கருத்திருமன் தன்னை விட்டுவிட்டுப் போய் விட்டபடியால், தான் திரும்பிப் பழையாறைக்கு வந்ததையும் விவரமாகக் கூறினாள்.
சேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன்மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார்.அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. "மகனே!" என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார். "உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே" என்று கருதக்கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக்கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது.
"அரண்மனையில் வளர்ந்தால் என்ன? குடிசையில் வளர்ந்தால் என்ன? இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுக போகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா? உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது? என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்!" என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆயினும், சேந்தன் அமுதன் தமது வயிற்றில் பிறந்த மகன் என்று அறிந்ததினால், தாம் வளர்த்த குமாரனாகிய மதுராந்தகனைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கக்கூடாது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. முன்னமேயே கண்டராதித்தரிடம் தாம் செய்த குற்றதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பும் பெற்றிருந்தார். "உன் வயிற்றில் பிறந்த குழந்தையானால் என்ன? அனாதைப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையாய் இருந்தால் என்ன? இறைவனுடைய திருக்கண்ணோட்டத்தில் இருவரும் சமமானவர்கள்தான். ஆகையால் மதுராந்தகனை உன் மகனைப் போலவே வளர்த்து வா! ஆனால் சோழ சிங்காதனத்தில் அவன் ஏற வேண்டும் என்று ஆசைப்படாதே! அதற்கு இணங்கவும் இணங்காதே! அது நான் பிறந்த சோழ குலத்துக்குத் துரோகம் செய்ததாகும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவதாயிருந்தால் நீ உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் தயங்காதே! என்று கண்டராதித்தர் தேவியிடம் சொல்லி அவ்வாறு வாக்குறுதியும் பெற்றிருந்தார். அந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றி வைக்கப் பெரிய பிராட்டி செம்பியன்மாதேவி நிச்சயித்திருந்தார்.
ஆனால் தங்களுடைய சொந்தக் குமாரன் வாணி அம்மையின் மகனாகக் குடிசையில் வளர்ந்து வருவதை அறியாமலேயே அந்த மகான் சிவபதம் அடைந்து விட்டார். இது தெரிந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? சேந்தன் அமுதன் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார்! இதைக் குறித்து செம்பியன்மாதேவி எவ்வளவோ முறை சிந்தனை செய்தார். "இறைவனுடைய சித்தத்தினால் இவ்விதம் நேர்ந்து விட்டது. ஊமையின் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பதும் பேரரசரின் மகன் குடிசையில் வளரவேண்டும் என்பதும் இறைவனுடைய திருவுள்ளம், அதில் நாம் குறுக்கிடக்கூடாது. அதை மாற்ற முயல்வதால் பல குழப்பங்கள் விளையும். தம் வளர்ப்புக் குமாரனின் மனம் அதனால் பெரிதும் புண்படும். அத்தகைய பாவத்தைச் செய்யக்கூடாது!" என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டார்.
இறைவனுடைய திருவருளில் அவர் கொண்டிருந்த இணையில்லாத நம்பிக்கையின் துணையினாலேயேதான் மேற்கூறிய தீர்மானத்தை அவர் காரியத்தில் நிறைவேற்றுவதும் சாத்தியமாயிற்று. ஆயினும் அடிக்கடி சேந்தன் அமுதனைப்பற்றி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய நினைவு வரும்போதெல்லாம் இயற்கையான தாய்ப் பாசம் அவருடைய உள்ளத்தில் பொங்கிப் பெருகாமலும் இருப்பதில்லை. இந்தப் போராட்டமானது அவருடைய இதய ஆழத்திலே பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
நெடுங்காலமாக அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளம் திடீரென்று ஒருநாள் அணையை உடைத்துக் கொண்டு கிளம்புவது உண்டு அல்லவா? அப்போது வெள்ளம் எவ்வளவு சக்தியுடனும், வேகத்துடனும் பாய்ந்து செல்லும் என்பதைப் பலர் பார்த்தும் அனுபவித்துமிருப்பார்கள். செம்பியன்மாதேவியின் உள்ளத்தில் அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப் பாசமாகிய உணர்ச்சி வெள்ளமும் இப்பொழுது கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.
முதன்மந்திரி அநிருத்தர் "தேவியின் திரு வயிற்றில் உதித்த தேவர்" என்று குறிப்பிட்டதுதான் அவ்வாறு செம்பியன்மாதேவி உள்ளத்தின் அணை உடைவதற்குக் காரணமாயிற்று. அந்த வார்த்தைகளை அநிருத்தர் கூறியவுடன் செம்பியன்மாதேவி பத்து மாத காலம் குழந்தையைத் தம் வயிற்றில் வைத்து வளர்த்த அனுபவம் அவ்வளவையும் ஒரு வினாடிப் பொழுதில் மறுபடியும் அனுபவித்தார். தம்மை மறந்து, தாம் செய்து கொண்டிருந்த சங்கல்பத்தை மறந்து, சேந்தன் அமுதனை "என் மகனே!" என்று அழைக்கவும், அவனைத் தழுவிக் கொண்டு கண்ணீர் வெள்ளம் பெருக்கவும் நேர்ந்தது.
இவ்விதம் செம்பியன்மாதேவி உணர்ச்சிப்பெருக்கினால் மெய்மறந்த நிலையில் இருந்தபோதிலும், அமுதன் கூறிய வார்த்தைகள் அவருடைய மனத்தில் நன்கு பதிந்திருந்தன. "தாயே! என்னை 'மகனே!' என்று அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ?" என்று கூறினான் அல்லவா? அவ்வார்த்தைகளின் கருத்து என்ன? அமுதனுக்கு அவனைப் பெற்ற அன்னை யார் என்பது முன்னமேயே தெரியுமா? தெரிந்தும் இத்தனை காலம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தானா?
சற்று நேரம் வார்த்தை சொல்ல முடியாத பரவச நிலையில் இருந்த பிறகு, செம்பியன்மாதேவி தம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "மகனே! உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று? தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா? அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா?" என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது சேந்தன் அமுதன் கடல் மடை திறந்தது போல் பின்வருமாறு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினான்:
"தாயே! நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருந்தேன். உலகம் போற்றும் புண்ணியவதியாகிய தாங்கள் ஒருநாள் என்னை 'மகனே!' என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத்தானிருந்தேன். ஆனால் இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை 'அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து 'தாய்' உரிமை கோர விரும்பினேன். அம்மணி! தங்களுடைய மனங்கோணாமல் நடப்பதற்காக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பூங்குழலியைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருந்தேன். நல்லவேளையாக அவளும் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொண்டாள். தாயே! மூன்று நாளைக்கு முன்பு என் உயிருக்குப் பெரும் அபாயம் வந்ததுத் தங்களிடம் நானும் பூங்குழலியும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த அபாயம் வந்தது. அந்த அபாயத்திலிருந்து உத்தம நண்பன் ஒருவன் என்னைக் காப்பாற்றினான். அதைப் பற்றி நான் அப்போது அவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. அவனிடம் அவ்வளவாக நன்றி செலுத்தவும் இல்லை. இப்போது அவனுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டவன் என்பதை உணர்கிறேன். தாங்கள் என்னை 'மகனே' என்று தங்கள் திருவாயினால் அழைத்தீர்கள் அல்லவா? இந்த நாளைக் காண நான் உயிரோடு இருந்தேன் அல்லவா? இதுவே போதும்! நான் பாக்கியசாலி ஆகிவிட்டேன். இனி ஒன்றும் எனக்கு வேண்டாம். இங்கு இப்போது நடந்தது இங்கு உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும்; வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இராஜ்யத்தில் மேலும் குழப்பம் விளைய வேண்டாம்! கோடிக்கரைக்கு உடனே புறப்பட்டுப் போவதற்கு எனக்கும் பூங்குழலிக்கும் விடை கொடுத்து அனுப்புங்கள்!"
இந்த வார்த்தைகள் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிப் புயலைச் சொற்களினால் விவரிக்க முடியாது. விம்மலும், கண்ணீரும் கலந்த மெல்லிய குரலில், "குழந்தாய்! நீயே என் உத்தமப் புதல்வன்! நீயே தெய்வாம்சம் பொருந்திய, என் கணவரின் உத்தமக் குமாரன்!" என்று கூறினார். இவ்வளவு நேரமும் சுந்தர சோழர், சின்னப் பழுவேட்டரையர், இளையபிராட்டி குந்தவைதேவி ஆகியவர்கள் பிரமித்துப் போயிருந்தார்கள். அங்கே வெளியான இரகசியமும், அதனால் விளையக்கூடிய பலாபலன்களும் அவர்களுடைய உள்ளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கின.
அவர்களில் குந்தவைதான் முதலில் பேசும் சக்தி பெற்றாள். "தந்தையே! பெரிய பிராட்டியார் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததின் காரணம் இப்போது தான் தெரிகிறது!"
சுந்தர சோழரும், அப்போது பிரமிப்பும் திகைப்பும் நீங்கி, "ஆமாம், குமாரி! ஆனால் அந்தக் காரணம் இப்போது நீங்கி விட்டது. என் பெரிய அன்னையின் திருவயிற்றில் உதித்த உத்தமப் புதல்வனுக்கு முடிசூட்டுவதில் இனிமேல் அவருக்கு ஆட்சேபம் இருக்க முடியாது அல்லவா?" என்றார்.
செம்பியன்மாதேவி சிறிது பரபரப்புடன் சுந்தர சோழரைப் பார்த்து, "சக்கரவர்த்தி! என் குமாரன் சற்று முன் கூறிய வார்த்தைகளைக் கேட்கவில்லையா? இந்தச் செய்தி இங்கே உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே வேண்டாம்! என் மகன் இராஜ்ய உரிமை கோரவில்லை. அதைத் தங்கள் முன்னால் அவன் வாயினாலேயே தெரிவித்துவிட்டானே!" என்றார்.
"ஆம் பிரபு! இந்தச் சோழ இராஜ்யத்தில் ஏற்கெனவே உள்ள சிக்கல்கள் போதும்! என்னால் வேறு புதிய சிக்கல் உண்டாக வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள்! என்னையும் என்னை மணந்துகொள்ள உவந்த பூங்குழலியையும் ஆசீர்வதித்து அனுப்புங்கள்!... பூங்குழலி! இங்கே வா!" என்றான் அமுதன்.
வாசற்படியின் அருகில் நின்று கொண்டிருந்த பூங்குழலி உள்ளே வந்தாள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் முதலில் செம்பியன்மாதேவிக்கு நமஸ்காரம் செய்தார்கள்; பின்னர், சக்கரவர்த்தியை வணங்கினார்கள். எழுந்து நின்றதும் சேந்தன் அமுதன், "பிரபு! நாங்கள் உடனே கோடிக்கரை போக விடை கொடுங்கள்! தாயே! விடை கொடுங்கள்!" என்றான்.
செம்பியன்மாதேவி சக்கரவர்த்தியைப் பார்த்து, "ஆம் ஐயா! இவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவோம். எனக்கு விருப்பமானபோது நான் கோடிக்கரை சென்று இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார்.
சுந்தர சோழர், "அது ஒருநாளும் இயலாத காரியம் நான் விடை கொடுக்கமாட்டேன்!" என்றார்.
முதன்மந்திரி குறுக்கிட்டு, "சக்கரவர்த்தி! எதுவும் இப்போது தீர்மானம் செய்ய வேண்டாம். இன்னும் சில தினங்கள் இவர்கள் என் இல்லத்திலேயே இருக்கட்டும். பெரிய பிராட்டியின் மகன் கிடைத்து விட்டார். ஆனால் சின்னப் பழுவேட்டரையரின் மருகர் கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய செய்தி வரும் வரையில் இவர்கள் இங்கு இருக்கட்டும். அதுவரை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரிய வேண்டாம்!" என்றார்.
"அருள்மொழியிடமாவது அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை தேவி.
"வேண்டாம், வேண்டாம்! அது மட்டும் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டான் சேந்தன் அமுதன்.
கடைசியாகச் சக்கரவர்த்தி, "தேவி! எது எப்படியானாலும் ஆகட்டும்,. இத்தனை தினங்கள் கழித்து இன்றைக்குத் தங்கள் திருவயிற்றில் உதித்த மகன் உங்களிடம் வந்திருக்கிறான். உங்களை உடனே பிரிப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். சில தினங்களாவது இங்கே நீங்கள் சேர்ந்திருங்கள். என் அரண்மனையிலோ, முதன்மந்திரியின் மாளிகையிலோ தங்கியிருங்கள். இராஜ்ய உரிமையைப் பற்றி முடிவான தீர்மானம் ஆன பிறகு இவர்களைக் கோடிக்கரை அனுப்புவது பற்றி யோசிக்கலாம். அது வரையில் இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இச்செய்தி தெரியவேண்டாம்!" என்றார்.
பக்க தலைப்பு--------------------------------------------------------------------------------
எழுபத்துமூன்றாம் அத்தியாயம்
வானதியின் திருட்டுத்தனம்
அருள்மொழிவர்மரின் மனம் பெரிதும் கலக்கம் அடைந்திருந்தது. இராஜ்ய உரிமை சம்பந்தமாகச் சோழ நாட்டில் எழுந்த கொந்தளிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்ததே அதற்கு முக்கிய காரணமாகும். அவர் மக்களை அமைதிப்படுத்துவதற்காகப் போன இடங்களிலெல்லாம் மக்களின் ஆவேசந்தான் அதிகமாயிற்று. "பொன்னியின் செல்வரே எங்கள் மன்னர்!" "அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்!" என்பவை போன்ற கோஷங்கள் எங்கெங்கும் எழுந்து நாலாபுறமும் முழங்கி எதிரொலி செய்தன.
இவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, "பழங்குடி மக்களான பழுவேட்டரையர்கள் வாழ்க!" "கொடுங்கோலரான கொடும்பாளூர் வேளார் வீழ்க!" என்பவை போன்ற கோஷங்களும் சிற்சில இடங்களில் கேட்கும்.அத்தகைய இடங்களில் அதிக பலம் தேடலாம் என்று இளவரசர் நெருங்கிச் சென்றால், உடனே அங்குள்ளவர்களும், "பொன்னியின் செல்வர் வாழ்க!" என்று முழங்கத் தொடங்கினார்கள். ஏன்? கோட்டைக் காவலுக்காக மாற்றி நியமிக்கப்பட்டிருந்த பழுவூர் வீரர்கள் கூடப் பொன்னியின் செல்வரைக் கண்டதும் தங்கள் பழைய கோஷங்களைக் கைவிட்டு, "அருள்மொழிவர்மரே திருமுடி புனையவேண்டும்!" "ஈழங்கொண்ட வீராதி வீரர், பொன்னியின் செல்வர் நீடூழி வாழ வேண்டும்!" என்று முழங்கலானார்கள்.
இவ்வாறு தம்முடைய முயற்சி பொது மக்களிடையிலும் போர் வீரர்களிடத்திலும் வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி, தம் கருத்துக்கு மாறான சூழ்நிலை பலப்பட்டு வருவதைக் கண்டு பொன்னியின் செல்வர் சங்கடம் அடைந்தார். சில தினங்களாக மதுராந்தகத்தேவர் காணப்படாமல் இருந்தது வேறு அவருடைய கவலையை அதிகமாக்கிற்று. இதன் பொருட்டுச் சின்னப் பழுவேட்டரையர் கொடும்பாளூர் வேளார் மீது குற்றம் கூறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது. அதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. அருள்மொழிவர்மருக்கே அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் இல்லாமற் போகவில்லை. தமக்குப் பட்டம் சூட்டிவிடவேண்டும் என்று கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் ஆகியவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள். அவர்களுடன் முதன்மந்திரி அநிருத்தரும் கலந்து சதி செய்வது போலத் தோன்றியது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் மதுராந்தகத்தேவரை எங்கேனும் மறைத்து வைத்து விட்டார்களோ, என்னமோ? அல்லது ஒருவேளை மதுராந்தகத்தேவரின் உயிருக்கே அபாயம் விளைவித்து விட்டார்களோ?
அவருடைய அருமைத் தமையனாரான ஆதித்த கரிகாலரின் மரணத்துக்குப் பழுவேட்டரையர்களும், சம்புவரையர்களுமே பொறுப்பாளிகள் என்று வேளாரும், மலையமானும் கருதினார்கள். அதற்குப் பழிக்குப் பழிவாங்குவதாக எண்ணிக் கொண்டு மதுராந்தகருக்கு ஏதேனும் தீங்கு செய்துவிட்டார்களோ? ஆகா! இவர்களுக்கு என்ன? யோசனையின்றி ஏதோ செய்து விடுகிறார்கள். கடைசியாகப் பழி எல்லாம் தம் தலையில் அல்லவோ சார்ந்து விடும்?
இன்றைக்கு சோழ நாட்டு மக்கள் இவர் பெயரைக் கூறி வாழ்த்துகிறார்கள். இவரைச் சிங்காதனம் ஏற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பொது ஜனங்களின் மனம் இப்படியே என்றுமிருக்குமா? மக்களின் உள்ளம் அடிக்கடி சலிக்கும் இயல்புடையதல்லவா? இதே ஜனங்கள் நாளைக்கு இவர் பேரிலேயே பழி கூறினாலும் கூறுவார்கள். சிங்காதனம் ஏறுவதற்காகச் சித்தப்பன் மதுராந்தகனைக் கொலை செய்வித்த பாதகன் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏன்? கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலர் இறந்ததற்குக் கூடத் தம் பேரில் பழி சுமத்தினாலும் சுமத்துவார்கள். தெய்வமே! இத்தகைய பயங்கரமான பழிகளைச் சுமப்பதற்காகவா என்னைக் காவேரியில் முழுகிச் சாகாமல் மந்தாகினி தேவி காப்பாற்றினாள்? இன்று தெய்வமாகியிருக்கும் அந்தப் பெண்ணரசிதான் இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். வாழ்க்கையில் ஒருவன் அடையக்கூடிய அபகீர்த்திகளில் மிகக் கொடிய அபகீர்த்தி என்னைச் சாராமல் தடுத்து அருள் புரிய வேண்டும்.
ஈழநாட்டு இராஜ வம்சத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரையொருவர் கொன்று விட்டுச் சிங்காதனம் ஏறிய வரலாறுகள் அருள்மொழிவர்மனின் உள்ளத்தில் பதிந்திருந்தன. ஆகையால் அம்மாதிரியான இழிவைத் தரும் அபகீர்த்தி தன்னையும் அடையலாம் என்ற எண்ணமே அவருக்குச் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. யாரிடமாவது தம் அந்தரங்கத்தைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்றால், அதற்கும் தகுதியுள்ளவராக யாரும் தென்படவில்லை. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருமே அவருக்கு விரோதமாகச் சதி செய்கிறார்கள் என்று தோன்றியது. அவர்களில் சிலர் உண்மையாகவே அவரிடம் விரோத பாவம் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் அவருக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பயங்கரமான பழியை அவர் தலையில் சுமத்திவிடுவதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலைமையில் யாரை நம்புவது, தம் அந்தரங்கத்தை யாரிடம் வெளியிட்டு ஆலோசனை கேட்பது என்று அவரால் நிர்ணயம் செய்யமுடியவில்லை. ஏன்? அவரிடம் இணையில்லா அன்பு கொண்டவரும் அவருடைய பக்திக்கு உரியவருமான தமக்கை குந்தவைப் பிராட்டியிடங்கூட அவருக்கு நம்பிக்கை குன்றிவிட்டது. அவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ காரியம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏன்! அவருடைய உயிருக்கு உயிரான வானதிகூட அல்லவா அவருக்குத் தெரியாமல் எதையோ மறைத்து வைக்கப் பார்க்கிறாள்? திருட்டுத்தனமாக எங்கேயோ போய்விட்டு மர்மமான முகபாவத்துடன் திரும்பி வருகிறாள்?....
வேறு எதைப் பொறுத்தாலும் பொறுக்கலாம், வானதியின் மர்மமான நடத்தையை இனிப் பொறுக்க முடியாது; என்று அருள்மொழிவர்மர் தீர்மானித்தார். வானதி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு எங்கேயோ தனியாகப் புறப்பட்டுப் போவதை அவர் கவனித்தார். உடனே அவளை அறியாமல் பின்தொடர்ந்து செல்லலானார். அரண்மனையின் மேல் மாடங்களின் தாழ்வாரங்களின் வழியாகச் சென்று, பின்னர்க் கீழ் மாடங்களில் இறங்கிச் சென்று, இருபுறமும் நெடிய சுவர்கள் அமைந்த இரகசியப் பாதை வழியாக வானதி மேலும் மேலும் சென்றாள். மதுராந்தகரை இரகசியமாகச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இடத்துக்குத்தான் அவள் போகிறாள் என்று கருதி அருள்மொழிவர்மர் மிக்க ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.
கடைசியாக, வானதி மற்றொரு பெரிய அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு ஓர் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்த முயன்றாள். அப்போது அருள்மொழிவர்மர் பாய்ந்து சென்று வானதியால் கதவைச் சாத்த முடியாமல் ஒரு காலை அறைக்குள்ளே வைத்தார். கதவைச் சாத்த முயன்ற அவளுடைய கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "வானதி! உன் திருட்டுத்தனம் என்னிடம் பலிக்காது! இந்த அறையில் நீங்கள் ஒளித்து வைத்திருப்பது யார்?" என்று கோபமாக வினவினார்.
வானதியோ புன்னகை மலர்ந்த முகத்துடன், "ஐயா, உண்மையில் என் திருட்டுத்தனம் பலித்துவிட்டது! நான் அழைத்திருந்தால் தாங்கள் வந்திருக்க மாட்டீர்கள். உள்ளே வந்து இங்கு இருப்பது யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள்.
மதுராந்தகத்தேவரை எதிர்பார்த்துச் சென்ற அருள்மொழிவர்மர், அங்கே வல்லவரையன் வந்தியத்தேவன் கட்டிலில் படுத்திருப்பது கண்டு வியப்பும், உவப்பும் அடைந்தார்.
அவரைப் பார்த்த வந்தியத்தேவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து "ஐயா! வாருங்கள்! இரண்டு நாளாகத் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்களின் சிறையிலிருந்து என்னை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்!" என்றான்.
பொன்னியின் செல்வர் விரைந்து சென்று வந்தியத்தேவன் அருகில் அமர்ந்து, "நண்பா! இது என்ன? இங்கு எப்படி வந்தாய்? பாதாளச் சிறையிலிருந்து தப்பியவன் இந்தப் பெண்களின் சிறையில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? இத்தனை நேரம் நீ ஈழத்தில் இருப்பாய் என்று அல்லவோ நினைத்தேன்? இன்னும் சில நாளைக்கெல்லாம் நானும் அங்கு வந்து உன்னுடனே சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்?" என்றார்.
"ஆம் இளவரசே! இவ்வளவு நேரம் நான் ஈழ நாட்டில் இருக்கவேண்டியவன்தான்! அங்கே பாண்டிய வம்சத்தாரின் மணிமுடியையும், அவர்களுக்கு இந்திரன் தந்த இரத்தின ஹாரத்தையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியவன். சைவப் பைத்தியமான சேந்தன் அமுதனை வைத்தியர் மகன் கொல்லாமல் தடுக்க முயன்று இந்தத் துர்க்கதிக்கு உள்ளானேன். பினாகபாணியின் ஈட்டி என் மேல் பாய்ந்ததும் நினைவிழந்து விழுந்தேன். கண்விழித்துப்பார்த்ததும் இங்கே இருக்கக் கண்டேன். இந்தப் பெண்மணிகளின் சிறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பது தெரியாது. கருணைகூர்ந்து நான் இங்கிருந்து தப்பிச் செல்வதற்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் அருமைச் சகோதரரும், என் அருமைத் தலைவருமான ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என் பேரில் வீண் பழியைச் சுமத்திவிடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன்.
வானதி குறுக்கிட்டு, "ஐயா! இவர் கூறுவது தவறு. இவர் தப்பி ஓடிப்போனால்தான் அத்தகைய பழி இவர் மீது ஏற்படும். உண்மை வெளியாகும் வரையில் இவர் இங்கேயே இரகசியமாக இருக்கவேண்டும் என்பது தங்கள் திருத்தமக்கையின் விருப்பம்" என்றாள்.
"இவள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது; நீ தப்பி ஓட முயன்றால்தான் அந்தப் பழி உனக்கு ஏற்படும்; என்னையும் அது பீடிக்கலாம். அதைக் காட்டிலும் உண்மையில் நடந்ததை உலகம் அறிய நிரூபிப்பதுதான் நல்லது. முதலில், என்னிடம் சொல்லு! கடம்பூரில் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு!" என்றார் பொன்னியின் செல்வர்.
வந்தியத்தேவனும் தான் அறிந்தபடி நடந்ததையெல்லாம் கூறினான். எல்லாவற்றையும் கேட்ட பின்னரும், ஆதித்த கரிகாலரின் மரணம் நேர்ந்தது எப்படி என்பதை இளவரசரால் நிர்ணயிக்க முடியவில்லை.
பக்க தலைப்பு--------------------------------------------------------------------------------
எழுபத்துநான்காம் அத்தியாயம்
"நானே முடிசூடுவேன்!"
வந்தியத்தேவன் கடைசியாகக் கூறினான்; "இளவரசே! ஒரே ஒரு மனிதர் மனது வைத்தால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி என்னைக் குற்றமற்றவன் ஆக்கலாம். அந்த ஒருவர் பெரிய பழுவேட்டரையர்தான். கடம்பூர் மாளிகையில் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்திருந்த என்னைத் திடீரென்று கழுத்தைப் பிடித்து இறுக்கிக் கீழே தள்ளி மூர்ச்சை அடைந்து விழச் செய்தவர் அந்த வீரப் பெருமகனாராகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். வேறு யாரும் அங்கு அச்சமயம் வந்திருக்க முடியாது. நந்தினிதேவி பேரில் சந்தேகங்கொண்ட அந்தக் கிழவர்தான் அவ்வாறு காளாமுகச் சைவராக உருக்கொண்டு மறைவிடத்திலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வந்திருக்க வேண்டும். காளாமுகச் சைவக்கூட்டத்தைச் சேர்ந்த இடும்பன்காரி அவருக்கு இரகசிய வழியில் வருவதற்கு உதவி செய்திருப்பான். ஆனால் அந்த மாபெரும் வீரருக்கு என்னை முதன் முதல் பார்த்தபோதே என்மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அந்த வெறுப்பு பிறகு நாளுக்குநாள் அதிகமாகியே வந்தது. அவர் என் உயிரைக் காப்பாற்றுவதற்காக முன் வந்து அங்கு உண்மையில் நடந்ததைச் சொல்லப் போவதில்லை. நான் இந்தப் பயங்கரமான பழி பூண்டு இறந்தால் அவருக்கு ஒருவேளை சந்தோஷமாகவே இருக்கும். ஆகையால், இளவரசே! எனக்குத் தப்பிச் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்! முடிந்தால் நான் ஈழ நாடு சென்று அங்கே பாண்டிய குலத்து மணிமுடியையும், இரத்தின ஹாரத்தையும், தேடிக் கண்டுபிடிப்பேன். அல்லது இங்கேயே உங்கள் கை வாளால் என்னைக் கொன்றுவிடுங்கள். என்னிடம் அளவிலாத அன்பு வைத்திருந்த தங்கள் தமையனாரைக் கொன்ற பழியைச் சுமந்து நாற்சந்தியில் கழுவில் ஏற்றப்படும் கதிக்கு என்னை ஆளாக்காதீர்கள்! அதைக் காட்டிலும் தங்கள் கை வாளினால் இறப்பது எனக்கு எவ்வளவோ ஆறுதல் அளிக்கும்! அல்லது இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் கையினால் நஞ்சுண்டு இறந்தாலும் பாதகமில்லை. இவரும் தங்கள் திருத்தமக்கையுமே இந்த அனாதையின் பேரில் கருணை கொண்டு யமலோகத்தின் வாசற்படி வரைக்கும் சென்றிருந்தவனைத் திரும்பவும் இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை!"
இவ்வாறு வந்தியத்தேவன் கூறியபோது வானதி இளவரசரை நோக்கி, "கேளுங்கள் ஐயா! நீங்களே கேளுங்கள்! இந்தச் சுத்த வீரருக்குப் போர்க்களத்தில் எதிரிகளுக்கு முன்னால் நின்று போரிட்டு வீர சொர்க்கம் அடையும் விருப்பம் இல்லையாம்! பெண்களின் கையினால் விஷம் அருந்திச் சாவதற்குத் தவம் கிடக்கிறாராம்!" என்றாள்.
"இளவரசே! இவரும், தங்கள் திருத்தமக்கையும் என் மீது சொல்லும் நிந்தை மொழியினாலேயே என்னைக் கொன்று விடுவார்கள் போலிருக்கிறது. அதைவிட இவர்கள் கையினால் நஞ்சு அருந்தி இறப்பது விசேஷம் அல்லவா?" என்றான் வாணர் குல வீரன் வந்தியத்தேவன்.
அருள்மொழிவர்மர் இந்தப் பேச்சுக்களையெல்லாம் பாதி கவனத்துடனேதான் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய மனத்திற்குள் வேறு எதைப்பற்றியோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சட்டென்று ஒரு குதி குதித்து எழுந்து நின்று, "ஆகா! நான் முடிவு செய்துவிட்டேன். நானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வேன். நாடு நகரமெல்லாம் மக்கள் 'அருள்மொழிவர்மனே திருமுடி சூடவேண்டும்!' என்று கோஷம் செய்கிறார்கள். போர் வீரர்களின் விருப்பமும் அதுவே! அவர்கள் எல்லாருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். எதற்காகத் தெரியுமா? உன்னைக் குற்றம் அற்றவன் என்று விடுதலை செய்வதற்காகத்தான். அதனால் எனக்கு ஏதேனும் அபகீர்த்தி வருவதாக இருந்தால் வரட்டும்! அது என்னைப் பாதியாது! என் பேரில் விரோதப்பான்மை கொண்ட சிற்றரசர்கள் சிலர் ஒருவேளை அந்த அபகீர்த்தியைப் பரப்புவதற்கு முயலலாம். ஆனால் மக்கள் அதை நம்பமாட்டார்கள். சிற்றரசர்கள் என் பேரில் குற்றம் சுமத்தத் துணிந்தால், அது அவர்கள் பேரிலேயே திரும்பிப் போய்ச் சேரும்! கடம்பூர் மாளிகைக்குச் சிற்றரசர்கள் விருந்துக்கு அழைத்து அவரைக் கொன்று விட்டார்கள் என்று என்னால் திருப்பிச் சொல்ல முடியும். அத்தகைய நம்பிக்கைத் துர