தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்று மூன்றாம் பாகம் - கொலை வாள்நான்காம் பாகம் - மணிமகுடம்  ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41-50 > அத்தியாயம் 51-60 > அத்தியாயம் 61-70 >  அத்தியாயம் 71-80 > அத்தியாயம் 81-90 >முடிவுரை

கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan

ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
அத்தியாயம் 61-70


Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA © Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்

அறுபத்தொன்றாம் அத்தியாயம் - நிச்சயதார்த்தம்
அறுபத்திரண்டாம் அத்தியாயம் - ஈட்டி பாய்ந்தது!
அறுபத்துமூன்றாம் அத்தியாயம் - பினாகபாணியின் வஞ்சம்
அறுபத்துநான்காம் அத்தியாயம் - "உண்மையைச் சொல்!"
அறுபத்தைந்தாம் அத்தியாயம் - "ஐயோ, பிசாசு!"
அறுபத்தாறாம் அத்தியாயம் - மதுராந்தகன் மறைவு
அறுபத்தேழாம் அத்தியாயம் - "மண்ணரசு நான் வேண்டேன்"
அறுபத்தெட்டாம் அத்தியாயம் - "ஒரு நாள் இளவரசர்!"
அறுபத்தொன்பதாம் அத்தியாயம் - "வாளுக்கு வாள்!"
எழுபதாம் அத்தியாயம் - கோட்டைக் காவல்


அறுபத்தொன்றாம் அத்தியாயம்
நிச்சயதார்த்தம்



வெளியில் காலடிச் சத்தம் கேட்டதும் பூங்குழலி அச்சிறு குடிலின் வாசற் கதவை நோக்கிப் போனாள். அவள் தன்னை விட்டுவிட்டு அடியோடு போய்விடப் போகிறாள் என்று சேந்தன் அமுதன் எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவள் அவ்வாசற்படி வழியாக வெளியேறும்போது தன் உயிரும் தன் உடலை விட்டு வெளியேறிவிடும் என்று கருதினான். பூங்குழலி கதவைச் சற்றுத் திறந்து வெளியே பார்த்துவிட்டு மறுபடியும் கதவை அடைத்துத் தாளிட்டதை சேந்தன் அமுதன் பார்த்தான். இது என்ன விந்தை? தாளிட்டது மட்டுமில்லாமல் திரும்பவும் தன்னை நோக்கி வருகிறாளே?

அவளுடைய உள்ளம் சிறிது இளகிவிட்டதோ? இளகினால்தான் என்ன? மறுபடியும் தன்னை வீரனாக வேண்டும் என்றும், ராஜ்யத்தைப் பிடிக்க வேண்டுமென்றும், சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்றும் இவ்வாறு போதனை செய்து கொண்டுதானிருப்பாள். உலக ஆசைகள் என்னும் புயற் காற்றினால் அலை வீசிக் கொந்தளிக்கும் கடல் அவளுடைய உள்ளம்; சிவபெருமானுடைய பக்தியில் திளைத்து அமைதியுற்றிருக்கும் இனிய புனல் வாவியை ஒத்தது தன் மனம். அதில் எழுந்த சிறிய கொந்தளிப்பு இவளால் நேர்ந்ததுதான். பூங்குழலிக்கும் தனக்கும் ஒரு நாளும் ஒத்துவரப் போவதில்லை. அதைப்பற்றி வீண் மனோராஜ்யம் செய்வதில் என்ன பயன்?

பூங்குழலி அவன் அருகில் வந்ததும் அவனைத் தன் குவளை மலர்க் கண்களால் உற்றுப் பார்த்தாள். சேந்தன் அமுதனின் நெஞ்சம் தத்தளித்தது. "கதவை ஏன் சாத்தினாய்? யார் வந்தனர்? ஒருவேளை அம்மா தானோ, என்னமோ?" என்றான் அமுதன்.

"யாரா இருந்தாலும் சிறிது நேரம் காத்திருக்கட்டும். நம்முடைய பேச்சு முடியும் வரையில் வெளியில் இருக்கட்டும். ராஜாவும், ராணியும் அந்தரங்கமாகப் பேசி கொண்டிருக்கும் போது குறுக்கே வந்து யாரும் தடை செய்யக்கூடாது அல்லவா?" என்றாள்.

"ராஜா - ராணி யார் ராஜா? யார் ராணி?" என்று தடுமாறினான் அமுதன்.

"நீ ராஜா; நான் ராணி! இத்தனை நேரம் சொன்னதெல்லாம் உன் மனதில் ஏறவே இல்லையா?"

"இல்லை, பூங்குழலி! எனக்கு நீ போதனை செய்வதில் சிறிதும் பயனில்லை என்றுதான் சொன்னேனே? உன் உள்ளப் போக்கும், என் உள்ளப் போக்கும் முற்றும் மாறானவை. அவை ஒத்துவர மாட்டா!" என்றான் அமுதன்.

"ஒத்து வரும்படி நாம்தான் செய்ய வேண்டும்" என்றான் பூங்குழலி.

"அது முடியாத காரியம்!"

"உன்னால் முடியாவிட்டால், என்னால் முடியும். அமுதா! நான் தீர்மானம் செய்து விட்டேன். அரச குமாரனைக் காலியாணம் செய்து கொண்டு அரியாசனம் ஏறும் எண்ணத்தை விட்டு விட்டேன். அரண்மனை வாழ்வையும் அரச போகத்தையும் காட்டிலும், உன்னுடைய அன்பு கோடி மடங்கு எனக்குப் பெரிது. நீ என் வழிக்கு வர மறுப்பதால், நான் உன்னுடைய வழிக்கு வருவேன்; உன்னையே நான் மணந்து கொள்வேன்..."

சேந்தன் அமுதன் பரவச நிலையை அடைந்தான். "பூங்குழலி! பூங்குழலி! எனக்கு இப்போது சுரம் அடிக்கவில்லையே? நான் கனவு காணவில்லையே? இப்போது நீ சொன்ன வார்த்தைகள் என் காதில் தவறாக விழவில்லையே? நான் தவறாகப் பொருள் கொள்ளவில்லையே?" என்றான்.

"இன்னொரு தடவை சொல்கிறேன், கேள்! நீ என் வழிக்கு வர மறுப்பதால், நான் உன்னுடைய வழிக்கு வரத் தீர்மானித்து விட்டேன். உன்னையே நான் மணந்து கொள்வேன். என் பெரிய அத்தையின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்த விவரங்கள் என் உள்ளத்தில் வீண் ஆசைகளை உண்டாக்கியிருந்தன. நியாயமாக அவள் சிங்காதனத்தில் வீற்றிருக்க வேண்டியவள் என்று அடிக்கடி எண்ணியதால் நானும் ஏன் சிங்காதனம் ஏறக்கூடாது என்ற ஆத்திரம் எனக்கும் உண்டாகி விட்டது. என் அத்தை கொலைகாரனுடைய வேலினால் மரணமடைந்த போது, என்னுடைய ஆசையும் மடிந்து விட்டது. அரண்மனையில் வாழ்கிறவர்கள் படும் அவதிகளையும், வேதனைகளையும் அறிந்து கொண்டேன். அலைகடலில் படகு ஓட்டிக் கொண்டு ஆனந்தமாகக் கழிக்கும் வாழ்க்கைக்கு அரண்மனை வாழ்வு ஒருநாளும் இணையாகாது என்று அறிந்தேன். அமுதா! உனக்கு உடம்பு சரியானதும் இருவரும் கோடிக்கரை செல்வோம். அங்கே காட்டுக்கு நடுவில் உள்ள கோயிலில் குழகர் தன்னந்தனியாகத் துணை எவருமின்றி இருக்கிறார். நாம் இருவரும் கோடிக்கரைக் குழகருக்குப் புஷ்பத் திருப்பணி செய்வோம். சில சமயம் படகில் ஏறிக் கடலில் செல்வோம். ஈழ நாட்டின் ஓரத்தில் இனிய தீவுகள் எத்தனையோ இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றில் சில சமயம் இறங்குவோம். அங்கே நீ ராஜாவாகவும் நான் ராணியாகவும் இருப்போம். அந்த ராஜ்யத்துக்கு யாரும் போட்டிக்கு வரமாட்டார்கள். அமுதா! இதற்கெல்லாம் உனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?"

"ஒரே ஆட்சேபந்தான், பூங்குழலி! இவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் அருகதை உள்ளவனா என்னும் ஆட்சேபந்தான். இதையெல்லாம் நீ உண்மையாகத்தானே சொல்லுகிறாயா? பிறகு பெரிய ஏமாற்றத்துக்கு என்னை உள்ளாக்குவதற்காகச் சொல்லவில்லையே? இல்லை, இல்லை! நீ உண்மையாத்தான் சொல்கிறாய். எப்போது கோடிக்கரைக்குப் புறப்படலாம்?"

"உனக்கு உடம்பு நேரான உடனே புறப்படலாம்."

"எனக்கு உடம்பு நேராகிவிட்டது, பூங்குழலி! நான் வேணுமானால் இப்போது எழுந்து நடக்கிறேன் பார்க்கிறாயா?" என்று கூறிவிட்டுச் சேந்தன் அமுதன் எழுந்திருக்க முயன்றான்.

பூங்குழலி அவன் கையைப் பிடித்து எழுந்திருக்காமல் தடுத்து, "வேண்டாம்; இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கொள்!" என்றாள்.

வாசற் கதவை யாரோ இலேசாகத் தட்டும் சத்தம் கேட்டது.

"அம்மா கதவைத் தட்டுகிறாள் திறந்து விடு! அம்மாவிடம் இந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொல்வோம்" என்றான் அமுதன்.

பூங்குழலி போய்க் கதவைத் திறந்தாள், வாசலில் கண்ட காட்சி அவளைச் சிறிது வியப்புறச் செய்தது. அவள் எதிர்பார்த்தபடி கதவைத் தட்டியவள் வாணி அம்மை அல்ல. அரண்மனைச் சேவகன் ஒருவன் கதவைத் தட்டியிருக்க வேண்டுமென்று தோன்றியது. கதவு திறந்ததும், சேவகன் ஒதுங்கி நின்றான்.

அப்பால், செம்பியன் மாதேவியும், இளவரசர் மதுராந்தகரும் நின்றார்கள். இன்னும் சிறிது தூரத்துக்கு அப்பால், பல்லக்குகள் இரண்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தன.சிவிகை தூக்கிகளும், காவலர்களும் மரத்தடியில் நின்றார்கள். அவர்களில் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் இவ்வளவு காட்சியையும் கண்ட பூங்குழலி, செம்பியன் மாதேவியின் முன்னால் தலை வணங்கிக் கும்பிட்டு, "தாயே! வரவேண்டும்!" என்றாள்.

"உன் அத்தை மகனுக்கு உடம்பு எப்படியிருக்கிறது, பூங்குழலி! வாணி அம்மை எங்கே?" என்று கேட்டுக் கொண்டே மழவரையன் மாமகளாகிய முதிய எம்பெருமாட்டி அந்தக் குடிசைக்குள்ளே பிரவேசித்தாள்.

மதுராந்தகன் வெளியிலேயே நின்றான்; ஆனால் அவனுடைய குரோதம் ததும்பிய கண்கள் ஆர்வத்துடன் குடிசைக்கு உள்ளே நோக்கின. வருகிறவர் சிவபக்த சிரோமணியும், தங்களுக்கு மானியம் அளித்துக் காப்பாற்றி வருகிறவருமான செம்பியன் மாதேவி என்று அறிந்ததும் சேந்தன் அமுதனும் எழுந்தான்.

"தாயே! நல்ல சமயத்தில் வந்தீர்கள்; முதன் முதல் சந்தோஷமான செய்தியைத் தங்களிடம் தெரிவித்து ஆசிபெறும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியிருக்கிறது. சிவபெருமானுடைய திருவருளாலேயே இது நடந்திருக்க வேண்டும். இன்னும் என் அன்னையிடம் கூடச் சொல்லவில்லை. அன்னையே! இத்தனை காலம் கழித்துப் பூங்குழலி மனமிரங்கி என்னை மணம் புரிந்து கொள்ள இசைந்திருக்கிறாள் . தாங்கள்தான் கூட இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு கோடிக்கரைக் குழகர் கோயிலுக்குப் போய் அங்கே பூமாலைக் கைங்கரியம் செய்ய எண்ணியிருக்கிறோம்!" என்றான்.

செம்பியன் மாதேவியின் முகத்தோற்றம் இச்செய்தியினால் அந்த மாதரசி மகிழ்ச்சி அடைந்தாரா, கலக்கமடைந்தாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய இதழ்களில் மகிழ்ச்சிப் புன்னகை தோன்றியது. ஆனால் கண்களிலோ கண்ணீர் ததும்பி நின்றது.

அமுதனும் பூங்குழலியும் அவர் முன்னால் வணங்கிய போது, மாதரசி தழுதழுத்த குரலில், "குழந்தைகளே! இறைவன் அருளால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமயமாக இருக்கட்டும்!" என்று ஆசி கூறினார்.

அந்தச் சமயம் வாணி அம்மை அங்கு வந்து சேர்ந்தாள். அவளிடம் செம்பியன் மாதேவி சமிக்ஞையினால் அமுதனுடைய உடம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வந்ததாகக் கூறினார். வந்த இடத்தில் அவர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். அச்சமயம் வாணி அம்மையின் முகபாவமும் கலக்கத்தையும், களிப்பையும் ஒருங்கே காட்டுவதாயிருந்தது. மேலும் சிறிது நேரம் சேந்தன் அமுதனுடனும், பூங்குழலியுடனும் பேசிக்கொண்டிருந்த பிறகு செம்பியன் மாதேவி வெளிக்கிளம்பினார். அவரும், மதுராந்தகனும் பல்லக்குகள் இரண்டும் இறக்கி வைத்திருந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.

வழியில் ஒரு மரத்தடியில் முதிய பிராட்டியார் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவரும் இல்லை என்பதைக் கண்ட பிறகு, மதுராந்தகனை நோக்கி, "பார்த்தாயா, மதுராந்தகா! என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் அதோ அக்குடிசையில் வாழும் சேந்தன் அமுதன். அவனுக்கு ஐந்து வயதானபோதே எனக்கு இச்செய்தி தெரிந்துவிட்டது. அவன் எட்டு நாள் குழந்தையாயிருந்தபோது மூச்சுப் பேச்சற்றுக் கிடந்ததைப் பார்த்து இறந்து விட்டதாக எண்ணினேன். பிள்ளைப் பாசத்தினால் உன்னை என் குழந்தையாக ஏற்றுக் கொண்டு இவனைக் கொண்டுபோய்ப் புதைத்து விடச் சொன்னேன். இவனை எடுத்துப் போன வாணி வெகுகாலம் திரும்பி வரவே இல்லை. ஐந்து ஆண்டு கழிந்த பிறகு இவளையும், இப்பிள்ளையையும் பார்த்ததும் உண்மை தெரிந்து கொண்டேன். ஆயினும், உன்னை நான் கைவிடவில்லை. அவன் என் வயிற்றில் பிறந்த மகன் என்பதற்காக அவனை அரண்மனைக்கு வரவழைத்துக் கொள்ளவுமில்லை. எல்லாம் இறைவன் திருவிளையாடல் என்று எண்ணி உன்னை என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் பதின் மடங்கு அருமையாக வளர்த்து வந்தேன். அதற்காகவெல்லாம் எனக்கு இப்போது இந்த வரத்தை நீ கொடு! சோழ சிங்காதனம் வேண்டாம் என்று சொல்லிவிடு! நீ சிங்காதனம் ஏறுவதற்குக்கூட நான் ஆட்சேபிக்க மாட்டேன். ஆனால் உன் வம்சத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஊமையாக இருந்துவிட்டால் என்ன செய்கிறது என்றுதான் அஞ்சுகிறேன்!" என்றார்.

இவ்விதம் செம்பியன் மாதேவி கூறி வந்தபோது மதுராந்தகனுடைய முகம் பேயடித்த முகமாகக் காணப்பட்டது. அவன் மணம் செய்துகொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரின் மகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்திருந்தது. அதற்கு இரண்டு பிராயம் ஆகியும் இன்னும் பேசத் தொடங்கவில்லை என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது.

பிரமை பிடித்து மரத்தோடு மரமாக நின்ற மதுராந்தகனைப் பார்த்து, அவனை வளர்த்த அன்னையாகிய மாதரசி, "குழந்தாய்! ஏன் இப்படியே நின்று விட்டாய்? வா போகலாம்! அரண்மனைக்குப் போய் நன்றாக யோசித்து நாளைக்குப் பதில் சொல்லு!" என்றாள்.

மதுராந்தகன் தட்டுத்தடுமாறி, "தாயே! யோசிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. தாங்கள் போங்கள்! என்னுடைய இடத்தில் அரண்மனையில் வளர்ந்திருக்க வேண்டிய தங்கள் குமாரனிடம் சிறிது பேசிவிட்டுப் பிறகு வருகிறேன்!" என்றான்.

"அப்படியே செய்! வரும்போது பல்லக்கின் திரைகளை நன்றாக மூடிக்கொண்டு வா! கொடும்பாளூர் வீரர்கள் உன்னைப் பார்த்து விட்டால் ஏதேனும் கூச்சல் போட்டாலும் போடுவார்கள்!" என்று சொல்லிவிட்டு அம்மாதரசி மேலே பல்லக்கை நோக்கி நடந்தார். மதுராந்தகனுடைய முகம் முன்னைவிடக் குரோதமும், மாற்சரியமும் நிறைந்த பயங்கர மாறுதலை அடைந்ததை அப்பெருமாட்டி கவனியாமலே அங்கிருந்து சென்று விட்டார்.



பக்க தலைப்பு



--------------------------------------------------------------------------------

அறுபத்திரண்டாம் அத்தியாயம்
ஈட்டி பாய்ந்தது!



சற்று நேரம் நின்ற இடத்திலேயே நின்றான் மதுராந்தகன். குடிசைக்குப் போகலாமா, கோட்டைக்குப் போகலாமா என்று அவன் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது போலத் தோன்றியது. பின்னர் அவன் தன்னைச் சுமந்து வந்த பல்லக்கின் அருகில் சென்று, சிவிகை தூக்கிகளிடமும், காவலர்களிடமும் ஏதோ சொன்னான். சிவிகைக்கு உள்ளேயிருந்து ஏதோ ஒரு பொருளையும் எடுத்துக் கொண்டான். சிவிகையைத் தூக்கிக் கொண்டு ஆட்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் தீவர்த்தி வெளிச்சமும் சென்றது.

மதுராந்தகன் திரும்பக் குடிசையை நோக்கி வந்தபோது, அவனும் மாதேவடிகளும் எந்த மரத்தின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த மரத்தின் பின்புறத்திலிருந்து திடீரென்று ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்ததைக் கண்டு மதுராந்தகன் ஒரு கணம் திடுக்கிட்டான். அவன் வேறு யாரும் இல்லை; பாதாளச் சிறையிலிருந்து தப்பித்து வந்தியத்தேவனோடு வந்திருந்த 'பைத்தியக்காரன்' கருத்திருமன்தான். இன்னமும் அவன் பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போலவே இருந்தான். அவனுடைய தோற்றமும் அவன் திடீரென்று அந்த இடத்தில் வெளிப்பட்டதும் மதுராந்தகனுக்குத் திகிலை உண்டாக்கியதில் வியப்பில்லைதானே?

அடுத்த கணம் மதுராந்தகன் சிவிகையிலிருந்து எடுத்து வந்த கூரிய குத்துவாளை ஓங்கினான்.

கருத்திருமன் அவனைக் கையமர்த்தி, "ஐயா! நில்லுங்கள்! நான் தங்கள் விரோதி அல்ல!" என்றான்.

"விரோதி அல்லவென்றால், பின்னே நீ யார்? என் நண்பனா?" என்று மதுராந்தகன் கேட்டான்.

"ஆம், ஐயா! நண்பன்தான்!" மதுராந்தகன் குரோதமும், துயரமும் ததும்பிய குரலில் மெல்லிய சிரிப்புச் சிரித்துவிட்டு, "நல்ல நண்பன் கிடைத்தாய்! உலகமே என்னைவிட்டு நழுவிச் செல்லும்போது, நீயாவது கிடைத்தாயே!" என்றான்.

"ஆம், ஐயா! உலகத்தில் யாரும் தங்களுக்குச் செய்ய முடியாத உதவியைத் தங்களுக்கு நான் செய்ய முடியும்!" என்றான் கருத்திருமன்.

"அது என்ன, சொல் பார்க்கலாம்! நேரமாகிவிட்டது சொல்லுவதைச் சீக்கிரம் சொல்லு!"

"எதற்கு நேரம் ஆகிவிட்டது?" என்று கருத்திருமன் கேட்டு விட்டு, மதுராந்தகனை உற்று நோக்கினான்.

"அரண்மனைக்குப் போவதற்குத்தான், வேறு எதற்கு?"

"தங்களுக்கு உரிமை இல்லாத அரண்மனைக்குத் தாங்கள் திரும்பிப் போகப் போகிறீர்களா?"

மதுராந்தகன் மறுபடியும் அதிர்ச்சி அடைந்து, "அடே! என்ன சொல்லுகிறாய்? உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? விரைவிலே சொல்லு! இல்லாவிடில்..." என்று கையிலிருந்த குத்துவாளை ஓங்கினான்.

"ஐயா! வாளை ஓங்க வேண்டாம்; தங்கள் பகைவர்கள் எதிர்ப்படும்போது உபயோகிப்பதற்குத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். சற்று முன் தாங்களும், தங்களை வளர்த்த பெரிய மகாராணியும் இந்த மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் மரத்தின் பின்னால் நின்றதை நீங்கள் இருவரும் கவனிக்கவில்லை..."

"ஆகா! ஒட்டுக்கேட்டு இரகசியத்தை அறிந்து கொண்டாயா? அந்தத் துணிச்சலுடனேதான் என்னை வழிமறித்து நிறுத்தினாயா?"

"இல்லை, இல்லை! மகாராணி தங்களிடம் சொன்ன செய்தி எனக்கு முன்னமே தெரியும்; அதைவிட அதிகமாகவும் தெரியும். அந்த மாதரசி தங்களை வயிற்றில் வைத்து வளர்த்த அன்னை அல்லவென்றும், கண்டராதித்தர் தங்கள் தந்தை அல்லவென்றும் அவர் தங்களிடம் கூறினார். தங்களுடைய அன்னை யார் என்றும் சொல்லி இருப்பார். ஆனால், தங்கள் தந்தை யார் என்று சொல்லி இருக்கமாட்டார்."

மதுராந்தகன் அவனை வெறித்து நோக்கி, "உனக்கு அது தெரியுமா?" என்றுகேட்டான்.

"ஆம், தெரியும்."

மதுராந்தகன் அந்தப் பைத்தியக்காரத் தோற்றமுடையவன் தான் அவன் தந்தை என்று உரிமை கொண்டாடப் போகிறானோ என்று பீதி அடைந்தான். அருவருப்பும் ஆத்திரமும் நிறைந்த குரலில் "உனக்கு எப்படித் தெரியும்? நீ யார்?" என்று கேட்டான்.

"நான் தங்கள் தந்தையின் ஊழியன்!" என்று கருத்திருமன் கூறியதும், மதுராந்தகன் முகம் தெளிவு பெற்றது.

கருத்திருமன் சற்று அருகில் நகர்ந்து வந்து, "ஐயா! தங்கள் தந்தை..." என்று மெல்லிய குரலில் கூறினான்.

மதுராந்தகன் காதில் அவன் கூறியது விழுந்தது. மதுராந்தகனுடைய தலை சுற்றியது. கீழே விழப் பார்த்தவன் சமாளித்துக் கொண்டு கருத்திருமனுடைய புஜங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு, "நீ கூறியது உண்மைதானா? உண்மையாகவே நான் இராஜ குமாரன்தானா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இதைத் தங்களிடம் சொல்வதற்காகவே பல வருஷங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தேன். தங்களை அந்தரங்கமாகப் பார்த்துப் போவதற்கு சமயம் நோக்கிக் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாகச் சின்னப் பழுவேட்டரையர் என்னை அரண்மனைத் தோட்டத்தில் பார்த்துவிட்டார். பிடித்துப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டார்."

"எப்போது தப்பினாய்? எப்படி?"

"இன்றைக்குத்தான், வந்தியத்தேவன் என்னும் வாலிபன் ஒருவனுடைய உதவியினால் தப்பித்து வெளி வந்தேன்."

"ஆகா! நானும் கேள்விப்பட்டேன்; கரிகாலரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவன் அல்லவா அவன்?"

"ஆம்; ஐயா! ஆனால் உண்மையில் ஆதித்த கரிகாலரைக் கொன்றவன் அந்த வாலிபன் அல்ல!"

"அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? கொன்றவனாகவே தான் இருக்கட்டுமே? இப்போது எங்கே அவன்?"

"அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் வேலியின் மறைவில் இருக்கிறான். எனக்கும், அவனுக்கும் இரண்டு குதிரைகளுடன் காத்திருக்கிறான். நான் நேரம் செய்வது பற்றி அவன் இப்போது கோபம் அடைந்திருப்பான். அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எதிர்பாராத விதத்தில் தங்களைச் சந்தித்து விட்டேன்."

"எப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள்?" என்றான் மதுராந்தகன்.

"சற்று முன்னாலேதான் வந்தோம்; இந்தக் குடிசைக்கு அருகில் இரண்டு குதிரைகள் இருக்கின்றனவென்று தெரிந்து கொண்டு வந்தோம். குதிரைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது தாங்களும், தங்களை வளர்த்த அன்னையும் தீவர்த்திகளுடன் சாலையில் வந்தீர்கள். அந்த வெளிச்சத்தில் குதிரைகளைக் கண்டுபிடித்தோம். நான் பல வருஷங்களுக்குப் பிறகு வாணியைப் பார்த்தேன். அவளுடைய ஊமைப் பாஷையில் பேசிக் கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்தக் குடிசைப் பக்கம் திரும்பி வந்தீர்கள். நீங்கள் இந்தக் குடிசைக்குத்தான் வருகிறீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்தியத்தேவன் வேலி மறைவுக்கு ஓடி விட்டான். நானும் வாணியும் இம்மரத்தின் பின்னால் சிறிது நேரம் நின்றோம். பிறகு அவளும் குடிசைக்குள் போய்விட்டாள். நான் மட்டும் இங்கு நின்று கொண்டிருந்தேன். அதன் பலனாகத் தங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது."

"சரி, இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய்?"

"தாங்கள் எவ்விதம் சொல்லுகிறீர்களோ, அவ்விதம் செய்கிறேன், ஐயா! தங்கள் பிறப்பைக் குறித்த உண்மையை அறிந்த பிறகும், தஞ்சை அரண்மனைக்குத் திரும்பிப் போகப் போகிறீர்களா? ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தாங்கள் சோழ குலத்து இளவரசர் அல்லவென்பது இன்னும் சிலருக்கும் தெரியும். முதன்மந்திரிக்கும், அவருடைய ஒற்றன் ஆழ்வார்க்கடியான் என்பவனுக்கும் தெரியும். என்றைக்காவது ஒருநாள்..."

"ஆமாம், ஆமாம்! தஞ்சை அரண்மனைக்குப் போக எனக்கும் விருப்பமில்லைதான், நீ என்ன யோசனை சொல்லுகிறாய்?"

"அந்த வேலி மறைவில் இரண்டு குதிரைகள் இருக்கின்றன. தாங்கள் குடிசைக்குள் போவதுபோல் போய்விட்டு அந்த வேலிப் பக்கம் வாருங்கள். நான் வந்தியத்தேவனுடன் சிறிது பேசிக் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறேன். தங்கள் கையிலுள்ள வாளை அவன் மீது எறிந்து கொன்றுவிடுங்கள். இரண்டு குதிரைகள் மீது நாம் இருவரும் ஏறிப் போய்விடுவோம். கோடிக்கரை சென்று இலங்கைக்குப் போவோம். இலங்கை அரசர், சோழ குலத்தின் பகைவர்; பாண்டிய குலத்துக்குப் பரம்பரை சிநேகிதர். நான் இலங்கை மன்னரை நன்கு அறிவேன். பாண்டிய குலத்தின் மணி மகுடமும், இரத்தின ஹாரமும் இருக்குமிடமும் அறிவேன் என்ன சொல்லுகிறீர்கள்?"

மதுராந்தகன் சிறிது நேரம் யோசனை செய்தான். அவனுடைய உள்ளம் அந்தச் சில வினாடி நேரத்தில் எத்தனையோ கோட்டைகள் கட்டியது.

"ஐயா! நேரம் போகிறது தங்கள் முடிவு என்ன? வந்தியத்தேவன் இனி இங்கேயே வந்துவிடுவான்."

"அவனைக் கொல்லவேண்டும் என்றா சொல்லுகிறாய்?"

"தங்களுக்குத் தயக்கமாயிருந்தால் தங்கள் கையிலுள்ள குத்து வாளை என்னிடம் கொடுங்கள்!"

"வேண்டாம்; இந்த வாளுக்கு வேறு வேலை இருக்கிறது. வந்தியத்தேவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் நல்ல வீரன் அவனையும் நம்முடன் அழைத்துக் கொண்டு போகலாமே?"

"அழைத்துப் போகலாம்; ஆனால் இன்னொரு குதிரை?"

"குதிரைக்கு என்ன குறைவு? நான் இன்னமும் பட்டத்து இளவரசன் மதுராந்தகன்தானே!" என்று கூறிவிட்டுக் கோபச் சிரிப்புச் சிரித்தான். பிறகு, "நீ போ! அவனைச் சற்று நேரம் பொறுமையாக இருக்கச் சொல்! இந்தக் குடிசைக்காரனைப் பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டு விரைவில் வந்து விடுகிறேன்!" என்றான்.

கருத்திருமன், வந்தியத்தேவன் மறைந்து நின்ற வேலியைத் தேடிக் கொண்டு போனான். நல்ல இருட்டு, தூரத்தில் இராஜபாட்டையில் அவ்வப்போது சிலர் தீவர்த்தி பிடித்துக் கொண்டு போனபோது சிறிது வெளிச்சம் வந்தது. வெகு தூரத்திலிருந்து வந்த அந்த மங்கலான வெளிச்சத்தில் இரண்டு கம்பீரமான புரவிகள் வேலிகளில் கட்டப்பட்டு நிற்பது தெரிந்தது.ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை. மெல்லிய குரலில் கூப்பிட்டுப் பார்த்தான்; பதிலுக்குக் குரல் கேட்கவில்லை. "சரி; அவனாகத் தொலைந்து போனால் நல்லதாய்ப் போயிற்று" என்று கருத்திருமன் எண்ணிக் கொண்டான்.

வந்தியத்தேவனும் கருத்திருமனும் முதலில் நந்தவனக் குடிசையருகில் வந்தபோது அங்கே இருள் சூழ்ந்திருந்தது. குடிசைக்குள் எரிந்த சிறிய விளக்கிலிருந்து சில ஒளிக்கிரணங்கள் வெளியே எட்டிப் பார்த்தன. தாமரைக் குளத்திற்குத் தண்ணீர் மொள்ளச் சென்ற வாணி அம்மையாரோ, இருவர் இருட்டில் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள். முதலில் வந்தியத்தேவனுடைய முகம் அவள் பார்வையில் தென்பட்டது. உடனே அவளுடைய முகம் மலர்ந்தது. முன்னொரு தடவை சேந்தன் அமுதன், அவனை அழைத்து வந்ததை அவள் மறந்து விடவில்லை. வரவேற்புக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள். பின்னால் தொடர்ந்து வந்த கருத்திருமனைக் கண்டதும் பேய் பிசாசைக் கண்டவளைப் போல் பீதி அடைந்து செயலற்றுப் பிரமித்து நின்றாள். கருத்திருமன் அவளுடன் சமிக்ஞை பாஷையில் பேச முயன்று, அவளுடைய பீதியை ஒருவாறு போக்கினான்.

அவர்களிருவரையும் தனியாக விட்டுவிட்டு வந்தியத்தேவன் குடிசையை அணுகினான். வாசற்கதவு அப்போதுதான் தாளிடப்பட்டது. பலகணி வழியாக எட்டிப் பார்த்தான். சேந்தன் அமுதன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக முகமலர்ச்சியுடன் பூங்குழலியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவனுக்குச் சிறிது நிம்மதி ஏற்பட்டது. அவர்களுடைய பேச்சினிடையில் குறுக்கிட்டு விடைபெற்றுக் கொண்டு போக முயல்வது உசிதமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, செம்பியன்மாதேவியும், மதுராந்தகனும், அவர்களுடைய பரிவாரங்களும் வந்து விட்டார்கள்.

உடனே அவன் குடிசையைவிட்டு நகர்ந்து வேலியைத் தாண்டி அப்பால் குதித்தான். அங்கே கட்டியிருந்த குதிரைகளைக் கண்டதும் ஆழ்வார்க்கடியான் அந்த வரைக்கும் தன்னை ஏமாற்றி மோசம் செய்யவில்லை என்று உறுதி பெற்றான். கருத்திருமன் வரவுக்காக அங்கேயே காத்திருந்தான். சிவிகைகள், பரிவாரங்கள், தீவர்த்திகள் எல்லாம் போன பிறகும் கருத்திருமன் வராதிருக்கவே, வந்தியத்தேவன் பொறுமை இழந்தான். மீண்டும் வேலியைத் தாண்டிக் குதித்து வந்தான். மரத்தடியில் மதுராந்தகனும், கருத்திருமனும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். மதுராந்தகன் கண்ணில் பட அவன் விரும்பவில்லை. கருத்திருமனுக்கும், மதுராந்தகனுக்கும் என்ன அந்தரங்கப் பேச்சு என்ற ஐயமும் அவன் உள்ளத்தில் உதித்தது. அவர்களுடைய பேச்சில் ஒரு பகுதி அவன் காதில் விழுந்தது. மதுராந்தகன் குடிசையை நோக்கிப் போனபோது, அவனை அறியாமல் வந்தியத்தேவனும் பின் தொடர்ந்து போனான்.

மதுராந்தகன் குடிசை வாசலில் சென்று கதவை இடிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றான். அப்போது உள்ளிருந்து கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்பின் ஒலியினால் மதுராந்தகனுடைய மனம் மாறிவிட்டதோ, அல்லது எண்ணி வந்த காரியத்துக்குத் துணிவு வரவில்லையோ, தெரியாது. உடனே திரும்பிக் கருத்திருமன் சென்ற திசையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

வந்தியத்தேவன் அவன் கண்ணில் படாமல் தப்புவதற்காக அப்பாலிருந்த ஒரு மரத்தின் மறைவுக்குப் பாய்ந்தான். அப்படிப் பாயும்போது அவன் கண்ணில் ஒரு விபரீதமான காட்சி தென்பட்டது. குடிசைக்குப் பின்புறச் சுவரில் ஒரு பலகணி இருந்தது. அதன் வழியாகக் குடிசையில் எரிந்த விளக்கின் ஒளி சிறிது வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில் ஒரு மனித உருவம் கையில் ஒரு குட்டையான ஈட்டியுடன் பயங்கரமாக நிற்பதைக் கண்டான்.

குடிசையின் பலகணி வழியாக அந்த உருவம் உள்ளே உற்றுப் பார்த்தது. பின்னர் ஈட்டியைப் பலகணி வழியாக உள்ளே எறியும் நோக்குடன் குறி பார்க்கத் தொடங்கியது ஆனால் உடனே எறிந்துவிடவில்லை. குறி பார்ப்பதும் மறுபடி கீழே தழைப்பதுமாக இருந்தது. அதே சமயத்தில் குதிரைகள் புறப்படும் காலடிச் சத்தம் கேட்டது.வந்தியத்தேவன் ஒரு கண நேரம் தத்தளித்தான்.

குதிரைகள் இரண்டும் போய்விட்டால் அவன் தப்பிச் செல்வது அசாத்தியமாகிவிடும். குதிரையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனால் இங்கே இந்தக் கரிய நிழல் உருவம் என்ன கொடிய காரியம் செய்ய எண்ணுகிறதோ, அதைத் தடுக்க முடியாமற் போகும். வந்தியத்தேவனுடைய தத்தளிப்பு ஒரு நிமிட நேரத்துக்கு மேல் நீடிக்கவில்லை. குதிரைகள் போனால் போகட்டும்; அவன் கடமை இப்போது இங்கேதான். கையில் ஈட்டியுடன் நின்ற கரிய உருவத்தை நோக்கி மெள்ளச் சென்றான்.

குடிசைக்குள்ளிலிருந்து 'வீல்' என்று ஒரு குரல், பீதி நிறைந்த பெண் குரல், தெளிவாகக் கேட்டது. வந்தியத்தேவன் ஜாக்கிரதையை விட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். ஈட்டியை உள்ளே எறிய இருந்தவன் வந்தியத்தேவன் ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பினான். திரும்பிய வேகத்துடன் அவன் மீது ஈட்டியை எறிந்தான்.ஈட்டி வந்தியத்தேவனுடைய விலாவில் பாய்ந்தது; அவன் கீழே விழுந்தான். அவன் என்ன ஆனான் என்றுகூடப் பாராமல் ஈட்டியை எறிந்தவன் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான்.


பக்க தலைப்பு



--------------------------------------------------------------------------------

அறுபத்துமூன்றாம் அத்தியாயம்
பினாகபாணியின் வஞ்சம்



பொன்னியின் செல்வரும், குந்தவைதேவி முதலானோரும் பாதாளச் சிறைக்குச் சென்று பார்த்தபோது அங்கே அவர்கள் வந்தியத்தேவனைக் காணவில்லை. அவனுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். பினாகபாணி சுவரில் இருந்த இரும்பு வளையங்களில் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான்.

"ஐயையோ! கொலைகாரன் தப்பி ஓடிவிட்டான்! பைத்தியக்காரன் தப்பி ஓடிவிட்டான்" என்று கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தான். அவனைக் குந்தவை தேவிக்கும் வானதிக்கும் நன்கு நினைவிருந்தது. முதன் முதலில் வந்தியத்தேவனுக்குத் துணையாக அவனையும் கோடிக்கரைக்கு அவர்கள் அனுப்பினார்கள் அல்லவா? பினாகபாணியை விடுதலை செய்யப் பண்ணி விசாரித்தபோது அவன் சற்றுமுன் அங்கு நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தினான். தப்பி ஓடிப்போனவர்களை விரைவாகத் தொடர்ந்து பிடிக்க வேண்டுமென்றும் ஆத்திரப்பட்டான்.

ஆனால், அவனுடைய வரலாற்றைக் கேட்டவர்கள் அது விஷயத்தில் அவ்வளவு ஆத்திரம் கொள்ளவில்லை. வந்தியத்தேவனுடைய சாமர்த்தியத்தைப் பற்றி மனத்திற்குள் அவர்கள் மெச்சிக் கொண்டதுடன், அச்சமயம் அவன் தப்பி ஓடிப் போனதே ஒருவிதத்தில் நல்லது என்று எண்ணிக் கொண்டார்கள்.

மணிமேகலை தனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியபோது குந்தவை, அவளைத் தடுத்து, "தங்காய்! பேசாமலிரு! இது பெரிய இராஜாங்க விஷயம். பெண் பிள்ளைகளாகிய நமக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு!" என்றாள்.

எல்லாரும் பாதாளச் சிறையின் வாசலில் வந்தபோது அங்கே சேனாதிபதி பெரிய வேளாரும் வந்து சேர்ந்தார். சிறையில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்ற செய்தி அவர் காதுக்கு அதற்குள் எட்டியிருந்தது. நடந்தவற்றை அறிந்தபோது சேனாதிபதியும் தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதில் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. உண்மையில் அவருடைய மனத்திற்குள்ளேயும் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்தைப் பற்றிச் சிறிதும் நம்பிக்கை உண்டாகியிருக்கவில்லை. அருள்மொழிவர்மர், குந்தவைதேவி முதலியோர் வந்தியத்தேவனிடம் கொண்டிருந்த அபிமானத்தையும் அறிந்திருந்தார். ஆகையால், கோபம் கொள்வதற்குப் பதிலாக வந்தியத்தேவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் குறிப்பிட்டு சிரித்தார்.

"அந்த வாணர்குல வாலிபன் ரொம்ப சாமர்த்தியசாலி! இலங்கை மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான்!" என்றார்.

வைத்தியர் மகன் குறுக்கிட்டு, "ஐயா! தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்றான்.

"ஆ! அவர்கள் எங்கே தப்பிச் சென்றுவிடப் போகிறார்கள்? இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும்? பார்த்துக் கொள்ளலாம்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

பினாகபாணி ஆத்திரத்துடன் "இல்லை, இல்லை! அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான்!" என்று அலறினான்.

சேனாதிபதி இதனால் கோபம் அடைந்து, "முட்டாளே! நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாயா? அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம்? வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ? இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள்!" என்று பக்கத்தில் நின்ற வீரர்களைப் பார்த்துக் கூறினார்.

பினாகபாணி நடுநடுங்கிப் போனான். "இல்லை, ஐயா! சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன்!" என்று முறையிட்டான்.

பொன்னியின் செல்வர் குறுகிட்டு, "ஆமாம்; இவன் முதல்மந்திரியின் ஆள் அல்லவா? தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும்!" என்றார். அவ்வாறே சேனாதிபதி வைத்தியர் மகனை முதன்மந்திரி அநிருத்தரிடம் கொண்டுபோய் ஒப்புவித்துவிடும்படி தம்முடைய வீரர்கள் நால்வருக்குக் கட்டளை பிறப்பித்தார்.

முதன்மந்திரி அநிருத்தர் பினாகபாணியிடம் சிறையில் நடந்தவற்றைக் கேட்டு அறிந்தபோது அவரும் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. அநிருத்தர் எந்த முக்கியமான காரியத்துக்கும் ஒரு ஆளை மட்டும் நம்பி அனுப்புவதில்லை. எங்கேயாவது ஒற்றனை அனுப்பினால், அவனைக் கவனித்துக் கொள்ளப் பின்னால் இன்னொருவனையும் அனுப்பி வைப்பது அவர் வழக்கம். அவ்வாறே இப்போதும் ஆழ்வார்க்கடியானை அனுப்பியிருந்தபடியால் அவர் கவலைப்படவில்லை. ஓடிப்போனவர்களை அவன் பிடித்துக் கொண்டு வருவான் அல்லது அவர்களைப் பற்றிய செய்தியாவது கொண்டு வருவான் என்று நம்பினார். ஓடிப்போனவர்கள் இருவரும் ஒரு வழியாக அகப்படாமலே ஓடிப்போய்விட்டால் பல தொல்லைகள் தீர வகை ஏற்படும் என்ற எண்ணமும் அவர் மனதில் இருந்தது.

எனவே, பினாகபாணி பாதாளச் சிறையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, "ஐயா! என்னுடன் நாலு ஆட்களை அனுப்பி வைத்தால் நானே அவர்களைத் திரும்பவும் கைப்பற்றி வருகிறேன்" என்று சொன்னபோது, அநிருத்தரும் அவன் பேரில் எரிந்து விழுந்தார்.

"முட்டாளே! காரியத்தை அடியோடு கெடுத்துவிட்டாய்! அந்தப் பைத்தியக்காரனைப் பற்றி வெளியில் யாருக்குமே தெரியக்கூடாது என்று அல்லவா உன்னை அனுப்பினேன். இல்லாவிடில் நானே போய் அவனை அழைத்து வந்திருக்கமாட்டேனா? இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்டது. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா? போதும் உன்னுடைய சேவை! நீ ஒற்றன் வேலைக்குச் சிறிதும் தகுதி அற்றவன் போ! இனி என் முகத்தில் விழிக்காதே! இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே! சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன்!" என்றார் அநிருத்தர்.

பினாகபாணி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு முதன்மந்திரி வீட்டிலிருந்து வெளியேறினான். அவனுடைய உள்ளத்தில் ஆசாபங்கத்தினால் ஏற்பட்ட குரோதம் கொழுந்து விட்டெரிந்தது. அந்தக் குரோதமெல்லாம் வந்தியத்தேவன் மீது திரும்பியது. அவனாலேதான் தனக்கு எடுத்த காரியத்தில் தோல்வியும், அபகீர்த்தியும் உண்டாயின. சேனாதிபதியும் முதன்மந்திரியும் தன்னைக் கடிந்து கொள்ளவும் நேர்ந்தது. இவர்கள் எல்லோரும் அலட்சியமாயிருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். வந்தியத்தேவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கும் கடமை தன்னுடையது. பைத்தியக்காரன் தப்பி ஓடிப் போனாலும் போகட்டும்; வந்தியத்தேவன் மட்டும் விடக் கூடாது. கோடிக்கரைக்குப் பிரயாணம் சென்ற நாளிலிருந்து தன்னுடைய விரோதி அவன். கடைசியாக இந்தப் பெரிய தீங்கைத் தனக்குச் செய்திருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கியே தீரவேண்டும்!...

இவ்வாறு பினாகபாணி தீர்மானித்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையைவிட்டு வெளியேறினான். வந்தியத்தேவன் கோட்டைக்குள் இருக்கமாட்டான் என்றும், இரகசியச் சுரங்கப்பாதை வழியாகப் போயிருப்பான் என்றும் அவன் உண்மையிலேயே நம்பினான். ஆனால் சுரங்கபாதை எங்கே இருக்கிறதென்றாவது, அதன் வெளி வாசல் எங்கே திறக்கிறதென்றாவது, அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கோட்டைச் சுவரில் எங்கேயோ ஓரிடத்தில் அந்த இரகசியச் சுரங்கப் பாதையின் வெளி வாசற்படி இருக்கத்தான் வேண்டும். சுவர் ஓரமாகப் போய்ச் சுற்றிப் பார்த்தால் ஒருவேளை கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம். ஏன்? வந்தியத்தேவனும், பைத்தியக்காரனும் வெளியில் வரும்போது கையும் மெய்யுமாக அவர்களைப் பிடித்தாலும் பிடித்து விடலாம்...

இத்தகைய எண்ணத்தினால் பினாகபாணி தஞ்சைக் கோட்டையின் வெளிப்புறத்தில் மதிளை ஒட்டி வடவாற்றின் அக்கரை வழியாகப் போய்க்கொண்டிருந்தான். மதிள் சுவரைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டே போனான்.கொடும்பாளூர் வீரர்கள் சிலர் கையில் தீவர்த்தியுடன் அவ்வப்போது மதிளைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். வைத்தியர் மகனிடம் இன்னமும் அவன் முதன்மந்திரியின் ஆள் என்பதற்கு அடையாளமான இலச்சினை இருந்தது. ஆகையால், வீரர்கள் எதிர்ப்பட்டால் அவன் அவர்களிடமிருந்து சமாளித்துக் கொண்டு செல்ல முடியும். ஆயினும், அவன் எடுத்த காரியம் அதனால் தாமதம் ஆகும். ஆகையால் தீவர்த்தியுடன் காவல் வீரர்கள் எதிரே வந்தபோதெல்லாம் பாதை ஓரத்தில் மரங்கள் புதர்களில் மறைந்து நின்று அவர்கள் அப்பால் போனதும் வெளி வந்தான். இப்படி அவன் ஒரு தடவை புதர்களில் மறைந்து கொண்டிருந்தபோது அவனுக்குச் சற்றுத் தூரத்தில் இன்னும் இருவர் ஒளிந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவர்களில் ஒருவன் கையில் வாள் இருந்தது. தீவர்த்தி வெளிச்சம் புதர்களின் வழியாக வந்து இரண்டொரு கிரணங்கள் அந்த வாளின் மீது பட்ட போது அது ஒளி வீசியது. ஆனால் ஒளிந்திருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

காவலர்கள் அப்பால் போனதும் அந்த இரு மனிதர்களும் நதிக் கரைக்கு வந்து பினாகபாணி சென்ற திசைக்கு எதிர் பக்கமாக நடந்து சென்றார்கள். பினாகபாணி தன் வழியே சிறிது தூரம் சென்றான். சட்டென்று அவன் மனத்தில் ஓர் ஐயம் உதித்தது. அவர்கள் இருவரும் தப்பி ஓடிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனுந்தானோ என்னமோ? ஏன் இருக்கக்கூடாது? கோட்டை வாசலை நோக்கி அவர்கள் சென்றபடியால் அவனுக்கு முதலில் அச்சந்தேகம் உதிக்கவில்லை. ஆனால் வந்தியத்தேவன் மிக்க தந்திரசாலி; துணிச்சலும் உள்ளவன் ஆகையால் என்ன உத்தேசத்துடன் போகிறானோ, என்னமோ?...

எனவே பினாகபாணியும் திரும்பி அவர்களைச் சற்றுத் தூரத்தில் பின்தொடர்ந்து போனான். ஒருவனுடைய கையிலே வாள் இருந்தபடியால் ஓடிப்போய் அவர்களை எதிர்ப்படவும் விரும்பவில்லை. அநாவசியமாக அன்னியன் ஒருவனுடன் சண்டை போடும் சமயம் அதுவல்ல. அவர்கள் தப்பி ஓடியவர்கள்தான் என்று நிச்சயம் தெரிந்துகொண்ட பிறகுதான் எதுவும் செய்ய வேண்டும். அவனுடைய கையில் குட்டையான குத்தீட்டி ஒன்று இருக்கவே இருந்தது. அதைத் திடீரென்று உபயோகித்து அவனுடைய ஜன்ம விரோதியைத் தீர்த்துக் கட்டுவதே நல்லது. அதோ வடக்குக் கோட்டை வாசல் தெரிகிறது! அடேடே! அங்கே என்ன இவ்வளவு கூட்டமும் ஆர்ப்பாட்டமும்? பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள்! யாரோ முக்கியமானவர்கள் வெளியில் போகிறார்களோ, திரும்பி வருகிறார்களோ தெரியவில்லை!

கடவுளே! இவர்கள் எங்கே? சட்டென்று மாயமாய் மறைந்து விட்டார்களே? குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும்! எங்கே போயிருப்பார்கள்? இராஜபாட்டைக்குப் போய் விட்டார்களா, என்ன? தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா? இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும்?... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது! ஆமாம்! ஆமாம்! அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனுந்தான். சேந்தன் அமுதன் வீட்டுக்குத்தான் போகிறார்கள் போலும்! அல்லது அந்தத் தந்திரசாலியான வந்தியத்தேவன் வேறு என்ன உத்தேசம் வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

சேந்தன் அமுதனுடைய நந்தவனம் இருந்த திசையை நோக்கிப் பினாகபாணி சென்றான். இருட்டில் வழி கண்டுபிடித்துச் செல்வது அவ்வளவு சுலபமாயில்லை. தட்டுத்தடுமாறி நந்தவனத்தை அடைந்தபோது அங்கே சிவிகைகளும் காவலர்களும் இருப்பதைக் கண்டு வியந்தான். என்ன செய்தவதென்று தெரியாமல் அவன் தயங்கி நின்றபோது, சிவிகைகள் புறப்பட்டு விட்டன. காவலர்களும் பின்தொடர்ந்து சென்றார்கள்.

பினாகபாணி அந்த நந்தவனத்தில் நாலாபுறமும் உற்றுப் பார்த்தான். ஒரு வேலியின் ஓரமாக இரண்டு குதிரைகளின் தலைகள் தெரிந்தன. வைத்தியர் மகனின் ஆர்வம் அதிகமாயிற்று. மெள்ள மெள்ள நடந்து குடிசையை அணுகினான். ஒரு மரத்தினடியில் இருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் தான் தேடி வந்த ஆசாமிகளாகத்தான் இருக்கவேண்டும். குதிரைகள் இரண்டு ஆயத்தமாக நிற்கின்றனவே, அது எப்படி? அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன? அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ? அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ?..

மரத்தின் பின்னால் மறைந்து நின்று பேசுகிறவர்கள் யார் என்று உற்றுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பைத்தியக்காரன்தான்; சந்தேகமில்லை. அவனுடைய கம்மல் குரலை நன்றாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது.அப்படியானால், இன்னொருவன் வந்தியத்தேவனாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே? இது என்ன அதிசயம்? இளவரசர் மதுராந்தகரைப் போல் அல்லவா தோன்றுகிறது? தலையிலே இளவரசுக் கிரீடம்! தோளில் பீதாம்பரம்! கழுத்தில் முத்து மாலைகள்! கைகளிலும் ஆபரணங்கள்!... மதுராந்தகருக்கும் இந்தப் பைத்தியக்காரனுக்கும் இடையில் என்ன அந்தரங்கப் பேச்சு இருக்க முடியும்?

அது ஏதாவது இருந்துவிட்டு போகட்டும்; தன்னுடைய ஜன்ம விரோதியான வந்தியத்தேவன் எங்கே? பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்தேகமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான்! ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே? அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ? பைத்தியக்காரன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறானோ?...ஆகா! அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்கள் தப்பிச் செல்வதற்குக் காரணமானவர் மதுராந்தகர்தான் போலும்! மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும்! இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும்! கடவுளே! இவையெல்லாம் மட்டும் உண்மையாக இருந்து, தன்னால் அவற்றை உண்மை என்று நிரூபிக்கவும் முடியுமானால்?...

இப்படியெல்லாம் பினாகபாணியின் கோணல் மூளை வேலை செய்தது. எல்லாவற்றுக்கும் குதிரைகளின் அருகில் போய்ப் பார்ப்பது நல்லது. அங்கே ஒருவேளை வந்தியத்தேவன் தனியாக இருந்தால், தன் கையிலிருந்த குத்தீட்டியினால் ஒரு கை பார்க்கலாம். பிற்பாடு, இந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துப் பயமுறுத்தி உண்மையை அறியலாம். மதுராந்தகரும் பைத்தியக்காரனும் பேசிக்கொண்டு நின்ற மரத்திற்கு நேர் எதிரே வேலிக்கு அப்பால் குதிரைகள் நின்றன. அவர்களைத் தாண்டிக்கொண்டு அங்கே போக முடியாது. வழியில் தாமரைக் குளம் வேறு இருந்தது. ஆகையால் குடிசைக்குப் பின்புறத்தை அடைந்து அங்கே வேலியைத் தாண்டிப் போய்க் குதிரைகள் நின்ற இடத்தைச் சேர்வதுதான் நல்லது.

பினாகபாணி அவ்வாறே சென்று குடிசையின் பின்புறத்தை அடைந்தபோது, அவனுடைய காதில் சேந்தன் அமுதன் குரலும், பூங்குழலியின் குரலும் வீழ்ந்தன. பூங்குழலியின் மீது கோடிக்கரையில் முதன்முதலாக அவளைச் சந்தித்தபோதே பினாகபாணி மோகம் கொண்டிருந்தான். அவள் காரணமாகவே வந்தியத்தேவன் மீது அவனுடைய குரோதம் அதிகமாயிற்று. பிற்பாடு, அவன் மந்தாகினியைக் கைப்பற்றிக் கொண்டு வரப்போனபோது சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் ஏற்பட்டிருந்த நட்புரிமையைத் தெரிந்து கொண்டு மனம் புழுங்கினான். சேந்தன் அமுதன் மீதும் அவனுக்குக் குரோதம் உண்டாகியிருந்தது.

இப்போது சேந்தன் அமுதனும், பூங்குழலியும் மகிழ்ச்சி ததும்பிய மலர்ந்த முகங்களுடன் சல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பினாகபாணி குடிசையின் சிறு பலகணி வழியாகப் பார்த்தான். சேந்தன் அமுதன் மீது அவன் குரோதம் கொழுந்து விட்டு எரிந்தது. இன்னும் சிறிது அருகில் சென்று அவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான். கலியாணம் செய்து கொண்டு கோடிக்கரை செல்லுவது பற்றிய அவர்கள் பேச்சு அவன் காதில் விழுந்தது. கலகலவென்று அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்த ஒலி, அவனுடைய குரோதக் கனலைப் பொங்கி எழச் செய்தது! சீச்சீ! கடைசியில் இந்த ஊமைப் பூக்காரியின் மகனா பூங்குழலியை அடையப் போகிறான்? அந்த எண்ணத்தைப் பினாகபாணியினால் சகிக்கவே முடியவில்லை. வந்தியத்தேவனையும், பைத்தியக்காரனையும் அவர்களைப் பிடிக்கும் உத்தேசத்தையும் அச்சமயம் அடியோடு மறந்துவிட்டான். முதலில், இந்தத் தேவாரம் பாடும் சேந்தன் அமுதனை இந்த மண்ணுலகத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும். மற்றக் காரியங்களையெல்லாம் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.

இவ்விதம் முடிவு செய்து பலகணிக்கு வெளியே சற்று ஓரமாக நின்று குத்தீட்டியைச் சேந்தன் அமுதன் மேல் எறியக் குறி பார்த்தான்.தற்செயலாக அந்த ஈட்டியையும் அதை ஏந்திய கையையும் மட்டும் பார்த்துவிட்ட பூங்குழலி 'வீல்' என்று கூச்சலிட்டாள். உடனே சேந்தன் அமுதனும் பலகணிப் பக்கம் திரும்பிப் பார்த்தான்! ஆகா! அவன் மார்பின் பேரில் ஈட்டியை எறியச் சரியான சந்தர்ப்பம்! பினாகபாணியின் கை ஈட்டியை எறிய ஓங்கிய போது பின்னால் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஓர் ஆள் வெகு சமீபத்தில் வந்து விட்டான். இருளில் அவன் யார் என்று தெரியவில்லை. யாராயிருந்தாலும் சரி; தன்னுடைய உத்தேசத்தைத் தெரிந்து கொண்டு தன்னைப் பிடிப்பதற்கே ஓடி வருகிறான். சேந்தன அமுதன் மீது எறிவதற்கு ஓங்கிய ஈட்டியை ஓடி வந்தவன் மீது செலுத்தினான்; வந்தவன் கீழே விழுந்தான்.

அதே சமயத்தில் இரண்டு குதிரைகள் புறப்பட்ட சத்தம் கேட்டது. அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் இருட்டில் தன்னைத் தடுக்க வந்து தன் ஈட்டிக்கு இலக்கானது இளவரசர் மதுராந்தகராயிருக்கக்கூடும்!.. இந்த எண்ணங்கள் மின்னல் வேகத்தில் பினாகபாணியின் உள்ளத்தில் தோன்றி அவனுக்குப் பயங்கரத்தை உண்டாக்கின. குடிசைக்கு உள்ளேயிருந்து 'ஆகா!' 'ஐயோ!' என்ற குரல்கள் எழுந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் யாரோ வரும் சத்தமும் கேட்டது. பினாகபாணி ஓட்டம் பிடித்தான்; அங்கிருந்து தப்பி ஓடுவதுதான் அப்போது முதன்மையாக அவன் செய்ய வேண்டிய காரியம். குதிரைகள் மீது ஓடியவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பது இரண்டாவது காரியம். தலைகால் தெரியாமல் பினாகபாணி விழுந்து அடித்து ஓடினான்.

சில கண நேரத்துக்கெல்லாம் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் விளக்குடன் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அவர்கள் அடைந்த பயங்கரத்தையும், துயரத்தையும் சொல்லி முடியாது. மிக்க பரிவுடன் அவனை இருவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய்க் குடிசைக்குள் சேர்த்தார்கள். அவன் இறந்துவிடவில்லை என்று அறிந்து சிறிது ஆறுதல் பெற்றார்கள். வாணி அம்மை முன்னொரு தடவை கந்தமாறனுக்குச் செய்த பச்சிலை வைத்தியத்தை இன்று காயம் பட்ட வந்தியத்தேவனுக்குச் செய்யும்படி நேர்ந்தது.


பக்க தலைப்பு



--------------------------------------------------------------------------------

அறுபத்துநான்காம் அத்தியாயம்
"உண்மையைச் சொல்!"



ஆழ்வார்க்கடியானை வந்தியத்தேவன் கட்டிப்போட்ட படகு ஆற்றோட்டத்தோடு சிறிது தூரம் மிதந்து சென்று கரையிலே ஒதுங்கியது. ஆற்று வெள்ளத்தில் தள்ளப்பட்ட வீரர்கள் இருவரும் தட்டுத்தடுமாறிக் கரை சேர்ந்து அந்தப் படகு ஒதுங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆழ்வார்க்கடியான் படகிலிருந்து இறங்கவில்லை. அவன் படகிலே கட்டுப்பட்ட மாதிரியே இருந்துகொண்டு மற்றவர்களை மறைவில் இருக்கும்படி சொன்னான்.

உண்மையென்னவென்றால், வந்தியத்தேவனும் கருத்திருமனும் தப்பித்துப் போய்விட வேண்டுமென்பதே ஆழ்வார்க்கடியானுடைய நோக்கமாயிருந்தது. முதல் மந்திரியின் விருப்பமும் அதுவே என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்விருவரும் அச்சமயம் தஞ்சையில் இருப்பதால், பழைய சம்பவங்கள் பலவற்றைக் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதாக ஏற்படும். வந்தியத்தேவனை குற்றமற்றவன் என்பதுபற்றி முதன்மந்திரிக்கும், ஆழ்வார்க்கடியானுக்கும் சந்தேகமே இல்லை. ஆயினும் அவன் மீது விசாரணை நடத்துவதனாலேயே பல சங்கடங்கள் ஏற்படும்; பலர் மனவருத்தம் அடையும்படி நேரிடும். அந்தப் பேச்சு மக்களின் காதுக்கு எட்டும்படி செய்வதே கேடாக முடியும். அருள்மொழிவர்மர் ஓர் அருமை நண்பனை இழக்கவும் சோழ ராஜ்யம் ஒரு சிறந்த வீர ராஜதந்திரியை இழக்கவும் நேரிடும். வந்தியத்தேவனைப் பற்றிக் குந்தவையின் மனோ நிலையையும் மணிமேகலையின் வெளிப்படையான ஆர்வத்தையும் முதன்மந்திரி அறிந்திருந்தார். எல்லாவற்றையும் உத்தேசித்துதான் வந்தியத்தேவன் தப்பி ஓடுவதற்கு உதவி செய்வதே அச்சமயம் உசிதமானது என்று தீர்மானித்தார்.

சேந்தன் அமுதனுடைய நந்தவனத்தில் குதிரைகளைக் கண்டுபிடித்த பிறகு வந்தியத்தேவனும், கருத்திருமனும் இந்த வடவாற்றின் கரையோடுதான் பிரயாணம் செய்வார்கள் என்று திருமலை நம்பி எதிர்பார்த்தான். கருத்திருமன் கூறியதுபோல் அந்த ஆற்றங்கரையோடு சென்றால், பாமணி நதியில் அது கலக்கும் இடம் வரையில் போகலாம். கோடிக்கரை வழியில் பாதி தூரம் சென்றாகிவிடும். ஆகவே அந்த வழியிலேதான் அவர்கள் வருவார்கள். போகும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்ப வேண்டுமென்று ஆழ்வார்க்கடியான் எண்ணிக் கொண்டு அங்கு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கொஞ்சம் நேரம் அதிகமாக ஆகிவிட்டது. "நாம் எண்ணியது தவறு; வேறு வழி போயிருக்கவேண்டும்; அல்லது ஏதேனும் எதிர்பாராதது நேர்ந்திருக்க வேண்டும்" என்று தீர்மானித்துத் திருமலை படகிலிருந்து கரையில் இறங்க எத்தனித்தபோது, தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. எனவே, மறுபடியும் கட்டிப் போடப்பட்டவனைப் போல் கிடந்தான்.

குதிரைகள் நெருங்கி வந்ததும், "ஓகோ! யார் அங்கே? கொஞ்சம் நில்லுங்கள்! என்னைக் கட்டவிழ்த்து விட்டுப் போங்கள்!" என்று கூவினான்.

ஆயினும் குதிரைகள் நிற்காமல் சென்றன. முதலில் வந்த குதிரையின் மேல் இருந்தவன் கருத்திருமன்தான் என்பதைக் கண்டான். எனவே, இரண்டாவது குதிரை நெருங்கியபோது " வந்தியத்தேவா! வந்தியத்தேவா! கொஞ்சம் நில்லு!" என்று பெரும் கூச்சலிட்டான்.

இரண்டாவது குதிரையும் நிற்காமல் போயிற்று. அப்போது அதன் மேலிருந்தவனை ஆழ்வார்க்கடியான் பார்த்தான்; கரை காணாத அதிசயத்தில் ஆழ்ந்தான்.

"என் கண்களில் ஏதோ கோளாறு இருக்கிறது; என் அறிவு மோசம் செய்கிறது" என்றான்.

அவனைக் கடந்து அப்பால் சென்ற குதிரைகள் சிறிது தூரம் போன பிறகு நின்றன. ஒரு குதிரை மட்டும் திரும்பி வந்தது. அதன் மேலிருந்து கருத்திருமன் இறங்கினான், படகின் அருகில் வந்தான். "பாவம்! இன்னுமா கட்டுப்பட்டிருக்கிறாய்? எங்களுக்கு எவ்வளவோ பெரிய உதவி செய்தாய்! அதற்குப் பிரதியாக உன்னைக் கட்டவிழ்த்துவிட்டாவது போகிறேன். ஆனால் உன் தந்திரம் எதையும் என்னிடம் காட்டாதே!" என்று சொல்லிக் கொண்டே அவன் குனிந்தபோது, திருமலை திடீரென்று கரையில் பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான்.

இதைச் சிறிதும் எதிர்பாராத கருத்திருமன் சிறிது நேரம் திகைத்துச் செயலிழந்து கிடந்தான். பிறகு, "ஐயோ, அப்பா! என்னை விட்டு விடு! உனக்குப் புண்ணியம் உண்டு. நல்லது செய்ய வந்தவனுக்கு இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? அதோ, உன் சிநேகிதன் வந்தியத்தேவன் காத்திருக்கிறான். ஆம்; அவன் உன்னைத் தன் அருமை நண்பன் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறான். இங்கு வந்து உன் காரியத்தைப் பார்த்தால் என்ன நினைப்பான்? நீ உயிரோடு தப்ப முடியாது! என்னை விட்டு விடு, அப்பனே! விட்டு விடு!" என்று பரிதாபமாகப் புலம்பினான்.

ஆழ்வார்க்கடியான், "அடே! எவ்வளவு துணிச்சலாகப் பொய் சொல்லுகிறாய்! அந்தக் குதிரையின் மேல் இருப்பவன் யார்? உண்மையைச் சொல்லு! சொன்னால் விட்டு விடுகிறேன் இல்லாவிட்டால் அடுத்த நிமிஷம் உன் உயிர் உடம்பில் இராது!" என்றான்.

"ஆம், ஆம்! பொய்தான் சொன்னேன்; உன்னை ஏமாற்ற முடியாதுதான். அந்தக் குதிரையில் இருப்பவன் வந்தியத்தேவன் அல்ல; இளவரசர் மதுராந்தகர்; என்னை விட்டுவிடு! அவரிடம் உனக்கு வேண்டிய பரிசுகள் வாங்கித் தருவேன்!"

"சரி, சரி! பரிசுகள் இருக்கட்டும்! வந்தியத்தேவன் எங்கே?"

"அந்த நந்தவனக் குடிசையில் குதிரையிலிருந்து இறங்கிப் போனான் அப்புறம் அவனைக் காணவில்லை."

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"

"வந்தியத்தேவனுடன் நான் போக உத்தேசித்த இடத்துக்குத் தான்."

"அதாவது இலங்கைத் தீவுக்கு."

"ஆமாம்!"

"மதுராந்தர் எதற்காக இலங்கைக்கு வருகிறார்?"

"எனக்கு என்ன தெரியும்? அவரைக் கேள்! என்னுடன் வருகிறேன் என்று கிளம்பி வருகிறார்."

ஆழ்வார்க்கடியான் கருத்திருமனுடைய நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கி, "உண்மையைச் சொல்! மதுராந்தகன் யாருடைய மகன்?" என்று கேட்டான்.

"இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்... இல்லை, இல்லை நெஞ்சை அமுக்காதே! என் உயிர் போய்விடும்! ஊமை மந்தாகினியின் மகன்."

"மதுராந்தகனின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்! இல்லாவிட்டால் உயிரோடு தப்ப மாட்டாய்!"

கருத்திருமன் இதற்குப் பதில் மிக மெல்லிய குரலில் சொன்னான்.

"நல்லது; பிழைத்தாய்! கடைசியாக இன்னும் ஒன்றுமட்டும் சொல்லி விடு! சேந்தன் அமுதன் யாருடைய மகன்?"

"என்னை ஏன் கேட்கிறாய்? நீதான் முன்னமே தெரிந்து கொண்டாயே?"

"கண்டராதித்தர் - செம்பியன் மாதேவியின் மகன்தானே?"

"ஆமாம்; ஆனால் அவன் இன்று உயிரோடிருப்பதற்கு நான் தான் காரணம். செவிடும், ஊமையுமாகிய வாணி அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டதென்று எண்ணிப் புதைக்கப் பார்த்தாள். குழந்தை அழும் குரலைக் கேட்டு நான் காப்பாற்றினேன். அதற்காகவாவது என்னை இப்போது உயிரோடு விட்டுவிடு!"

"உண்மையில், அதற்காகவேதான் உன்னை இப்போது உயிரோடு விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் எழுந்தான்.

கருத்திருமன் பாய்ந்து ஓடிக் குதிரையின் மீது ஏறிக் கொண்டான். இரண்டு குதிரைகளும் அந்த மழைக்கால இருட்டில் ஆற்றங்கரையோடு பாய்ந்து சென்றன.


பக்க தலைப்பு



--------------------------------------------------------------------------------

அறுபத்தைந்தாம் அத்தியாயம்
"ஐயோ,பிசாசு!"



ஆழ்வார்க்கடியான் அதுவரை மறைந்திருந்த தன் ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடந்தான். கருத்திருமனுடன் அவன் துவந்த யுத்தம் செய்த போது தன் ஆட்களை அழையாததின் காரணத்தை வாசகர்கள் ஊகித்து உணர்ந்திருப்பார்கள். அவன் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய மிக முக்கிய இரகசியமான விவரங்கள் மற்றவர்கள் காதில் விழுவதை அவன் விரும்பாததில் வியப்பில்லை அல்லவா?

பாதி தூரம் சென்ற பிறகு, எதிரே ஒரு தனி ஆள் வெறி கொண்டவனைப் போல் ஓடி வருவதைக் கண்டான்.அப்படி ஓடி வந்தவன் இருட்டில் ஆழ்வார்க்கடியான் மீது முட்டிக் கொண்டு, பின்னர் மறுபடியும் ஓடப் பார்த்தான். திருமலை நம்பி அவனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு "அடடே! வைத்தியர் மகனா? எங்கே அப்பா இப்படித் தலை தெறிக்க ஓடுகிறாய்?" என்று கேட்டான்.

"ஓகோ! வீர வைஷ்ணவனா? பேயோ, பிசாசோ என்று பயந்து போனேன். நல்லது; நீ எத்தனை தூரத்திலிருந்து இக்கரையோடு வருகிறாய்? எதிரே இரண்டு குதிரைகள் மீது இரண்டு ஆட்கள் போனார்களா?" என்றான்.

"ஆமாம்; போனார்கள்! அவர்களைப்பற்றி உனக்கு என்ன?"

"எனக்கு என்னவா? நல்ல கேள்வி! அவர்கள் யார் என்று தெரிந்தால் நீ இப்படிப்பட்ட கேள்வி கேட்கமாட்டாய்! ஆமாம் அவர்களில் ஒருவனையாவது உனக்கு அடையாளம் தெரியவில்லையா?"

"ஒருவன் மட்டும் எனக்குத் தெரிந்த ஆள் மாதிரிதான் தோன்றியது ஆனால்..?"

"யார், யார், யார் மாதிரி தோன்றியது?"

"வந்தியத்தேவனைப் போலத் தோன்றியது; அப்படியிருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டேன்."

"அட பாவி! அப்படியா தீர்மானித்தாய்! அவன் சாட்சாத் வந்தியத்தேவன்தான்!"

"என்னப்பா, உளறுகிறாய்?