கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
அத்தியாயம் 11-20
பதினொன்றாம்
அத்தியாயம் - மண்டபம் விழுந்தது! பன்னிரண்டாம்
அத்தியாயம் - தூமகேது மறைந்தது! பதிமூன்றாம்
அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம் பதினான்காம்
அத்தியாயம் - வானதியின் சபதம் பதினைந்தாம்
அத்தியாயம் - கூரை மிதந்தது! பதினாறாம்
அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்! பதினேழாம்
அத்தியாயம் - யானை எறிந்தது! பதினெட்டாம்
அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன் பத்தொன்பதாம்
அத்தியாயம் - திருநல்லம் இருபதாம்
அத்தியாயம் - பறவைக் குஞ்சுகள்
பதினொன்றாம் அத்தியாயம் மண்டபம் விழுந்தது!
மின்னல் வௌிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய
தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில்
ஒருவனாகிய ரவிதாசனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன்
மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன்
காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே தான் சந்தேகப்பட்டு அவரை
எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், கடம்பூர் அரண்மனையில் வேலனாட்டம் ஆடிய தேவராளன்.
அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை? அவனுடைய உண்மைப் பெயர் என்ன?...
அப்படியும் ஒரு வேளை இருக்க முடியும? நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க
உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்?... இருக்கட்டும்; இவர்கள்
மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.
"ரவிதாசா! நீ இப்படித்தான் வெகு
காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். `நான் நெருங்கிவிட்டது' `யமன்
நெருங்கிவிட்டான்' என்றெல்லாம் பிதற்றுகிறாய்? யமன் வந்து யார் யாரையோ கொண்டு
போகிறான்! ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர
சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே
அஞ்சுகிறான். ஈழநாட்டில் நான் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே?"...
"அதனால் குற்றமில்லை. அப்பனே! யமதமராஜன் உன்னையும் என்னையும் விடப்
புத்திசாலி! மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும்
காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக,
நீயும் இங்கே வந்து சேர்ந்தாய்! சரியான யம தூதன் நீ! ஏன் இப்படி நடுங்குகிறாய்!
கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா? படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய்
அல்லவா?"
"வைத்திருக்கிறேன்.அனால் படகை வெள்ளமும் காற்றும் அடித்துக்கொண்டு
போகாமல் காப்பாற்றுவது பெரும் பாடாய்ப் போய்விட்டது! உன்னை இத்தனை நேரம்
எங்கெல்லாம் தேடுவது?... ரவிதாசா! ஏன் என் உடம்பு நடுங்குகிறது என்று கேட்டாய்
அல்லவா? சற்று முன்னால், யமதர்மராஜனை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இல்லை, இல்லை;
யமனுக்கு அண்ணனைப் பார்த்தேன். அதனால் சற்று உண்மையிலேயே பயந்து போய் விட்டேன்..."
"பரமேச்சுவரா! என்ன உளறுகிறாய்? யமனாவது, அவன் அண்ணனாவது? அவர்களைக் கண்டு
உனக்கு என்ன பயம்? அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்?"
ரவிதாசன்
மற்றவனைப் `பரமேச்சுவரன்' என்று அழைத்ததும் பழுவேட்டரையர் துணுக்குற்றார். தாம்
சந்தேகப்பட்டது உண்மையாயிற்று! யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது
தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப்
பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும்
அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார்.
நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின்
குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன?
உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா? இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி
நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ? ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக
நடந்துவிட்டால்?... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும்! சோழ
சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது! ஆனால் இந்தப்
பரமேச்சுவரன்?... இவனுக்கு என்ன இந்த விருயத்தில் கவலை? ஆம்; ஆம்; இருபது
வருஷங்களுக்கு முன்னால் `சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம்
செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன்?... ஆகா! தம்மைப் பற்றித்தான் அவன் ஏதோ
பேசுகிறான்! என்ன சொல்லுகிறான் என்று கேட்கலாம்!
"நீ என்னிடம்
சொல்லியிருந்தபடி இன்று காலையே இங்கு நான் வந்தேன். ஆனால் உன்னைக் காணவில்லை.
காற்றிலும் மழையிலும் அடிபட்டு எங்கேயாவது சமீபத்தில் ஒதுங்கி இருக்கிறாயா என்று
சுற்றுப்புறமெல்லாம் தேடி அலைந்தேன். கொள்ளிடத்து உடைப்புக்கு அருகில் ஒரு சிறிய
கோவில் இருக்கிறது. அதில் யாரோ படுத்திருப்பதுபோலத் தோன்றியது. ஒரு வேளை நீதான்
அசந்து தூங்குகிறாயோ என்று அருகில் போய்ப் பார்த்தேன்...யாரைப் பார்த்தேன் என்று
நினைக்கிறாய்? சக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான்!..."
மந்திரவாதி,
`ஹாஹாஹா' என்று உரத்துச் சிரித்தான். அதைக் கேட்ட வனத்தில் வாழும் பறவைகள் `கீறீச்'
`கீறீச்' என்று சத்தமிட்டன. ஊமைக் கோட்ழூடான்கள் உறுமின.
"பழுவேட்டரையனைப்
பார்த்தாயா? அல்லது அவனுடைய பிசாசைப் பார்த்தாயா?" என்று ரவிதாசன் கேட்டான்.
"இல்லை; பிசாசு இல்லை. குப்புறப்படுத்திருந்தவனைத் தொட்டுப் புரட்டிப்
போட்டு முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். ரவிதாசா! யமனுக்கு அண்ணன்கள் இரண்டு
பேர் இருக்கமுடியுமா? பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய
வடுக்கள்- இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா?"
"நீ பார்த்தவன்
பழுவேட்டரையன்தான்! சந்தேகமில்லை. நேற்று மாலை பழுவேட்டரையன் படகில் ஏறிக்
கொள்ளிடத்தைத் தாண்டிக் கொண்டிருந்தான். கரையருகில் வந்தபோது படகு காற்றினால்
கவிழ்ந்துவிட்டது. அவனுடைய பரிவாரங்களில் தப்பிப் பிழைத்துக் கரையேறியவர்கள்
இப்போதுகூடக் கொள்ளிடக் கரையோரமாகப் பழுவேட்டரையனைத் தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.அவன் வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப் போயிருக்கலாம் என்று
சந்தேகப்படுகிறார்கள். உடைப்பு வரையில் போய்ப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி
வரும்போது பேசியதை நான் கேட்டேன். ஆகையால், நீ பார்த்தவன் பழுவேட்டரையனாகவே
இருக்கக்கூடும். ஒரு வேளை அவனுடைய பிரேதத்தைப் பார்த்தாயோ, என்னமோ!"
"இல்லை, இல்லை. செத்துப்போயிருந்தால் கண் விழிகள் தெரியுமா? நான் புரட்டிப்
பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக்
கொண்டிருந்தான் போலிருக்கிறது?...
"முட்டாளே! நீ என்ன செய்தாய்! அவனைச்
சும்மா விட்டு விட்டு வந்தாயா? தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக்
கூடாதா?..."
"பழுவேட்டரையன் தலையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தலையிலே
கல்லைப் போட்டால், கல்தான் உடைந்து தூள்தூளாகும்!"
"அப்படியானால்,
கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்திலாவது அவனை இழுத்துவிட்டிருக்கலாமே?"
"நான்தான் சொன்னேனே? அவனைக் கண்டதும் எனக்கு யமனுடைய அண்ணனைக் கண்டதுபோல்
ஆகிவிட்டது. கடம்பூரில் அவன் முன்னால் வேலனாட்டம் ஆடியபோதுகூட என் நெஞ்சு `திக்,
திக்' என்று அடித்துக் கொண்டுதானிருந்தது. என்னை அவன் அடையாளங் கண்டு
கொண்டானானால்..."
"அதை நினைத்து, இப்போது எதற்கு நடுங்குகிறாய்?"
"அவன் உயிரோடிருக்கும் வரையில் எனக்குக் கொஞ்சம் திகிலாய்த்தானிருக்கும்.
நீ சொன்னபடி செய்யாமற் போனோமே, அவனை வெள்ளத்தில் புரட்டித் தள்ளாமல் வந்து விட்டோமே
என்று கவலையாயிருக்கிறது..."
"ஒரு கவலையும் வேண்டாம். ஒரு விதத்தில் பெரிய
பழுவேட்டரையன் உயிரோடிருப்பதே நல்லது. அப்போதுதான், சுந்தரசோழனும், அவனுடைய
பிள்ளைகளும் இறந்து ஒழிந்த பிறகு சோழ நாட்டுச் சிற்றரசர்கள் இருபிரிவாய்ப் பிரிந்து
நின்று சண்டையிடுவார்கள். பழுவேட்டரையர்களும் சம்புவரையர்களும் ஒரு பக்கத்திலும்,
கொடும்பாளூர் வேளானும் திருக்கோவலூர் மலையமானும் இன்னொரு பக்கத்திலும் இருந்து
சண்டையிடுவார்கள். அது நம்முடைய நோக்கத்துக்கு மிக்க அநுகூலமாயிருக்கும். அவர்கள்
தங்களுக்குள் சண்டையிடும்போது நாம் பாண்டிய நாட்டில் இரகசியமாகப் படை திரட்டிச்
சேர்க்கலாம்..."
"ரவிதாசா! `அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற
கதையாகப் பேசுகிறாய்! சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு
இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக்
கொள்வார்கள்? மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம்?
உனக்கு ஒரு செய்தி தெரியுமா?..."
"எதைச் சொல்லுகிறாய்?"
"நாகைப்பட்டினத்தில் அருள்மொழிவர்மன் உயிரோடிருக்கிறானாம்! மக்கள் அவனைச்
சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று
ஆர்ப்பரிக்கிறார்களாம்! நீ கேள்விப்படாயா?"
ரவிதாசன் மறுபடியும்
சிரித்துவிட்டு, "நான் கேள்விப் படவில்லை. எனக்கே அது தெரியும். அருள்மொழி வர்மனைப்
புத்த விஹாரத்திலிருந்து வௌிப்படுத்தியது யார் என்று நினைக்கிறாய்? நம் ரேவதாசக்
கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான்! அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி!"
என்றான்.
"அதனால் என்ன? அருள்மொழிவர்மன் வௌிப்பட்டதனால் என்ன லாபம்? அவனை
இனி எப்போதும் லட்சக் கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள்? ஈழ
நாட்டில் அவன் இரண்டு மூன்று பேருடன் இருந்தபோதே நம்முடைய முயற்சி பலிக்கவில்லையே"
என்றான் தேவராளன்.
"அதுவும் நல்லதுதான் என்று சொன்னேனே? மூன்று பேருக்கும்
ஒரே நாளில் யமன் வருவதற்கு இருக்கும்போது..."
"ரவிதாசா! லட்சம் பேருக்கு
மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான்? அதை நீ சொல்லவில்லையே?"
"நெருங்குவான், அப்பனே நெருங்குவான்! யானைப் பாகனுடைய அங்குசத்தின்
நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான்! சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான்!
பரமேச்சுவரா! சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக்
கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது
ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாசக் கிரமவித்தன் யானைப் பாகனாக
அமருவான்? அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்!"
"ரவிதாசா! உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன்
விஷயம் என்ன? அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?" என்றான் தேவராளன்.
"பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை விட்டுவிட்டு
வந்திருக்கிறேன். கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து
சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும்
இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.இரண்டு கண்ணும் தெரியாத
குருடன் கூட நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று
விடலாம். சோமன் சாம்பவனை `அவசரப் படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு!' என்று
எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்..."
"அது எதற்காக? சமயம் நேரும்போது
காரியத்தை முடிப்பதல்லவா நல்லது?"
"முட்டாள்! சுந்தரசோழன் முன்னதாகக் கொலை
யுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா?
அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம்? அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி
கொண்டு வந்திருக்கிறாய்? கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள்?
அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது?"
"கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும்,
காதல் நாடகங்களுமாயிருக்கின்றன. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது
எனக்குப் பிடிக்கவே இல்லை..."
"பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று
சொல்! வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட
மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி
வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா? ஒரு வாரத்துக்கு முன்னால் இதே
இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக்
கொள்ளவில்லையா...?"
"ஆமாம், ஆமாம்! ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர
நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ
பார்த்திருக்க வேண்டும்..."
"உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும்
என்கிறாய்? மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல்
கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று
வருரும் காலந் தள்ள முடியுமா? அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு
உதவிதான் செய்திருக்க முடியுமா? ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத்
துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே? அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப்
பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து
புறப்பட்டான்? ஏன்?..."
"ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது.
மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள்.
நேற்றுக்காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள்
வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச்
சென்றார்கள். இளவரசர்களும் இளவரசிகளும் திரும்பி வந்த குதூகலமான காட்சியை நீ
பார்த்திருந்தாயானால் இவ்வளவு நம்பிக்கையோடு பேசமாட்டாய்!..."
"அதைப் பற்றி
நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே
பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே?"
"பெண்களின் மனதை யாரால்
அறியமுடியும்? அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும்
இருக்கலாம், காதல் நாடகம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்..."
"என்ன
உளறுகிறாய், பரமேச்சுவரா! நந்தினி அந்தப் பழைய கதையை அடியோடு மறந்துவிட்டாள்.
கரிகாலனை அவள் இப்போது விஷம்போலத் துவேஷிக்கிறாள்!"
"கரிகாலனைப்பற்றி நான்
சொல்லவில்லை.அவனுடைய தூதன் வந்தியத்தேவனைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டு மூன்று
தடவை நந்தினி அவனைத் தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா?"
மந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, "ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப்
பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ
மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே! இன்னும் ரொம்பப் பேர்
ஆச்சரியப்படுவார்கள்! முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை
ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப்
பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று
அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா!" என்றான்.
"என்ன செல்கிறாய், ரவிதாசா!
உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான்? அவன் நம்மோடும்
சேர்ந்துவிட்டானா, என்ன?"
"அதெல்லாம் இப்போது கேட்காதே! கரிகாலனைக்
கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன? பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த
வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது
விழப்போகிறது! நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன
சொல்லுகிறாய்?"
"நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும். பிற்பாடு கேள்,
சொல்லுகிறேன்".
"வேறு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், கரிகாலனுடைய ஆவி
நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே
தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்..."
"நம்முடைய
பொறுப்பு என்ன?"
"நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வௌியேறும் சுரங்கப்
பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக
வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும்.
அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோல கல்லோலத்தைப் பார்த்துக்
கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்..."
"சௌகரியப்பட்டால், என்ன?"
"பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும்
பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ
நாட்டுப் பொக்கிருத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர்
தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்?" இவ்விதம் கூறிவிட்டு
மறுபடியும் ரவிதாசன் சிரித்தான்.
தேவராளனாக நடித்த பரமேச்சுவரன், "சரி,
சரி! ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே! முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி
அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம்
நடக்கட்டும்! பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிருத்தைக் கொள்ளையடிப்பது பற்றி
யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய்? இப்போதே கிளம்பலாமா? இரவே கொள்ளிடத்தைத் தாண்டி
விடுவோமோ?" என்றான்.
"வேண்டாம், வேண்டாம்! பொழுது விடிந்ததும் படகில்
ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம்
குறைந்துவிடும்."
"அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே
படுத்திருக்கலாமா?" ரவிதாசன் சற்று யோசித்தான்.
அப்போது சற்று தூரத்தில்
நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. ரவிதாசனுடைய உடல் நடுங்கிற்று.
"ரவிதாசா!
கேவலம் நரிகளின் குரலைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்றான் தேவராளன்.
"அப்பனே! கோடிக்கரைப் புதை சேற்றில் கழுத்துவரையில் நீ புதைபட்டிருந்து,
சுற்றிலும் நூறு நரிகள் நின்று உன்னைத் தின்பதற்காகக் காத்திருக்கும் பயங்கரத்தை நீ
அனுபவித்திருந்தால் இப்படி சொல்லமாட்டாய்! சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின்
ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை
நடுங்குகிறது. வா! வா! இந்தச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது
கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம். இல்லாவிட்டால்,
கொள்ளிடக் கரையிலுள்ள துர்க்கைக் கோவிலைப் பற்றிச் சொன்னாயே? அங்கே போவோம்.
இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு
விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள்
வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும்!"
மேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர்
கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின்
கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து
கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள்
என்பதும், மூன்று வருருங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத
வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்கின.
ஆறு தலைமுறையாகச் சோழர்
குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம்
பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய
மக்களும் யார்? சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா?
சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா?
ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை
நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங்
கொடுத்துவிட்டோம்? சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள்
நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிருத்திலிருந்து
திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய
அல்லவா இடம் கொடுத்துவிட்டோம்! ஆகா! இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள்
மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா? நம்முடைய உடலில்
மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது
நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே
குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக்
கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம்
போய்விடவேண்டும்!"...
இவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா? இந்த
இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா? நம்மிடம்
ஆயுதம் ஒன்றுமில்லை. இல்லாவிட்டால் என்ன? வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள்
இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில்
சொருகி வைத்திருக்கக்கூடும். அவற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய
கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்...
ஆனால்
அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா? `இவர்களிடம் தெரிந்து
கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய
துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து
கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும்
விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை? அதிலும்; கடம்பூரில்
கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது
நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும்.
ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள்
எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து
வைத்திருந்த அரக்கியினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு
நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.'
`ஆகா! அத்தகைய அழகிய
வடிவத்துக்குள்ளே அவ்வளவு பயங்கரமான ஆலகால விஷம் நிறைந்திருக்க முடியுமா? மூன்று
உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம்
மறைந்திருக்க முடியுமா? இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக
இருக்க முடியுமா?...'
பழுவேட்டரையருடைய உள்ளத்தில் கோபத் தீ கொழுந்து
விட்டு எரியும்படி செய்த அந்தச் சதிகாரர்களின் வார்த்தைகள் ஒருவிதத்தில் அவருக்கு
சிறிது திருப்தியையும் அளித்திருந்தன. நந்தினி சதிகாரியாக இருக்கலாம். தம்மிடம்
அன்பு கொண்டதாக நடித்து வஞ்சித்து ஏமாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவள் கரிகாலன்
மீதோ கந்தமாறன் அல்லது வந்தியத்தேவன் மீதோ மோகம் கொண்ட காரணத்தினால் தம்மை
வஞ்சிக்கவில்லை! அந்த மௌடீகச் சிறுவர்களை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய
அந்தரங்க நோக்கத்துக்கு அவர்களையும் உபயோகப்படுத்துவதற்காகவே அவர்களிடம் சுமுகமாகப்
பேசிப் பழகி வருகிறாள்!
இந்தச் செய்தி பழுவேட்டரையரின் அந்தரங்கத்தின்
அந்தரங்கத்துக்குள்ளே அவரையும் அறியாமல் சிறிது திருப்தியை அளித்தது.கரிகாலன்
கொல்லப்படாமல் தடுக்க வேண்டியது, தம் குல கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்,
தமக்கு என்றென்றைக்கும் அழியாத அபகீர்த்தி நேராமல் தடுத்துக் கொள்ளவும் மட்டும்
அல்ல; நந்தினியை அத்தகைய கோரமான பாவகாரியத்திலிருந்து தப்புவிப்பதற்காகவுந்தான்.
ஒருவேளை அவளுடைய மனத்தையே மாற்றி விடுதல்கூடச் சாத்தியமாகலாம். இந்தச் சண்டாளச்
சதிகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால் அவள் வேறு வழியின்றி இவர்களுக்கு
உடந்தையாயிருக்கலாம் அல்லவா? இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு
விடுதலை கிடைக்கலாம் அல்லவா?...
இவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர்
தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம்
சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது. "யார் அங்கே?" என்றான் தேவராளனாகிய
பரமேச்சுவரன். அதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது
என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வௌிப்பட்டு வந்தார்.
மழைக்கால இருட்டில்
திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும்
திகைத்து நின்றபோது, "நான் தான் யமனுக்கு அண்ணன்!" என்று கூறிவிட்டுப்
பழுவேட்டரையர் சிரித்தார். அந்தக் கம்பீரமான் சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரேதசம்
முழுவதையும் நடுநடுங்கச் செய்தது. வந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும்
ரவிதாசன், தேவராளன் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள்! ஆனால் பழுவேட்டரையர் அதற்கு
இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து
நிறுத்தினார். அவருடைய வலது கை ரவிதாசனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக்
காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு
முக்காடச் செய்தன.
எவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக
காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் தேவராளனைத் தலைக்குப்புற
விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு
ரவிதாசனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் தேவராளன்
சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு
எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரைய
அதை அறிந்து கொண்டார்.இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை
கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. தேவராளனுடைய ஒரு கையும் அற்று
விழுந்து விட்டதுபோல் ஜீவனற்றதாயிற்று. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த
கால் சிறிது நழுவியது. தேவராளன் சட்டென்று நௌிந்து கொடுத்து வௌியே வந்து குதித்து
எழுந்தான்.உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத்
தொடங்கினான்.அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின.குத்திய
தேவராளனுடைய கைதான் வலித்தது.அதுவும் இன்னொரு கையைப்போல் ஆகிவிடுமோ என்று
தோன்றியது.
இதற்கிடையில் ரவிதாசன் தன் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய
கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான். ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய
இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாசனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக்
குளறிக் கொண்டே "தேவராளா! சீக்கிரம்! சீக்கிரம்! கோயில் மேலே ஏறு! மண்டபத்தைக் கீழே
தள்ளு!" என்றான்.
தேவராளன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின்
மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு
இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது.அதை முன்னமே அவர்கள்
கவனித்திருந்தார்கள். ரவிதாஷன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தேவராளன் தெரிந்து
கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம்
பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும்
சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழுந்தது.
பழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம்
நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாசனுடைய கழுத்திலிருந்து
எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாசன்
அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான்.
மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் பேரில் விழுந்தன.
பழுவேட்டரையர் தலையில்
விழுந்து நினைவு இழந்தார்.
பக்க
தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம் தூமகேது மறைந்தது!
நெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு
வந்தபோது, அவர் ஒரு பயங்கரமான போர்க்களத்தில் இருப்பதைக் கண்டார். வாள்கள்
ஒன்றோடொன்று மோதி ஜணஜணவென்று ஓங்கார ஒலி கிளப்பின. ஒரு பக்கத்தில் ஜய பேரிகைகள்
முழங்கிக் கொண்டிருந்தன.
அவற்றுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான குரல்கள், "மகா
ராஜாதிராஜ பாண்டிய மன்னர் வாழ்க! பாண்டிய விரோதிகள் வீழ்க!" என்று கோஷமிட்டான்.
இன்னொரு பக்கத்தில் ஆயிரக்கணக்கான குரல்கள், "கங்க மன்னன் விழுந்து விட்டான்!
ஓடுங்கள்! ஓடுங்கள்" என்று கூக்குரலிட்டன. ஓடுகிறவர்களைத் தடுத்து நிறுத்தும்
குரல்கள் சிலவும் கேட்டன.
அப்போது திடீரென்று ஒரு கணம் போர்க்களத்தில்
நிசப்தம் நிலவியது. பழுவேட்டரையர் சுற்றுமுற்றும் பார்த்தார். இரண்டு கால்களையும்
இழந்த விஜயாலய சோழனை இன்னொரு நெடிதுயர்ந்த ஆஜானு பாகுவான மனிதன் தன் தோள்களிலே
தூக்கிக் கொண்டு வந்தான். தோள்மீது அமர்ந்திருந்தவன் இரண்டு கரங்களிலும் இரண்டு
ராட்சத வாள்களை ஏந்திக்கொண்டிருந்தான்.
"சோழ வீரர்களே! நில்லுங்கள்!
பல்லவர்களே! ஓடாதீர்கள்! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! என்னைப் பின் தொடர்ந்து
வாருங்கள்! எதிரிகளைச் சின்னா பின்னம் செய்வோம்!" என்று அவன் கோஷித்தான். ஓடத்
தொடங்கியிருந்த சோழ - பல்லவ வீரர்கள் விஜயாலய சோழனைப் பார்த்துவிட்டு, அவன்
வார்த்தைகளைக் கேட்டுவிட்டு நின்றார்கள். அவர்களுடைய முகங்களிலே சோர்வும் பீதியும்
நீங்கி மீண்டும் தீரமும், வீரக்களையும் தோன்றின. பின் வாங்கியவர்கள் முன்னேறத்
தொடங்கினார்கள். இந்த அதிசய மாறுதலுக்குக் காரணமாயிருந்த விஜயாலய சோழனை மீண்டும்
பழுவேட்டரையர் பார்த்தார். அவனைத் தோளிலே தாங்கிக் கொண்டிருந்த வீரனையும்
பார்த்தார். அதிசயம்! அதிசயம்! அப்படி தாங்கிக் கொண்டு நின்ற வீரன் தாமேதான்
என்பதைக் கண்டார். அந்தப் பழுவேட்டரையர் ஒரு கையால் தம் தோளின் மீதிருந்த இருகாலும்
இல்லாத விஜயாலய சோழனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பிடித்திருந்த நீண்ட
கத்தியைச் சுழற்றிக் கொண்டே எதிரிகளிடையே புகுந்தார். அவர்கள் இருவரும் போன
இடமெல்லாம் பாண்டிய வீரர்களின் தலைகள் தரையில் உருண்டு விழுந்தன.
போர்
நிலைமை அடியோடு மாறிவிட்டது. பாண்டிய சைனியம் சிதறி ஓடியது. சோழ, பல்லவர்கள்
வென்றார்கள். எட்டுத் திக்கும் அதிரும்படி ஜயபேரிகைகள் முழங்கின. பல்லவ
சக்கரவர்த்திக்கு முன்னால் விஜயாலய சோழர் அமர்ந்திருந்தார்! அவருக்கு அருகில்
பழுவேட்டரையர் நின்றார்.
பல்லவ சக்கரவர்த்தி, சோழ மன்னரைப் பார்த்து,
"வீராதி வீரரே! உம்மாலே இன்று தோல்வி வெற்றியாயிற்று! இனிச் சோழ நாடு சுதந்திர
நாடு! நீரும் உமது வீரப் புதல்வன் ஆதித்தனும் உங்கள் சந்ததிகளும் என்றென்றும்
சுதந்திர மன்னர்களாகச் சோழ நாட்டை ஆளுவீர்கள்!" என்றார்.
உடனே விஜயாலய
சோழர் தமக்கருகில் நின்ற பழுவேட்டரையரைப் பார்த்து, "அத்தான்! தங்களாலேதான் இந்த
வெற்றி நமக்குக் கிட்டியது. சுதந்திர சோழ நாட்டின் சேநாதிபதியாகவும்,
தனாதிகாரியாகவும் உம்மை நியமிக்கிறேன். உமது சந்ததிகளும் சோழ குலத்துக்கு
உண்மையாயிருக்கும் வரையில் தனாதிகாரிகளாகவும், சேநாதிபதிகளாகவும் இருப்பார்கள்!"
என்றார்.பழுவேட்டரையரின் காயங்கள் நிறைந்த முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.
திடீரென்று அந்த முகத்தில் கடுங் கோபம் தோன்றியது. அந்தப் பழைய
பழுவேட்டரையர் இந்தப் புதிய பழுவேட்டரையரைப் பார்த்தார். "அட பாவி! துரோகி!
சண்டாளா! என் குலத்தைக் கெடுக்க வந்தகோடாரிக் காம்பே! ஆறு தலைமுறையாகச் சேர்ந்த
அருமையான வீரப் புகழையெல்லாம் நாசமாக்கிக் கொண்டாயே? சிநேகிதத் துரோகம், எஜமானத்
துரோகம் செய்தாயே? சோழ குலத்தின் பரம்பரைப் பகைவர்களுக்கு உன்னுடைய வீட்டிலே
இடங்கொடுத்தாயே? உன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பொருள் கொடுத்தாயே? உன்னால் அல்லவோ
இன்று சோழ குலத்துக்கு இறுதி நேரப் போகிறது! உற்ற பழி உலகம் உள்ள அளவும் மாறவே
மாறாது!" என்று சபித்தார். சபித்த பழுவேட்டரையரின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப்
பெருகியது.
பிறகு மற்றும் பல பழுவேட்டரையர்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும்
தாம் தாம் செய்த வீரச் செயல்களைக் கூறினார்கள். ஒவ்வொருவரும் பழுவேட்டரையரைச்
சபித்தார்கள். பின்னர் எல்லாரும் சேர்ந்து சபித்தார்கள். "சண்டாளா! குலத்
துரோகமும், ராஜத் துரோகமும் செய்து விட்டாயே? நாங்கள் உயிரைக் கொடுத்துச்
சம்பாதித்த வீரப் புகழையெல்லாம் நாசமாக்கி விட்டாயே! உன்புத்தி ஏன் இப்படி
போயிற்று?" என்றார்கள்.
பழுவேட்டரையர்கள் மறைந்தார்கள். கொடும்பாளூர்
வேளிர்களும், திருக்கோவலூர் மலையமான்களும் வந்தார்கள். தன்னந்தனியே நின்ற
பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். "சீச்சீ! நீயும் மனிதனா? சோழர் குலத்தை
நீயும் உன் பரம்பரையுந்தான் தாங்கி வந்தது என்று பெருமை அடித்துக் கொண்டாயே?
இப்போது என்ன சொல்லுகிறாய்? சோழ குலத்துக்கு நீ யமனாக மாறி விட்டாயே? பாதகா! உன்
பவிஷு எங்கே?" என்று கூறி எக்காளம் கொட்டிச் சிரித்தார்கள்.
அவர்களுக்கு
பின்னால் கூட்டமாக நின்ற சோழ நாட்டு மக்கள் கல்லையும், மண்ணையும் வாரிப்
பழுவேட்டரையர் மீது எறியத் தொடங்கினார்கள். அச்சமயம் சுந்தர சோழ சக்கரவர்த்தி
அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பலமற்ற கால்களினால் தள்ளாடி நடந்து வந்தார்.
வேளிர்களையும், மலையமான் மற்றவர்களையும் கோபமாகப் பார்த்தார். சீச்சீ! என்ன காரியம்
செய்கிறீர்கள்? வீராதி வீரரான பழுவேட்டரையர் மீதா கல்லையும் மண்ணையும்
எறிகிறீர்கள்? அவரையா துரோகி என்கிறீர்கள்? பழுவேட்டரையரின் துரோகத்தினால் நானும்
என் குலமும் அழிந்து போனாலும் போகிறோம்.நீங்கள் யாரும் அவரைக் குற்றம் சொல்ல
வேண்டாம்! தனாதிகாரி! வாரும் என்னுடன் அரண்மனைக்கு!" என்றார்.
ஜனக்கூட்டம்
கலைந்து போயிற்று. சுந்தர சோழரும் மறைந்தார். தம்பி காலாந்தக கண்டர் மட்டும்
பழுவேட்டரையர் முன்னால் நின்றார். "அண்ணா! நம்மிடம் இவ்வளவு நம்பிக்கை
வைத்திருக்கிறாரே சக்கரவர்த்தி! அவருக்குத் துரோகம் செய்யலாமா? அவருடைய குலத்தை
அழிக்க வந்த பெண் பேயை நம் அரண்மனையில் வைத்துக் கொண்டிருக்கலாமா?" என்றார். உடனே
அவரும் மறைந்தார்.
வந்தியத்தேவனும், கந்தமாறனும் அவர்களை யொத்த
வாலிபர்களும் பெரிய பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். "மீசை நரைத்த கிழவா!
உனக்கு ஆசை மட்டும் நரைக்க வில்லையே? பெண் மோகத்தினால் அழிந்து போனாயே? உன்
உடம்பிலுள்ள `அறுபத்து நாலு' புண்களும் இப்போது என்ன சொல்லுகின்றன? அவை வீரத்தின்
பரிசான விழுப்புண்களா? அல்லது துரோகத்தின் கூலியான புழுப்புன்களா?" என்று
கேட்டுவிட்டுக் கலகல வென்று சிரித்தார்கள்.
அவர்களைக் கொல்லுவதற்காகப்
பழுவேட்டரையர் தம் உடை வாளை எடுக்க முயன்றார். ஆனால் உடைவாள் இருக்கவேண்டிய
இடத்தில் அதைக் காணவில்லை.
இச்சமயத்தில் குந்தவைப் பிராட்டி வந்தாள்.
வாலிபர்களை நோக்கிக் கையமர்த்திச் சிரிப்பை நிறுத்தினாள். "பாட்டா! இவர்களுடைய
விளையாட்டுப் பேச்சைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். தங்கள் அரண்மனையில் உள்ள
பெண் வேடங்கொண்ட விஷப்பாம்பைத் துரத்தி விடுங்கள்! எல்லாம் சரியாகி விடும்!"
என்றாள்.
அவர்கள் மறைந்தார்கள். பழுவேட்டரையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள்
வரத் தொடங்கினார்கள். பத்து பேர், நூறு பேர், ஆயிரம் பேர்; ஆறு தலைமுறையைச்
சேர்ந்தவர்கள் வந்து, அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஐயையோ! உனக்கு இந்தக் கதியா
நேரவேண்டும்! நம்முடைய வீரக் குலத்துக்கு உன்னால் இந்தப் பெரும் பழியா ஏற்பட
வேண்டும்! நாங்கள் எங்கள் கணவன்மார்களையும், அண்ணன்மார்களையும், தம்பிமார்களையும்,
பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளையும் சோழ நாட்டுக்காகப் போர்க்களத்துக்கு
அனுப்பி வைத்தோமே? அவர்கள் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துப் பழுவூர் வம்சத்துக்கு
இணையில்லாப் புகழைத் தேடித் தந்தார்களே? அதையெல்லாம் ஒரு நொடியில் போக்கடித்துக்
கொண்டாயே?" என்று கதறினார்கள்.
"பெண்களே! வாயை மூடிக்கொண்டு
அந்தப்புரத்துக்குப் போங்கள். என்னால் ஒரு பழியும் உண்டாகாது!" என்று பழுவேட்டரையர்
கஷ்டப்பட்டுப் பதில் கூறினார். அப்போது அந்தப் பெண்கள் ஒரு திசையில் சுட்டிக்
காட்டினார்கள். யமதர்மராஜன் எருமைக்கடா வாகனத்தில் ஏறிக்கொண்டு கையில் வேலும்,
பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு வந்தான். பழுவேட்டரையரை நெருங்கினான். போகிற
போக்கில், "பழுவேட்டரையா! உனக்கு மிக்க வந்தனம்! சுந்தர சோழனுடைய உயிரையும் அவனுடைய
மக்கள் இருவர் உயிரையும் ஒரே நாளில் கொண்டு போக உதவி செய்தாய் அல்லவா? உனக்கு என்
நன்றி!" என்று கூறினான் யமதர்மராஜன்.
"இல்லை, இல்லை! நான் உனக்கு உதவி
செய்யவில்லை; செய்யமாட்டேன்! உன்னைத் தடுப்பேன்! யமனே! நில்! நில்!" என்று
பழுவேட்டரையர் அலறினார். யமனைத் தடுத்து நிறுத்துவதற்காக விரைந்து செல்ல முயன்றார்.
ஆனால் அவரை ஏதோ ஒரு சக்தி பிடித்து நிறுத்தியது. ஏதோ ஒரு பெரிய பாரம் அவரை
அமுக்கியது. நின்ற இடத்திலிருந்து அவரால் நகர முடியவில்லை.
"பார்த்தாயா!
நாங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டதே!" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் குலப்
பெண்கள் ஓவென்று சத்தமிட்டுப் புலம்பினார்கள். அவர்களில் பலர் ஓப்பாரி வைத்து
அழுதார்கள். அவர்களுடைய அழுகுரலின் சத்தம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வந்தது.
பழுவேட்டரையரால் அதைச் சகிக்க முடியவில்லை. அவர் பேச முயன்றார்; ஆனால் அழுகைச்
சத்தத்தில் அவர் பேச்சு மறைந்து விட்டது. அழுகையும், புலம்பலையும் கேட்கச்
சகிக்கவில்லை. இரண்டு கைகளினாலும் செவிகளைப் பொத்திக் கொள்ள முயன்றார். ஆனால்
அவருடைய கைகளும் அசைவற்றுக் கிடந்தன. அவற்றை எடுக்கவே முடியவில்லை.
ஒரு
பெரு முயற்சி செய்து கரங்களை உதறி எடுத்தார். அந்த முயற்சியிலே அவருடைய
கண்ணிமைகளும் திறந்து கொண்டன. சட்டென்று நினைவு வந்தது. அத்தனை நேரமும் அவர்
அநுபவித்தவை மனப் பிரமையில் கண்ட காட்சிகள் என்பதை உணர்ந்தார். ஆனால் ஓலக் குரல்
மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்றுக் கவனித்துக் கேட்டார். அவை பெண்களின் ஓலக்
குரல் அல்ல; நரிகளின் ஊளைக் குரல்!
அவர் நினைவு இழந்து கொண்டிருந்த
சமயத்தில் இலேசாகக் காதில் விழுந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது.
"கிழவன்
செத்துப் போய் விட்டான்!" என்றது ஒரு குரல்.
"நன்றாகப் பார்!
பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்!"
என்றது மற்றொரு குரல்.
"யமன் பயப்பட்டாலும் நரி பயப்படாது. கொஞ்ச நஞ்சம்
உயிர் மிச்ச மிருந்தாலும் நரிகள் சரிப்படுத்திவிடும். பொழுது விடியும்போது கிழவனின்
எலும்புகள்தான் மிச்சமிருக்கும்!"
"நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத்
தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக்
கொன்றிருப்பான்!"
"எங்கே? மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்!"
சற்றுப் பொறுத்து,"துளிகூட அசையவில்லை! ஒரு பகைவனுடைய பள்ளிப் படையைக் கொண்டு
இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோம்" என்று கூறிவிட்டு மந்திரவாதி
கலகலவென்று சிரித்தான்.
"சிரித்தது போதும், வா! படகு பிய்த்துக் கொண்டு
ஆற்றோடு போய் விடப் போகிறது. அப்புறம் கொள்ளிடத்தைக் தாண்ட முடியாது!"
இந்த
வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு பழுவேட்டரையர் தம்முடைய நிலை இன்னதென்பதை
ஆராய்ந்தார். ஆம்; அவர்மீது பள்ளிப்படை மண்டபத்தின் ஒரு பாதி விழுந்து கிடந்தது.
அதன் பெரிய பாரம் அவரை அமுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மூச்சுவிட முடிகிறதே,
எப்படி?
நல்லவேளையாக, மண்டபத்தோடு விழுந்த மரம் அவர் தோளின் மீது படிந்து
அதன் பேரில் மண்டபம் விழுந்திருந்தது. மண்டபத்தையொட்டியிருந்த மரந்தான் அவர்
உயிரைக் காப்பாற்றியது. மண்டபம் நேரே அவர் மேல் விழுந்திருந்தால் மார்பும் தலையும்
நொறுங்கிப் போயிருக்கும். கிழவனார் தம்முடைய உடம்பின் வலிமையை எண்ணித் தாமே
ஆச்சரியப்பட்டார். அந்தப் பெரிய பாரத்தை இத்தனை நேரம் சுமந்தும் தம்முடைய உயிர்
போகவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் இவ்வளவு கெட்டியான உயிரை இன்னமும்
காப்பாற்றிக் கொள்ள முடியுமா?
ஆம்; எப்படியாவது காப்பாற்றிக் கொண்டேயாக
வேண்டும். காப்பாற்றிக் கொண்டு சோழ குலத்துக்கு நேரவிருந்த அபாயத்தைத் தடுக்க
வேண்டும். அப்படித் தடுக்காவிட்டால் அவருடைய குலத்துக்கு என்றும் அழியாத பழி
இவ்வுலகில் ஏற்படுவது நிச்சயம். வானுலகத்துக்குப் போனால் அங்கேயும் அவருடைய
மூதாதையர்கள் அனைவரும் அவரைச் சபிப்பார்கள். ஆகையால், எந்தப் பாடுபட்டாலும் இந்த
மரத்தையும் மண்டபத்தையும் அப்புறப்படுத்தி எழுந்திருக்க வேண்டும். ஐயோ! எத்தனை
நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே? இதற்குள் ஒரு
வேளை நாம் தடுக்க விரும்பும் விபரீதங்கள் நேரிட்டிருக்குமோ?
இதற்கிடையில்
நரிகளின் ஊளைக் குரல் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. நரிகள் மூச்சு விடும்
சத்தம் அவர் தலைக்கு அருகில் கேட்டது! ஆகா! இந்த நரிகளுக்குக் கூடவா
பழுவேட்டரையனைக் கண்டு இளக்காரமாகப் போய்விட்டது? பார்க்கலாம் ஒரு கை!
பழுவேட்டரையர் ஒரு கையினால் மட்டும் அல்ல, இரண்டு கைகளினாலும் பார்க்கத்
தொடங்கினார். தம் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து அவர்மீது
விழுந்து கிடந்த மரத்தைத் தூக்க முயன்றார். மரம் சிறிது சிறிதாக உயர உயர, அதன் மேல்
நின்ற மண்டபப் பாறை நகர்ந்து சரியத் தொடங்கியது. இடையிடையே அவர் செய்த ஹுகாரங்கள்
நெருங்கி வந்த நரிகளை அப்பால் நகரும்படி செய்தன.
ஒரு யுகம் எனத் தோன்றிய
ஒரு நாழிகை முயன்ற பிறகு அவரை அமுக்கிக் கொண்டிருந்த மரமும் மண்டபப் பாறையும்
சிறிது அப்பால் நகர்ந்து அவரை விடுதலை செய்தன. அந்த முயற்சியினால் அவருக்கு ஏற்பட்ட
சிரமம் காரணமாகச் சிறிது நேரம் அப்படியே கிடந்தார். பெரிய நெடுமூச்சுகள் விட்டார்.
ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மண்டபத்துக்குச் சமீபமாதலாலும், புயலில்
மரங்கள் பல விழுந்து விட்டிருந்த படியாலும் வானவௌி நன்றாகத் தெரிந்தது. இப்போது
கருமேகங்கள் வானத்தை மறைத்திருக்கவில்லை. வைரப் பொரிகள் போன்ற எண்ணற்ற
நட்சத்திரங்கள் தெரிந்தன. இலேசான மேகங்கள் அவற்றைச் சிறிது மறைத்தும் பின்னர்
திறந்துவிட்டும் அதி வேகமாகக் கலைந்துபோய்க் கொண்டிருந்தன.
சட்டென்று
வானத்தில் வடதிசையில் தோன்றிய ஒரு விசித்திரமான நட்சத்திரம் அவருடைய கவனத்தைக்
கவர்ந்தது. அடடா! சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான வாலைப் பெற்றிருந்த தூமகேதுவா
இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது? அந்த நட்சத்திரத்தின் ஒரு முனையில் சுமார்
ஒரு அடி நீளம் வௌிறிய புகைத்திரள் போல நீண்டிருந்தது. பத்து நாளைக்கு முன்புகூட
வானத்தின் ஒரு கோணம் முழுதும் நீண்டிருந்த வால் இப்படிக் குறுகிவிட்ட காரணம்
என்ன?....
வானத்திலிருந்து பார்வையை அகற்றிச் சுற்று முற்றும் பார்த்தார்.
நரிகள் இன்னும் போகவில்லையென்பதைக் கண்டார்! பத்து, இருபது, ஐம்பது நரிகள்
இருக்கும். அவற்றின் கண்கள் நெருப்புத் தணல்களைப்போல் காட்டின் இருளில் ஜொலித்துக்
கொண்டிருந்தன. கிழவன் எப்போது சாகப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தன போலும்!
போகட்டும்! போகட்டும்! அவ்வளவு மரியாதை பழுவேட்டரையனிடம் இந்த நரிகள்
காட்டுகின்றனவே!...
திடீரென்று வானமும் பூமியும் அந்த வனப்பிரதேசம்
முழுவதும் ஒளி மயமாயின. பழுவேட்டரையரின் கண்கள் கூசின. அது மின்னல் அல்ல. வேறு
என்னவாயிருக்கக் கூடும்? வானத்தைக் நோக்கினார். ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த ஒரு
தீப்பந்தம் வான வட்டத்திலே ஒரு கோணத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கக் கண்டார்.
அதன் பிரகாசம் அவருடைய கண்களைக் கூசச் செய்தது. கண்ணை ஒரு கணம் மூடிவிட்டுத்
திறந்து பார்த்தார்.அந்தத் தீப்பந்தம் சிறிதாகிப் போயிருந்தது; வர வர ஒளி குறைந்து
வந்தது; திடீரென்று அது மறைந்தேவிட்டது. பழையபடி இருள் சூழ்ந்தது.
இந்த
அதிசயம் என்னவாயிருக்கும் என்று பழுவேட்டரையர் சிந்தித்துக் கொண்டே மீண்டும்
வானத்தை நோக்கினார். குறுகிய தூமகேது சற்றுமுன் இருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே
அதைக் காணவில்லை. ஆகா! தூமகேதுதான் விழுந்து விட்டது! இதன் கருத்து என்ன? இதன்
விளைவு என்ன? உலகத்தில் ஏதேனும் விபரீதம் நடக்கப் போவதற்கு அறிகுறிதான்.
ராஜகுடும்பத்தினர் யாருக்காவது விபத்து நேரிடுவதற்கு அடையாளம். வால் நட்சத்திரம்
மறையும்போது அரச குலத்தைச் சேர்ந்த யாரேனும் மரணம் அடைவார்கள். இது வெகுகாலமாக
மக்களிடையே பரவியிருக்கும் நம்பிக்கை அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லுவோரும்
உண்டு. அதன் உண்மையும் பொய்மையும் நாளைக்குத் தெரிந்து விடும்.நாளைக்கா? இல்லை!
இன்றைக்கே தெரிந்து போய் விடும்...! அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது! பொழுது புலரப்
போகிறது! இன்று இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று விபரீத பயங்கர நிகழ்ச்சிகள்
நடைபெறக்கூடும். அவை நடக்கப்போகும் விவரம் நமக்கு மட்டும் தெரியும். அவற்றைத்
தடுக்கும் சக்தியும் நமக்குத்தான் உண்டு. தடுப்பதில் வெற்றி பெற்றால் தூமகேது
விழுந்த அபசகுனத்தைக்கூட வெற்றி கொண்டதாகும். இல்லாவிடில்... அதைப்பற்றி எண்ணவே
பழுவேட்டரையரால் முடியவில்லை. தடுத்தேயாக வேண்டும்! சோழர் குலத்தைச் சேர்ந்த
மூவரையும் காப்பாற்றியேயாக வேண்டும்.
தமது முதல் கடமை - மிக முக்கியமான
கடமை ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றுவதுதான்! அவனுக்கு விபத்து வந்தால் அதன் பழி தன்
தலையில் நேராக விழும். ஆகையால் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்கு உடனே போய்ச்
சேரவேண்டும். அதற்கு முன்னால், குடந்தைக்குச் சென்று, தஞ்சைக்கும், நாகைக்கும்
எச்சரிக்கை அனுப்பிவிட்டுப் போவது நல்லது. பின்னர், விதிவசம் போல் நடந்துவிட்டுப்
போகிறது. தாம் செய்யக்கூடியது அவ்வளவு தான்!
பழுவேட்டரையர் எழுந்திருக்க
முயன்றார். உடம்பெல்லாம் ரணமாக வலித்தது. மரம் விழுந்திருந்த இடம் மார்பில் பொறுக்க
முடியாத வேதனையை உண்டாக்கிற்று. ஒரு கால் முறிந்து விட்டது போல் தோன்றியது. தேகம்
முழுவதும் பல்வேறு காயங்கள் பட்டிருந்தன.
அவற்றையெல்லாம் அந்த வீரக் கிழவர்
பொருட்படுத்தவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பெரு முயற்சி செய்து எழுந்து
நின்றார். சுற்று முற்றும் பார்த்தார். நல்ல வேளையாக, அவருடைய மரணத்துக்காகக்
காத்திருந்த நரிகள் அதற்குள் ஓடிப் போய்விட்டிருந்தன. தூமகேது விழுந்தபோது உண்டான
ஒளி வெள்ளத்தைக்கண்டு மிரண்டு அவை ஓடிப் போயின போலும்!
குடந்தை நகரம்
அங்கிருந்து எந்தத் திசையில் இருக்கலாம் என்பதை ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டு
புறப்பட்டார். திடமாகக் கால்களை ஊன்றி வைத்து நடக்கத் தொடங்கினார். வழியெல்லாம்
புயல் அடித்து மரங்கள் விழுந்து கிடந்தன. பெருமழையினாலும் கொள்ளிடத்து
உடைப்பினாலும் வெள்ளக் காடாக இருந்தது. இந்த இடையூறுகளையெல்லாம் சிறிதும்
பொருட்படுத்தாமல் பழுவேட்டரையர் நடந்தார். உள்ளத்தின் கொந்தளிப்பு உடலின்
சிரமங்களையெல்லாம் மறந்து விடச் செய்தது. ஆனாலும் நேரம் போய்க் கொண்டே
இருந்தது.பொழுது விடிந்து இரண்டு ஜாம நேரம் ஆன சமயத்தில் குடந்தை நகரை அவர்
அணுகினார். அந்த மாநகரின் மத்தியப் பிரதேசத்துக்குப் போக அவர் விரும்பவில்லை. அவரை
இந்தக் கோலத்தில் பார்த்தால் ஜனங்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள். என்ன, ஏது என்று
கேட்பார்கள். அவர் செய்ய விரும்பிய காரியத்தைத் துரிதமாகவும் திறமையாகவும் செய்ய
முடியாமற் போய்விடும்.
ஆகையினால் நகரின் முனையிலேயே, ஜன நெருக்கமில்லாத
இடத்தில், யாரையாவது பிடித்து, தஞ்சைக்கும் நாகைக்கும் ஓலை அனுப்ப வேண்டும். பிறகு
ஒரு வாகனம் சம்பாதித்துக் கொண்டு கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். துர்க்கை அம்மன்
கோவிலுக்கு அருகிலுள்ள ஜோதிடர் ஞாபகம் அவருக்கு வந்தது ஆம்; அது தனிப்பட்ட பிரதேசம்
அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை. ஜோதிடர் தகுந்த மனிதர்; இனிய இயல்பு படைத்த
மனிதர். இராஜ குடும்பத்துக்கும் முதன் மந்திரிக்கும் வேண்டியவர். அதனால் என்ன?
யாராயிருந்தாலும் இந்தக் காரியத்தைச் செய்வார்கள். இராஜ குடும்பத்துக்கு
வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார். ஆகா! ஜோதிடருக்கு உண்மையில்
ஜோதிடம் தெரியுமா, ஜோதிட சாஸ்திரத்தில் உண்மை உண்டா என்பதையும் இச்சமயத்தில்
பரிசோதித்துப் பார்த்து விடலாம்.
அம்மன் கோவிலையும், ஜோதிடர் வீட்டையும்
பழுவேட்டரையர் அணுகிச் சென்றார். கோவிலுக்கு முன்னாலிருந்த நெடிய பெரியம் மரம்,
புயலில் முறிந்து விழுந்து கிடந்தது. முதலில் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.
அடுத்தாற் போல் கோவிலை அடுத்து நின்ற இரட்டைக் குதிரை பூட்டிய ரதத்தின் பேரில்
அவருடைய பார்வை விழுந்தது. அது விசித்திரமான அமைப்புள்ள ரதம். அந்த ரதத்தின்
மேற்பகுதி ஓர் ஓடத்தைப் போல் அமைந்திருந்தது. வெள்ளம் வரும் காலங்களில் அவசரமாகப்
பிரயாணம் செய்ய நேர்ந்தால் இம்மாதிரி ரதங்களை உபயோகப் படுத்துவார்கள். பெரிய
நதிகளைக் கடக்கும் போது, திடீரென்று நதியில் வெள்ளம் அதிகமாகி விட்டால் ஓடத்தை
ரதத்திலிருந்து தனியாகக் கழற்றி விடலாம் குதிரைகளை அவிழ்த்து விட்டால் அவை நீந்திப்
போய்க் கரை ஏறி விடும். ரதத்தில் வந்தவர்கள் ஓடத்தைக் தள்ளிக் கொண்டு போய்க் கரை
சேரலாம்.
இத்தகைய ரதங்கள் சோழ நாட்டின் அபூர்வமாகத் தான் உண்டு. இது
யாருடைய ரதமாயிருக்கும்? அரண்மனை ரதமாயிருக்க வேண்டும்; அல்லது முதன் மந்திரியின்
ரதமாக இருக்கவேண்டும். இதில் வந்தவர்கள் இப்போது ஜோதிடர் வீட்டுக்குள் ஜோதிடம்
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும்! அவர்கள் யாராக இருக்கும்? ரத சாரதியைக்
கேட்கலாமா? வேண்டாம்! அவன் தம்மைப் பார்த்து மிரண்டு போனாலும் போவான். ஜோதிடர்
வீட்டுக்குள் நேரே பிரவேசித்துப் பார்த்து விடுவதே நலம். அங்கே வந்திருப்பவர்கள்
யாராயிருந்தாலும் இந்த ரதத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டால், கடம்பூர் திரும்பிச்
செல்ல வசதியாக இருக்கும் அல்லவா?
ஜோதிடர் வீட்டு வாசலுக்குப் பழுவேட்டரையர்
வந்த போது உள்ளே பெண் குரல்கள் கேட்டன. கிழவருக்கு தூக்கி வாரிப் போட்டது. யாருடைய
குரல்? ஏன்? இளைய பிராட்டி குந்தவை குரல் போல அல்லவா இருக்கிறது? அவள் எதற்காக
இங்கே வந்தாள்? இந்தச் சமயம் பார்த்தா வரவேண்டும்?... முதலில் இப்படி எண்ணியவர்
உடனே மனத்தை மாற்றிக் கொண்டார். அவ்விதமானால், இளைய பிராட்டியாக இருந்தால், ரொம்ப
நல்லதாய்ப் போயிற்று.பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. குந்தவை தேவியின்
காதில் விஷயத்தைப் போட்டு விட்டால் தம்முடைய பாரமே நீங்கியது போலாகும். அவளுடைய
தந்தைக்கும், தம்பிக்கும் நிகழக் கூடிய ஆபத்தைப் பற்றிக் குறிப்பாகச்
சொல்லிவிட்டால், பிறகு அந்தச் சாமர்த்தியசாலியான பெண் வேண்டிய முன் ஜாக்கிரதை
எடுத்துக் கொள்வாள். பிறகு தாம் நிம்மதியாகத் திரும்பிக் கடம்பூருக்குப் போகலாம்.
அங்கேயல்லவா தம்முடைய முக்கியமான கடமை இருக்கிறது?
பழுவேட்டரையர் ஜோதிடர்
வீட்டு வாசலில் பிரவேசித்த போது, முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் அதே
காவல்காரன், - ஜோதிடரின் சீடன்- அவரைத் தடுத்து நிறுத்தினான். பழுவேட்டரையர்
அப்போதிருந்த கோலத்தில் அவரை அவனால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகையினாலேயே
"நில்!" என்று அதட்டும் குரலில் கூறிவிட்டுத் தடுத்தான். பழுவேட்டரையர் ஒருமுறை
ஹூங்காரம் செய்துவிட்டு அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். சீடன் குட்டிக் கரணம்
அடித்துக் கொண்டு போய் வீதியில் விழுந்தான். பழுவேட்டரையர் மதயானையைப் போல் பூமி
அதிர நடந்து ஜோதிடரின் வீட்டுக்குள் புகுந்தார்.
பக்க
தலைப்பு
பதிமூன்றாம் அத்தியாயம் குந்தவை கேட்ட வரம்
ஜோதிடரின் வீட்டுக்குள் பழுவேட்டரையர் பிரவேசித்த போது அங்கு
உண்மையாகவே குந்தவைப் பிராட்டியும், வானதியும் இருந்தார்கள். ஈழத்து ராணியைப்
பொழுது விடிந்ததும் காணாததிலிருந்து குந்தவையின் மனம் அமைதியை இழந்துவிட்டது. அதே
சமயத்தில் பூங்குழலியும் காணாமற் போனது அவளுடைய கலக்கத்தை அதிகமாக்கிற்று. முதன்
மந்திரி அநிருத்தரைப் பார்க்கச் சென்றாள். அச்சமயத்தில் அங்கே அருள்மொழிச் சோழனைப்
பற்றிச் செய்தி வந்திருந்தது. நாகைப்பட்டினத்தில் அடித்த புயலின் காரணமாக அவன்
வௌிப்பட நேர்ந்ததென்றும் திரளான மக்கள் கூடி அவனை வெற்றி முழக்கத்துடன் தஞ்சைக்கு
அழைத்து வருகிறார்கள் என்றும் அறிந்தாள். குந்தவையின் பரபரப்பு எல்லையைக்
கடந்துவிட்டது. இதனால் ஏதோ விபரீதம் வரப்போகிறது என்று கருதினாள். பொன்னியின்
செல்வனை வழியில் சந்தித்துப் பேசித் தஞ்சையில் நடந்ததையெல்லாம் தெரிவிக்க வேண்டும்
என்று விரும்பினாள். அவன் பெரும் ஜனக் கூட்டம் புடை சூழத் தஞ்சைக் கோட்டையில்
பிரவேசிக்க விரும்பினால், பழுவேட்டரையரின் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்த
முயலுவார்கள். இதற்கிடையில் பூதி விக்கிரம கேசரி தென் பிரதேசத்துப் படைகளுடனே
கொடும்பாளூர் வரைக்கும் வந்துவிட்டார் என்று தெரிய வந்திருந்தது.இரண்டு படைகளும்
தஞ்சைக் கருகில் மோதிக் கொள்ளும்படி நேரிடலாம். அதனால் தந்தையின் உள்ளம் புண்படும்
என்பது நிச்சயம். அதனால் அவருடைய உயிருக்கே அபாயம் நேர்ந்து விடலாம். மேலும்
என்னென்ன விளையுமோ, யாருக்குத் தெரியும்? புயற்காற்றின் காரணமாகக் குடிமக்களின்
உள்ளங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட
வேண்டியதுதான்; சோழ நாடே அழியும்படியான பெரும் உள் நாட்டுக் கலகம் மூண்டு விடக்
கூடும். பிறகு அதை நிறுத்துவது எப்படி? வந்த பின்னர் நிறுத்த முயலுவதைக்
காட்டிலும், முன்னாலேயே தடுக்கப் பார்ப்பது அவசியம் அல்லவா? இல்லாவிடில் இத்தனை
காலமும் செய்த முயற்சியெல்லாம் வீணாகிவிடுமே? ஆதலின் அருள் மொழிச் சோழனை வழியிலேயே
சந்தித்துப் பழையாறையில் சிறிது காலத்துக்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடம்பூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரையும் தருவிக்க வேண்டும். அருள்மொழிக்கு
இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை என்பதை அவருக்குத் தெரிவித்து, அவருடைய சம்மதம் பெற்ற
பிறகுதான், தஞ்சைக்கு அவனை அழைத்துப் போக வேண்டும்...
இவ்விதம் தனக்குள்
சிந்தித்து முடிவு செய்துகொண்டு, தந்தையிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல்,
அன்னையிடமும் அநிருத்தரிடமும் மட்டும் சொல்லிவிட்டு, இணை பிரியாத வானதியையும்
அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். பழையாறைக்குப் போகுமுன்பு குடந்தை ஜோதிடரை இன்னொரு
தடவை பார்த்து விட விரும்பினாள். கவலை அதிகம் ஏற்படும்போது வருங்காலத்தைப் பற்றி
ஜோதிடம் பார்த்து அறிய விரும்புவது மனித இயல்பு அல்லவா?
|