தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்று மூன்றாம் பாகம் - கொலை வாள் நான்காம் பாகம் - மணிமகுடம்  > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41- 46 > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் >  முடிவுரை

Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA  © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan

நான்காம் பாகம் - மணிமகுடம்

பதினோராம் அத்தியாயம் - தோழனா? துரோகியா?
பன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தது!
பதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம்
பதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா?
பதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம்
பதினாறாம் அத்தியாயம் - "மலையமானின் கவலை"
பதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை
பதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது!
பத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்
இருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்


பதினோராம் அத்தியாயம்
தோழனா? துரோகியா?

மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும் பரிவாரங்களும் வந்து கொண்டிருந்தார்கள். முதலாவது நாள் இரவு திருமுதுகுன்றத்தில் இளவரசருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றியும், அந்த க்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்த ஆலயத் திருப்பணியைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள்.

"திருமுதுகுன்றத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் செய்த காரியம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.

"எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

"கிழவியைப் பாடமாட்டேன் என்று சொன்னதைத் தான்!"

"அது என்ன எனக்குத் தெரியாதே? விவரமாகச் சொல்" என்றான் ஆதித்த கரிகாலன்.

சுந்தரமூர்த்தி நாயனார் க்ஷேத்திர யாத்திரை செய்து கொண்டு வந்த பொழுது திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்துக்கு வந்தார். வழக்கம் போல் அந்த ஊர் சிவாலயத்துக்குச் சென்றார். பட்டர்கள் நாயனாருக்கு சுவாமி தரிசனம் பண்ணுவித்து, "எங்கள் ஊர் இறைவன் பேரிலும் பதிகம் பாடி அருள வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.

"பார்ப்போம், இந்த ஆலயத்திலுள்ள சுவாமியின் பெயர் என்ன?" என்று சுந்தரர் கேட்டார்.

திருமுதுகுன்றம் என்ற பெயரைக் கொண்டு அந்தச் சிவாலயத்திலுள்ள சுவாமிக்கு விருத்தகிரீசுவர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் பட்டர்கள் அந்தப் பெயரைச் சொன்னார்கள்.

நாயனாரின் முகம் சுருங்கிற்று; போயும் போயும் கிழவரையா பாட வேண்டும் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, "போகட்டும், அம்மன் பெயர் என்ன?" என்று வினவினார்.

"விருத்தகிரீசுவரி" என்றார்கள் கோவில் பட்டர்கள்.

"சுவாமிக்குத்தான் கிழவர் என்று பட்டம் கட்டினீர்கள். அம்மனையும் கிழவியாக்கி விட்டீர்களே? கிழவனையும் கிழவியையும் என்னால் பாட முடியாது போங்கள்!" என்று சொல்லி விட்டுச் சுந்தரமூர்த்தி நாயனார் கோபமாகக் கோவிலை விட்டுக் கிளம்பி விட்டார்.

சுந்தரமூர்த்தி நாயனரால் பதிகம் பாடப் பெறாவிட்டால் தங்கள் ஊர் ஆலயத்துக்கு மகிமை ஏற்படாது என்று பட்டர்கள் கருதினார்கள். ஆகையால் ஆலயத்தில் இன்னொரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து "பாலாம்பிகை" என்று பெயர் சூட்டினார்கள்.

மறுபடியும் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்த இடத்துக்குப் போய் அவரிடம் மேற்படி விவரத்தைச் சொல்லித் திரும்பவும் திருமுதுகுன்றம் ஆலயத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் பெரிய மனது செய்து மீண்டும் அந்த ஊருக்குச் சென்று பாலாம்பிகை சமேத விருத்தகிரீசுவரர் மீது பதிகம் பாடித் துதித்தார்.

இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஆதித்த கரிகாலன் உடல் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். "பெரிய பழுவேட்டரையரிடம் வந்த கவிஞன் யாராவது ஒருவேளை சுந்தரமூர்த்தியைப் போல் சொல்லியிருப்பான். கிழவனையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கூறியிருப்பான் அதற்காகத்தான் அவர் நந்தினியை மணந்து கொண்டாரோ, என்னமோ?" என்றான்.

இதைக் கேட்டுப் பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்படி அவர்கள் சிரித்த சிரிப்பில் குதிரை மேலிருந்து கீழே விழுந்து விடுவார்கள் போலிருந்தது!

சிரித்து ஓய்ந்த பிறகு பார்த்திபேந்திரன், "கடவுள் முதுமை என்பதாக ஒன்றை, எதற்காக ஏற்படுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரையில் ஒரே மாதிரி இருந்துவிட்டுச் சாவது என்று ஏற்படுத்தியிருக்கக் கூடாதோ?" என்றான்.

"கடவுள் என்ன ஏற்படுத்தினால் என்ன? முதுமை அடைவதும் அடையாததும் நம்முடைய கையிலே தானே இருக்கிறது?" என்றான் கரிகாலன்.

"அது எப்படி முடியும்?" என்று கந்தமாறன் கேட்டான்.

"அபிமன்யுவையும், அரவானையும் கிழவர்கள் என்று நாம் எண்ணுவதுண்டா?"

மற்ற இருவரும் ஒன்றும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள்.

"தஞ்சாவூர் அரண்மனைச் சித்திர மண்டபத்தில் என் மூதாதையர்களின் சித்திரங்கள் எல்லாம் எழுதியிருக்கின்றன.விஜயாலயச் சோழர், ஆதித்த சோழர், பராந்தக சக்கரவர்த்தி எல்லோரும் முதிய பிராயத்தவராகக் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் என் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் எப்படி இருக்கிறார்? நவயௌவன வீர புருஷராக விளங்குகிறார்! இராஜாதித்தர் இளம் வயதில் இறந்து போனார். அதனால் என்றைக்கும் அவர் யௌவனம் நீங்காத பாக்கியசாலி ஆனார்! நம்மில் யாருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுகிறதோ, தெரியவில்லை!"

மற்ற இருவருக்கும் இந்தப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

"ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்கள்? சாவு என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்? இந்த உடம்பு போனால் இன்னொரு புத்தம் புதிய உடம்பு கிடைக்கிறது. எதற்காக மரணத்துக்கு அஞ்ச வேண்டும்? என்னுடைய நண்பன் வந்தியத்தேவன் இங்கே இருந்தால் என்னை ஆமோதிப்பான். அவனைப் போன்ற உற்சாக புருஷனைக் காண்பது அரிது. யமலோகத்தின் வாசலில் கொண்டு போய் விட்டாலும் அவன் குதூகலமாய் சிரிப்பான்!" என்றான் இளவரசன் கரிகாலன்.

அச்சமயத்தில் அவர்களுக்கு எதிராக சாலையில் இரண்டு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெகு வேகமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அக்குதிரைகள் அவர்களை நெருங்கி வந்து விட்டன. அவை வந்த வேகத்தைப் பார்த்தால் இளவரசர் கோஷ்டி எதிரில் வருவதைக் கூடக் கவனியாமல் தாண்டிப் போய்விடும் எனத் தோன்றியது. அவ்வளவு அகம்பாவம் பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காகக் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் வேல்களை நீட்டிச் சாலையின் குறுக்கே வழி மறிக்க ஆயத்தமானார்கள். ஆனால் வந்த குதிரைகள் அவர்களுக்குச் சிறிது தூரத்தில் தடால் என்று பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டன.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரைகள் மீதிருந்து கீழே குதித்தார்கள். வந்தியத்தேவனைக் கண்டதும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குக் குதூகலம் தாங்கவில்லை. அவனும் குதிரை மீதிருந்து கீழே குதித்து முன்னேறிச் சென்று வந்தியத்தேவனைக் கட்டிக் தழுவிக் கொண்டான்.

"தம்பி! உனக்கு நூறு வயது இப்போது தான் உன் பெயரைச் சொல்லி ஒரு கண நேரங்கூட ஆகவில்லை!" என்றான் கரிகாலன்.

கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் இந்தக் காட்சியைப் பார்த்து அடைந்த அசூயை அவர்கள் முகத்தில் தெரிந்தது. அவர்கள் சற்று முன்னால் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய் நின்றார்கள்.

சிறிது தூரத்தில் இன்னும் சில குதிரைகள் வருவதை அவர்கள் கண்டார்கள். சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தக் குதிரைகளும் வந்து நின்றன. அந்தக் குதிரைகளின் மீது வந்தவர்கள் கடம்பூர் ஆள்கள் என்பதைக் கந்தமாறன் கவனித்தான். அவர்களிடம் நெருங்கிச் சென்று விவரம் கேட்டான்.

பின்னர், இளவரசன் ஆதித்த கரிகாலனிடம் வந்தான். "கோமகனே! இந்த வந்தியத்தேவன் தங்களுக்கும் நண்பன்; எனக்கும் சிநேகிதனாகத்தான் இருந்தான். ஆனால் இவன் மீது குற்றம் சுமத்த வேண்டியதாயிருக்கிறது. இவன் சிநேகிதத் துரோகி! இவன் என்னை முதுகில் குத்திப் படுகாயம் படுத்தினான். ஆகையால் இவன் விஷயத்தில் தாங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமையாகிறது!" என்றான் கந்தமாறன்.

பக்க தலைப்பு



பன்னிரண்டாம் அத்தியாயம்
வேல் முறிந்தது!

கந்தமாறன் அவனுடைய அருமை நண்பனாயிருந்த வந்தியத்தேவன் மீது கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு ஆதித்த கரிகாலன் இடி இடி என்று உடல் குலுங்கச் சிரித்தான்.

"கந்தமாறா! வந்தியத்தேவன் உன் முதுகில் குத்திவிட்டான் என்றா சொல்லுகிறாய்? நீ என்னத்திற்காக அவனுக்கு முதுகு காட்டினாய்?" என்று கேட்டுவிட்டு மறுபடியும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கத் தொடங்கினான்.

கந்தமாறனுடைய கரிய முகம் சிவந்தது; கண்கள் கோவைப் பழம் போலாயின. உதடுகள் துடித்தன.

"ஐயா! தாங்கள் இதைச் சிரிக்கக் கூடிய விஷயமாகக் கருதுகிறீர்களா?" என்று கேட்டான்.

"கந்தமாறா! நான் சிரிக்கக் கூடாது என்று சொல்கிறாயா? சிரிப்பு என்பது மனிதர்களுக்குத் தெய்வம் கொடுத்திருக்கும் ஒரு வரப் பிரஸாதம். மாடு சிரிக்காது; ஆடு சிரிக்காது; குதிரை சிரிக்காது; சிங்கம் சிரிக்காது; வேடிக்கை விளையாட்டுகளில் மிக்க பிரியம் உள்ள குரங்குகள் கூடச் சிரிப்பதில்லை. மனித ஜன்மம் எடுத்தவர்கள் மட்டுந்தான் சிரிக்க முடியும். அப்படி இருக்க, நீ என்னைச் சிரிக்கக் கூடாது என்கிறாயே? நான் கூடச் சிரித்து ரொம்ப காலமாயிற்று. நண்பா! இப்போது நான் சிரிக்கும் சத்தத்தைக் கேட்டு, எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நீ என்னைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது என்கிறாயே?" என்றான் ஆதித்த கரிகாலன்.

"ஐயா! தாங்கள் சிரித்து மகிழ்வது பற்றி எனக்கும் சந்தோஷந்தான். ஆனால் நான் இந்தச் சூராதி சூரனுக்கு முதுகு காட்டியதாக எண்ணிக் கொண்டு சிரிக்க வேண்டாம். நான் எதிர்பாராத சமயத்தில், பின்னால் மறைந்திருந்து இவன் என்னைக் குத்தினான். துர்க்காதேவியின் அருளாலும், நந்தினி தேவியின் அன்பான சிகிச்சையினாலுமே நான் பிழைத்து எழுந்து வந்தேன். இவன் செய்த அந்தத் துரோகச் செயலைக் குறித்துத் தாங்கள் விசாரித்து நியாயம் செய்யுங்கள். அல்லது நானே இவனைத் தண்டிப்பதற்கு எனக்கு உடனே அதிகாரம் கொடுங்கள்!" என்றான் கந்தமாறன்.

"நண்பனே! நானே அவசியம் விசாரித்து நியாயம் வழங்குகிறேன், செம்பியன் குலத்து மன்னர்களிடம் ஒருவன் நியாயம் கேட்டு அவனுக்கு நியாயம் கிட்டவில்லை என்ற பேச்சு இது வரையிலே கிடையாது. எங்கள் பரம்பரையின் ஆதி மன்னனாகிய சிபி, புறாவுக்கு நியாயம் வழங்குவதற்காகத் தன் சதையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொடுக்கவில்லையா? எங்கள் குலத்தைச் சேர்ந்த மனுநீதிச் சோழன் பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக தன் குமாரனையே பலி கொடுக்கவில்லையா! நீ புறாவை விட, பசுவை விட மட்டமானவன் அல்ல. உனக்கு நான் நியாயம் வழங்க மறுக்கமாட்டேன். இவனை நான் விசாரிக்கும் வரையில் பொறுமையாயிரு! வல்லவரையா! உன் பிரயாணத்தைப் பற்றிய மற்ற விவரங்களைச் சொல்லுவதற்கு முன்னால், கந்தமாறனுடைய குற்றச்சாட்டுக்கு நீ மறு மொழி சொல்லிவிடுவது நல்லது. என்ன சொல்லுகிறாய்? இவனை நீ பின்னாலிருந்து முதுகில் குத்தியது உண்மையா? அப்படியானால், அத்தகைய வீர லட்சணமில்லாத, நீசத்தனமான காரியத்தை ஏன் செய்தாய்? எதற்காகச் செய்தாய்?" என்று கேட்டான்.

"இளவரசே! நான் இந்த வீராதி வீரனைக் குத்தவும் இல்லை; முதுகில் குத்தவும் இல்லை; அதுவும் பின்னால் மறைந்து நின்று முதுகில் குத்தவே இல்லை. முதுகில் குத்தப்பட்டு நினைவிழந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தவனைத் தோளில் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் வீட்டில் போட்டுக் காப்பாற்றினேன். ஆனால் அப்படி இவன் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் இப்போது வருத்தப்படுகிறேன். இவனை மார்பிலே குத்திக் கொல்லாமற் போனோமே என்று பச்சாதாபப்படுகிறேன். சிநேக தர்மத்தை முன்னிட்டு என் அரசருக்குச் செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்து விட்டேன். ஐயா! இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி. இவன் முதுகில் குத்தப்பட்டது எங்கே, எந்தச் சந்தர்ப்பத்தில் என்று கேளுங்கள்! தஞ்சாவூர்க் கோட்டையின் இரகசிய சுரங்க வழியாக இவன் யாரைப் பழுவேட்டரையர் அரண்மனையில் கொண்டு போய்விட்டுத் திரும்பினான் என்று கேளுங்கள், பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவரையில் இவன் அன்றிரவு யாரைப் பார்த்தான் என்று கேளுங்கள். ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு தினத்தில் இவனுடைய கடம்பூர் மாளிகையில் என்ன நடந்தது என்று கேளுங்கள். அன்றைக்கு அங்கே மூடுபல்லக்கில் மறைந்து கொண்டு வந்தது யார் என்று கேளுங்கள்!

இந்தச் சமயத்தில் கந்தமாறன், உடல் நடுங்க, நாக்குழற, "அடே! அற்பப் பயலே! நிறுத்து உன் அபத்தப் பேச்சை!" இல்லாவிட்டால் இதோ இந்த வேலுக்கு இரையாவாய்!" என்று கூறி வேலைக் கையில் எடுத்தான்.

ஆதித்த கரிகாலன் அவனுடைய படபடப்பைக் கண்டு சிறிது வியப்படைந்தான். கந்தமாறனுடைய கையிலிருந்த வேலைப் பிடுங்கித் தனது இரும்பையொத்த கரங்களினால் அதன் அடிக்காம்பை வளைத்தான். வேல் படார் என்று முறிந்தது. அதன் இரு பகுதிகளையும் ஆதித்த கரிகாலன் வீசித் தூர எறிந்து விட்டு, "ஜாக்கிரதை! என் சிநேகிதர்கள் என் முன்னாலேயே சண்டையிடுவதை நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது... பார்த்திபேந்திரா! இவர்களில் யாராவது இனி வேலையோ, வாளையோ கையில் எடுத்தால் உடனே அவனைச் சிறைப்படுத்துவது உன் பொறுப்பு!" என்றான்.

உடனே வந்தியத்தேவன் தன்னிடமிருந்த வாளை எடுத்துப் பார்த்திபேந்திரனிடம் கொடுத்தான். பார்த்திபேந்திரனும் வேண்டாவெறுப்பாக அந்த வாளைப் பெற்றுக் கொண்டான்.

"கந்தமாறா! உன்னுடைய குற்றச்சாட்டுக்கு வல்லவரையன் மறுமொழி கூறினான். அதன் உண்மையைக் குறித்து நானே சாவகாசமாக விசாரித்துத் தீர்ப்பு கூறுகிறேன். அவன் கேட்ட கேள்விகளுக்கு நீ விடை சொல்லப் போகிறாயா?" என்று கரிகாலன் கேட்டான்.

கந்தமாறன் தட்டுத்தடுமாறி மென்று விழுங்கிக் கொண்டு, "ஐயா! அந்த விஷயங்களைப்பற்றி நான் யாரிடமும் சொல்லுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்" என்றான்.

பார்த்திபேந்திரன் இப்போது தலையிட்டு, "அரசே! இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது ஏதோ பெண்ணை பற்றிய விஷயமாகக் காண்கிறது. ஆகையால் இவர்களைத் தனித் தனியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்!" என்றான்.

"ஆம், பார்த்திபா! நானும் அப்படித்தான் கருதுகிறேன். நீங்கள் மூன்று பேரும் தனித்தனியாகப் பழுவூர் இளையராணியைப் பார்த்து அவளுடைய மோக வலையில் விழுந்திருக்கிறீர்கள். ஆகையினால் தான் ஒருவரை ஒருவர் விழுங்கிவிடப் பார்க்கிறீர்கள்!" என்று கரிகாலர் கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

பார்த்திபேந்திரனுடைய முகம் சிணுங்கியது; அவன் "பிரபு! தாங்கள் இன்றைக்கு எந்த முக்கிய விஷயத்தையும் இலேசாகக் கருதிச் சிரிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லது நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுகிறேன். இந்த வந்தியத்தேவன் பேரில் எனக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. முக்கியமானதை மட்டும் இப்போது சொல்லுகிறேன். இவனைத் தீப்பிடித்த கப்பலிலிருந்து காப்பாற்றுவதற்காகவே தங்கள் அருமைச் சகோதரர் நடுக்கடலில் கடும் புயலில் குதித்தார். பிறகு பொன்னியின் செல்வரைக் காணவே இல்லை. இவன் மட்டும் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் கொட்டாப் புளியைப் போல் இங்கே வந்து முளைத்திருக்கிறான். தங்கள் சகோதரர் என்ன ஆனார் என்று இவனைக் கேளுங்கள். அவரைக் கடல் கொண்டிருந்தால் அதற்கு இந்தப் பாதகனே காரணமாவான்!" என்றான்.

கரிகாலர் வந்தியத்தேவனைப் பார்த்து "இதற்கு என்ன மறுமொழி சொல்லுகிறாய்?" என்று கேட்டார்.

"ஐயா! நான் இவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லுவதற்கு முன்னால், இவர் ஒரு கேள்விக்கு விடை சொல்லட்டும்.பொன்னியின் செல்வரை இலங்கையிலிருந்து இவர்தான் தம்முடைய கப்பலில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதன் மந்திரி அநிருத்தரும், சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரியும் இலங்கையிலேயே இருக்கும்படி பொன்னியின் செல்வரைக் கேட்டுக் கொண்டார்கள். ஆயினும் தமையன் கட்டளையைப் பெரிதாய் மதித்து இளவரசர் இவருடைய கப்பலில் ஏறிக் கிளம்பினார். அவரை ஏன் இவர் பத்திரமாகத் தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கவில்லை? நடுக்கடலில் பொன்னியின் செல்வர் குதித்த போது இவர் ஏன் பார்த்துக் கொண்டு நின்றார்? ஏன் இளவரசரைத் தடுக்கவில்லை? ஏழையும் அநாதையுமான என்னைக் காப்பாற்றுவதற்காகப் பொன்னியின் செல்வர் தம் உயிருக்குத் துணிந்து இறங்கினாரே! வீர பல்லவ குலத்தின் தோன்றலாகிய இவரும், இவருடைய ஆட்களும் இளவரசரைப் பாதுகாப்பதற்காக ஏன் கடலில் குதிக்கவில்லை? அவரைக் கடல் கொண்டுபோவதை வேடிக்கை என்று எண்ணிப் பார்த்துக் கொண்டு நின்றார்களா...?"

பார்த்திபேந்திரனுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனுடைய கைகள் துடித்தன; உதடுகளும் துடித்தன; உடல் ஆடியது.

"ஐயா! இந்த மூடன் என் மீது குற்றம் சுமத்துகிறான் என்று தோன்றுகிறது. இளவரசரை நானே கொன்று விட்டேன் என்று கூடச் சொல்லுவான் போலிருக்கிறது. இதை நான் ஒரு கணமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்றான்.

கரிகாலன் அவனை உற்று நோக்கி, "பார்த்திபா! நான் தான் சொன்னேனே? என் அருமைத் தோழர்களாகிய நீங்கள் மூன்று பேரும் ஒருவரையொருவர் கடித்துத் தின்றுவிடும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். இதற்கெல்லாம் நான் உங்கள் பேரில் குற்றம் சொல்லவில்லை. அந்தப் பழுவூர் ராணியின் சக்தி அப்படிப்பட்டது என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நீயும் கந்தமாறனும் குதிரை மீது ஏறிச் சற்று முன்னால் மெதுவாகப் போய்க் கொண்டிருங்கள். இவனுடைய பிரயாண விவரங்களைக் கேட்டுக் கொண்டு நான் சற்றுப் பின்னால் வருகிறேன். உங்கள் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்கிறேன். ஆனால் ஒன்று நிச்சயமாய் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேரும் சிநேகமாக இருந்தே தீரவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டீர்களானால், அதைக் காட்டிலும் எனக்கு அதிருப்தி உண்டாக்குவது வேறொன்றுமிராது!"

பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் வேறு வழியின்றித் தத்தம் குதிரை மீது ஏறி முன்னால் சென்றார்கள்.

அப்போது ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் அருகில் வந்து அவன் காதோடு, "அப்பனே! நீ வெகு கெட்டிக்காரனாகி விட்டாய்! பொய்யும் சொல்லாமல் உண்மையையும் வௌியிடாமல் வெகு சாமர்த்தியமாகப் பேசித் தப்பித்துக் கொண்டாய்!" என்றான்.

அப்போதுதான் ஆதித்த கரிகாலன் பார்வை அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் மீது விழுந்தது.

"ஓகோ! இவன் யார்? எப்போதோ, எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே!" என்று கேட்டான்.

"ஆம், அரசே! சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருக்கிறீர்கள்!"

"உன் குரல் கூடக் கேட்ட குரலாகத்தானிருக்கிறது."

"ஆம் ஐயா! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு தருணத்தில் என் குரலைக் கேட்டீர்கள்..."

ஆதித்த கரிகாலரின் முகத்தில் திடீரென்று ஒரு கரிய நிழல் வேகமாகப் படர்வது போலிருந்தது.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்...முக்கியமான தருணம்.. அது என்ன?.. வைகை நதித் தீவில் பகைவனைத் தேடி அலைந்த போது நான் கேட்ட குரலா? அப்படியும் இருக்க முடியுமா?"

"அந்தக் குரல் என் குரல்தான் அரசே! பகைவன் ஒளிந்திருந்த இடத்தைத் தங்களுக்கு மரத்தின் மறைவிலிருந்து சொன்னவன் நான்தான்!"

"ஆகா! என்ன பயங்கரமான தினம் அது? அன்றைக்கு எனக்குப் பிடித்திருந்த வெறியை நினைத்தால் இன்றுகூட உடல் நடுங்குகிறது. வைஷ்ணவனே! நீ ஏன் அன்று காட்டில் மறைந்திருந்தாய்? எதற்காக உன்னை அசரீரியாக மாற்றிக் கொண்டாய்?"

"அரசே! சற்று முன் தாங்களே சொன்னீர்களே! தங்களுக்கு அன்று பிடித்திருந்த வெறியைப் பற்றி! எதிரில் கண்டவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டு போனீர்கள் சில காலம் நான் உயிர் வாழ விரும்பினேன்..."

"அது மட்டுந்தானா காரணம்? 'அசரீரி வௌி வந்து எனக்கு வழிகாட்டட்டும்" என்று எவ்வளவோ முறை தொண்டை வலிக்கக் கூவினேனே? அப்போதும் நீ ஏன் வௌி வரவில்லை?"

"நான் வளர்த்த சகோதரி - இப்பொழுது பழுவூர் இளையராணி அவளுடைய தீராத கோபத்திற்கு ஆளாக நான் விரும்பவில்லை..."

"அவளுடைய தீராத கோபத்திற்கு நான் மட்டும் ஆளாகலாம் என்று எண்ணினாயாக்கும்! அட சண்டாளா!" என்று கூறி கரிகாலர் இடையிலிருந்த கத்தியை உருவினார்.

வந்தியத்தேவன் பயந்து போனான். ஆழ்வார்க்கடியானுடைய வாழ்வு அன்றோடு முடிந்தது என்றே எண்ணினான். மிக்க நயத்துடன் "ஐயா! இந்த வைஷ்ணவன் முதன் மந்திரியிடமிருந்து வந்திருக்கிறான். இவன் கொண்டு வந்த செய்தியைக் கேட்டுக் கொண்டு தண்டியுங்கள்!" என்றான்.

"ஆகா! இவனைத் தண்டித்து என்ன பிரயோஜனம்? இனி யாரைத் தண்டித்து என்ன பயன்?" என்று கூறிக் கரிகாலன் கத்தியை உறையில் போட்டான்.

கரிகாலன் போபத்தைக் கண்டு வந்தியத்தேவன் பயந்தது போல் ஆழ்வார்க்கடியான் பயந்ததாகத் தெரியவில்லை. முகத்தில் விசித்திரமான புன்னகையுடன், "அரசே! தங்கள் கோபத்தை என் பேரில் திருப்புவீர்கள் என்று எண்ணித்தான் இத்தனை நாளும் தங்களை நான் நேரில் சந்திக்காமலிருந்தேன். என் பேரில் என் சகோதரி கொண்ட கோபமும் இன்னும் தீரவில்லை. இன்று வரையில் என்னைப் பார்ப்பதற்குப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் தங்கள் பேரில் அவளுடைய கோபம் தீர்ந்து விட்டதாகக் காண்கிறது. நந்தினி தேவியின் அன்பான திருமுக ஓலையைப் பார்த்து விட்டுத்தானே தாங்கள் கடம்பூர் அரண்மனைக்கு விருந்துக்குப் புறப்பட்டீர்கள்?" என்றான்.

"ஆகா! துஷ்ட வைஷ்ணவனே! அது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கரிகாலன் கேட்டான்.

"ஐயா! முதன் மந்திரி அநிருத்தன் பணியாளன் நான். முதன் மந்திரிக்குத் தெரியாமல் இந்தச் சோழராஜ்யத்தில் எந்தச் சிறிய காரியமும் நடக்க முடியாது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பார்த்துக் கொண்டே இரு! ஒருநாள் அந்த அன்பில் அநிருத்தனையும் உன்னையும் சேர்த்துத் தேசப் பிரஷ்டம் செய்து விடுகிறேன்!... இப்போது இருவரும் குதிரை மீது ஏறிக் கொள்ளுங்கள்! என் இரு பக்கத்திலும் வந்து கொண்டிருங்கள் பேசிக் கொண்டே போகலாம்" என்றான் ஆதித்த கரிகாலன்.

பக்க தலைப்பு



பதின்மூன்றாம் அத்தியாயம்
மணிமேகலையின் அந்தரங்கம்

கடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள். அவளும் அன்றைக்கு மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு விளங்கினாள். அவளுடைய முகம் என்றுமில்லாத எழிலுடன் அன்று திகழ்ந்தது. அவள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பது அவளுடைய பாதி மூடிய கண்களிலிருந்து தெரிந்தது. கண்களின் கரிய இமைகள் மூடித்திறக்கும் போதெல்லாம் விழிகளிலிருந்து மின்னலைப் போன்ற காந்த ஒளிக்கிரணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இதிலிருந்து அவள் பார்ப்பதற்கு அரைத் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் அவளுடைய உள்ளம் உத்வேகத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பது நன்றாகப் புலனாயிற்று.

இன்னும் சிறிது கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவளுடைய பாதி மூடிய கண்களின் பார்வை அந்த அறையின் ஒரு பக்கத்தில் அகிற் குண்டத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைத் திரளின் மீது சென்றிருந்தது என்பதை அறியலாம். குண்டத்திலிருந்து புகை திரளாகக் கிளம்பிச் சுழிசுழியாக வட்டமிட்டுக் கொண்டு மேலே போய்ச் சிதறிப் பரவிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய்க் கொண்டிருந்தது. அந்த அகிற் புகைச் சுழிகளிலே நந்தினி என்னென்ன காட்சிகளைக் கண்டாளோ, தெரியாது. திடீரென்று அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய பவள இதழ்கள், "ஆம், ஆம்! நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான்!" என்று முணுமுணுத்தாள்.

அச்சமயம் "தேவி! தேவி! உள்ளே வரலாமா!" என்று மணிமேகலையின் மெல்லிய குரல் கேட்டது.

"வா, அம்மா, வா! உன்னுடைய வீட்டில் நீ வருவதற்கு என்னைக் கேட்பானேன்?" என்றாள் நந்தினி.

மணிமேகலை அந்தக் கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்துதான் வந்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றத்திலும் நடக்கும் நடையிலும் கையின் வீச்சிலும் உற்சாகம் ததும்பியபடியால் அவள் துள்ளிக் குதித்து ஆடிப்பாடிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

நந்தினி சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தந்தப் பீடத்தைக் காட்டி, அதில் மணிமேகலையை உட்காரச் சொன்னாள்.

மணிமேகலை உட்கார்ந்து கொண்டு, "தேவி! தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான்!" என்றான்.

"தென் தேசத்தாரும் அவர்களுடைய நாகரிகமும் நாசமாய்ப் போகட்டும். உன் அண்ணன் உனக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் உடனே மறந்து விடு! என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே! 'அக்கா' என்று அழை!"

"அக்கா! அக்கா! அடிக்கடி உங்களிடம் நான் வந்து தொந்தரவு செய்வது உங்களுக்குக் கஷ்டமாயிராதல்லவா?"

"நீ அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது எனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும்; என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருந்து விட்டாயானால் ஒரு தொந்தரவும் இராது!" என்று கூறி நந்தினி புன்னகை புரிந்தாள்.

அந்தப் புன்னகையில் சொக்கிப் போன மணிமேகலை, சற்று நேரம் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "தங்களைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. சித்திரங்களிலேகூட பார்த்ததில்லை" என்று சொன்னாள்.

"பெண்ணே! நீ வேறு என் மீது மோகம் கொண்டு விடாதே! ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக ஊரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்!"

"அக்கா! அப்படி யாராவது அவதூறு பேசுவது என் காதில் மட்டும் விழுந்தால், அவர்களுடைய நாக்கை ஒட்ட அறுத்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்!" என்றாள் மணிமேகலை.

"ஊராரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை மணிமேகலை! நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள்!"

மணிமேகலையின் முகம் சுருங்கிற்று. "ஆம், ஆம்! அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன...?"

"பேசினால் பேசிக் கொண்டு போகிறார்கள்; மணிமேகலை! அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது? என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு!"

"என்னைப் பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது அக்கா!"

"அடி, கள்ளி! இன்று மாலையில் வந்து உன் மனத்தில் உள்ள அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் என்று நீ கூறிவிட்டு போகவில்லையா? இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே?" என்று கூறிவிட்டு நந்தினி மணிமேகலையின் அழகிய கன்னத்தை இலேசாகக் கிள்ளினாள்.

"அக்கா! எப்போதும் எனக்கு இப்படியே தங்களுடன் இருந்துவிட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. எனக்கு சுயம்வரம் வைத்து, பெண்கள் பெண்களையே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தினால் நான் தங்களுக்குத் தான் மாலையிடுவேன்!" என்றாள் மணிமேகலை.

"என்னை நீ பார்த்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை! அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே? அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே? ஆனால் நீ சற்று முன் கூறியது நடவாத காரியம். பெண்ணுக்குப் பெண் மாலையிடுவது என்பது உலகில் என்றும் நடந்ததில்லை. யாராவது ஓர் ஆண்பிள்ளையைத்தான் நீ மணந்து கொண்டு தீர வேண்டும்..."

"கன்னிப் பெண்ணாகவே இருந்துவிட்டால் என்ன, அக்கா?"

"முடியாது, கண்ணே! முடியாது! கன்னிப் பெண்ணாயிருக்க இந்த உலகம் உன்னை விடவே விடாது. உன் அம்மாவும் அப்பாவும் விடமாட்டார்கள்; உன் தமையனும் விட மாட்டான். யாராவது ஓர் ஆண்பிள்ளையின் கழுத்தில் உன்னைக் கட்டி விட்டால்தான் அவர்களது மனது நிம்மதி அடையும். அப்படி நீ கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பட்டால் யாரை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறாய், சொல்லு!"

"பெயரைக் குறிப்பிட்டுக் கேளுங்கள், அக்கா! சொல்லுகிறேன்!"

"சரி சரி, அப்படியே கேட்கிறேன் சிவபக்தியில் சிறந்த மதுராந்தகத் தேவரை மணந்துகொள்ள விரும்புகிறாயா? அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா?"

திடீரென்று மணிமேகலை எதையோ நினைத்துக் கொண்டவள் போல் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறாய், மணிமேகலை? நான் பரிகாசம் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டாயா? இந்த விஷயத்தை முடிவு செய்வதற்காகவே என்னை உன் தமையன் இங்கே முக்கியமாக வரச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் கரிகாலர் இங்கே வந்துவிடக் கூடும். உன் தமையனும் வந்து விடுவான். உன் அந்தரங்கத்தை அறிந்து சொல்லுவதாக அவனுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்" என்றாள் நந்தினி.

"என் அந்தரங்கம் இன்னதென்று எனக்கே தெரியவில்லையே, அக்கா! நான் என்ன செய்யட்டும்!"

"எதற்காகச் சிரித்தாய், அதையாவது சொல்!" என்று கேட்டாள் நந்தினி.

"மதுராந்தகர் பெயரைச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நாலு மாதத்துக்கு முன்பு அவர் இந்த வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்தார். தாங்கள் வழக்கமாக வரும் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஒருவரும் பார்க்காமல் திரை போட்டுக் கொண்டு வந்தார். அந்தப்புரத்தில் எங்களுக்கு அந்த இரகசியம் தெரியாது. தாங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். 'பழுவூர் ராணி ஏன் அந்தப்புரத்துக்கு வரவில்லை?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா! பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா? மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான்!..."

நந்தினி புன்னகை புரிந்து, "ஆம்! மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது.அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு!" என்றாள் நந்தினி.

"அப்படியும் சொல்லமாட்டேன், அக்கா! அவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி என் மனம் அவரிடம் சென்றிருக்க முடியும்?"

"அடியே! இராஜகுலத்துக்குப் பெண்கள் பார்த்து விட்டுத்தான் மனத்தைச் செலுத்துவது என்பது உண்டா? கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா?"

"ஆம், ஆம்! அறிந்திருக்கிறேன். ஆதித்த கரிகாலர் வீராதி வீரர் என்றும் உலகமெல்லாம் அவர் புகழ் பரவியிருக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். அக்கா! வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டிவிட்டாராமே? அது உண்மையா?"

நந்தினியின் முகம் அச்சமயம் எவ்வளவு பயங்கரமாக மாறியது என்பதை மணிமேகலை கவனிக்கவில்லை.

நந்தினி சில வினாடி நேரம் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அதற்குள் அவள் முகம் பழையபடி பார்ப்போரை மயக்கும் மோகன வசீகரத்துடன் விளங்கியது.

"மணிமேகலை! ஒருவருடைய தலையை ஒரே வெட்டில் வெட்டிவிடுவது பெரிய வீரம் என்று கருதுகிறாயா? அது பயங்கர அசுரத்தனம் அல்லவா?" என்றாள்.

"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை அக்கா! பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா? அது எப்படி அசுரத்தனமாகும்!"

"இந்த மாதிரி யோசனை செய்து பார்! உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள். அல்லது நீ மணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா?" என்று கேட்டாள் பழுவூர் ராணி.

மணிமேகலை சற்று யோசித்து விட்டு, "அக்கா! மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன்!" என்றாள்.

நந்தினி மணிமேகலையை ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாள். "என் கண்ணே! நல்ல மறுமொழி சொன்னாய்! இவ்வளவு புத்திசாலியாகிய உனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று கவலையாயிருக்கிறது. ஆதித்த கரிகாலர் கூட உனக்குத் தக்க மணவாளர் ஆவாரா என்பது சந்தேகந்தான்" என்றாள் நந்தினி.

"நானும் அப்படித்தான் எண்ணுகிறேன் கரிகாலருடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்ட பிறகு அவரை நினைத்தால் எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. என்னுடைய அந்தரங்கத்தை, என் மனத்திலுள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா அக்கா?" என்று கேட்டாள் மணிமேகலை.

பக்க தலைப்பு



பதினான்காம் அத்தியாயம்
கனவு பலிக்குமா?

நந்தினி மணிமேகலையின் முகவாயைச் சற்று நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு அவளுடைய மலர்ந்த கண்களை ஊடுருவி நோக்கினாள்.

"என் கண்மணி! உன் அந்தரங்கத்தை நீ என்னிடம் சொல்லாமல் வைத்துக் கொள்வதே நல்லது. பார்க்கப்போனால் உனக்கு நான் பழக்கமாகி முழுமையாக ஒருநாள் கூட ஆகவில்லை. நெடுநாள் பழகிய தோழிகளிடம் தான் அந்தரங்கத்தைச் சொல்ல வேண்டும்" என்றாள்.

"இல்லை அக்கா! உங்களைப் பார்த்தால் எனக்கு வெகு நாள் பழக்கமான தோழி மாதிரியே தோன்றுகிறது. யாரிடமும் சொல்லாத விஷயத்தைத் தங்களிடம் சொல்லும்படி என் உள்ளம் தூண்டுகிறது. யாரிடமும் கேட்கக் கூடாத காரியத்தைத் தங்களிடம் கேட்கும் தைரியமும் உண்டாகிறது..."

"அப்படியானால் கேளடி, கண்ணே!"

"உருவௌித் தோற்றம் என்று கதைகளில் சொல்லுகிறார்களே, அது உண்மையாக ஏற்படக் கூடுமா, அக்கா? நம் எதிரில் ஒருவர் இல்லாதபோது அவர் இருப்பது போலவே தோன்றுமா?"

"சில சமயங்களில் அப்படித் தோன்றும்; ஒருவரிடம் நாம் அதிகமான ஆசை வைத்திருந்தால், அவருடைய உருவம் எதிரில் இல்லாவிட்டாலும் இருப்பது போலத் தோன்றும். ஒருவரிடம் அதிகமான துவேஷம் வைத்திருந்தால் அவருடைய உருவமும் தோற்றம் அளிக்கும், மாயக் கண்ணனுடைய கதை நீ கேட்டதில்லையா, மணிமேகலை? ஏன்? நாடகம்கூடப் பார்த்திருப்பாயே? கம்ஸனுக்குக் கிருஷ்ணன் பேரில் ரொம்பத் துவேஷம். ஆகையால் கண்ட இடமெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. கத்தியை வீசி வீசி ஏமாந்து போனான். நப்பின்னை என்னும் கோபிகைக்குக் கண்ணன் மீது ரொம்ப ஆசை. அவளுக்கும் கண்ணன் உருவம் இல்லாத இடத்திலெல்லாம் தோன்றுமாம். தூணையும், மரத்தையும், நதியின் வெள்ளத்தையும் கண்ணன் என்று கட்டித் தழுவிக் கொள்ளப் போய் ஏமாற்றமடைவாளாம்! அடியே, மணிமேகலை, உன்னை அந்த மாதிரி மயக்கிவிட்ட மாயக் கண்ணன் யாரடி?"

"அக்கா! முதன் முதலாக நாலு மாதத்துக்கு முன்னால் தான் அவரை நான் நேரில் பார்த்தேன். அதற்கு முன்னால் என் தமையன் கந்தமாறன் அவரைப் பற்றி அடிக்கடி சொல்லி இருந்தான். அப்போதெல்லாம் அவர் உருவம் என் கண் முன் தோன்றுவதில்லை. ஒரு தடவை பார்த்த பிறகு அடிக்கடி என் கனவில் தோன்றி வந்தார்.பகலிலும் சில சமயம் எதிரில் அவருடைய உருவம் நிற்பது போலிருக்கும்...."

"நேற்றுக்கூட அந்த மாயாவியின் உருவௌித் தோற்றத்தை நீ கண்டாய் அல்லவா?"

"ஆம், அக்கா! உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"என்னிடம் மந்திர சக்தி உண்டு என்பதைப் பற்றி உனக்கு யாராவது சொல்லவில்லையா?"

"ஆம்; சொன்னார்கள் அது உண்மைதானா, அக்கா?"

"நீயே பரீட்சித்துத் தெரிந்துகொள்; உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்த யௌவன சுந்தர புருஷனை யார் என்று வேண்டுமானால், என் மந்திர சக்தியினால் கண்டு சொல்லட்டுமா!"

"சொல்லுங்கள், பார்க்கலாம் எனக்கும் அவர் பெயரைச் சொல்லக் கூச்சமாயிருக்கிறது."

நந்தினி சிறிது நேரம் கண்ணிமைகளை மூடிக் கொண்டிருந்துவிட்டுத் திறந்து "உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆசைக் காதலன் வாணர் குலத்தில் வந்த வல்லவரையன் வந்தியத்தேவன்! இல்லையா?" என்றாள்.

"அக்கா! உங்களிடம் மந்திர சக்தி இருப்பது உண்மைதான்!" என்றாள் மணிமேகலை.

"அடி பெண்ணே! எப்போது உன் உள்ளத்தை அவ்வளவு தூரம் ஒருவருக்குப் பறிகொடுத்துவிட்டாயோ, அப்போது ஏன் உன் தமையனிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லை? மதுராந்தகருக்கு ஆசை காட்டுவானேன்? கரிகாலரை இங்கே தருவித்து வீண் பிரயத்தனம் செய்வானேன்? என்னை அநாவசியமாக இங்கே வரவழைப்பானேன்?"

"அக்கா! என் தமையன் கந்தமாறனுக்கு அவரைப் பிடிக்கவில்லை.."

"அழகாயிருக்கிறது! உன் தமையனா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான்? ஆனால் கந்தமாறன் தானே வந்தியத்தேவனைப் பற்றி உனக்குச் சொன்னான் என்றாய்? இங்கே அவனைக் கூட்டிக் கொண்டு வந்ததும் உன் தமையன் தானே?"

"ஆமாம், கந்தமாறன் தான் அவரைப் பற்றிச் சொன்னான். அந்தப்புரத்துக்கு ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டும் வந்தான். ஆனால் பிற்பாடு அவன் மனம் மாறிவிட்டது; அதற்குக் காரணமும் இருக்கிறது. தஞ்சாவூரில் என் தமையனை அவர் கத்தியால் குத்திவிட்டாரம், அக்கா! உங்கள் அரண்மனையிலே என் தமையன் காயத்தோடு படுத்துக் கிடந்தானாமே? உங்கள் அன்பான பராமரிப்பினால்தான் அவன் உயிர் பிழைத்து எழுந்தானாமே?"

"நான் செய்ததை உன் தமையன் அதிகப்படுத்திக் கூறுகிறான். அது போனால் போகட்டும். இப்போது நீ என்ன செய்வாய்? உன் மனத்தைக் கவர்ந்தவன் இப்படி உன் தமையனுக்கு விரோதியாகி விட்டானே?"

"ஆனால் இவர் என்ன சொல்கிறார், தெரியுமா?..."

"இவர் என்றால், யார்?"

"அவர்தான்! நீங்கள் சற்று முன் பெயர் சொன்னீர்களே, அவர் தான்! கந்தமாறனை அவர் குத்தவேயில்லையென்று ஆணையிடுகிறார். வேறு யாரோ குத்தித் தஞ்சாவூர்க் கோட்டை மதில் ஓரத்தில் போட்டிருந்தார்கள் என்றும், அவர் எடுத்துக் கொண்டு போய்க் காப்பாற்றியதாகவும் சொல்கிறார்."

"இதை எப்போதடி அவன் உனக்குச் சொன்னான்?"

"நேற்றுத்தான்.."

"நேற்று அந்த வந்தியத்தேவனை நீ நேரில் பார்த்தாயா, என்ன ? அவனுடைய உருவௌித் தோற்றத்தைக் கண்டதாக அல்லவா கூறினாய்?"

"அதுதான் அக்கா, எனக்கு ஒரே மனக் குழப்பமாயிருக்கிறது. நேற்று நான் பார்த்தது அவரா, அல்லது அவருடைய உருவௌித் தோற்றமா என்று தெரியவில்லை. நேற்று நடந்தவற்றை எண்ணினால், எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது.அக்கா! சில சமயம் மனிதர்கள் செத்துப் போனால் அவர்களுடைய ஆவி வந்து பேசும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" இந்தக் கேள்வியைக் கேட்ட போது மணிமேகலையின் குரலில் அளவிலாத பீதி தொனித்தது.

நந்தினியின் உடலும் நடுங்கிற்று. எங்கேயோ உச்சி முகட்டைப் பார்த்த வண்ணம் "ஆம்; உண்மைதான்! அற்பாயுளில் மாண்டவர்கள் ஆவி அப்படி உயிரோடிருப்பவர்களை வந்து சுற்றும். ஒருவருடைய தலையை வெட்டிக் கொன்று விட்டவர்கள் என்றால், சில சமயம் தலை மட்டும் வரும். சில சமயம் உடம்பு மட்டும் தனியாக வரும். இன்னும் சில சமயம் இரண்டும் தனித்தனியாக வந்து, 'பழி வாங்கினாயா?' என்று கேட்கும்!" என்றாள்.

பிறகு மணிமேகலையைப் பார்த்து உரத்த குரலில், "அடி பெண்ணே! நீ எதற்காக இந்தக் கேள்வி கேட்டாய்! உன் காதலனுக்கு அப்படி ஏதாவது நேர்ந்திருக்கும் என்று பயப்படுகிறாயா? உன் மனதில் இந்தச் சந்தேகத்தை யார் கிளப்பி விட்டார்கள்?" என்றாள்.

"இந்த அரண்மனையின் ஆவேசக்காரன் ஒருவன் இருக்கிறான். அவனைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவனை யாரோ நேற்றிரவு அடித்துப் போட்டு விட்டார்களாம். அவனுக்குப் பதிலாக அவன் பெண்டாட்டி தேவராட்டி வந்தாள். அவள் தான் சொன்னாள்!"

"சீச்சீ! அதையெல்லாம் நீ நம்பாதே!"

"எனக்கும் நம்பிக்கைப்படவில்லை. வெறும் ஆவி வடிவமாயிருந்தால், தொட முடியாதல்லவா, அக்கா!"

"ஆவியையும் தொட முடியாது; உருவௌித் தோற்றத்தையும் தொட முடியாது. நீ ஏன் கேட்கிறாய்! உன் உள்ளத்தைக் கவர்ந்தவனை நீ நேற்றுத் தொட்டுப் பார்த்தாயா, என்ன?"

"அதுதான் ஒரே குழப்பமாயிருக்கிறது. தொட்டுப் பார்த்தது போலவும் இருக்கிறது; ஆனால் வேறு சில விஷயங்களை நினைத்துப் பார்த்தால் சந்தேகமாகவும் இருக்கிறது."

"நேற்று நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லடி, பெண்ணே! நான் உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்!"

"ஆகட்டும் அக்கா! நான் ஏதாவது முன் பின்னாக உளறினால் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்றாள் மணிமேகலை. பிறகு அவள் கூறினாள்; "நேற்று நான் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இங்கே இருந்தேன். என் தமையன் சொல்லிப் போயிருந்தபடி தங்களுக்கு இங்கே வேண்டிய சௌகரியம் எல்லாம் பணிப்பெண்கள் சரியாகச் செய்திருக்கிறார்களா என்று கவனிப்பதற்காக வந்தேன். ஒரு முறை, இதோ இருக்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!"

"உன் அழகை நீயே பார்த்துக் கொண்டிருந்தாயாக்கும்..."

"அப்படியொன்றும் இல்லை, அக்கா! என் முக இலட்சணம் எனக்குத் தெரியாதா, என்ன?"

"உன் முக லட்சணத்துக்கு என்ன குறைவு வந்தது? ரதியும் இந்திராணியும் மேனகையும் ஊர்வசியும், உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட மாட்டார்களா?"

"அவர்கள் எல்லாரும் உங்கள் கால் தூசி பெறமாட்டார்கள் அக்கா!"

"சரி, சரி! மேலே சொல்! கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..."

"அப்போது திடீரென்று இன்னொரு முகம் கண்ணாடியில் தெரிந்தது; என் முகத்துக்கு அருகில் தெரிந்தது."

"அது உன் காதலன் முகந்தானே!"

"ஆமாம்; எனக்குத் தூக்கி வாரிப் போட்டது..."

"எதற்காகத் தூக்கி வாரி போட வேண்டும்? நீ தான் அடிக்கடி அவனுடைய முகத்தைக் கனவில் பார்ப்பதுண்டு என்று சொன்னாயே?

"அதற்கும் இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. கனவில் வரும்போது எதிரே சற்றுத் தூரத்தில் தெரியும். உருவௌித் தோற்றத்திலும் அப்படித்தான் ஆனால் இங்கே - பின்னாலிருந்து சொல்லக் கூச்சமாயிருக்கிறது..."

"பாதகமில்லை, சொல்லடி கள்ளி!"

"பின்னாலிருந்து கன்னத்தில் முத்தமிட வருவதைப் போல் இருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன் ஒருவரும் இல்லை. பிறகு கண்ணாடியிலும் அந்த முகம் தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இந்த அறைக்குப் பக்கத்தில் உள்ள வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவைத் திறந்து காட்டினேன் அல்லவா? நேற்று கண்ணாடி அந்தக் கதவுக்கு நேரே வைத்திருந்தது. ஆகையால் அந்தக் கதவைத் திறந்து வேட்டை மண்டபத்திலிருந்து யாராவது எட்டிப் பார்ப்பார்களோ என்று தோன்றியது. அப்படி இருக்க முடியாது என்றும் எண்ணினேன். அன்னிய புருஷன் ஒருவன் அந்த வேட்டை மண்டபத்தில் எப்படி வந்திருக்க முடியும்? ஆயினும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கதவைத் திறந்து வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்த்தேன்.."

நந்தினி இதற்குள் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கியிருந்தாள். "வேட்டை மண்டபத்தில் அந்தத் திருடன் ஒளிந்திருந்தானா? அகப்பட்டுக் கொண்டானா?" என்று கேட்டாள்.

"என்ன அக்கா, அவரைத் 'திருடன்' என்கிறீர்களே?"

"திருடன் என்றால், நிஜத் திருடனா? உன் மனத்தைக் கவர்ந்த திருடனைச் சொன்னேன் அடி! அவன் வேட்டை மண்டபத்தில் இருந்தானா?"

"அதுதானே அதிசயம்! அவர் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக எங்கள் அரண்மனைப் பணியாள் இடும்பன்காரி அந்த அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய முகம் அய்யனார் கோவில் வாசலில் உள்ள காடுவெட்டிக் கருப்பன் முகம் மாதிரி இருக்கும். 'இங்கே வேறு யாராவது வந்ததுண்டா?" என்று கேட்டேன்; 'இல்லை' என்று சாதித்து விட்டான்..."

"அவன் பொய் சொல்லியிருப்பான் என்று கருதுகிறாயா?"

"அது என்னமோ எனக்கு தெரியாது ஆனால் இன்னொரு ஆள் அந்த மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகத் தோன்றியது. 'திருட்டு தானே வௌியாகட்டும்' என்று நான் இந்த அறைக்குத் திரும்பி வந்துவிட்டேன்..."

"திருட்டு வௌியாயிற்றா?"

"கேளுங்கள்! நான் இந்த அறைக்குள் வந்து வேட்டை மண்டபத்துக்குள் ஏதாவது பேச்சுக் குரல் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். பேச்சுக் குரல் கேட்டது! தடபுடலாக ஏதோ விழுகிற சத்தமும் கேட்டது. நான் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கதவு அசைந்தது. நான் விளக்கை மறைத்து வைத்து விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.இந்தக் கதவிலேயே வட்டமான ஒரு சிறிய உட்கதவு இருக்கிறது. அதைத் திறந்து கொண்டு ஓர் உருவம் இங்கே வரப் பார்த்தது. "அபயம் அபயம்! என்னைக் காப்பாற்று!" என்ற குரல் கேட்டது. குரலும் உருவமும் அவரைப் போல் தோன்றியபடியால் அவர் இந்த அறையில் வருவதற்கு உதவி செய்துவிட்டு விளக்கைத் தூண்டினேன் பார்த்தால் அவரேதான்!"

"மணிமேகலை! இது என்ன அதிசயமடி! விக்கிரமாதித்யன் கதையைப் போல அல்லவா இருக்கிறது?"

"இன்னும் கேளுங்கள்! நாலு மாதமாகக் கனவில் கண்டுவந்தவரை நேரில் பார்த்ததும் என் உள்ளம் பூரித்தது; உடம்பு சிலிர்த்தது.ஆனால் கள்ளக் கோபத்துடன் அவரிடம் பேசினேன். 'பெண்கள் வசிக்கும் அந்தப்புரத்தில் எப்படி அவர் திருட்டுத்தனமாகப் பிரவேசிக்கலாம்?" என்று கேட்டேன். அவரைக் கொல்லுவதற்காக யாரோ சிலர் துரத்திக் கொண்டு வருவதாகக் கூறினார். 'உயிருக்குக் பயந்தோடும் பயங்கொள்ளி' என்று பரிகசித்தேன். அதற்குத் தம்மிடம் ஆயுதம் இல்லை என்று சமாதானம் கூறினார். பிறகு தான் என் தமையனை அவர் முதுகில் குத்தியதைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். 'இல்லவே இல்லை' என்று சத்தியம் செய்தார், அக்கா!"

"நீயும் நம்பிவிட்டாயாக்கும்!"

"அப்போது நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் பிறகு நடந்ததையெல்லாம் யோசிக்கும் போது எதை நம்புவது, எதை நம்பாமலிருப்பது என்றே தெரியவில்லை..."

"பிறகு இன்னும் என்ன அதிசயம் நடந்தது?"

"அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே என் ஒரு காதினால் அடுத்த அறையில் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். பல பேர் நடமாடும் சத்தமும் பேச்சுக் குரல்களும் கேட்டன. ஆகையால் அவரைக் கொல்லுவதற்கு யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். கேளுங்கள் அக்கா! அந்தச் சமயத்தில் இந்தப் பேதை மனம் எப்படியாவது அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டது. அவரைக் கொல்ல வருகிறவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ள விரும்பினேன். இடும்பன்காரி இதற்கெல்லாம் உட்கையாக இருப்பானா? அப்படியானால் அவன் இவருக்கு உட்கையா? இவரைக் கொல்ல வருகிறவர்களுக்கு உட்கையா என்றும் அறிய விரும்பினேன். வேட்டை மண்டபத்துக்குள் வரும் இரகசியச் சுரங்க வழி இவ்வளவு பேருக்குத் தெரிந்திருப்பதை நினைத்துத் திகில் உண்டாயிற்று. அதிலும் நீங்கள் இங்கே தங்கப் போகிறீர்கள் என்பதை எண்ணியபோது கவலை அதிகமாயிற்று. தகப்பனாரைக் கூப்பிட்டனுப்பலாம் என்று நினைத்தால், அதற்கும் தைரியம் வரவில்லை. இவர் அந்தப்புரத்துக்குள் வந்திருப்பதைத் தகப்பனார் பார்த்தால், உடனே இவர் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். ஆகையால் இவரை இங்கேயே சற்று இருக்கும்படி சொல்லிவிட்டு, வேட்டை மண்டபத்திற்குள் இருப்பவர்கள் யார் என்று பார்த்துவிட்டு வருவதற்காகக் கதவைத் திறந்து கொண்டு போனேன். உள்ளே ஐந்தாறு ஆட்கள் மூலைக்கு மூலை சுவர் ஓரமாக இருந்தார்கள். என்னைப் பார்த்துவிட்டு அவர்கள் பிரமித்து நின்றதாகத் தோன்றியது. அவர்களை அவ்விதம் பார்த்ததில் என் மனத்திலும் சிறிது பயம் உண்டாயிற்று. அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டு கடுங்கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் யார் என்று கேட்பதற்காக வாய் எடுத்தேன். இதற்குள், இந்த அறையில் என் தோழி சந்திரமதி மற்றொரு கதவு வழியாக 'அம்மா! அம்மா!' என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தாள். இவர் இங்கே இருப்பது எனக்கு உடனே நினைவு வந்தது.சந்திரமதி இவரைப் பார்த்துவிட்டுக் கூச்சல் போடப் போகிறாளே என்று பயந்து போனேன். வேட்டை மண்டபத்துக்குள் இருப்பவர்களை மறுபடி பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினேன். சந்திரமதியையும் வழி மறித்து அழைத்துக் கொண்டு இந்த அறைக்குள் வந்து பார்த்தேன். இங்கே அவரைக் காணவில்லை; மாயமாய் மறைந்து போய்விட்டார். 'யாராவது இங்கே இருந்தார்களா?' என்று சந்திரமதியைக் கேட்டேன், தான் பார்க்கவில்லை என்றாள். இன்னும் சிறிது தேடிப் பார்த்துவிட்டு மறுபடி வேட்டை மண்டபத்துக்குள் போனேன். அங்கேயும் நான் சற்று முன் பார்த்தவர்கள் யாரும் இல்லை. இடும்பன்காரி மாத்திரம் முன் போலவே அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். 'சற்று முன்னால் இங்கே வந்திருந்தவர்கள் யார்? அவர்கள் இப்போது எங்கே?' என்று கேட்டேன். இடும்பன்காரி 'இங்கே ஒருவரும் வரவில்லையே, அம்மா!' என்று ஒரே சாதிப்பாகச் சாதித்தான். அவன் வார்த்தையை என்னால் நம்ப முடியவில்லை. என் தோழி சந்திரமதியோ என்னைப் பரிகாசம் பண்ண ஆரம்பித்து விட்டாள். 'அக்கா! இன்றைக்கு உங்களுக்கு ஏதோ சித்தப்பிரமை தான் பிடித்திருக்கிறது! ஆள் இல்லாத இடங்களிலெல்லாம் ஆள் இருப்பதாகத் தோன்றுகிறது!' என்றாள். பிறகு நீங்கள் எல்லாரும் கோட்டை வாசலை நெருங்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். தங்களை வரவேற்பதற்காக என்னை என் தந்தை உடனே அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினாள். உடனே நான் அரண்மனை வாசலுக்குப் புறப்பட்டேன். சீக்கிரம் அங்கே வந்து விடுவதற்காகச் சந்திரமதி வந்த நடையில் சென்று இரண்டு கட்டுக்களைத் தாண்டி மச்சுப்படி வழியாக ஏறி மேல் மாடத்தில் நடந்து போனேன். அப்போது மறுபடியும் ஓர் அதிசயத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த வாணர் குலத்து வீரர் நிலா முற்றத்தைக் கடந்து மதில் சுவர் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். சுவரில் ஒரு மூங்கில் கழியை வைத்து ஏறி மதில் சுவரைத் தாண்டிக் குதிப்பதையும் பார்த்தேன். என் கண்களுக்கு அவ்வாறு தோன்றியது. அவையெல்லாம் உண்மையாக நடந்தவையா அல்லது என் சித்தப்பிரமையா என்று இன்னமும் எனக்கு நிச்சயமாகவில்லை..."

நந்தினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அந்த மாளிகை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் அடர்ந்த மரங்களிடையே நேற்று மாலை அவள் பார்த்த இரு முகங்கள் அவள் மனக்கண் முன் தோன்றின. அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை ஆட்கள் ஏவப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அவர்கள் ஒருவேளை இதற்குள் பிடிபட்டிருப்பார்களா? பிடிபட்டிருந்தால் இங்கே கொண்டு வரப்படுவார்களா?...

"அக்கா! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டு, நந்தினியின் சிந்தனையைத் தடை செய்தாள் மணிமேகலை.

"எனக்கா! எனக்குத் தோன்றுகிறதையா கேட்கிறாய்? உனக்கு மோகப்பித்தம் நன்றாகத் தலைக்கு ஏறியிருக்கிறது என்று தோன்றுகிறது" என்றாள் நந்தினி.

"சந்திரமதியைப் போல் நீங்களும் பரிகாசம் செய்கிறீர்களா?"

"நான் பரிகாசம் செய்யவில்லையடி! நேரில் பார்த்துப் பேசிய உனக்கே உண்மையா, கனவா, சித்தப்பிரமையா என்று தெரியவில்லையே! நான் எப்படிச் சொல்ல முடியும்? இந்த அறையிலிருந்து வௌியேறிப் போவதற்கு வேறு ஏதேனும் இரகசிய வழி இருக்கிறதா?"

"எனக்குத் தெரிந்த வரையில் வேறு இரகசிய வழி இல்லை, அக்கா!"

"நீயும் சந்திரமதியும் போன வழியில் அவனும் போய் மச்சுப்படி ஏறிப் போயிருக்கலாம் அல்லவா?"

"அங்கே வழியில் பல பணிப்பெண்கள் இருந்தார்கள்; அக்கா! அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்க முடியாது."

"அதிசயமாகத்தானிருக்கிறது... இதையெல்லாம் பற்றி உன் தகப்பனாரிடம் நீ தெரிவிக்கவில்லையா?"

"தெரிவிக்கவில்லை அக்கா! தகப்பனாரிடம் சொல்லக் கூச்சமாகவும் இருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. ஒருவேளை அவர் இங்கே வந்திருந்ததெல்லாம் உண்மையாக இருந்தால்..."

"ஆமாம், புருஷர்களிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லாமலிருப்பதே நல்லது அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது..."

"என் தமையனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.."

"அவனிடம் சொன்னால் கட்டாயம் ரகளையாக முடியும். உன் தமையனுக்கு இப்போது எப்படியாவது உன்னைக் கரிகாலனுக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றிருக்கிறது!"

"அக்கா! நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். கந்தமாறனுக்கு உங்களிடம் ரொம்ப விசுவாசம். நீங்கள் சொன்னால் கேட்பான்..."

"அடி பெண்ணே! நான் எந்த நோக்கத்துடன் இங்கே வந்தேனோ, அதற்கு விரோதமாக என்னுடைய உதவியையே கேட்கிறாயே? வெகு கெட்டிக்காரி நீ! அப்படியே கரிகாலருக்கு உன்னை மணம் செய்து கொடுக்கும் யோசனையைக் கைவிட்டாலும், மற்றவனைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாதே? அவன் உன்னை விரும்புவான் என்பது என்ன நிச்சயம்!"

"அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை; அக்கா! அவர் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்..."

"பெண்களின் தலையெழுத்தே இப்படித்தான் போலும்! புருஷர் எப்படி நடந்து கொண்டாலும், பெண்கள் அவர்களுக்காக உயிரை விட வேண்டியதென்று ஏற்பட்டிருக்கிறது! ஏதோ உன் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம். மறுபடியும் நேற்று மாதிரி ஏதேனும் நேர்ந்தால் என்னிடம் சொல்வாய் அல்லவா?"

"உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது அக்கா! நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அதையும் சொல்லிவிட விரும்புகிறேன்..."

"பகற் கனவு கண்டது போதாது என்று, இரவிலும் வேறு கனவு கண்டாயா? அது என்ன? மறுபடியும் அவன் கனவில் வந்து உன்னை ஏமாற்றிவிட்டுப் போனானா?"

"இல்லை, இல்லை! இது வேறு விஷயம் நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. காலை நேரத்தில் காணும் கனவு பலிக்கும் என்கிறார்களே? அது உண்மைதானா, அக்கா!"

"கனவைச் சொல் கேட்கலாம்! வேறு விஷயம் என்றால்..."

இன்னும் யாரையேனும் பற்றிக் கனவு கண்டாயா?"

"இவரைப் பற்றித்தான்! இவரை யாரோ ஒருவன் கத்தியால் குத்த வருகிறது போல் இருந்தது. இவர் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லை. ஆனால் தரையிலே ஒரு கத்தி பளபளவென்று மின்னிக் கொண்டு கிடந்தது. நான் அதைத் தாவி எடுத்துக் கொண்டு பாய்ந்தேன். இவரைக் குத்த வருகிறவனை முதலில் நான் குத்தி விடுவது என்ற எண்ணத்துடன் ஓடினேன். அருகில் சென்றதும் அவனுடைய முகம் தெரிந்தது. அவன் என் தமையன் கந்தமாறன்!.... 'ஓ' என்று அலறிக் கொண்டு விழித்தெழுந்தேன். என் உடம்பெல்லாம் வியர்வையினால் சொட்ட நனைந்திருந்தது. வெகு நேரம் என் கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. கனவு அவ்வளவு நிஜம் போல இருந்தது. இது ஒருவேளை பலித்து விடுமா, அக்கா!"

"அடி பெண்ணே! உன் மனம் உண்மையிலேயே குழம்பிப் போயிருக்கிறது. நிஜமாக நடந்தது பிரமைபோலத் தோன்றுகிறது. கனவிலே கண்டது நிஜம்போலத் தோன்றுகிற