தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்று மூன்றாம் பாகம் - கொலை வாள் > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41- 46 >  நான்காம் பாகம் - மணிமகுடம் > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்  >  முடிவுரை

Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan

மூன்றாம் பாகம் - கொலை வாள்

நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜுரம் தௌிந்தது
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம்
நாற்பத்துநான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்


நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
மதுராந்தகன் நன்றி

முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான்.

"ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!"

அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி விட்டு, "இளவரசே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் கால்களுக்கு என்ன நேரிட்டது?" என்று கவலையுடன் கேட்டார்.

"என் கால்கள் முறிந்தே போய்விட்டன; நடக்க முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை!"

முதன் மந்திரி திரும்பிப் பார்த்து, "அடே! பல்லக்கை இவ்விடம் கொண்டுவாருங்கள்!" என்று தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.

பின்னர், "ஐயா! இந்த விபத்து எப்படி நேர்ந்தது? தாங்கள் மழையில் தனியாகக் கிடக்கும் காரணம் என்ன? தங்களோடு வந்த பரிவாரங்கள் எங்கே? தங்களை இவ்விதம் விட்டு விட்டு அவர்கள் எப்படிப் போகத் துணிந்தார்கள்! அவர்களுக்கு என்ன தண்டனை விதித்தாலும் போதாதே?" என்றார்.

"முதன் மந்திரி! யாரையும் தண்டிக்க வேண்டாம்! யார் பேரிலும் குற்றம் இல்லை. மாலை நேரத்தில் குதிரைமேல் ஏறிக்கொண்டு நான்தான் தனியாகக் கிளம்பினேன். நதிக்கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பெரிய மின்னல் மின்னி இடி இடித்தது. குதிரை மிரண்டு ஓடியது. நான் இந்த மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விட்டேன். குதிரை எங்கேயோ போய் விட்டது. விழுந்த வேகத்தில் கால் முறிந்து விட்டதோ அல்லது சுளுக்கிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை. எழுந்து நிற்கவும் முடியவில்லை, நல்ல வேளையாகத் தாங்கள் இச்சமயம் இங்கு வந்தீர்கள்!"

"ஏதோ தங்களுடைய தந்தை, மகானாகிய கண்டராதித்த தேவர் செய்த புண்ணியந்தான், இந்த மட்டும் நான் இங்கே வரும்படி நேர்ந்தது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருங்கள். பல்லக்கில் தங்களை ஏற்றி விடுகிறேன். மற்ற விவரங்கள் எல்லாம், நாதன்கோவிலில் அடியேனின் இல்லத்துக்குப் போன பிறகு கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்றார் அநிருத்தர்.

பல்லக்கு அருகில் கொண்டு வந்து இறக்கப்பட்டதும், முதன் மந்திரி இளவரசரை மெதுவாகப் பிடித்துத் தூக்கி பல்லக்கினுள் கிடத்தினார்.

ஆட்களிடம், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு மெள்ள, மெள்ள அசங்காமல் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். தாமும் பல்லக்கின் அருகிலேயே தொடர்ந்தாற்போல் நடந்து சென்றார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் நாதன்கோவில் என்று வழங்கிய சுந்தர சோழ விண்ணகரத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த ஊர்ப்பெருமாள் கோயிலுக்கு அருகில் முதன் மந்திரி அநிருத்தரின் மாளிகை ஒன்று இருந்தது. அதற்குள் இளவரசர் மதுராந்தகரைத் தூக்கிச் சென்று அங்கிருந்த கட்டிலில் கிடத்தினார்கள்.

விளக்கு வௌிச்சம் கொண்டுவரச் சொல்லிப் பார்த்ததில் கால் முறியவில்லையென்றும் வெறும் சுளுக்குத்தான் என்றும் தெரிந்தது.

இளவரசர் கொண்டிருந்த பீதியும் சிறிது தௌிந்தது.

பெருமாள் கோவிலிருந்து வந்த பிரசாதங்களை, இருவரும் அருந்தினார்கள்.

பின்னர் முதன் மந்திரி, "இளவரசே! இனி இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்! பொழுது விடிந்ததும் தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யலாம். நான் தஞ்சைக்குத்தான் போகிறேன். என்னுடன் வருவதாயிருந்தால், தங்களைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்!" என்றார்.

"ஐயா! தாங்கள் எனக்கு எவ்வளவோ தீங்கு செய்திருக்கிறீர்கள். அதற்கெல்லாம் பரிகாரம் இன்று செய்து விட்டீர்கள். இன்று எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். அதற்கு எப்போதும் நன்றி செலுத்துவேன்.ஒருவேளை இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நான் அமரும்படி நேர்ந்தால் தங்களையே முதன் மந்திரியாக வைத்துக்கொள்வேன்!" என்றான் மதுராந்தகன்.

அநிருத்தர் அதிசயக்கடலில் முழுகிப் போனதாகப் பாவனை செய்து, "இளவரசே! சோழகுலத்துக்கு நான் கடமைப்பட்டவன். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்வதும் இயன்ற உதவி செய்வதும் என் கடமை. ஆகையால் தாங்கள் தனிப்பட எனக்கு நன்றி செலுத்த அவசியமில்லை. ஆனால் தங்களுக்கு நான் ஏதோ தீங்கு செய்திருப்பதாகச் சொன்னீர்களே அதுதான் எனக்கு விளங்கவில்லை. நான் தங்களுக்கு மனமறிந்து எந்தத் தீங்கும் செய்ததாக ஞாபகமில்லை. தாங்கள் சற்றுப் பெரிய மனது செய்து தெரியப்படுத்தினால் அதற்குப் பிராயச்சித்தம் என்ன உண்டோ அதைச் செய்து விடலாம்!" என்றார்.

"ஐயா அநிருத்தரே! தாங்கள் மகா கெட்டிக்காரர், அறிவாளி, இராஜதந்திர நிபுணர் என்பதெல்லாம் உலகமறிந்த விஷயம். ஆனால் தங்கள் கெட்டிக்காரத்தனத்தை என்னிடம் காட்ட வேண்டாம். தாங்கள் எனக்குச் செய்திருக்கும் தீங்கு எவ்வளவு கொடுமையானது என்பது எனக்குத் தெரியாது என்றும் எண்ண வேண்டாம். ஆனாலும் இன்று தாங்கள் எனக்குச் செய்த உதவியை முன்னிட்டு அதையெல்லாம் மறந்து விடப்போகிறேன். என்னுடைய நன்றியைத் தங்களுக்கு எந்த விதத்தில் தெரியப்படுத்தலாம் என்று சொல்லுங்கள். ஏதாவது பிரதி உபகாரம் செய்யக் கூடியது இருந்தால் கூறுங்கள்."

அநிருத்தர் புன்னகை புரிந்து, "ஆம், இளவரசே! தாங்கள் நன்றி செலுத்த வழி ஒன்று இருக்கிறது. தங்களிடம் இந்தக் கிழவன் கோர வேண்டிய வரம் ஒன்றும் இருக்கிறது. இனி இம்மாதிரி குதிரை ஏறித் தனிவழியே கிளம்ப வேண்டம். முன்னும் பின்னும் பரிவாரங்கள் சூழ ரதத்தில் பிரயாணம் செய்யுங்கள். அதைவிடப் பல்லக்கில் பிரயாணம் செய்வது நலம். காலம் கெட்டிருக்கிறது. பல காரணங்களினால் மக்கள் மனக்கொதிப்பு அடைந்திருக்கிறார்கள். இன்றைக்குப் பழையாறையில் பார்த்தீர்களே! ஆகையால் திறந்த பல்லக்கில் பிரயாணம் செய்வதைக் காட்டிலும், மூடு பல்லக்கில் பிரயாணம் செய்வது நல்லது. பழுவூர் இளைய ராணியின் பல்லக்காக இருந்தால் ரொம்ப விசேஷமாயிருக்கும். யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள்!" என்றார்.

மதுராந்தகன் அசந்து போனான். அவன் முகத்தில் மறுபடியும் பயத்தின் அறிகுறி காணப்பட்டது. சற்றுப் பொறுத்துச் சமாளித்துக் கொண்டு, "முதன் மந்திரி! என்ன வார்த்தை சொன்னீர்! பழுவூர் இளையராணியின் மூடு பல்லக்கில் என்னைப் பிரயாணம் செய்யச் சொல்வதின் கருத்து என்ன? என்னை அவமானப்படுத்துவது உமது நோக்கமா?...." என்றான்.

"இளவரசே! பழுவூர் ராணியின் பல்லக்கில் பிரயாணம் செய்வதைத் தாங்கள் அவமானமாகக் கருதுவதை நான் அறியேன். எப்போதிருந்து இந்த எண்ணம் தங்களுக்கு உண்டாயிற்று? முன்னேயெல்லாம் அடிக்கடி தாங்கள் அவ்விதம் போய்க்கொண்டிருப்பது வழக்கமாயிருந்ததே? கடைசியாக, கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குப் போய்த் திரும்பிய பிறகு இந்த நல்ல முடிவுக்குத் தாங்கள் வந்திருக்க வேண்டும்..."

மதுராந்தகன் மேலும் திகில் கொண்டான். அவன் முகத்தில் பயப்பிராந்தியின் சாயல் பரவிற்று.

"முதலாவது மந்திரி! கடம்பூர் மாளிகைக்கு நான்....நான்...." என்று தடுமாற்றத்துடன் ஏதோ சொல்வதற்கு ஆரம்பித்தான்.

"இளவரசே! கடம்பூர் மாளிகைக்குத் தாங்கள் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று தனாதிகாரி பெரிய பழுவேட்டரையருடன் போயிருந்தீர்கள் அல்லவா? அதைத் தான் சொல்கிறேன். அப்போது தாங்கள் இளைய ராணியின் பல்லக்கிலே போய்விட்டுத் திரும்பினீர்கள். அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான்.பல்லக்குப் பிரயாணம் என்னைப் போன்ற கிழவர்களுக்கு உகந்தது. உங்களை போன்ற இளைஞர்கள் யானைமீதோ, குதிரைமீதோ பிரயாணம் செய்வதுதான் உசிதம். ஆனால் குதிரைப் பிரயாணத்துக்குத் தகுந்த பயிற்சி வேண்டும். தங்களுக்கு உடம்பு சரியானதும் நானே அதற்கு வேண்டிய ஏற்படு செய்கிறேன்..."

"அன்பில் அநிருத்தரே! ஜாக்கிரதை! மேலும் மேலும் என்னை அவமானப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்கிறீர். இன்றைக்கு ஏதோ இந்த அசந்தர்ப்பம் நேரிட்டு விட்டபடியால் எனக்குக் குதிரை ஏற்றமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டீர். ஏதோ ஒரு சமயம் பல்லக்கில் சென்றபடியால் எப்போதும் பழுவூர் ராணியின் மூடு பல்லக்கில் நான் போவதாகச் சொல்லுகிறீர். உம்முடைய பிராயத்தையும் இன்றைக்கு நீ எனக்குச் செய்த உதவியையும் நினைத்துப் பொறுத்தேன்..."

"இளவரசே! தங்களுடைய பொறுமை எனக்கு மிக மகிழ்ச்சி தருகிறது. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது முதுமொழி. தமிழகத்தின் மாபெரும் புலவர் என்ன கூறுகிறார்?

	அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை 

	இகழ்வார்ப் பொறுத்தல் தலை' 

நிலம் தன்னைத் தோண்டுகிறவர்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்வது மட்டுமா? தோண்டுகிறவர்களுக்குத் தூய தண்ணீரையும் அளித்து உதவுகிறது. பூமிக்கு உள்ள இந்தக் குணம் பூமியை ஆள நினைப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். என்னைப் போன்ற கிழவன் ஏதாவது அனுசிதமாகச் சொன்னாலும் பூமி ஆள விரும்பும் தாங்கள், பொறுத்துக் கொள்ளுவது தான் உசிதம்."

"ஐயா! என்ன சொல்லுகிறீர்! நான் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்புவதாகக் குற்றம் சாட்டுகிறீரா?" என்று கேட்டான் மதுராந்தகன். அவனுடைய உதடுகள் துடித்தன; புருவங்கள் நெறித்தன. பயம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறி வந்ததென்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.

ஆனால் முதலாவது மந்திரியோ சிறிதும் பதட்டமில்லாமல், "இளவரசே! குற்றம் சாட்டுகிறேன் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்பினால், அது எப்படிக் குற்றமாகும்? வீராதி வீரரான விஜயாலய சோழரின் குலத்தில் உதித்தவர் தாங்கள். மகானாகிய சிவஞான கண்டராதித்தரின் திருப்புதல்வர். இந்தச் சோழ சிம்மாசனம் ஏறுவதற்குத் தங்களுக்குப் பூரண உரிமை உண்டு. அதைத் தாங்கள் விரும்புவது குற்றம் எப்படி ஆகும்? அது குற்றம் என்றும், ஆகையால் அதற்காக இரகசியமான சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் யாராவது தங்களுக்கு யோசனை சொன்னால் அதைத் தாங்கள் நம்ப வேண்டாம். இளவரசே! இந்தக் கிழவனுடைய வார்த்தையைக் கொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்கள். தங்களுடைய பெற்றோர்களின் விருப்பம் ஒரு விதமாயிருந்தது. தாங்களும் அதற்கு இணங்கிச் சிவபக்தியில் ஈடுபட்டிருந்தீர்கள். இப்போது தங்கள் மனம் மாறியிருக்கிறது. அதைப் பற்றிக் குற்றம் கூற யாருக்கும் பாத்தியதை இல்லை.தங்களுடைய உரிமையைத் தாங்கள் பகிரங்கமாகக் கோரலாம். சக்கரவர்த்தியிடமே தங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம். அதை விடுத்துக் கேவலம் காலாமுகக் கூட்டத்தாரின் ஆதரவைக் கோருவதற்காக அமாவாசை இருட்டில் தன்னந்தனியாகக் கொள்ளிடக் கரைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. அல்லது சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரியில் திருடர் கூட்டத்தைப் போல் கூட்டம் போட்டுச் சதிப் பேச்சுப் பேச வேண்டிய அவசியமும் இல்லை. இந்த மாதிரியெல்லாம் தங்களுக்கு யோசனை கூறுகிறவர்கள் தங்களுடைய பரம விரோதிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்!"

மதுராந்தகன் பெருங் குழப்பத்துக்கு உள்ளானான். முதன் மந்திரிக்கு இவ்வளவு விஷயங்களும் தெரிந்திருக்கின்றன என்று எண்ணியபோது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அதே சமயத்தில் பீதி ஒரு பக்கமும், பீதி காரணமாக ஆத்திரம் ஒரு பக்கமும் பெருகிக் கொண்டிருந்தன.

"ஐயா தங்களுக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்தது? எந்தத் துரோகி என்னுடன் சிநேகமாயிருப்பது போல் நடித்துக் கொண்டு தங்களிடமும் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறான்?" என்று கேட்டான்.

"தாங்கள் அதை அறிய முயல்வதில் பயனில்லை. இந்தப் பரந்தக் இராஜ்யமெங்கும் எனக்குக் கண்கள் இருக்கின்றன! காதுகளுமிருக்கின்றன! நான் அறியாமல் எதுவும் இந்த நாட்டில் நடைபெற முடியாது...."

"அப்படியானால், சக்கரவர்த்திக்கும் இவையெல்லாம் தெரியுமா?" என்று மதுராந்தகன் கேட்டான்.

"இல்லை; அவருக்குத் தெரியாது, என் கண்களும், காதுகளும் தெரிவிக்கும் எத்தனையோ இரகசியங்கள் என் நெஞ்சகத்தில் பதிந்து கிடக்கின்றன. அவசியமும் அவசரமும் நேர்ந்தால் ஒழிய அவை வௌியில் வரவே வரா...."

"ஆம், ஆம்; தங்களுடைய நெஞ்சகத்தில் எவ்வளவோ பயங்கரமான இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை மட்டும் வௌியில் வந்தால், இந்தச் சோழ சாம்ராஜ்யமே நடு நடுங்கிப் போகாதா?" என்றான் மதுராந்தகன். அவனுடைய குரலில் இப்போது இதற்கு முன் இல்லாத கபடமும், வஞ்சகமும் தொனித்தன.

முதன் மந்திரி அதைக் கவனித்தும் கவனியாதவர் போல் கூறினார்:- "சக்கரவர்த்தி என்னுடைய ஆப்த நண்பர். ஆனால் அவர் அறியாத இரகசியங்களும் என் நெஞ்சில் இருக்கின்றன. சுந்தர சோழர் கொடிய நோய் வாய்ப்பட்டிருக்கிறார். பல காரணங்களினால் அவர் மனம் ஏற்கனவே, புண்ணாகியிருக்கிறது. சிற்றரசர்களின் சதிச் செயலைப் பற்றி அவரிடம் சொல்லி மேலும் அவர் நெஞ்சைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. இளவரசே! தங்களுடைய காரியங்களைப் பற்றிய வரையில் நான் சக்கரவர்த்தியிடம் ஒரு நாளும் சொல்ல மாட்டேன் தாங்கள் நம்பியிருக்கலாம்."

"ஐயா! அன்பில் அநிருத்தரே! இந்தப் பேதை மதுராந்தகன் பேரில் தங்களுக்குத் திடீரென்று இவ்வளவு அபிமானம் தோன்றக் காரணம் என்ன?" என்று மதுராந்தகன் கேட்டு விட்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தான்.

"இளவரசே! தங்களிடம் திடீரென்று எனக்கு அபிமானம் பிறந்துவிடவில்லை. சுந்தர சோழரின் புதல்வர்களைப் போலவே தான் தங்களிடமும் நான் எப்போதும் அபிமானம் வைத்து வந்திருக்கிறேன். அதைக் காட்டிக் கொள்வதற்கு இதற்கு முன்னால் சந்தர்ப்பம் ஏற்படவில்லை...."

"இன்றைக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்தது! நான் குதிரை மேலிருந்து விழுந்து ஒடித்துக் கொண்டதால் ஏற்பட்டது. ஆனாலும் சில நாளைக்கு முன்னாலேயென்றால், என்னை அந்த மரத்தடியிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு வந்திருப்பீர்..."

"நாராயணா; நாராயணா! இது என்ன வார்த்தை, இளவரசே!"

"ஐயா! எனக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ண வேண்டாம். ஏதைச் சொன்னாலும் நம்பக்கூடிய அப்பாவி என்று நினைக்க வேண்டாம். நான் என் தாயாரின் கர்ப்பத்தில் இருந்தபோதே எனக்கு எதிராக நீர் சதி செய்யத் தொடங்கினீர். நான் இந்தப் பூமியில் பிறந்ததும் என்னைக் கொன்று விடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தீர்.... அதோ, உம்முடைய முகத்தில் ஆச்சரியத்தின் அறிகுறியைக் காண்கிறேன். அதெல்லாம் எனக்கு எப்படித் தெரிந்தது என்று வியப்படைகிறீர், இல்லையா? இந்தச் சோழ நாட்டில் பயங்கர இரகசியங்கள் பலவற்றை அறிந்தவர் நீர் ஒருவர்தான் என்று எண்ண வேண்டாம்!"

அநிருத்தரின் முகம் இப்போது உண்மையாகவே அதிசயமான காட்சி அளித்தது. அதில் கணத்துக்கு ஒரு சாயல் தோன்றி மறைந்தது. கடைசியில் வருந்தி வருவித்துக் கொண்ட புன்னகையுடன் முதன் மந்திரி. "ஆம், இளவரசே! நான் அவ்விதம் இறுமாந்திருந்தது உண்மைதான். இன்றைக்குக் கர்வபங்கமாயிற்று. தாங்கள் பிறந்தவுடனே சிசுஹத்தி செய்ய ஏற்பாடு நடந்திருக்கும் பட்சத்தில் தாங்கள் எப்படி பிழைத்தீர்கள்? அந்த இரகசியத்தையும் கூறி விட்டால் கிருதார்த்தனாவேன்!" என்றார்.

"எனக்கு எவ்வளவுதான் தெரியும் என்று சோதிக்கிறீர் போலும்! நல்லது; சொல்கிறேன். சிசுஹத்தி செய்வதற்கு தாங்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் குழந்தை பிறந்ததும் ஆணா பெண்ணா என்று கூடப் பாராமல் அவசரப்பட்டு எடுத்துக் கொண்டு போனார்கள் பெண் குழந்தை என்று தெரிந்ததும் தங்களிடம் வந்து சொன்னார்கள். பிழைத்துப் போகட்டும் என்று அக்குழந்தையைக் கோயில் பட்டர் ஒருவரிடம் ஒப்புவித்து வளர்க்கச் சொன்னீர்கள். பெண் குழந்தை பிறந்த அரை நாழிகை நேரத்தில் நான் பிறந்தேன். அதை நீங்கள் எதிர் பார்க்கவேயில்லை. என்னுடைய ஜாதக பலமும் சரியாயிருந்தது. அதனால் நான் உயிர் பிழைத்தேன். தங்களுடைய திட்டம் தவறிப் போனது பற்றி அறிந்த பிறகும், என்னைச் சிம்மாசனம் ஏறவிடாமல் தடுப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தீர்கள். என்னைச் சிவபக்தனாக, அதாவது பைத்தியக்காரனாக வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்தீர்கள். அதிலும் தவறிப் போனீர்கள். நான் தாங்கள் விரும்பியது போல் அவ்வளவு முழுப் பைத்தியக்காரனாகி விடவில்லை. ஐயா! முதன் மந்திரியே! ஏன் இப்படி ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருக்கிறீர்? இவையெல்லாம் உண்மையில்லை யென்று ஒரேயடியாகச் சாதிப்பது தானே?"

முதன் மந்திரி உண்மையில் ஸ்தம்பித்துப் போய்த்தான் உட்கார்ந்திருந்தார். ஒருவாறு பேசும் சக்தியை வருவித்துக் கொண்டு "இளவரசே! தங்களுக்கு இவ்வளவெல்லாம் விவரங்கள் தெரிந்திருக்கும் போது நான் இல்லையென்று சாதிக்கப் பார்ப்பதில் என்ன பயன்?" என்றார்.

"ஆமாம்; பயனில்லைதான்! என்னிடம் திடீரென்று நீர் பரிவு கொண்டதன் காரணமும் எனக்குத் தெரியும். ஆதித்த கரிகாலனை உமக்குப் பிடிக்காது. அருள்மொழிவர்மனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தின் ஏற்றி வைக்க எண்ணியிருந்தீர். அவனைக் கடல் கொண்டு விட்டதனால் இப்போது என்னிடம் பரிவு கொண்டிருக்கிறீர்! ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன். முன்னர் நீர் எனக்குச் செய்த தீங்குகளையெல்லாம் மறந்துவிடப் போகிறேன். இன்று நீர் எனக்குச் செய்த உதவிக்கு நன்றியும் செலுத்துவேன். இன்று முதலாவது நீர் என் கட்சியில் இருப்பதாகச் சொல்லும் பட்சத்தில் நான் சிம்மாசனம் ஏறியதும் உம்மையே முதன் மந்திரியாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன்!" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் என்னைப் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன!" என்றார் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்.

பக்க தலைப்பு



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
சுரம் தௌிந்தது

நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷூவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷூக்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.

இடையிடையே எப்போதாவது சுயநினைவு தோன்றிய போது, தான் இருக்குமிடத்தைப் பற்றி அவன் எண்ணிப் பார்க்க முயன்றான். அவனுக்கு எதிரில் சுவரில் எழுதியிருந்த சித்திரக்காட்சி அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அந்தச் சித்திரத்தில் தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் காணப்பட்டார்கள். அவர்களில் சிலர் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெண்சாமரங்களையும், வெண்கொற்ற குடைகளையும் ஏந்திக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் கரங்களில் பல வர்ணமலர்கள் உள்ள தட்டுக்களை ஏந்திக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி தத்ரூபமாக இருந்தது. தேவர்களின் உருவங்கள் எல்லாம் உயிர் உள்ள உருவங்களாகத் தோன்றின. அடிக்கடி அக்காட்சிகளைப் பார்த்த பிறகு பொன்னியின் செல்வன் வானவரின் நாட்டுக்குத் தான் வந்து விட்டதாகவே எண்ணினான். அந்தத் தேவ யட்ச கின்னரர்கள் எல்லாரும் தன்னை வரவேற்க வருவதாகவும் எண்ணினான். சொர்க்க லோகத்துக்குத் தான் வந்து சேர்ந்தது எப்படி என்று யோசித்தான். அடர்த்தியான தாழைப் புதர்களும், அத்தாழைப் புதர்களில் பூத்திருந்த தங்கநிறத் தாழம்பூக்களும் இருபுறமும் நிறைந்திருந்த ஓடையின் வழியாக வான நாட்டுக்குத் தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஓடை வழி நினைவு வந்த போது தாழம்பூக்களிலிருந்து வந்த நறுமணத்தையும் அவன் நுகர்வதாகத் தோன்றியது. ஓடையில் ஒரு படகில் ஏற்றித் தன்னை ஒரு தேவகுமாரனும் தேவகுமாரியும் அழைத்து வந்ததும் இலேசாக நினைவு வந்தது. தேவகுமாரன் சிவபக்தன் போலிருக்கிறது. இனிமையான தேவாரப்பாடல்களை அவன் அடிக்கடி பாடினான். தேவகுமாரி என்ன செய்தாள்? அவள் பாடவில்லை. அவள் அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே கூறினாள். அதுவே தேவகானம் போலிருந்தது. ஆர்வமும் அன்பும் நிறைந்த கண்களால் தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்விருவரும் இப்போது எங்கே?

வானவர் நாட்டில் தேவர்கள் யக்ஷர்கள், கின்னரர்களைத் தவிர புத்த பிக்ஷூக்களுக்கும் முக்கியமான இடம் உண்டு போலும்! அவர்கள்தான் தேவலோகத்து அமுத கலசத்தைப் பாதுகாக்கிறவர்கள் போலும்! அடிக்கடி புத்த பிக்ஷூ ஒருவர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய வாயில் சிறிது அமுதத்தை ஊற்றி விட்டுப் போகிறார். தேவலோகத்தில் மற்ற வசதிகள் எவ்வளவு இருந்தாலும், தாகம் மட்டும் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இந்தப் புத்த பிக்ஷூ தன் வாயில் அமுதத்தை ஊற்றிவிட்டுப் போகக் கூடாதோ? தேவலோகத்தில் கூட ஏன் இந்தத் தரித்திர புத்தி!

ஒருவேளை அமுதத்தை ஒரேயடியாக அதிகமாய் அருந்தக் கூடாது போலும்! இது அமுதமா? அல்லது ஒரு வேளை ஏதேனும் மதுபானமா? - சீச்சீ! பிக்ஷூக்கள் கேவலம் மதுவைக் கையினாலும் தொடுவார்களா? தன் வாயிலேதான் கொண்டு வந்து ஊற்றுவார்களா? இல்லையென்றால், ஏன் இப்படித் தனக்கு மயக்கம் வருகிறது? அமுத பானம் செய்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஏன் நினைவு குன்றுகிறது?...

மூன்று தினங்கள் இவ்வாறு பொன்னியின் செல்வன் வானவர் உலகத்திலும் நினைவேயில்லாத சூனிய உலகத்திலும் மாறி மாறிக் காலம் கழித்த பிறகு, நாலாம் நாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது போல எழுந்து, பூரண சுய நினைவு பெற்றான். உடம்பு பலவீனமாய்த் தானிருந்தது; ஆனால் உள்ளம் தௌிவாக இருந்தது. எதிரே சுவரில் இருந்த உருவங்கள் சித்திர உருவங்கள் என்பதை அறிந்தான். அந்தத் தேவ யக்ஷ கின்னரர்கள் தன்னை வரவேற்பதற்காக அங்கே நிற்கவில்லையென்றும், தேவலோகத்துக்கு விஜயம் செய்த பகவான் புத்தரை வரவேற்கிறார்கள் என்றும் அறிந்தான். மற்றொரு சுவரில் மேகங்கள் சூழ்ந்த வானவௌியில் புத்த பகவான் ஏறிவருவது போன்ற சித்திரம் எழுதியிருந்ததையும் கண்டான். புத்த விஹாரம் ஒன்றில் தான் படுத்திருப்பதை அறிந்து கொண்டான். எங்கே, எந்தப் புத்த விஹாரத்தில் என்று சிந்தித்த போது, இலங்கையிலிருந்து தான் பிரயாணம் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. வந்தியத்தேவனும் தானும் அலைமோதிய கடலில் அலைப் புண்டு அலைப்புண்டு கை சளைத்துப் போனது வரையில் ஞாபகம் வந்தது. அப்புறம் ஒரே குழப்பமாக இருந்தது.

அச்சமயம் புத்த பிக்ஷூ ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். வழக்கம்போல் கையில் அமிர்த கிண்ணத்துடன் வந்தார்! இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷூ அவனை உற்றுப் பார்த்தார்! இளவரசன் கையை நீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது தேவலோகத்து அமுதம் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டான். மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷூவை நோக்கி, "சுவாமி! இது என்ன இடம்? தாங்கள் யார்? எத்தனை நாளாக நான் இங்கே இப்படிப் படுத்திருக்கிறேன்?" என்று கேட்டான்.

பிக்ஷூ அதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லாமல் திரும்பிச் சென்றார். அடுத்த அறைக்கு அவர் சென்று, "ஆச்சாரியாரே! சுரம் நன்றாய்த் தௌிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது!" என்று கூறியது இளவரசன் காதில் விழுந்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் வயது முதிர்ந்த பிக்ஷூ ஒருவர் பொன்னியின் செல்வன் இருந்த அறைக்குள் வந்தார். கட்டிலின் அருகில் வந்து அவரும் இளவரசனை உற்றுப் பார்த்தார். பிறகு மலர்ந்த முகத்துடன், "பொன்னியின் செல்வ! தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான தாபஜ் சுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்து வைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள்!" என்றார்.

"நானும் பாக்கியசாலிதான், இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். எப்போதோ ஒருசமயம் இந்த நகரின் துறைமுகத்துக்குப் போகும் போது வௌியிலிருந்து பார்த்திருக்கிறேன்.தெய்வாதீனமாக இங்கேயே நான் வந்து தங்கியிருக்கும்படி நேர்ந்தது. சுவாமி எப்படி நான் இங்கு வந்து சேர்ந்தேன்? சொல்ல முடியுமா?" என்று அருள்மொழி வர்மன் கேட்டான்.

"இளவரசே! முதலில் தங்களுடைய கையில் உள்ள மருந்தைச் சாப்பிடுங்கள் எனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுகிறேன்" என்றார் பிக்ஷூ.

இளவரசன் மருந்தைச் சாப்பிட்டு விட்டு, "ஐயா! இது மருந்து அல்ல; தேவாமிர்தம். என் விஷத்தில் தாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்துச் சிகிச்சை செய்வித்திருக்கிறீர்கள். ஆனால் இதற்காகத் தங்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை" என்றான்.

ஆச்சாரிய பிக்ஷூ புன்னகை புரிந்து, "இளவரசே தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வது பரமோத்தம தர்மம் என்று புத்த பகவான் அருளியிருக்கிறார்.நோய்ப்பட்ட பிராணிகளுக்குக் கூடச் சிகிச்சை செய்யும்படி புத்த தர்மம் கட்டளையிடுகிறது. தங்களுக்குச் சிகிச்சை செய்ததில் அதிக விசேஷம் ஒன்றுமில்லை. சோழகுலத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். தங்கள் தந்தையார் சுந்தர சோழ சக்கரவர்த்தியும், தங்கள் திருத்தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கை அநுராத புரத்தில் புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கட்ட நீங்கள் ஏற்பாடு செய்ததும் எங்களுக்குத் தெரிந்ததே. அப்படியிருக்கும் போது, நாங்கள் செய்த இந்தச் சிறிய உதவிக்காகத் தங்களிடம் நன்றி எதிர்பார்க்கவில்லை...."

"ஆச்சாரியரே! நன்றி செலுத்துவது பற்றி அந்த முறையில் நான் கூறவில்லை. எனக்கு எப்பேர்ப்பட்ட கடும் சுரம் வந்திருக்க வேண்டும், என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இலங்கையில் இந்த சுரத்தினால் பீடிக்கப்பட்டவர்களின் கதியை நான் பார்த்திருக்கிறேன். நியாயமாக இதற்குள் நான் வானவர் உலகத்துக்குப் போயிருக்க வேண்டும். அங்கே தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் என்னை வரவேற்று உபசரித்திருக்கக்கூடும் அல்லவா? இன்று தேவர் - தேவியர்களுக்கு மத்தியில் உண்மையாகவே அமிர்த பானம் செய்து கொண்டு ஆனந்த மயமாய் இருப்பேன் அல்லவா? அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள்! வானுலகத்தில் வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றி செலுத்தப் போவதில்லை என்று கூறினேன்!"

ஆச்சாரிய பிக்ஷூவின் முகம் ஆனந்தப் பூரிப்பினால் மலர்ந்தது.

"பொன்னியின் செல்வ! தாங்கள் வானுலகத்துக்குப் போக வேண்டிய காலம் வரும்போது தேவேந்திரனும் பிற தேவர்களும் விமானங்களில் வந்து தேவ துந்துபிகள் முழங்க மலர்மாரி பொழிந்து தங்களை அழைத்துச் செல்வார்கள். ஆனால் அந்தக் காலம் இன்னும் நெடுந் தூரத்தில் இருக்கிறது. இந்த மண்ணுலகில் தாங்கள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன! அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும்?" என்றார்.

இது காறும் சாய்ந்து படுத்திருந்த பொன்னியின் செல்வன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய திருமுகத்தில் அபூர்வமான களை பொலிந்தது. அவனுடைய விசாலமான நயனங்களிலிருந்து மின் வெட்டுப் போன்ற ஒளிக் கிரணங்கள் அலை அலையாகக் கிளம்பி அந்த அறையையே ஜோதி மயமாகச் செய்தன.

"ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தை ஒரு சமயம் வௌியிலிருந்து பார்த்தேன். அநுராத புரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன். அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். அநுராத புரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளை இந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களை அம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்து விட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே! இந்தச் சோழ நன்னாட்டில் புத்த ஸ்தூபங்களும், சிவாலயங்களில் கோபுரங்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மேக மண்டலத்தை எட்டப் போகின்றன. ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ் நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்...."

இவ்வாறு ஆவேசம் கொண்டவன்போல் பேசி வந்த இளவரசன் உடலில் போதிய பலமில்லாமையால் கட்டிலில் சாய்ந்தான். உடனே ஆச்சாரிய பிக்ஷூ அவனுடைய தோள்களைப் பிடித்துக் கொண்டு, கட்டிலில் தலை அடிபடாமல் மெள்ள மெள்ள அவனைப் படுக்க வைத்தார். நெற்றியில் கையினால் தடவிக் கொடுத்து, "இளவரசே! தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள். முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள்!" என்றார்.

பக்க தலைப்பு



நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
நந்தி மண்டபம்

மறுநாள் பிற்பகல் மீண்டும் பெரிய பிக்ஷூ பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு வந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்பதற்கு இளவரசன் துடித்துக் கொண்டிருந்தான். சின்ன பிக்ஷூவிடம் அவன் கேள்வி கேட்டு விவரம் அறிந்து கொள்ளச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. "ஐயா! எல்லாம் குருதேவர் தெரிவிப்பார்" என்று ஒரேவித மறுமொழிதான் திரும்பத் திரும்ப வந்தது.

குருதேவர் வந்ததும், "இளவரசே! இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

"ஐயா உடம்பு என்னை மிகவும் தொந்தரவு படுத்துகிறது. 'எதற்காக சோம்பிப் படுத்திருக்கிறாய்? எழுந்து ஓடு! குதிரை மேல் ஏறு! நதியில் குதித்து நீந்து! யானையுடன் சண்டைபோடு! வெறுமனே படுத்திராதே!' என்கிறது. வயிறும் வெகு சுறுசுறுப்பாயிருக்கிறது. சின்ன பிக்ஷூ கொண்டு வந்து கொடுத்த உணவெல்லாம் போதவில்லை. ஆச்சாரியரே! இத்தனை நாள் நான் கடும் சுரம் நீடித்து நினைவு தவறியிருந்தேன் என்பதையே நம்ப முடியவில்லை. தங்களுடைய மருந்து அவ்வளவு அற்புதமான வேலை செய்திருக்கிறது!" என்று சொன்னான் பொன்னியின் செல்வன்.

"ஐயா! உடம்பின் பேச்சை ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. சுரம் தௌிந்ததும் அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் அசட்டையாயிருந்தது, இரண்டாந் தடவை சுரம் வந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாகப் போய்விடும்!"

"குருதேவரே! என்னுடைய உயிருக்கு வரக்கூடிய ஆபத்தைப் பற்றி நான் அவ்வளவாகப் பயப்படவில்லை...."

"தாங்கள் கவலைப்படவில்லை; சரிதான்! ஆனால் இந்தச் சோழ நாட்டில் உள்ள கோடி மக்கள் சென்ற நாலைந்து தினங்களாக எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா? நாடு நகரங்களெல்லாம் அல்லோலகல்லோலப் படுகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் முதலாவது வயோதிகர்கள் வரையில் கண்ணீர் விடுகிறார்கள்...."

"ஐயா! தாங்கள் சொல்லுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஜனங்கள் எதற்காக அவ்வளவு வருத்தப்பட வேண்டும்? ஒருவேளை நான் இந்தச் சுரம் குணமாகிப் பிழைக்க மாட்டேன் என்ற எண்ணத்தினாலா? சூடாமணி விஹாரத்தில் தாங்கள் எனக்குச் சிகிச்சை செய்து வருகிறீர்கள் என்று தெரிந்திருக்கும் போது ஜனங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?"

"இளவரசே! தங்களுக்குச் சுரம் என்பதும், தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதும் ஜனங்களுக்குத் தெரியாது. இந்த நகரத்தின் மாந்தர்களுக்கு அது தெரிந்திருந்தால், இந்த விஹாரத்தில் இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்குமா? மதில் சுவர்களையெல்லாம் இடித்துத் தகர்த்துக்கொண்டு அத்தனை ஜனங்களும் தங்களைப் பார்க்க இங்கு வந்திருக்க மாட்டார்களா? அன்று காலையில் தாங்கள் கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்தி வந்தபோது இந்த நகரின் மாந்தர் எழுப்பிய ஓலத்தையும் பிரலாபத்தையும் தாங்கள் கேட்டிருந்தால்.... ஏன் இந்த விஹாரத்துக்குள்ளேயே அன்று காலை கண்ணீர்விட்டுக் கதறாதவர் யாரும் இல்லையே?"

பொன்னியின் செல்வன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, "குருதேவரே! இது என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? நான் கடலில் முழுகிவிட்டதாகச் செய்தி வந்ததா? எப்போது வந்தது? யார் அத்தகைய பயங்கரச் செய்தியைக் கொண்டு வந்தது? எதற்காக?" என்று கேட்டான்.

"யார் கொண்டு வந்தார்களோ, தெரியாது! ஒருநாள் காலையில் அந்தச் செய்தி இந்த நகரமெங்கும் பரவிவிட்டது. தங்களை இலங்கையிலிருந்து கோடிக் கரைக்கு ஏற்றி வந்த கப்பல் சுழல் காற்றில் அகப்பட்டு மூழ்கி விட்டதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். கோடிக்கரையோரமாக தனாதிகாரி பழுவேட்டரையர் தங்களை எவ்வளவோ தேடியும் தங்கள் உடல்கூட அகப்படவில்லையென்றும், ஆகையால் கடலில் முழுகிப் போயிருக்க வேண்டும் என்றும் பராபரியாகச் செய்தி பரவிவிட்டது. அதைக் கேட்டு விட்டு நான்கூட இந்த விஹாரத்தின் வாசலில் நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு பிக்ஷூ வந்து, நோயாளியை ஏற்றிக் கொண்டு ஒரு படகு விஹாரத்தின் பின்புறத்துக் கால்வாயில் வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனே வந்து பார்த்த போது படகில் உள்ள நோயாளி தாங்கள்தான் என்பதைக் கண்டேன் பிறகு மூன்று நாட்களாகச் சிகிச்சை செய்து வந்தோம். நேற்றுத்தான் தங்களுக்கு நினைவு வந்தது."

"ஆச்சாரியரே! என்னைப் படகில் ஏற்றிக்கொண்டு வந்தது யார்? சொல்ல முடியுமா?"

"ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் படகு தள்ளிக்கொண்டு வந்தார்கள்."

"ஆம், ஆம்; எனக்குக்கூட கனவில் கண்டது போல் நினைவுக்கு வருகிறது. அந்த இளைஞனும் யுவதியும் யார் என்று தெரியுமா? இளைஞன் வாணர் குலத்து வந்தியத்தேவனா?"

"இல்லை, ஐயா! அவன் பெயர் சேந்தன் அமுதன் என்று சொன்னான். சிவ பக்தி மிக்கவன் என்று தோன்றியது. பெண்ணின் பெயரை நான் அறிந்து கொள்ளவில்லை. தேக திடமும் மனோவலியும் வாய்ந்தவள்..."

"அவன் யார் என்று நான் ஊகிக்க முடியும். ஓடக்காரப் பூங்குழலி; தியாக விடங்கரின் மகள். அவர்கள் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று சொல்லவில்லையா?"

"இல்லை! இளவரசே! நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை."

"நான் இங்குப் பத்திரமாயிருக்கிறேன் என்று தாங்கள் யாருக்கும் தெரியப்படுத்த வில்லையா?"

"இல்லை, ஐயா! யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தங்களை அழைத்து வந்தவர்கள் சொன்னார்கள். தங்கள் உடல் நிலையை முன்னிட்டுச் சொல்லாமலிருப்பதே நல்லது என்று நானும் எண்ணினேன்."

"ஆச்சாரியரே! இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. என்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி என் தந்தை மும்முடிச்சோழ மகாராஜா கட்டளையிட்டிருந்தார். அதற்கிணங்கவே நான் இலங்கையிலிருந்து புறப்பட்டேன். நடுவில் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு விரோதமாக நான் நடந்தேன் என்று குற்றம் சாட்டுவதற்காக இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதாகவும் தோன்றுகிறது. நான் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள். குருதேவரே! என்னைத் தாங்கள் இந்தச் சூடாமணி விஹாரத்தில் ஏற்றுக்கொண்டதே இராஜத் துரோகமான காரியம். மேலும் வைத்திருப்பது பெருங்குற்றமாகும். உடனே என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுங்கள்...."

"இளவரசே! தங்களுக்கு இடங் கொடுத்ததற்காக எனக்கு இராஜ தண்டனை கிடைப்பதாயிருந்தால் அதைக் குதூகலத்துடன் வரவேற்பன். அதன் பொருட்டு இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்தை இடித்துத் தள்ளி மண்ணோடு மண்ணாக்கி விடுவதாயிருந்தாலும் பாதகம் இல்லை..."

"தங்களுடைய பரிவைக் குறித்து மகிழ்கிறேன், குருதேவரே! ஆனாலும், என்னைக் கொண்டு வந்தவர்களிடம் ஒன்றும் விசாரியாமல் எப்படி என்னை ஏற்றுக் கொண்டீர்கள்?"

"விசாரிப்பதற்கு அவசியம் என்ன? கடும் சுரத்தோடு வந்த தங்களை வரவேற்றுச் சிகிச்சை செய்வதைக் காட்டிலும் என்னைப் போன்ற பிக்ஷூக்களுக்கு வேறு என்ன உயர்ந்த கடமை இருக்க முடியும்? மேலும் தங்களுடைய திருத்தமக்கையார், குந்தவை தேவியார், தாங்கள் இங்கு வந்து சிலநாள் தங்கக்கூடும் என்று முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்."

"ஓ! அப்படியா! இளைய பிராட்டியா அவ்விதம் சொல்லி அனுப்பியிருந்தார்? எப்போது?"

"தாங்கள் இங்கு வருவதற்கு சில நாளைக்கு முன்பு தங்களைக் கொண்டு வந்த சேந்தன் அமுதனும், 'இளைய பிராட்டியின் விருப்பம்' என்றுதான் கூறினான்."

"குருதேவா! என்னை அழைத்து வந்தவர்கள் இருவரும் உடனே திரும்பி போய்விட்டார்களா? அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? அவர்களைப் பார்த்தாவது, சில விவரங்கள் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்."

"ஐயா! பதட்டம் வேண்டாம். அவர்கள் இருவரும் இந்த நரகத்திலேதான் இருக்கிறார்கள். தினம் ஒருமுறை வந்து தங்கள் உடல் நிலையைப் பற்றி விசாரித்துப் போகிறார்கள். இன்றைக்கு ஏனோ இதுவரையில் வரக் காணோம்...."

அச்சமயத்தில் சின்ன பிக்ஷூ வந்து குருதேவரைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார். ஆச்சாரிய பிக்ஷூ, "இதோ வந்து விட்டேன், ஐயா!" என்று கூறிவிட்டு வௌியே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பி வந்தபோது இளவரசன் அருள்மொழிவர்மனுடைய பரபரப்பு மேலும் அதிகமாகியிருப்பதைக் கண்டார்.

"ஆச்சாரியரே! இனி ஒரு கணமும் நான் இங்கே தங்கியிருக்க முடியாது. சக்கரவர்த்தியின் கட்டளையை மீறி நான் இங்கே வந்து ஒளிந்திருந்தேன் என்ற பழியை ஏற்க நான் விரும்பவில்லை. என்னால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கு எந்த விதமான தீங்கு நேரிடுவதையும் விரும்பவில்லை" என்றான் இளவரசன்.

பெரிய பிக்ஷூ மலர்ந்த முகத்துடன், "உண்மையில் அத்தகைய பெரும் பொறுப்பை நானும் இனி வகிக்க முடியாது. தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக ஒரு கணமும் தங்களை நான் இங்கு வைத்திருக்க விரும்பவில்லை இந்தக் கணமே தாங்கள் புறப்படலாம். கால்வாயில் படகு ஆயத்தமாய்க் காத்திருக்கிறது!" என்றார்.

"எங்கே போவதற்கு?"

"அது தாங்கள் தீர்மானிக்க வேண்டிய காரியம். தங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்த இருவரும் படகுடன் தங்களை அழைத்துப் போக வந்திருக்கிறார்கள்."

இளவரசன் சிறிது தயங்கினான். ஆச்சாரிய பிக்ஷூவின் முகத்தில் மர்மமான புன்னகை பொலிவதைக் கண்டு, "இதில் இன்னும் ஏதேனும் சூழ்ச்சி இருக்கக்கூடுமோ?" என்று வியந்தான்.

"அவர்கள் இருவருமே திரும்ப வந்திருக்கிறார்களா? எதற்காக என்று சொல்லவில்லையா?"

"சொன்னார்கள். இந்த விஹாரத்திலிருந்து ஒரு நாழிகை தூரத்தில், கால்வாயின் கரையில் நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. அதில் தங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்மணிகள் வந்து காத்திருக்கிறார்களாம்."

இளவரசன் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கினாள். "ஆச்சாரியரே! உடனே படகுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்! இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே" என்றான்.

பிக்ஷூ இளவரசனைக் கையினால் தாங்கிக் கொண்டு கால்வாய்க்கரை வரையில் சென்றார். ஆனால் இளவரசனுடைய நடையில், நாலு நாளைக்கு மேலாகக் கடுஞ்சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததின் அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. ஏறுபோல் நடந்து பொன்னியின் செல்வன் கம்பீரமாக வருவதைக் கண்டு சேந்தன் அமுதன், பூங்குழலி இருவருடைய முகங்களும் மலர்ந்தன.

அருள்மொழிவர்மன் படகில் ஏறி உட்கார்ந்ததும் பிக்ஷூ அவனைப் பார்த்து, "ஐயா! தங்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை இந்தச் சூடாமணி விஹாரத்துப் பிக்ஷூக்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகக் கருதுவோம். தாங்கள் திரும்பவும் இங்கு வந்து ஒருவாரம் தங்கி உடல் வலிவு பெற்றுப் போவது நலம்!" என்றார்.

"குருதேவரே! நான் திரும்பி வருவேன் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இல்லாவிடில் இவ்வாறு மற்ற பிக்ஷூக்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டிருக்க மாட்டேன்! என்றான் இளவரசன்.

படகு நகரத் தொடங்கியதும் சேந்தன், பூங்குழலி இருவரையும் மாறி மாறிப் பார்த்து, "இக்கால்வாயின் வழியாக நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு வந்தபோது நீங்கள் தேவலோகத்தவர்கள் என்றும், சொர்க்கத்துக்கு என்னை அழைத்துப் போகிறீர்கள் என்றும் எண்ணியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள். சந்நியாசி மடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள்! போனால் போகட்டும்; கடலில் நீந்திக் கை சளைத்து நினைவிழந்து போனதிலிருந்து நடந்ததையெல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும். அதற்கு முன்னால், நந்தி மண்டபத்தில் எனக்காகக் காத்திருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்" என்றான் இளவரசன்.

இருவரையும் பார்த்து அருள்மொழிவர்மன் கேட்ட போதிலும், பூங்குழலி வாய் திறக்கவில்லை. சேந்தன் அமுதன்தான் மறுமொழி கூறினான். குந்தவைப் பிராட்டியும் கொடும்பாளூர் இளவரசியும் ஆனைமங்கலத்துக்கு வந்திருப்பதையும், அங்கிருந்த நந்திமண்டபத்துக்கு வந்து காத்திருப்பதையும் தெரிவித்தான். "ஆகா! எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் அந்தப் பெண்ணை எதற்காக இளையபிராட்டி இங்கேயும் அழைத்து வந்திருக்கிறார்?"

சேந்தன் அமுதன், "ஐயா! தமிழ்நாட்டுப் பெண்களிடையே இப்போது ஒரு சுரம் பரவிக் கொண்டிருக்கிறது. புனிதமான சைவ சமயத்தை விட்டுவிட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்து பிக்ஷூணிகள் ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான்.

"அப்படி யார், யார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?"

"கொடும்பாளூர் இளவரசி அவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதோ இந்தப் பெண்ணரசியும் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள்!"

"இரண்டு பேர்தானே, அமுதா! அதனால் சைவ சமயத்துக்கு நஷ்டம் வந்துவிடாது! இலங்கையில் பிக்ஷூணிகள் தவ வாழ்க்கை நடத்தும் மடங்கள் பலவற்றை நான் அறிவேன். வேண்டுமானால் நானே இவர்களை அழைத்துப் போய்ச் சேர்த்து விடுகிறேன்!" என்று பொன்னியின் செல்வன் கூறவும் சேந்தன் அமுதன் நகைத்தான்.

பின்னர் கடலிலிருந்து இளவரசனும், வந்தியத்தேவனும் கரையேறியதிலிருந்து நிகழ்ந்தவற்றையெல்லாம் சேந்தன் அமுதன் தான் அறிந்தவரையில் கூறினான். பொன்னியின் செல்வன் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்ததுடன், தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்த்துக் கொண்டு வந்தான். 'அதோ நந்தி மண்டபம்!" என்று பூங்குழலி கூறியதும், இளவரசன் அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினான்.

பக்க தலைப்பு



நாற்பத்துநான்காம் அத்தியாயம்
நந்தி வளர்ந்தது!

படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்த நந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு 'நந்தி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறை வஸந்த உற்சவத்தின் போது திருநாகைக் காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாயதாட்சி அம்மனும் அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாக அங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை.

படகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகு இளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை.படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.

படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.

சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.

"தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!" என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.

பொன்னியின் செல்வன் "என் உடம்பு மெலிவு இருக்கட்டும், அக்கா! உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது? என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே? இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது? உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன? ஆகா! உன் உள்ளத்தைப் புண்படுத்தி வேதனையளித்த எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில் எனக்கு அவ்வளவு அவசரமான ஓலை அனுப்பியிருக்கமாட்டாய்!" என்றான்.

"ஆம், தம்பி! எத்தனையோ அவசரமான விஷயங்கள் சொல்ல வேண்டும்; கேட்க வேண்டும். இலங்கையின் தங்கச் சிம்மாசனத்தை வேண்டாமென்று தள்ளிய வள்ளலே! இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்!" என்றாள்.

பொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்களில் மேலும் கண்ணீர் ததும்பியது.

இருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, "தம்பி! உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது!" என்றாள்.

"அக்கா! என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப் பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. அந்த ஓலையை ஒருவரிடம் அனுப்பியிருந்தாயே? அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா?"

குந்தவையின் முக சந்திரனை மறைந்திருந்த மேகத்திரை சிறிது அகன்றது. பவள இதழ்கள் முத்துப் பற்கள் தெரியும்படி புன்னகை பூத்து, "தம்பி! அவரைப் பற்றி இப்போது என்ன கவலை? வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!" என்றாள்.

"என்ன அப்படிப் பேசுகிறாய், அக்கா! உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா?"

"இல்லை, இல்லை! நான் ஏன் அதிருப்தி அடைய வேண்டும்? உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்....!"

"அதற்காக அவர் செய்த தந்திர மந்திரங்களையும், கைக்கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது, அவர் எங்கே, அக்கா! நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள்?"

"இவள் எவ்வளவு தைரியசாலி ஆகிவிட்டாள் என்பது உனக்குத் தெரியாது, தம்பி! நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது! அப்போது எவ்வளவு தைரியமாக இருந்தாள் என்பதை நீ பார்த்திருந்தால்...."

"போதும், உன்னுடைய தோழியின் புகழை நிறுத்திக் கொள்! என் நண்பரைப் பற்றிச் சொல்!"

"அவரைப் பற்றி என்ன சொல்வது? அவர் வந்த காரியம் ஆகிவிட்டது. திரும்பி அவருடைய எஜமானன் ஆதித்த கரிகாலனிடம் போய்விட்டார்."

"அப்படியானால், அவர் வாக்குத் தவறிவிட்டார். தாம் காஞ்சிக்குப் போகப் போவதில்லையென்றும், சோழ நாட்டிலேயே இருந்துவிடப் போவதாகவும் கூறினாரே?"

"அது எப்படிச் சாத்தியம்? சோழ நாட்டில் இருந்து அவர் என்ன செய்வது? இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது!"

"சிற்றரசை வைத்துக்கொண்டு அந்த மகாவீரர் என்ன செய்வார், அக்கா?"

"எல்லாச் சிற்றரசர்களும் என்ன செய்கிறார்களோ, அதை அவரும் செய்கிறார்! நீ தான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா?"

இளவரசன் இளநகை புரிந்த வண்ணம், "அக்கா! இலங்கை இராஜ்யம் வேண்டாம் என்று நான் சாட்சிகள் வைத்துக் கொண்டு மறுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் என்மீது குற்றம் சாட்டிச் சிறைப்படுத்திக் கொண்டு வரத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார்...."

"தம்பி! நீ இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கட்டளை பிறந்திருக்காது! நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய்! அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும்?"

"தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக அவ்விதம் நான் நடந்து கொண்டிருக்க வேண்டுமா?"

"பொன்னியின் செல்வா! நீ இலங்கை இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பார்! மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி! கொள்ளிடத்துக்கு வடக்கே ஒரு ராஜ்யமாகவும், தெற்கே ஒரு இராஜ்யமாகவும் பிரித்து விடப் பிரயத்தனம் நடக்கிறது. நீ வந்தால் இது விஷயத்தில் தந்தைக்கு உதவியாயிருப்பாய் என்று அவருக்கு நம்பிக்கை. முன்னால் உனக்குச் சொல்லி அனுப்பி நீ வராதபடியால் இப்போது சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னார். இலங்கை இராஜ்யத்தை நீ மறுத்துவிட்டாய் என்பது சக்கரவர்த்திக்கு நன்றாய்த் தெரியும்."

"இராஜ்யத்தைப் பிரிப்பதற்கு நான் ஒருநாளும் உதவியாயிருக்க மாட்டேன். அதைப்போல் பெரிய குற்றம் வேறொன்றுமில்லை. அதைவிடச் சித்தப்பா மதுராந்தகருக்கே முழுராஜ்யத்தையும் கொடுத்து விடலாம்."

"அப்படியானால் முதன் மந்திரியும் நீயும் ஒரே மாதிரி அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்!"

"ஆம்; முதன் மந்திரியும் அப்படித்தான் கருதுகிறார். இலங்கைக்கு அவர் வந்ததே இதைப்பற்றி என்னுடன் கலந்து பேசுவதற்காகத்தான். அக்கா! இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா?"

"என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் தம்பி?"

"ஆம்; என் அந்தரங்கத்தைச் சொல்வதற்கு வேறு யாரும் இல்லைதான். இலங்கைக்குப் போவதற்கு முன்னால் அந்நாட்டைப் பற்றிப் பிரமாதமாக எண்ணியிருந்தேன். போன பிறகுதான் அது எவ்வளவு சிறியநாடு என்று தெரிந்தது. குதிரையில் அல்லது யானையில் ஏறிப் புறப்பட்டால் ஒரே நாளில் அந்நாட்டின் மேற்குக் கடற்கரையிலிருந்து, கிழக்கு கடற்கரைக்குப் போய்விடலாம்."

"சோழநாடு மட்டும் அதைவிடப் பெரிதா, தம்பி? இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா?"

"சோழநாடும் சிறியதுதான், ஆகையினால் சோழாநாட்டுக் கிரீடத்தை எனக்கு யாரேனும் அளித்தாலும், வேண்டாம் என்றுதான் சொல்வேன். இந்தத் தெய்வத் தமிழகத்தைச் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்று பிரித்தார்களே! அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் என்ன, அசோகர் என்ன சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன! இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா? காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன்!... என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்!"

"இல்லை, அருள்வர்மா! என்னைப்போல் ஆகாசக் கோட்டைகள் கட்டுவதற்கும் கற்பனைக் கனவுகள் காண்பதற்கும் நீயும் ஒருவன் இருக்கிறாயே என்று எண்ணி மகிழ்கிறேன். நீ பைத்தியக்காரனாயிருந்தால், நான் உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரி. நம்முடைய தந்தையின் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி அப்படியெல்லாம் மனோராஜ்யம் செய்திருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் காலத்தில் அது பூரணமாய் நிறைவேறவில்லை. ஆனால் என்னுடைய ஆயுட்காலத்தில் நான் அதைப் பார்க்கப் போகிறேன். சோழ சாம்ராஜ்யம் இலங்கை முதலாவது கங்கை வரையிலும் மாலத்தீவு முதலாவது சாவகம் வரையிலும் பரந்து விஸ்தரிப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் சாகப் போகிறேன். இந்த என் எண்ணம் நம் தமையன் ஆதித்த கரிகாலனால் நிறைவேறும் என்று ஒரு காலத்தில் நம்பினேன். அந்த நம்பிக்கை எனக்கு இப்போது போய் விட்டது. ஆதித்த கரிகாலன் மகாவீரன்; ஆனால் மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. அதனால் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.என் மனோரதம் உன்னால் நிறைவேறும் என்ற ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அதுவும் கைகூடாமல் போகலாம். அதனாலும் நான் நிராசை அடைய மாட்டேன். உன்னால் கை கூடாவிட்டால் உனக்குப் பிறக்கும் பிள்ளையினால் கைகூடும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். உனக்குப் பிறக்கும் புதல்வனை, பிறந்த நாளிலிருந்து நானே எடுத்து வளர்ப்பேன். அவனை இந்த உலகம் கண்டறியாத மகாவீரன் ஆக்குவேன். அற்ப ஆசைகளில் அவன் மனத்தைச் செலுத்தவிடாமல் அற்புதங்களைச் சாதிக்கக்கூடிய புருஷ சிங்கமாக்குவேன்."

"அக்கா! நீ என்னைவிடப் பெரிய பைத்தியம் என்பது நிச்சயம். எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. எனக்குப் பிறக்கப் போகும் புதல்வனைப் பற்றி நீ பேச ஆரம்பித்து விட்டாய். நீ செல்லம் கொடுத்து வளர்க்கும் தோழிகளில் யாருக்காவது அத்தகைய எண்ணமிருந்தால், என்னை மணந்து கொண்டு மணிமகுடம் சூடிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்ற ஆசை இருந்தா