தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்று மூன்றாம் பாகம் - கொலை வாள் > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41- 46 நான்காம் பாகம் - மணிமகுடம் > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்  >  முடிவுரை

Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan

மூன்றாம் பாகம் - கொலை வாள்

இருபத்தொன்றாம் அத்தியாயம் - "நீயும் ஒரு தாயா?"
இருபத்திரண்டாம் அத்தியாயம் - "அது என்ன சத்தம்?"
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி
இருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது!
இருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்!
இருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை
இருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு
இருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன்
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல்
முப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்


இருபத்தொன்றாம் அத்தியாயம்
"நீயும் ஒரு தாயா?"

சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:- "மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனர் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இராவணேசுவரனுடைய மூல பல சைன்யத்தைப் போல் இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் குருஷேத்திர யுத்தத்தைப் போன்ற மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், - சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை - ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார். அவரைப் பற்றியும் செய்தி கிட்டவில்லை.இராஜ குலத்தில் பிறந்து அச்சமயம் தஞ்சை அரண்மனையில் பராந்தகச் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவர் உன் தந்தைதான்.

ஆனால் உன் தந்தையோ இளம் பிராயத்திலேயே இராஜ்ய விவகாரங்களை வெறுத்துச் சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்தி வந்தவர். அவருக்கு யுத்தம் என்றால் பிடிப்பதில்லை. மன்னர்களின் மண்ணாசை காரணமாக மக்கள் போரிட்டு மடிவானேன் என்று அவர் வருந்தினார். தந்தையிடமும் சகோதரர்களிடமும் அதைக் குறித்து வாதித்தார். சிவஞானச் செல்வர்களான பெரியோர்களின் சகவாசத்திலும், புண்ணிய ஸ்தல யாத்திரையிலும், ஆலய வழிபாட்டிலும் காலத்தைச் செலவிட்டார். வாள், வேல் முதலிய ஆயுதங்களைக் கையினால் தொடவும் அவர் விரும்பவில்லை. யுத்த தந்திரங்களிலும் போர் முறைகளிலும் அவர் பயிற்சி பெறவில்லை. பொய்யும் புனை சுருட்டும், வஞ்சகமும், வேருமும் சூழ்ச்சிகளும் மறு சூழ்ச்சிகளும், கொலை முதலிய பாவங்களும் நிறைந்தது இராஜரீகம் என்று அவர் நம்பினார். 'திருடன் பிறர் பொருளைத் திருடுவதற்கும், ஒரு நாட்டு அரசன் இன்னொரு நாட்டைக் கவர்வதற்கும் என்ன வித்தியாசம்?' என்று அவர் கேட்டார்.

மகனே! விதிவசத்தால் அப்படிப்பட்ட கொள்கையுடைய உன் தந்தை இந்தச் சோழ நாட்டின் பாரத்தை வகிக்கும்படியாக நேர்ந்துவிட்டது. பராந்தகச்சக்கரவர்த்தி, இராஜ்யத்துக்கு நேர்ந்த பல விபத்துக்களினாலும், இராஜாதித்தரின் மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் வேளையில் உன் தந்தையை அழைத்து, 'இராஜ்ய பாரத்தை நீ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். உன் தந்தை மரணத்தறுவாயிலிருந்த உன் பாட்டனாரின் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பாமல் ஒப்புக்கொண்டார். உன் தந்தையை எனக்கு முன்னால் மணந்திருந்த பாக்கியவதியான வீரநாராயணி தேவி அதற்கு முன்னரே சிவபதம் அடைந்து விட்டார். நானோ அப்போது உன் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஆகையால் உன் தந்தையின் காலத்துக்குப் பிற்பாடு சோழ மகாராஜ்யம் என்ன ஆவது என்ற கவலை உன் பாட்டனாருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் உன் சிறிய தந்தையின் குமாரரைத் தேடுவதற்காக ஈழத்திற்குப் போனவர்கள், அங்கே ஒரு தீவிலிருந்த சுந்தர சோழரைக் கண்டு பிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் அளவிலாத பிரியம் வைத்திருந்தார். குழந்தையாயிருந்த நாளிலிருந்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். பெரியோர்கள் பலர், சுந்தரசோழரின் மூலமாய்ச் சோழகுலம் மகோன்னதம் அடையப் போகிறது என்று சொல்லியிருந்தார்கள்.

இத்தகைய காரணங்களினால் உன் பாட்டனாருக்குச் சுந்தர சோழர் மீது அபாரமான பிரேமை. ஆகையால், உன் தந்தை சிம்மாசனம் ஏறும்போது, சுந்தர சோழருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடவேண்டும் என்றும், அவருடைய சந்ததியர்கள் தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சிவபதம் அடைந்தார். இந்த விவரங்களையெல்லாம் உன் தந்தை என்னிடம் கூறினார். பராந்தகச் சக்கரவர்த்தி மரணத் தறுவாயில் வௌியிட்ட விருப்பத்தை நிறைவேற்ற அவர் உறுதிகொண்டிருந்தார். சுந்தர சோழரும் அவருடைய சந்ததியாரும் பட்டத்துக்கு வருவதில் எவ்வித இடையூறும் நேரிடக் கூடாதென்று எண்ணினார். உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை. அவர் புண்ணிய புருஷர். அவருடைய உள்ளம் சதாசர்வ காலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தமது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தர சோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். முன்னமே சொன்னேனே, அது போல் அவருக்கு மறுபடியும் மணம் செய்துகொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால் அவருடைய மன உறுதியைக் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நானும் சிவபக்தியில் ஈடுபட்ட 'பிச்சி' என்று அறிந்ததனாலேயே அவர் என்மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரைத் தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. இந்த உலகில் இறைவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த மகான்கள் வெகு சிலர்தான். சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து, உன் தந்தைக்குக் காட்சி தந்து, அவரை இம்மண்ணுலகிலிருந்து அழைத்துப் போனார், நான் இப்போது உன்னை என் ஊனக்கண்களால் பார்ப்பதுபோல உன் தந்தை பரமசிவனைத் தரிசித்தார். அப்படிப்பட்ட புண்ணிய புருஷருடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் நீயும் கடமைப்பட்டவர்கள்...!"

அன்னை இவ்விதம் கூறி நிறுத்தியபோது, கேட்டுக் கொண்டிருந்த மகனுடைய உடல் பதறிக்கொண்டிருந்தது.

அவனுடைய உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. "அது எப்படி, தாயே! என் தந்தை என்னிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லையே? நான் என்ன கடமைப்பட்டிருக்கிறேன்? எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்?" என்றான் மதுராந்தகன்.

"மகனே! கேள்! உன் தந்தை சிவபெருமானுடைய பாத மலர்களை அடைந்தபோது நீ சின்னஞ்சிறு பிள்ளை.ஆகையால், உன்னிடம் அவர் ஒன்றும் தெரியப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்; நாங்கள் மணம் புரிந்த புதிதில் மக்கள் பேற்றை விரும்புவதில்லையென்று முடிவு செய்திருந்தோம். ஆனால் பேதையாகிய என்னால் அந்த மன உறுதியை நிறைவேற்ற முடியவில்லை. கன்னிப் பருவத்தில் சிவபெருமானிடம் நான் கொண்டிருந்த பக்தி உன் தந்தையிடம் கொண்டிருந்த பிரேமையாக மாறியது. நாளடைவில், என் கையில் ஏந்தி, மார்போடு அணைத்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டிக் கொஞ்சுவதற்குக் குழந்தை வேண்டும் என்று என் இருதயம் தாபம் கொண்டது. மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும் குழந்தையைக் கண்டால் என் உடம்பெல்லாம் துடித்து; உள்ளம் பற்றி எரிந்தது. குழந்தைப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவனிடம் வரம் கோரினேன். இறைவனும் இந்தப் பேதையின் கோரிக்கையை நிறைவேற்றினார். உன்னை எனக்கு அளித்தார். ஒரு பக்கத்தில் உன்னைப் பெற்றதினால் நான் உள்ளமும் உடலும் பூரித்தேன்; மற்றொரு பக்கத்தில் உன் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி விட்டேனோ என்று பயந்தேன். அந்த மகா புருஷர் என்மீது கோபிக்கவில்லை. ஆனால் அவருடைய வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை மட்டும் என்மீது சுமத்திவிட்டுப் போனார்.

"மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறுமாந்திருந்தேன்.

ஆனால், என் உயிருக்குயிரான மகனே! என் கண்ணுக்குக் கண்ணான செல்வப் புதல்வனே! சில நாளாக நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும் போதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி, என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா?" என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள்.

"தாயே! தங்களுடைய மர்மமான வார்த்தைகள் என்னுடைய நெஞ்சையும் புண்ணாக்குகின்றன. தாங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்; என்னிடம் என்ன உறுதி கேட்கிறீர்கள்?" என்று மதுராந்தகன் சீறினான்.

"குழந்தாய்! என் மனத்திலுள்ளதை அறிந்துகொள்ளும் சக்தியை நீ இழந்துவிட்டாய் போலும்! வௌியிட்டுச் சொல்லத்தான் வேண்டும் என்கிறாய்; நல்லது, சொல்லுகிறேன். உன் மனம் சிவபக்தியாகிய கங்கை நதியிலிருந்து மண்ணாசையாகிய குட்டையில் விழுந்துவிட்டது என்று கேள்விப்படுகிறேன். சோழ குலத்துச் சிம்மாசனத்தில் ஏற, நீ ஆசை கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். உன் புனிதமான உள்ளத்தை நம் விரோதிகள் அவ்விதம் கெடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். நான் இவ்வாறு கேள்விப்பட்டது உண்மையல்ல என்று நீ கூறினால், என் மனம் நிம்மதி அடையும்!" என்றாள் மூதாட்டி.

மதுராந்தகன் இதுவரை உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து எழுந்து நின்றான். அவனுடைய படபடப்பை பார்த்துத் தாயும் எழுந்தாள். "என்னுடைய மனத்தை விரோதிகள் யாரும் கெடுக்கவில்லை. என்னைச் சிம்மாசனம் ஏற்ற விரும்புகிறவர்கள் என் விரோதிகளா? எனக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்திருப்பவர்கள் என் விரோதிகளா? ஒரு நாளும் இல்லை. உண்மையில் என் ஜன்ம விரோதி யார்? என்னைப் பெற்றவளாகிய நீதான்!..." என்று மதுராந்தகன் கூவினான்.

ஆத்திர மிகுதியால் அச்சமயம் அவன் மரியாதையை மறந்தான்; சின்னப் பழுவேட்டரையர் நல்ல வார்த்தைகளினால் அன்னையின் மனத்தை மாற்றும்படி சொல்லியிருந்ததை மறந்து வசைமாரி பொழிந்தான்.

"ஆம்; நீதான் என்ஜன்ம சத்துரு; வேறு யாரு இல்லை. நீயும் ஒரு தாயா? நீயும் ஒரு ஸ்திரீயா? உலகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளில் உரிமைக்காகப் படாதபாடு படுவார்கள். கதைகளிலும், காவியங்களிலும் கேட்டிருக்கிறேன், வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறேன். அன்னையின் இயல்புக்கே மாறான இயல்புடைய நீ மானிட ஸ்திரீதானா? அல்லது மனிதப்பெண் உருக்கொண்ட அரக்கியா? நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்? எல்லாவித நியாயங்களினாலும் எனக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தைப் பிடுங்கி இன்னொருவனுக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன சிரத்தை! என் தந்தையின் விருப்பம் என்று சொல்லுகிறாய். அவருக்கு நீ வாக்குக் கொடுத்ததாகச் சொல்லுகிறாய். அதற்கெல்லாம் அத்தாட்சி என்ன? நான் நம்பவில்லை. எனக்கு யாரோ துர்ப்போதனை செய்துவிட்டதாகச் சொல்கிறாய். இல்லவே இல்லை, உனக்குத்தான் யாரோ துர்ப்போதனை செய்து, உன் மனத்தைத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்கள். தாயை மகனுக்கு விரோதியாக்கியிருக்கிறார்கள். நியாயமாக எனக்கு உரிய சோழ சிங்காசனத்தை நான் ஒருநாளும் கை விடமாட்டேன். நீ சொன்னாலும் விடமாட்டேன். சிவபதம் அடைந்த என் தந்தையே திரும்பி வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் என்னுடையது; இந்தப் பழமையான சிங்காசனம் எனக்குரியது; கரிகால் பெருவளத்தான் அணிந்திருந்த மணிமகுடம் எனக்கு உரியது; அவற்றை நான் அடைந்தே தீருவேன்.இதோ என் கழுத்தில் போட்டிருக்கும் ருத்திராட்சை மாலை நீ எனக்கு அளித்தது. தாய் என்ற மரியாதைக்காக இத்தனை நாளும் இதைத் தரித்திருந்தேன்; என்னைப் பேடியாக்கி, நாடு நகரமெல்லாம் நகைக்கும்படி செய்த இந்த ருத்திராட்ச மாலையை இதோ இந்தக் கணமே கழற்றி எறிகிறேன்; நீயே அதை வைத்துக்கொள்ளலாம்!"

இவ்விதம் பித்தம் பிடித்தவனைபோல் பிதற்றிவிட்டு மதுராந்தகன் தன் கழுத்திலிருந்த ருத்திராட்ச மாலையை அவசரமாகக் கழற்ற முயன்றான். கழற்ற முடியாமல் அதை அறுக்க முயன்றான்; ஆனால் கழுத்து நெறிந்ததே தவிர, மாலை அப்படியே இருந்தது.

மதுராந்தகன் அழகிய தோற்றமுடையவன். சுந்தரசோழரின் புதல்வர்களைக் காட்டிலும் அழகன் என்று சொல்லலாம். அவர்களிடம் இல்லாத பெண் தன்மையின், வசீகரமான சாயல் அவன் முகத்தில் பொலிந்தது. அத்தகைய களை பொருந்திய அவன் முகம் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் இப்போது விகாரமடைந்து காட்டியது. அதைக் காணச் சகியாமல் செம்பியன் மாதேவி கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் சத்தமிட்டு ஓய்ந்த பிறகு தன் கண்களைத் திறந்து பார்த்தாள். குரலின் சாந்தத்தில் சிறிதும் மாறுதல் இல்லாமல், "மகனே! சற்று அமைதியாயிரு. நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும், என் வார்த்தைகளைச் சற்றுச் செவிசாய்த்துக் கேள்!" என்றாள்.

மதுராந்தகன் அந்தக் குரலைக் கேட்டுச் சிறிது அடங்கினான். "நன்றாய்க் கேட்கிறேன், கேட்கமாட்டேன் என்று மறுக்க வில்லையே!" என்றான்.

"தாயின் இயல்பைக் குறித்து நீ குறிப்பிட்டாய், பொல்லாத அரக்கியாயிருந்தாலும் தன் குழந்தைக்குத் துரோகம் செய்யமாட்டாள்.துஷ்ட மிருகங்களும், தங்கள் குட்டிகளை மற்ற துஷ்ட மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முயலுகின்றன. அது போலவேதான் நானும் உன்னைக் காப்பாற்ற முயல்கிறேன். நீ இராஜ்யத்துக்கு ஆசைப்படவேண்டாம் என்று நான் சொல்லுவதற்கு, முன்னே கூறியதைத் தவிர வேறு காரணமும் இருக்கிறது. இராஜ்ய ஆசையினால் உன் உயிருக்கே ஆபத்து வரும். பெற்று வளர்த்த தாய் தன் மகன் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் குற்றம் உண்டா? நீ இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டால், சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு எதிரியாவாய். ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும் வீராதி வீரர்கள். நீயோ ஆயுதம் எடுத்து அறியாதவன். சோழ நாட்டுச் சைன்யம் முழுதும் சுந்தர சோழருடைய புதல்வர்களின் கட்சியிலேயே இருக்கும்.படைத்தலைவர்களும் அவர்களுக்குச் சார்பாக இருப்பார்கள். அக்கம் பக்கத்து நாடுகளிலும் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உனக்குத் துணைவர்கள் யார்? யாரை நம்பி நீ அவர்களுடன் போர் தொடங்குவாய்? மகனே! சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றியிருப்பதை நீ அறிவாய்.வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் அரச குலத்தினர் உயிருக்கு அபாயம் என்பது உலகம் கண்ட உண்மை. அப்படி நேரும் விபத்து உனக்கு நேராமலிருக்க வேண்டுமே என்றுதான் நான் கவலைப்படுகிறேன். குழந்தாய்! என் ஏக புதல்வன் உயிரோடிருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது தவறா? அது உனக்கு நான் இழைக்கும் துரோகமா?"

இவ்வார்த்தைகளினால் மதுராந்தகனுடைய ஆத்திரம் சிறிது தணிந்தது. அவன் உள்ளம் கனிவடைந்தது. "அன்னையே! மன்னியுங்கள்! தங்களுடைய கவலை இதுதான் என்று முன்னமே சொல்லியிருக்கலாமே? ஒரு நொடியில் தங்கள் கவலையைத் தீர்த்திருப்பேனே! நான் அப்படியொன்றும் துணைவர்கள் இல்லாத அநாதையல்ல. சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் என் கட்சியில் இருக்கிறார்கள். கடம்பூர்ச் சம்புவரையர் என் பக்கம் இருக்கிறார். தங்கள் சகோதரரும் என் மாமனுமான மழவரையரும் என் கட்சியில் இருக்கிறார். மற்றும் நீல தங்கரையாரும், இரட்டைக்குடை இராஜாளியாரும், குன்றத்தூர்ப் பெருங்கிழாரும் பூரண பலத்துடன் என்னை ஆதரிக்கிறார்கள். என்னை ஆதரித்து நிற்பதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்...."

"மகனே! இவர்கள் செய்து கொடுக்கும் சத்தியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் உண்மையுடன் நடப்பதாக இவர்கள் ஒரு காலத்தில் சத்தியம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் உனக்கு உண்மையாக நடப்பார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். இவர்களிடம் உள்ள சைன்யம் வெகு சொற்பம் என்பது உனக்குத் தெரியாதா? வடக்கேயுள்ள சைன்யம் ஆதித்த கரிகாலனுடைய தலைமையில் இருக்கிறது. தென்திசைச் சேனையோ கொடும்பாளூர் வேளாரின் தலைமையில் இருக்கிறது...."

"தாயே! என் கட்சியை ஆதரிக்கும் சிற்றரசர்கள் எந்த நேரத்திலும் தலைக்குப் பதினாயிரம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வரக்கூடியவர்கள்."

"சைன்யம் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்களைப் பற்றி என்ன? சோழநாட்டு மக்கள் சுந்தர சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா! இன்றைக்கு நீயே பார்த்தாய். இந்தப் பழையாறை நகருக்கு இன்று அருள்மொழிவர்மனோ, ஆதித்த கரிகாலனோ வந்திருந்தால் மக்கள் எப்படித் திரண்டு கூடி வரவேற்றிருப்பார்கள்? இந்த ஊர் மக்கள் ஒரு காலத்தில் உன்னிடமும் அன்புடனே தான் இருந்தார்கள். பழுவேட்டரையர்களுடன் நீ உறவு பூண்டதிலிருந்து உன்னை மக்கள் வெறுக்கவே தொடங்கி விட்டார்கள்...."

"தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள், சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!"

"மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிமானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது. அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை!..."

இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக் குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பயங்கரப் பேரொலியாகக் கேட்டது.

"மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முதலாவது அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வௌியே சென்று, என்ன விஷயம் என்றும் தெரிந்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேயே இரு!" என்றாள் அன்னை.

பக்க தலைப்பு



இருபத்திரண்டாம் அத்தியாயம்
"அது என்ன சத்தம்?"

ஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நான் தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான் அவ்விடத்தில் நிற்கவே, வந்தியத்தேவனும் தயங்கி நின்றான். "அப்பனே! ஏன் நிற்கிறாய்! இளைய பிராட்டி வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறார். படகில் ஏறியதும் 'இளவரசர் வந்து விட்டார்; பத்திரமாய் இருக்கிறார்', என்ற நல்ல சமாசாரத்தை முதலில் சொல்! உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே! நான் திரும்பிப் போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோம். அதை மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால் எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு, வந்த வழியாக விரைந்து திரும்பிச் சென்றான்.

வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பெரும் வியப்பு ஏற்பட்டது. இவன் எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறான்! இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை! வெறும் ஊகமா? அல்லது எல்லாம் அறிவானா? ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி என்றும், பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் இரண்டு வகை உண்டு; ஒற்றர்களிலும் அப்படி இரு வகை உண்டு போலும். நான் அவசரத்துக்கு ஒற்றன் ஆனேன்; ஆகையால் அடிக்கடி சங்கடத்தை வருவித்துக் கொள்கிறேன். இந்த வைஷ்ணவன், பரம்பரை ஒற்றன்போலும்; அதனால் ஒரு விதப் பரபரப்புமில்லாமல் சாவதானமாகத் தன் வேலையைச் செய்துவருகிறான். ஆனால் யாருக்காக இவன் வேலை செய்கிறான்? இவன் தன்னைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மைதானா?

இவ்விதம் யோசித்துக்கொண்டே ஓடை நீர்க் கரைக்கு வந்த வந்தியத்தேவன், ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்தான். ஆழ்வார்க்கடியானை மறந்தான். தான் போய்வந்த காரியத்தை மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான். ஆகா, இந்தப் பெண்ணின் முகம் தன்னைவிட்டுச் சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கவில்லை. கனவிலும் நனவிலும், புயலிலும் மலையிலும், காட்டிலும் கடல் நடுவிலும் தன்னுடன் தொடர்ந்து வந்தது. ஆயினும் என்ன விந்தை! நேரில் பார்க்கும்போது இந்தப் பெண் முகத்தின் அழகு எதனால் அதிகப்பட்டுக் காண்கிறது! ஏன் தொண்டையை வந்து அடைக்கிறது! நெஞ்சில் ஏன் இந்தப் படபடப்பு?

சுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில் ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது. வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.

"நிமித்தக்காரா! இளவரசர்களுக்கு மட்டுந்தான் நீ நிமித்தம் சொல்வாயா? எனக்கும் சொல்வாயா? நிமித்தம் எப்படிச் சொல்வாய்? வானத்துக் கிரஹங்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துச் சொல்வாயா? அல்லது காக்கை, குருவிகளைப் பார்த்துச் சொல்வாயா? கை ரேகை பார்த்துச் சொல்வாயா?.. முகக்குறி பார்த்துத்தான் சொல்வாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஏன் என் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இப்படிச் செய்தாயானால் உயர்குலத்துப் பெண்கள் யாரும் உன்னிடம் நிமித்தம் கேட்க முன்வர மாட்டார்கள்!" என்று அரசிளங்குமரி கூறியது வந்தியத்தேவன் செவிகளில் இனிய கிண்கிணி நாதமாகக் கேட்டது.

"அம்மணி! நிமித்தம் பார்ப்பதற்காகத் தங்கள் முகத்தைப் பார்க்கவில்லை. எங்கேயோ, எப்போதோ பார்த்த முகம்போல் இருக்கிறதே என்று ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றேன்..."

"தெரியும், தெரியும்! நீ மிக்க மறதிக்காரர் என்று எனக்குத் தெரியும். நான் ஞாபகப்படுத்துகிறேன். ஏறக்குறைய நாற்பது நாளைக்கு முன்னால், குடந்தை ஜோதிடர் வீட்டில் முதன் முதலாகப் பார்த்தீர். பிறகு, அன்றைக்கே அரசலாற்றங்கரையில் பார்த்தீர்."

"அம்மணி! நிறுத்துங்கள்! தங்களை வார்த்தையை நான் நம்ப முடியவில்லை. நாற்பது நாளைக்கு முன்புதானா தங்களை முதன்முதலாகப் பார்த்தேன்! நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவில்லை? நூறு நூறு ஜென்மங்களில் நூறாயிரம் தடவை தங்களைப் பார்க்கவில்லையா? மலை அடிவாரத்தில் பார்க்கவில்லையா? குன்றின் உச்சியிலே பார்க்கவில்லையா? நீர்ச்சுனையின் ஓரத்தில் பார்க்கவில்லையா? அடர்ந்த காட்டின் மத்தியில் கொடும் புலியினால் துரத்தப்பட்டு ஓடி வந்த தங்களை நான் காப்பாற்றவில்லையா? வேல் எறிந்து அந்தப் புலியைக் கொல்லவில்லையா? அப்போது நான் காட்டில் வேட்டையாடித் திரிந்த வேடுவனாயிருந்தேன்! விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள அழகழகான கிளிகளை வலை போட்டுப் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தேன். தாங்கள் அந்தக் கிளிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு வானத்தில் பறக்க விட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தீர்கள். ஒரு சமயம் நான் மீன் பிடிக்கும் வலைஞனாயிருந்தேன். தூரதூரங்களிலுள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் சென்று, வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், மரகத மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தேன். அவற்றைத் தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு, அவை துள்ளி நீந்திச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தொலை தூரங்களிலுள்ள கடல்களுக்குச் சென்று கடலின் ஆழத்தில் மூச்சுப்பிடித்து முழுகி முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தேன். தாங்கள் அவற்றைக் கையினால் அளைந்து பார்த்துவிட்டு, ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளை அழைத்து அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளிலே முத்துக்களையும், பவழங்களையும் சொரிந்து அனுப்பினீர்கள். முந்நூறு வருஷங்கள் வளர்ந்த இலந்தை மரத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் இலந்தைக் கனியைக் காத்திருந்து பறித்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தேன். அதைத் தாங்கள் வளர்த்த நாகணவாய்ப் பறவைக்குக் கொடுத்து, அது கனியைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்துக் களித்தீர்கள். தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள மந்தார மலர்களையும், முன் பொழிந்தேன். 'எங்கள் கொல்லை வேலியில் பூக்கும் முல்லை மலரின் அழகுக்கும் மணத்துக்கும் இவை ஈடாகுமா?' என்று சொல்லிவிட்டீர்கள். தேவேந்திரனிடமிருந்து அவன் அணியும் ஒப்பில்லா ரத்தின ஹாரத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஒழுக்கமற்ற இந்திரன் அணிந்த மாலையை நான் கையினாலும் தொடுவேனா?' என்று சொல்லிவிட்டீர்கள். கைலாசத்துக்குச் சென்று, பார்வதி தேவியின் முன்னால் தவங்கிடந்து, தேவி பாதத்தில் அணியும் சிலம்பை வாங்கிக் கொண்டுவந்தேன். தங்கள் பாதங்களில் சூட்டி விடுவதாகச் சொன்னேன். "ஐயையோ! ஜகன் மாதாவின் பொற்பாதச் சிலம்பு என் காலிலே படலாமா? என்ன அபசாரம்? திரும்பக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா!" என்றீர்கள். போர்க்களத்துக்குச் சென்று அறுபத்துநாலு தேசங்களின் அரசர்களையும் வென்று, அவர்களுடைய மணிமகுடங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து தங்கள் முன் காணிக்கை செலுத்தினேன். தாங்கள், அந்த மணிமகுடங்களைக் கால்களால் உதைத்துத் தள்ளினீர்கள். "ஐயோ! தங்கள் மெல்லிய மலர்ப் பாதங்கள் நோகுமே?" என்று கவலைப் பட்டேன். இளவரசி! இவையெல்லாம் உண்மையா இல்லையா? அல்லது நாற்பது நாளைக்கு முன்பு முதன்முதலாகத் தங்களை நான் பார்த்தது தான் உண்மையா?" என்றான் வந்தியத்தேவன். அப்படியும் அவன் பேசி முடித்து விட்டதாகக் காணப்படவில்லை.

"தேவி! இன்னொரு ஞாபகம் வருகிறது. ஒரு சமயம் வெள்ளி ஓடத்தில் நாம் ஏறி, தங்கப் பிடிப்போட்ட தந்தத் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு, வானக் கடலில் வெண்ணிலா அலைகளைத் தள்ளிக்கொண்டு, பிரயாணம் செய்தோம்..." என்று ஆரம்பித்தான்.

"ஐயையோ! இந்த நிமித்தக்காரனுக்கு நன்றாய்ப் பைத்தியம் பிடித்துவிட்டது போலிருக்கிறது படகைத் திருப்பிக் கரைக்குக் கொண்டு போகவேண்டியதுதான்!" என்றாள் இளவரசி.

"இல்லை, தேவி, இல்லை! சற்று முன்னால் இந்த ஓடைக் கரைக்கு வந்துசேரும் வரையில் என் அறிவு தௌிவாகத்தானிருந்தது. இல்லாவிட்டால், இந்தப் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பதற்கு நான் உபாயம் கண்டுபிடித்திருக்க முடியுமா? மதுராந்தகத் தேவரிடம் நிமித்தக்காரன் என்று சொல்லி, அதை நம்பும்படியும் செய்து, அரண்மனைக்கு வந்திருக்க முடியுமா? வைத்தியர் மகனிடமிருந்துதான் அவ்வளவு எளிதில் தப்பி வந்திருக்க முடியுமா? இந்தப் படகில் ஏறித் தங்கள் திருமுகத்தைப் பார்த்தவுடனேதான், மது உண்டவனைப்போல் மதிமயங்கிப் போய்விட்டேன்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"ஐயா, அப்படியானால் என் முகத்தைத் தாங்கள் பார்க்க வேண்டாம். இந்த ஓடையின் தௌிந்த நீரைப் பாரும். நீல வானத்தைப்பாரும், ஓடைக்கரையில் வானளாவி வளர்ந்திருக்கும் மரங்களைப் பாரும், அரண்மனை மாடங்களைப் பாரும். பளிங்குக்கல் படித்துறைகளைப் பாரும். இந்த ஓடையில் பூத்திருக்கும் ஆம்பல் மலர்களையும், செங்கழுநீர்ப் பூக்களையும் பாரும். அல்லது இந்தச் செவிட்டு ஓடக்காரனின் முகத்தையாவது சற்றே பாரும். அவ்விதம் பார்த்துக்கொண்டே தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; காயா, பழமா என்று சொல்லும். இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர், யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதலாவது நடந்தவை எல்லாவற்றையும் சொல்லும்!" என்று இளவரசி கூறினாள்.

அதற்கு வந்தியத்தேவன், "தேவி! தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா? இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சிறுவன் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் இளவரசரைக் காப்பாற்றுவதற்காக நூறாயிரம் தடவை வேண்டுமென்றாலும் தங்கள் உயிரைக்கொடுக்கக்கூடியவர்கள்!" என்றான்.

அச்சமயம் தூரத்தில் பயங்கரமான, குழப்பமான, அநேகாயிரம் குரல்களின் ஒருமித்த ஓலம்போன்ற சத்தம் எழுந்தது. சத்தம் வந்த திசையை அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் பயத்தோடும் கவலையோடும் நோக்கினார்கள்.

"அது என்ன ஆரவாரம்? கோபங்கொண்ட ஜனத்திரளின் கூக்குரல் போல் அல்லவா இருக்கிறது?"

"ஆம்; அப்படித்தான் தோன்றுகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

பக்க தலைப்பு



இருபத்து மூன்றாம் அத்தியாயம்
வானதி

கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள். பகற்பொழுது சென்று மாலை மங்கிவரும் போது மனதில் ஒரு சோகமும் ஏற்படுகிறது; கூடவே ஓர் அமைதியான இன்பமும் தோன்றுகிறது. ஆதவனின் இறுதிக் கிரணங்கள் மெலிந்து மறைந்த பிறகு, இரவின் இருள் நாலாபுறமும் கவிந்து வருகிறது. இதனால் மனத்தில் தோன்றும் சோர்வைப் போக்கிக் கொள்வதற்கு வானத்தை நோக்கினால் போதும், கண்ணிமைக்கும் நேரத்தில் வானமாதேவி ஏற்றிவைக்கும் கோடானுகோடிச் சுடர் விளக்குகள் எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கின்றன! சூரியனுடைய தகிக்கும் ஜோதியைப்போல் அவை கண்களைக் கூசச் செய்வதில்லையே? கண்களால் அவற்றைப் பார்த்து இன்புறலாமே? சந்திரனும் உதயமாகி விட்டாலோ, கேட்கவேண்டியதில்லையே. முத்துச் சுடர்போன்ற முழுமதியின் நிலவில் உலகம் பூரிக்கிறது; உள்ளமும் உடலும் பூரிக்கின்றன. மாலை வந்ததும் தாமரைகள் கூம்புவது என்னவோ உண்மைதான். ஆனால் விண்மீன்களுடன் போட்டியிடுவதுபோல் மல்லிகை மொட்டுக்கள் வெடித்து மலர்ந்து அவற்றின் நறுமணத்தினால் வானமும் பூமியும் போதை கொள்கின்றன அல்லவா?

அஸ்தமித்ததும் பட்சிகளின் குதூகலத்வனிகள் ஓய்ந்து விடுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அதோ தேவாலயத்திலிருந்து வரும் சேமக்கலச் சத்தமும், நாதஸ்வர வாத்தியத்தின் இன்னிசையும், இப்போது எவ்வளவு மதுரமாயிருக்கின்றன! மணிமாடங்களின் மீதிருந்து மென்மையான விரல்கள் மீட்டும் வீணையும், யாழும் எத்தகைய இன்ப கீதத்தை எழுப்புகின்றன!

கொடும்பாளூர் இளவரசி வானதியின் அழகில் இப்படியே சோகத்தின் சாயலும், களிப்பின் மெருகும் இனம் தெரியாதபடி கலந்து போயிருந்தன. அழகுக்கு ஒத்தபடி அவளுடைய சுபாவமும் இரு வகைப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவளைப் பார்த்தால் துயரமே உருக்கொண்ட சந்திரமதியையும், சாவித்திரியையும் போல் இருக்கும். இன்னொரு சமயம் பார்த்தால் அரம்பையும், ஊர்வசியும் தேவருலகில் இப்படித்தான் ஆடிப்பாடிக்கொண்டு காதலில் களித்த மாதவியைப் போல் ஒரு சமயம் அவள் இன்ப உயிர்ச் சிலையாக விளங்குவாள். மற்றொரு சமயம் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் சோகவடிவம் இதுதானோ என்று கருதும்படி இருக்கும். ஒரு சமயம் மாலை வடிவேலரின் மையலுக்கு உள்ளாகி இதயம் கலந்து நின்ற வள்ளியைப்போல் தோன்றுவாள். இன்னொரு சமயம் தேவலோகமெல்லாம் களிக் கூத்தாடும்படி கார்த்திகேயருக்கு மாலையிட்டு மகிழ்ந்த தெய்வயானை இவளேதான் என்று எண்ணி மகிழும்படி ஆனந்த உருவாகி விளங்குவாள்.

சேர்ந்தாற்போல் பல தினங்கள் வானதியின் முகத்தில் ஒரு சிறு புன்னகையைக்கூடக் காணமுடியாது. வேறு சில நாட்களில் அவள் ஓயாது சிரித்துக் கொண்டேயிருப்பாள். அந்தச் சிரிப்பின் ஒலி கோடானு கோடி நுண் துளிகளாகிக் காற்று வௌியில் கலந்து உலகத்தையே ஆனந்தப் பரவசப்படுத்தும்.

வானதியின் இத்தகைய இருவகைச் சுபாவத்துக்குக் காரணம் அவளுடைய பிறந்த வேளையும் வளர்ந்த காலமும் என்று ஊகிக்கலாம். அன்னையின் கர்ப்பத்தில் அவள் இருந்தபோது, கொடும்பாளூர் சிறிய வேளார், கொடிய போர்களில் ஈடுபட்டிருந்தார். வெற்றிச் செய்தியும், தோல்விச் செய்தியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவை அவளுடைய அன்னையின் உள்ளத்தில் களிப்பையும், துயரத்தையும் மாற்றி மாற்றி உண்டாக்கின. வானதி பிறந்த சில காலத்துக்குப் பிறகு அவளுடைய அன்னை காலமானாள்.பிறகு வானதியை அவளுடைய தந்தை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தார். ஆனால் இதுவும் நீடித்திருக்கவில்லை. வீராதி வீரராகிய வானதியின் தந்தை அருமை மகளை முன்னிட்டுக்கூட அரண்மனையிலேயே உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. வீரபாண்டியன் ஓடி ஒளிந்த பிறகும், அவனுக்குத் துணைவந்த ஈழத்துப் படைகளைத் துரத்திக் கொண்டு இலங்கை சென்றார். அங்கே போர்க்களத்தில் உயிர் நீத்து, சரித்திரத்தில் 'ஈழத்துப் பட்ட சிறிய வேளார்' என்ற பட்டப்பெயர் பெற்றார்.

பின்னர், வானதியின் வாழ்க்கை சிலகாலம் ஒரே துயரமாயிருந்தது. தாயை இழந்து, தகப்பனாரால் வளர்க்கப்பட்ட பெண்கள்தான் அந்தச் சோக உணர்ச்சி எத்தகையது என்பதை அறிய முடியும். பெற்றோரில்லாப் பெண் கொடும்பாளூர் அரண்மனையில் சீராட்டி வளர்க்கப்பட்டாலும், அவளுடைய உள்ளத்தில் தந்தை பெற்றிருந்த இடத்தை யாரும் பெற முடியவில்லை. அதற்குப் பலரும் பலவிதமாக ஆறுதல் கூறினார்கள். 'வருந்தாதே குழந்தை! உன் தந்தை உன் வயிற்றில் வந்து மீண்டும் வீரமகனாகப் பிறப்பார்; உலகம் வியக்கும்படியான அற்புத வீரச்செயல்களைப் புரிவார்" என்று ஒருவர் கூறினார்.

இவ்வார்த்தைகள் வானதியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து வேரூன்றின. அருமைத் தந்தையைப் பிரிந்ததினால் ஏற்பட்ட துயரத்தையும், சோர்வையும் கற்பனை மகனைப் பற்றி எண்ணுவதிலே போக்கிக் கொள்ள முயன்றாள். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தாள்.

தனக்குப் பிறக்கும் குமரன் எப்படி எப்படி இருப்பான். எந்தெந்த மாதிரி நடப்பான், எத்தகைய வீரச்செயல்களைப் புரிவான் என்ற மனோராஜ்யத்தில் நாள் கணக்காக மூழ்கி விடுவாள். கற்பனைக் கண்ணின் மூலமாக, அந்த வீரமகன் தூர தூர தேசங்களுக்குச் சென்று மாபெரும் யுத்தங்களில் வெற்றி பெறுவதைப் பார்த்தாள். வேகமாகத் திரும்பி வந்து அவன் அடைந்த வெற்றியின் காணிக்கைகளை எல்லாம் தன்னுடைய காலடியில் சமர்ப்பிப்பதைப் பார்த்தாள். அவன் மணிமுடி தரித்து வீர சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். ராஜாதி ராஜாக்கள் வந்து அவனுக்குக் கப்பம் கட்டி அடிபணிவதைப் பார்த்தாள். அவனுடைய திருமுகத்தைக் கண்டதும் ஜனத்திரள்கள் பூரண சந்திரனைக் கண்ட மாகடலைப் போல் பொங்கி எழுந்து, அலைமோதி ஆரவாரிப்பதைப் பார்த்தாள். நூறு நூறு கப்பல்களின் வீரர்களை ஏற்றிக் கொண்டு அவன் கடல்களைக் கடந்து சென்று அப்பாலுள்ள நாடுகளிலே வெற்றிக்கொடி நாட்டுவதைப் பார்த்தாள். "அன்னையே! நான் அடைந்துள்ள இத்தனை பெருமைக்கும் காரணம் நீயே அல்லவோ!" என்று தன்னிடம் அடிக்கடி அவ்வீரமகன் வந்து கூறுவதையும் கேட்டாள்.

அந்த அறியாத பேதைப் பெண் சிலசமயம் தன் ஆலிலை வயிற்றைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்வாள். தன் கற்பனை மகன் ஒரு வேளை வயிற்றில் வந்துவிட்டானோ என்றுதான். பழந்தமிழ் நாட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் பாரதக் கதையைக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். குந்திதேவி குழந்தை பெற்ற விதத்தைப் பற்றியும் கேட்டிருந்தார்கள். அதுபோல் எந்தத் தெய்வம் வந்து தனக்குக் குழந்தை வரம் கொடுக்கப் போகிறது என்று எண்ணி எண்ணி அவள் வியப்பதுண்டு. அப்போதெல்லாம் யாரையும் மணந்து கொள்வதைப் பற்றியே அவள் எண்ணவில்லை. வயது அந்த பிறகு, உலகம் ஓரளவு தெரிந்த பிறகு, கணவன் ஒருவனை மணந்தேயாக வேண்டும் என்றும், அவன் மூலமாகவே குழந்தைப் பேற்றை அடைய வேண்டும் என்று அறிந்தாள். அப்போதும் கணவனைப்பற்றி அதிகமாக மனோராஜ்யம் செய்யவில்லை.

பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு அவளுடைய வாழ்க்கையிலும், மனப்போக்கிலும் மாறுதல் ஏற்பட்டது. குந்தவைதேவியின் பெருமிதம் கலந்த அன்பு அவளுக்கு ஆறுதலும், குதூகலமும் அளித்தன. குந்தவையின் நாகரிக நடை உடை பாவனைகளும் சாதுர்யப் பேச்சுக்களும் வானதியை அவள் இதுவரை அறியாத வேறொரு உலகத்துக்குக் கொண்டு போயின. அவளைப் போலவே பழையாறை அரண்மனைக்கு வந்திருந்த மற்ற அரச குலப்பெண்களின் அசூயை அவளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. அவர்கள் அசூயைப்படும் படியாகத் தன்னிடம் ஏதோ மகிமை இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்மனம் உணர்த்தியது. அதே சமயத்தில் அவளுடைய இயற்கையாகப் பிறந்த இனிய சுபாவமும் பெருந்தன்மையும் எல்லோருடனும் நல்லபடியாக நடந்துகொள்ள அவளைத் தூண்டின. இத்தனைக்கும் நடுவில், வானதி தனக்குப் பிறக்கப்போகும் வீர மகனைப் பற்றி இன்பக் கனவு காண்பதை மட்டும் விட்டுவிடவில்லை.

இதற்கிடையிலேதான் அவள் பொன்னியின் செல்வரைப் பார்க்கும்படி நேர்ந்தது. அதன் பலனாக அவளுடைய மனக்கோட்டைகள் எல்லாம் பொலபொல என்று தகர்ந்து விழுந்தன. கணவனை அடைந்த பின்னர்தான் மகனைப் பெற முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். கணவன் யாராயிருந்தாலும், எப்படிப்பட்டவனாயிருந்தாலும் சரிதான் என்ற அலட்சியப்பான்மை அதற்கு முன்பு அவள் அடி உள்ளத்தில் இருந்தது.ஆனால், இந்தப் பொல்லாத மனத்தை என்ன செய்வது? இது சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரிடமல்லவா போய்விட்டது! ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் 'என் பெண்ணை மணந்து கொள்!' என்று கெஞ்சிக் கூத்தாடக்கூடிய பெருமை வாய்ந்தவர் அல்லவா அவர்! அத்தகையவர் தன்னைத் திரும்பியும் பார்ப்பாரா? அவரை மணந்துகொள்ளும் பாக்கியத்தைப் பற்றி அவளால் கனவுகூடக் காணமுடியாதே? இளவரசரிடம் இந்தப் பேதை மனம் சென்றபிறகு, இன்னொருவரை மணந்து கொள்வதுதான் எப்படிச் சாத்தியம்! ஆகையால், தன் வயிற்றில் பிறக்கபோகிற வீரகுமாரனைப் பற்றி இத்தனைக் காலமும் அவள் கட்டி வந்த மனக்கோட்டைகள் எல்லாம் சிதறிப் போகத்தானே வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க, அவளுடைய உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. மறுபடியும் பழையபடி சோக வடிவானாள். அவளுடைய மனத்தை அறிந்துகொண்ட இளைய பிராட்டி அவளிடம் விசேஷ அன்பும் ஆதரவும் காட்டினாள். தன்னாலியன்றவரையில் வானதியை உற்சாகப்படுத்த முயன்றாள். பொன்னியின் செல்வரிடம் அவளுடைய உள்ளம் சென்றது அப்படியொன்றும் பிசகான விஷயமில்லையென்றும், நடக்கமுடியாத காரியமும் அல்லவென்றும் குறிப்பாக உணர்த்தி வந்தாள். குடந்தை ஜோதிடர் வானதிக்குப் பிறக்கப்போகும் மகனைப்பற்றிக் கூறியது, அவளுடைய உள்ளக் கனலுக்குத் தூபம் போட்டு வளர்த்தது; அவளுடைய மனோராஜ்யம் மேலும் விரிவடைந்து கொண்டே வந்தது. மனச்சோர்வும் குதூகலமும் மேலும் துரிதமாக மாறி மாறி ஏற்பட்டன. ஏக்கத்தினால் ஏற்பட்ட மனவேதனை பொறுக்க முடியாமலிருந்தது போல், மகிழ்ச்சியினால் ஏற்பட்ட கிளர்ச்சியையும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இரண்டும் மிதமிஞ்சிப் போன போது மயக்கம் போட்டு விழுந்தாள்; இயற்கையருளிய இந்த மயக்கமருந்து சாதனத்தினால் அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாள்.

தஞ்சைக்குச் சென்றிருந்த போது வானதி பார்த்த பராந்தகச் சக்கரவர்த்தி நாடகமும், அன்றிரவு அவள் கேட்ட அபயக் குரலும், கண்ட பயங்கரக் காட்சியும் அவளுடைய மனக்குழப்பத்தை அதிகமாக்கின. கொடும்பாளூர் வம்சத்துக்கும், பழுவூர் சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த தீராத பகையின் அளவை அவள் அன்று நன்கு அறிந்து கொண்டாள். பழுவூர்க்காரர்கள் சோழ நாட்டில் அப்போது அடைந்திருந்த செல்வாக்கின் அளவையும் தெரிந்து கொண்டாள். இளவரசர் அருள் மொழிவர்மர் விஷயத்தில் தன் மனோரதம் ஈடேறப் பழுவேட்டரையர்கள் அநுமதிப்பார்களா? அவர்கள் அநுமதித்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் சும்மாயிருப்பார்களா? பழுவூர் இளையராணி சம்மதிப்பாளா? அவளுடைய செல்வாக்கும் சக்தியும் உலகம் அறிந்தவை. நந்தினியை நினைக்கும் போதெல்லாம் அழகிய நாகம்பாம்பின் நினைவு வானதிக்கு வந்தது. இளையபிராட்டியின் பேரில் அவளுடைய பகைமையைப்பற்றி அறிந்து கொண்டிருந்தாள். அது தன் பேரிலும் பாயும் அல்லவா? ஏன், பொன்னியின் செல்வரையே அந்த விஷநாகம் தீண்டினாலும் தீண்டக்கூடும்! நள்ளிரவில் நோயாகப் படுத்திருக்கும் சக்கரவர்த்தியின் முன்னால் நந்தினியையொத்த வடிவம் ஒன்று நின்றதே! அது உண்மையில் நந்தினிதானா? சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பீதி நிறைந்த குரலில் ஓலமிட்ட காரணம் என்ன? இளையபிராட்டி இதைப்பற்றி யெல்லாம் ஏன் தன்னிடம் எதுவும் பேசுவதற்கு மறுக்கிறாள்! ஆமாம்! இளையபிராட்டியின் மனமும் மாறிப்போயிருக்கிறது. தன்னிடம் முன்பெல்லாம் போல் அவ்வளவு கலகலப்பாகப் பேசுவதில்லை. அடிக்கடி தன்னை விட்டு விட்டுத் தனிமையை நாடிப் போய்விடுகிறார். அவரை ஏதோ பெருங்கவலை பீடித்திருக்கிறது. ஒரு வேளை பொன்னியின் செல்வரைப் பற்றிய கவலைதானோ என்னவோ? அதனாலேதான் தன்னிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு மறுக்கிறார் போலும்!

இன்றைக்குக்கூடத் திடீரென்று இளையபிராட்டி காணாமல் போய்விட்டார். அவர் இல்லாத சமயங்களில் இந்தப் பெண்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள்? என்ன கொட்டம் அடிக்கிறார்கள்? கவலையென்பதை அறியாதவர்கள். எது எப்படிப் போனாலும் அவர்களுடைய கும்மாளத்துக்குக் குறைவு ஒன்றும் கிடையாது. அவர்களுடைய கேலிப் பேச்சுக்களை வானதியினால் எப்போதுமே சகித்துகொள்ள முடிவதில்லை. அதுவும் இந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரே சோகக் கடலில் வானதி ஆழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய வீண் பேச்சுக்கள் அவளுடைய காதில் நாராசமாக விழுந்தன. இளையபிராட்டி எங்கேதான் போயிருப்பார் என்று தேடிக் கொண்டு புறப்பட்டாள். மூத்த மகாராணியின் அரண்மனையில் ஏதோ சபை கூடியிருக்கிறதென்றும், அங்கே போயிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டாள். ஆகையால் அந்த அரண்மனைக்குச் சென்றாள்.வானதி போவதற்குள், அங்கே சபை கலைந்துவிட்ட்டது. பெரிய மகாராணியும் அவருடைய செல்வப் புதல்வர் மதுராந்தகரும் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தாள். எதனாலோ இந்தச் செய்தி வானதிக்கு மேலும் கவலை உண்டாக்கியது. அங்கிருந்து மறுபடியும் புறப்பட்டாள்.அரண்மனை வாசலில் ஜனத்திரளின் பெரும் இரைச்சல் கேட்டது. விஷயம் இன்னதென்று தெரியவில்லை. இளையபிராட்டியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது. அரண்மனையில் சேடிப் பெண்களை ஒவ்வொருத்தியாக விசாரித்தாள். சற்று முன்னால் ஆழ்வார்க்கடியன் என்னும் வீர வைஷ்ணவனுடன் இளைய பிராட்டி அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும், பிறகு அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கிச் சென்றதாகவும், ஒரு சேடி கூறினாள். இளைய பிராட்டி தனிமையை நாடிச் செல்லும் சமயங்களில் யாரும் வந்து தொந்தரவு செய்வதை இப்போதெல்லாம் அவர் விரும்புவதில்லை. ஆகையால் ஓடைப் பக்கம் இளையபிராட்டியைத் தேடிக்கொண்டு, போகலாமா வேண்டாமா என்று வானதி தயங்கினாள். அச்சமயம் வாரிணி என்னும் மங்கை ஓட்டமாக ஓடிவந்தாள்.

"பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கிவிட்டாராம்!" என்ற பயங்கரச் செய்தியைச் சொல்லிவிட்டு அலறி அழுதாள்.மற்றப் பெண்களும் இதைக் கேட்டு 'ஓ' வென்று கதற தொடங்கினார்கள். வானதிக்கோ முதலில் எவ்வித உணர்ச்சியும் உண்டாகவில்லை. சும்மா நின்றவளை மற்றப் பெண்கள் உற்று நோக்கினார்கள்.

"அடிப்பாவி! உன்னுடைய துரதிஷ்டத்தினால் தான் இளவரசர் கடலில் மூழ்கினார்!" என்று அவ்வளவு கண்களும் அவளை நோக்கி இடித்துச் சொல்வதுபோல் காணப்பட்டன. வானதியினால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. அங்கு நிற்கவும் முடியவில்லை. அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கி ஓடினாள். ஓடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது வானதியின் உள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது. "இளவரசர் கடலில் மூழ்கிவிட்டார்" என்ற வார்த்தைகளின் பொருள் அவளுக்கு விளங்கியது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை மீறிக்கொண்டு மற்றோர் எண்ணம் மேலேழுந்தது. சென்ற சில தினங்களாத் தண்ணீரைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இளவரசரின் முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கரையில் நின்று பார்க்கும் போதெல்லாம் அவருடையே முகம் தத்ரூபமாகத் தண்ணீரில் தோன்றும். தொடுவதற்குப் போனால் மறைந்து விடும். அதன் காரணம் என்னவென்பது வானதிக்குப் புலனாயிற்று. இளவரசர் கடலில் மூழ்கியபோது என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்; என்னை அழைத்துமிருக்கிறார். அதை அறியாமல் பாவி நான் கரையிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்! ஆஹா! என்ன தவறு செய்து விட்டேன்! போனதை நினைப்பதில் இனிப் பயனில்லை. இனிச் செய்யவேண்டியது என்ன? பேதைப் பெண்ணே! இனிச் செய்யவேண்டியதைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா! யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? அரண்மனைத் தோட்டத்தை அடுத்துள்ள ஓடை அரசலாற்றில் கலக்கிறது. அரசலாறு கடலில் போய்ச் சங்கமமாகிறது. கடலின் அடியில் காத்திருக்கிறார் இளவரசர். எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். கடலின் அடியில் முத்துக்களாலும், பவளங்காலும் ஆன அற்புத மாளிகையில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்திக்கப் போகாமல் இந்த உலகத்தில் எனக்கு வேறென்ன வேலை?... யாருக்காக இங்கே நான் இருக்க வேண்டும்?...

இவ்வாறு வானதி தீர்மானம் செய்ததும் வானதியின் உள்ளத்தில் ஒருவித அமைதியே உண்டாகிவிட்டது; அவளது பரப்பரப்பு அடங்கிவிட்டது; துயரம் நீங்கிவிட்டது; கவலை தீர்ந்துவிட்டது. நேரே ஓடைக் கரைக்குச் சென்றாள். பளிங்குக் கல்லினாலான படிக்கட்டுகளில் இறங்கி நின்றாள்; சுற்று முற்றும் பார்த்தாள். அதோ தூரத்தில் படகு ஒன்று வருவது தெரிந்தது. அதில் இருப்பவர் இளையபிராட்டிதான்.அவருடன் இருக்கும் ஆடவன் யார்? குடந்தை சோதிடர் வீட்டில் முதலில் சந்தித்து, இலங்கைக்கு ஓலை எடுத்துச் சென்ற வாலிபன் போலத் தோன்றுகிறது.இளவரசரைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தவன் அவன்தான் போலும்! அதனாலேதான் அவனை இளையபிராட்டி தனியாக அழைத்துப் போகிறார்; விவரங்களைக் கேட்டு, அறிந்திருக்கிறார்.எனக்குத் தெரிந்தால் கஷ்டப்படுவேன் என்று என்னை விட்டுவிட்டுப் போய் இருக்கிறார். அவர் வந்துவிட்டால் என் இஷ்டப்படி செய்ய முடியாது. ஏதாவது சமாதானம் சொல்லப்பார்ப்பார்; ஆறுதல் கூறப்பார்ப்பார், நான் இளவரசரைப் போய்ச் சேர்வதைக் கட்டாயம் தடுத்துவிடுவார். ஆனாலும், அவரிடம் சொல்லாமல், கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொள்ளாமல் போவது நியாயமா? தாய் தந்தையற்ற இந்த அனாதைப் பெண்ணிடம் இத்தனை அன்பாக இருந்தாரே! அவருக்கு ஒரு நன்றி வார்த்தையாவது சொல்ல வேண்டாமா?... முடியாது! இனி ஒரு கணமும் காத்திருக்க முடியாது! இதோ தண்ணீரில் அவர் முகம் தெரிகிறது. இதோ அவருடைய முழு உருவமும் பொலிகிறது. என்னை அவர் அழைக்கிறர்; புன்னகை செய்து கூப்பிடுகிறார். "உன்னை நான் மணம் புரிந்து கொள்வதற்கு எல்லாத் தடைகளும் நீங்கி விட்டன, வா!" என்று அழைக்கிறார். இன்னும் ஏன் தாமதம்?.. ஆகா! தலை ஏன் இப்படிச் சுற்றுகிறது? பாழும் மயக்கம் வருகிறதா, என்ன? மயக்கம் வந்தால் பாதகமில்லை. கரையில் விழாமல் இந்த ஓடைத் தண்ணீரில் விழுந்தால் போதும்!...

வானதியின் மனோரதம் நிறைவேறியது. அவள் தண்ணீரிலேதான் விழுந்தாள். கொதித்துக் கொண்டிருந்த உடம்பு இனிதாகக் குளிர்ந்தது, இதயம் குளிர்ந்தது. கீழே கீழே கீழே போய்க் கொண்டிருந்தாள். எத்தனை காலம் போனாள் என்று சொல்லமுடியாது. சில வினாடி நேரமாகவும் இருக்கலாம்; நீண்ட பல யுகங்களாகவும் இருக்கலாம்.

ஆம், கடலின் அடியிலுள்ள அற்புத லோகத்துக்கு அவள் வந்து விட்டாள். நாகலோகம் என்பது இதுதான் போலும்! ஆகா எத்தகைய அழகிய மாளிகைகள்! எத்தனை அடுக்கு மெத்தைகள் முடிவில்லாமல், சிகரம் எங்கே இருக்கிறதென்று தெரியாமல் அல்லவா, இம்மாளிகைகள் உயர்ந்து விளங்குகின்றன! இங்கு உள்ள வௌிச்சம் எதனால் இவ்வளவு குளிர்ந்து மனோரம்மியமாக இருக்கிறது? தண்ணீருக்குள் புகுந்து வருவதால் ஒளிக்கிரணங்களும் குளிர்ந்திருக்கின்ற போலும்! ஒளி எங்கிருந்து வருகிறது? மாளிகைச் சுவர்களிலிருந்தே வருகிறது போலிருக்கிறது! ஆம். அதில் வியப்பில்லைதான்! தங்கத்தினாலும், முத்துகளாலும், வைர வைடூரியங்களாலும், நாக சர்ப்பங்களின் சிரோரத்தினங்களாலும் ஆன விசித்திர மாட மாளிகைகள் குளிர்ந்த வௌிச்சத்தைப் பரப்புவது இயல்புதானே?

அதோ கூட்டமாக வருகிறவர்கள் யார்? அவர்களுடைய தேகங்கள் எப்படிக் காந்தி மயமாயிருக்கின்றன? முகங்களிலே தான் என்ன தேஜஸ்? இவர்களெல்லாம் தேவலோகத்து ஸ்திரீ புருஷர்களைப் போல் அல்லவா தோற்றமளிக்கிறார்கள்? நாம் வந்திருப்பது ஒரு வேளை நாகலோகமில்லையோ? தேவலோகத்துக்கு வந்துவிட்டோமோ!...

பிறகு, கனவுக்குள் ஒரு கனவைப்போல சில நிகழ்ச்சிகள் அதிவேகமாக நடந்தேறின. சிங்கார அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த மணிமண்டபம் ஒன்றுக்கு வானதியை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். மண்டபத்தில் மத்தியில் பொன்னியின் செல்வர் தமது பொன் முகத்தில் புன்னகை பொலிய நின்று வானதியை வரவேற்றார். தேவ துந்துபிகள் முழங்க, மணிகளும் மலர்களும் பொழிய, மங்கள கோஷங்கள் ஒலிக்க, இளவரசரும் வானதியும் மாலை மாற்றித் திருமணம் புரிந்து கொண்டார்கள். அந்த ஆனந்தத்தின் மிகுதியைத் தாங்க முடியாமல் வானதி மூர்ச்சையாகி விழுந்தாள். வெகுநேரம் நினைவின்றிக் கிடந்த பிறகு இருகரங்கள் அவளைத் தூக்கி எடுத்தன. அக்கரங்கள் பொன்னியின் செல்வருடைய திருக்கரங்கள் என்று முதலில் வானதி கருதினாள். அவர்தான் தன்னைத் தூக்கியெடுத்து, வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டு மூர்ச்சைத் தௌிவிக்கிறார் என்று எண்ணினாள். ஆனால், கைகளிலே வளையல் தட்டுப் பட்டதும் சிறிது ஐயம் உதித்தது. "வானதி! வானதி! இப்படிச் செய்துவிட்டாயே!" என்ற குரலும் பெண்குரலாக ஒலித்தது. மிகமிகப் பிரயத்தனம் செய்து வானதி சிறிதளவு கண்ணிமைகளைத் திறந்து பார்த்தாள். குந்தவையின் முகம் அவள் கண்ணில் பட்டது. "அக்கா! அக்கா! என் கலியாணத்துக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? தங்களைக் காணவில்லையே?" என்று வானதியின் வாய் முணுமுணுத்தது.

பக்க தலைப்பு



இருபத்துநான்காம் அத்தியாயம்
நினைவு வந்தது!

வானதி மீண்டும் ஒரு முறை நினைவற்ற நிலையை அடைந்தாள். அவளுடைய கண்களும் மூடிக் கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாகச் சுய நினைவு வரத் தொடங்கியது. நாகலோகத்திலோ, தேவலோகத்திலோ, தான் இளவரசரை மணந்தது வெறும் பிரமை என்பதை உணர்ந்தாள். இளவரசரைப் பற்றிய துயரமான செய்தி கேட்டதையும், அதன் பேரில் தான் ஓடைக் கரையில் வந்து நின்றதையும், தலை சுற்றி நீரில் விழுந்ததையும் நினைவுபடுத்திக் கொண்டாள். இந்த நினைவுகள் அவளுக்கு எல்லையற்ற ஏமாற்றத்தை அளித்தன; நெஞ்சில் சுருக்கென்று ஈட்டி பாய்வது போன்ற வலியையும் அளித்தன. கண்களைத் திறக்க முயன்றாள், ஆனால் முடியவில்லை. தன்னைத் தண்ணீரிலிருந்து தூக்கிக் கரை சேர்த்தது யாராயிருக்கும்? இளைய பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் படகில் வந்து கொண்டிருந்த குந்தவை தேவியாகத்தான் இருக்க வேண்டும். தன்னை எதற்காக அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்? ஒரேயடியாக முழுகித் தொலைந்து போகும்படி விட்டிருக்கக் கூடாதா? கண்களைத் திறந்து பேசுவதற்கு முடிந்தவுடனே, "ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்?" என்று இளைய பிராட்டியுடன் சண்டை பிடிக்க வேண்டும்! தம்முடைய அருமைத் தம்பியிடம் அவருடைய அன்பு இவ்வளவுதானா?...

இதோ இளையபிராட்டி பேசுகிறார். என்ன சொல்கிறார்? யாரிடம் சொல்கிறார்? கேட்கலாம்.

"மயக்கத்தில் ஏதேதோ பிதற்றுகிறாள்! இந்த மட்டும் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்! நம்முடைய படகு மட்டும் இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்திருந்தால்? இவள் ஓடையில் விழுந்தது நம் கண்ணில் படாமற் போயிருந்தால்? அதை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது!"

"நாம் பாராமல் விட்டிருந்தால், ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிருக்கும் இந்தப் பெண்ணின் வாழ்க்கை இனிதாக முடிந்திருக்கும். தங்களால் உயிர் பிழைத்த கொடும்பாளூர் இளவரசி வாழ்க்கையில் எவ்வளவோ மனவேதனைப்படவேண்டியிருக்கும்..."

ஆகா! இது யார்? நம்மிடம் இவ்வளவு அநுதாபத்துடன் பேசுகிறது? ஆம், அந்த வாலிபர் தன்; குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரசலாற்றங்கரையிலும் பார்த்த அந்த வீர வாலிபர் தான்! இளவரசர் கடலில் முழுகிய செய்தியையும் அவரே கொண்டு வந்திருக்க வேண்டும். இன்னும் இவர்கள் என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள்? கேட்கலாம், கண்ணைத் திறக்க முடியாவிட்டாலும் காது நன்றாய்க் கேட்கிறதல்லவா!'

"இது என்ன, இவ்வளவு நெஞ்சிரக்கம் இல்லாமல் பேசுகிறீர்? ஆண்பிள்ளைகளின் மனதே கல் மனதாகத்தான் இருக்குமோ?" என்றது இளையபிராட்டியின் குரல்.

"அப்படிக் கல் நெஞ்சன் என்று தீர்ப்புக் கூறும் படியாக இப்போது நான் என்ன சொல்லி விட்டேன்?"

"இந்தப் பெண் இறந்திருந்தால் நல்லது என்று சொன்னீரே, அது போதாதா? எவ்வளவு சிரமம் எடுத்து இவளை நான் வளர்த்து வருகிறேன் தெரியுமா?..."

"இவள் பிதற்றிய வார்த்தைகளைத் தாங்கள் கேட்டீர்களா?"

"உம்முடைய செவிகளில் என்ன விழுந்தது?"

"இளவரசரை மணந்து கொள்வது பற்றி ஏதோ சொன்னதாகக் காதில் விழுந்தது..."

"ஆம், நினைவு தெரியாத மயக்கத்திலே கூட அவளுடைய வாய் அப்படி முணுமுணுத்தது. இளவரசர் மீது ஆசை அவள் உள்ளத்தில் அப்படி வேரூன்றியிருக்கிறது."

"அந்த ஆசை இந்தப் பெண்ணுக்கு நல்லதல்ல! அதனால் துன்பமும், ஏமாற்றமுந்தான் ஏற்படும்."

"ஏன் அவ்வாறு சொல்கிறீர்? இவளைக் காட்டிலும் இளவரசருக்கு ஏற்ற உயர்குலப் பெண் வேறு யார்? புராதனமான கொடும்பாளூர் வீரவம்சத்தைப் பற்றி உமக்குத் தெரியாதா?"

"நன்றாய்த் தெரியும். நான் நினைப்பது ஒன்று; தாங்கள் சொல்வது இன்னொன்று. இந்தப் பெண் எவ்வளவு உயர்குலமாயிருந்தால் என்ன? இவள் மனத்திலுள்ள சபலம் நிறைவேறப் போவதில்லை..."

"கட்டாயம் நிறைவேறியே தீரும். அது இவள் மனத்தில் உள்ள சபலம் அன்று. என்னுடைய மனோரதம்; நான் செய்து இருக்கும் தீர்மானம்."

"தங்கள் தீர்மானமாயினும், இந்த விஷயத்தில் நிறைவேறாது."

"ஏன் மீண்டும் அவ்விதம் சொல்கிறீர்? இளவரசர் நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பத்திரமாயிருக்கிறார் என்று சற்றுமுன் நீ கூறியது உண்மைதானே?"

ஆகா! இது என்ன இன்பமான செய்தி? இளவரசர் பத்திரமாயிருக்கிறாரா? நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறாரா? இந்தச் செய்தியைக் கேட்க இந்தச் செவிகள் கொடுத்து வைத்திருந்தனவே? ஓடை நீரில் முழுகிச் சாகாமல் நான் உயிர் பிழைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! இளையபிராட்டிக்கு எத்தனையோ விதத்தில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதுவும் ஒன்று இப்ப