கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
மூன்றாம் பாகம் - கொலை வாள்
பதினொன்றாம்
அத்தியாயம் - கொல்லுப்பட்டறை பன்னிரண்டாம்
அத்தியாயம் - "தீயிலே தள்ளு!" பதின்மூன்றாம்
அத்தியாயம் - விஷ பாணம் பதினான்காம்
அத்தியாயம் - பறக்கும் குதிரை பதினைந்தாம்
அத்தியாயம் - காலாமுகர்கள் பதினாறாம்
அத்தியாயம் - மதுராந்தகத் தேவர் பதினேழாம்
அத்தியாயம் - திருநாரையூர் நம்பி பதினெட்டாம்
அத்தியாயம் - நிமித்தக்காரன் பத்தொன்பதாம்
அத்தியாயம் - சமயசஞ்சீவி இருபதாம்
அத்தியாயம் - தாயும் மகனும்
பதினொன்றாம் அத்தியாயம் கொல்லுப்பட்டறை
வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக
வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம்
இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு
சென்றான். முதலில் கொஞ்ச தூரம் காட்டுப் பாதை வழியே சென்றான். குதிரை இதனால்
மிகவும் கஷ்டப்பட்டுப் போனதை அறிந்தான். வல்லவரையனுக்கும் களைப்பு அதிகமாகவே
இருந்தது. அவன் சிறிது நேரமாவது அயர்ந்து தூங்கிப் பல தினங்கள் ஆகிவிட்டன.
அவ்வப்போது கண்ணை மூடிக்கொண்டு ஆடி விழுந்ததைத் தவிர நிம்மதியாக ஓரிடத்தில்
படுத்துத் தூங்கினோம் என்பது கிடையாது. பழையாறைக்குப் போய் இளவரசியிடம் செய்தியைச்
சொல்லிவிட்டால், அப்புறம் அவனுடைய பொறுப்புத் தீர்ந்தது; நிம்மதியாகத் தூங்கலாம்.
வெகு நேரம் தூங்கலாம்; ஏன், சென்று போன தினங்களுக்கும் சேர்த்து நாள் கணக்கில்
தூங்க வேண்டும் என்று திட்டமிட்டான்.
இளவரசி குந்தவையிடம், "தாங்கள் கூறிய
பணியை நிறைவேற்றிவிட்டேன்" என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை
அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும்
என்பதையும் நினைத்தான். அந்த நினைவு அவனுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது.
இன்னொரு விஷயமும் அவனுக்கு நினைவு வந்தது. காஞ்சியிலிருந்து
புறப்பட்டதிலிருந்து எத்தனை பொய்யும் புனை சுருட்டும் அவன் சொல்லியிருக்கிறான்?
அவசியம் நேரிட்டதனால்தான் கூறினான். ஆயினும் அதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு
உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம்
பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது. இராஜரீக காரியங்களில்
ஈடுபடுகிறவர்களுக்குச் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன்
கருதியிருந்தான். அத்தகைய இராஜரீக தந்திரங்களின் மூலமாக அவனுடைய முன்னோர்கள்
இழந்துவிட்ட ராஜ்யத்தைத் திரும்பிப் பெறலாம் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. அந்த
எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும், சத்திய
தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே
உண்டாகிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு மந்திரவாதியின் காது கேட்க
நேற்றிரவு அவன் கூறிய பொய்யையும் எண்ணிக் கொண்டான். அதனால் ஏதாவது விபரீதம் நேராமல்
இருக்க வேண்டுமே என்று நினைத்தபோது அவன் நெஞ்சு துணுக்கமுற்றது. அதை வேறு யாராவது
கேட்டிருந்தால்? ஒருவேளை குந்தவை தேவியிடமே யாரேனும் சொல்லி வைத்தால்? இளைய
பிராட்டி நம்பிவிட மாட்டாள்! ஆயினும் எவ்வளவு பெரிய ஆபத்து?
இனி,
இவ்வாறெல்லாம் இல்லாததைப் புனைந்து கூறுவதையே விட்டுவிடவேண்டும். உண்மையைச் சொல்ல
வேண்டும்; அதனால் கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டும். அந்த வீர வைஷ்ணவனைப்
போன்றவர்களும், ரவிதாசனைப் போன்றவர்களும் ஒற்றர் வேலை செய்யட்டும். நமக்கு
என்னத்திற்கு அந்தத் தொல்லை? வாளின் துணை கொண்டு நமக்குக் கிடைக்கும் வெற்றி
கிடைக்கட்டும். அதுவே போதும், அதனால் உயிரை இழந்தாலும் சரிதான். தந்திர
மந்திரங்களையெல்லாம் இனிவிட்டுவிட வேண்டியதுதான்.
இவ்வாறு எண்ணமிட்டுக்
கொண்டே சென்றதில் குதிரையின் வேகம் தடைப்பட்டதை அவன் சிறிது நேரம் கவனிக்க வில்லை.
ஏன், குதிரை மீதிலிருந்து சிந்தனை செய்து கொண்டே போனதில் கொஞ்சம் கண்ணயர்ந்தும்
விட்டான். குதிரை ஓரிடத்தில் தடுமாறிக் குனிந்தபோது அவன் திடுக்கிட்டு
விழித்துக்கொண்டான். குதிரை தனது முன்னங்கால் ஒன்றைத் தரையில் ஊன்றி வைக்க
முடியாமல் தத்தளித்தது தெரிந்தது. உடனே கீழே இறங்கினான், குதிரையைத் தட்டிக்
கொடுத்து விட்டு ஊனமடைந்ததாகத் தோன்றிய முன்னங்காலை எடுத்துப் பார்த்தான். அதன்
அடிப்புறத்தில் ஒரு சிறிய கூறிய கல் பொத்துக்கொண்டிருந்தது. அதை லாவகமாக எடுத்து
எறிந்தான். நல்லவளை; பெரிய காயம் ஒன்றும் படவில்லை. மறுபடியும் குதிரையைத் தட்டிக்
கொடுத்து உற்சாகப்படுத்தி விட்டு அதன் முதுகின்மீது ஏறிக் கொண்டான். கப்பலில் அரபு
நாட்டார் பேசிக் கொண்டது நினைவு வந்தது:
"தமிழ் நாட்டார் கொடூரமானவர்கள்;
அறிவும் இல்லாதவர்கள்! குதிரைகளின் குளம்புக்குக் கவசம் அடிக்காமல் வெறுங்காலினால்
ஓடச் செய்கிறார்கள். அப்படி ஓடும் குதிரைகள் எத்தனை நாள் உயிரோடிருக்கும்?"
இதை நினைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரையை ஓட்டினான். வீரர்கள்
போர்களத்துக்குப் போகும்போது மார்பிலே கவசம் தரிப்பார்கள். குதிரைக் குளம்புக்கு
இரும்புக் கவசம் போடுவது அதிசயமான காரியந்தான். ஆயினும் அம்மாதிரி வேறு தேசங்களில்
செய்வதுண்டு என்று முன்னமே கேள்விப்பட்டிருந்தான். முதன்முதலாக எதிர்ப்படும்
கொல்லுப்பட்டறையில் இதைப்பற்றிக் கேட்க வேண்டியதுதான். முடியுமானால் இந்தக்
குதிரையின் குளம்புக்கே கவசம் அடித்துப் பார்க்கலாம். இல்லாவிடில், இது பழையாறை வரை
போய்ச் சேர்வதே கடினம். நடுவில் இது விழுந்துவிட்டால் வேறு குதிரை சம்பாதிக்க
வேண்டும். எப்படிச் சம்பாதிப்பது? யாரிடமாவது திருடத்தான் வேண்டும்! சீச்சீ! அந்த
நினைவே வந்தியத்தேவனுக்கு வெட்கத்தை உண்டாக்கியது.
காட்டுப் பாதையிலிருந்து
உத்தேசமாகக் குதிரையைத் திசை மாற்றிவிட்டுக் கொண்டு போய் வந்தியத்தேவன்
இராஜபாட்டையை அடைந்தான். வந்தது வரட்டும்; இனிமேல் இராஜபாட்டை வழியாகத் தான்
போகவேண்டும். தன்னைத் தெரிந்தவர்கள் யாரும் இந்தப் பக்கத்தில் இருக்க முடியாது.
பழுவேட்டரையர் பரிவாரங்கள் பின்னாலேதான் வரும். மந்திரவாதியும் அப்படித்தான்.
ஆகையால் அபாயம் ஒன்றுமில்லை. மேலும், இராஜபாட்டையோடு போனால் கொல்லுப் பட்டறை
எங்கேயாவது இருக்கும். அதில் குதிரைக் குளம்புக்கு இரும்புக்கவசம் போட முடியுமா
என்று பார்க்கலாம்.
வந்தியத்தேவன் எதிர்பார்த்து வீண் போகவில்லை. சிறிது
தூரம் சென்றதும், ஒரு கிராமம் தென்பட்டது. கிராமத்தில் ஏதோ ஒருவிதக் கிளர்ச்சி
ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஒரு பக்கத்தில் வீதிகளிலும், வீடுகளிலும் தோரணங்கள்
கட்டி அலங்கரித்திருந்தார்கள். ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இந்தப் பக்கமாய்
வரப்போகிறார் என்று அறிந்து இப்படி ஊரை அலங்காரம் செய்திருக்கலாம்.
பழுவேட்டரையரும், அவர் பரிவாரமும் வருவதற்குள் தான் வெகுதூரம் போய்விடலாம் என்பது
நிச்சயம்.
மற்றொரு பக்கத்தில் கிராமத்து ஜனங்கள் - ஸ்திரீகள், புருஷர்கள்,
வயோதிகர்கள், சிறுவர் சிறுமிகள் அனைவரும் அங்கங்கே கும்பல் கும்பலாக நின்று
கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவாயிருக்குமென்று அவனால் ஊகிக்க
முடியவில்லை. அவர்களில் சிலர் குதிரையில் வருகிறவனைக் கண்டதும் அவனை நிறுத்தும்
எண்ணத்தோடு அருகில் வந்தார்கள். வந்தியத்தேவன் அதற்கு இடங்கொடாமல் குதிரையைத் தட்டி
விட்டுக் கொண்டு மேலே போனான். வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ள அவன்
இஷ்டப்படவில்லை.
கிராமத்தைத் தாண்டியதும் சாலை ஓரத்தில் கொல்லுப் பட்டறை
ஒன்று இருக்கக் கண்டான். அதைக் கடந்து மேலே செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. குதிரையை
நிறுத்திவிட்டுப் பட்டறைக்குள் சென்றான்.
பட்டறைக்குள் கொல்லன் ஒருவன் வேலை
செய்து கொண்டிருக்கக் கண்டான். ஒரு சிறுவன் துருத்து ஊதிக் கொண்டிருந்தான்.
வந்தியத்தேவன் உள்ளே பிரவேசித்த அதே சமயத்தில் இன்னொரு மனிதன் பின்பக்கமாக
மறைந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இதிலெல்லாம் அவன் கவனம் செல்லவில்லை.
கொல்லன் கையில் வைத்துக் கொண்டிருந்த வாள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
கவர்ந்தது. அது ஓர் அபூர்வமான வாள். பட்டறையில் வைத்துக் கொல்லன் அதைச்
செப்பனிட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அதன் ஒரு பகுதி பளபளவென்று வெள்ளியைப்
போலப் பிரகாசித்தது. இன்னொரு பகுதி நெருப்பிலிருந்து அப்போது தான்
எடுக்கப்பட்டிருந்த படியால் தங்க நிறச் செந்தழல் பிழம்பைப்போல் ஜொலித்தது. "வாள்
என்றால் இதுவல்லவா வாள்!" என்று வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் எண்ணி வியந்தான்.
பக்க
தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம் "தீயிலே தள்ளு!"
கொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான்.
வந்தியத்தேவன் இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து பார்த்தான்.
"யார், அப்பனே, நீ! உனக்கு என்ன செய்ய வேண்டும்? வாள், வேல் ஏதாவது
வேண்டுமா? வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டதே? நீ
வாளுக்கு எங்கே வந்திருக்கப் போகிறாய்?" என்றான் கொல்லன்.
"என்ன ஐயா,
இவ்வாறு சொல்கிறீர்? உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே வாளுக்குத்
தேவையில்லையென்கிறீரே?" என்றான் வந்தியத்தேவன்.
"இது ஏதோ அபூர்வமாக வந்த
வேலை; பழைய வாளைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தார்கள். சில வருஷங்களுக்கு
முன்னால் பாண்டிய நாட்டுப் போரும், வட பெண்ணைப் போரும் நடந்து கொண்டிருந்தபோது
இந்தப் பட்டறையில் மலை மலையாக வேலும் வாளும் குவிந்திருக்கும். இலங்கை யுத்தம்
ஆரம்பமான புதிதில் கூட ஆயுதங்களுக்குக் கிராக்கியிருந்தது. இப்போது வாளையும்
வேலையும் கேட்பாரில்லை. பழைய வாள்களையும் வேல்களையும், என்னிடம் கொண்டு வந்து
விற்பதற்காக வருகிறார்கள். நீ கூட அதற்காகத் தான் ஒரு வேளை வந்தாயா என்ன?"
"இல்லை, இல்லை! இன்னும் சில காலத்துக்கு எனக்கு வாள்
தேவையாயிருக்கிறது.ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டால், அப்புறம் கையில்
தாளத்தை எடுத்துக் கொண்டு தேவாரம் பாடிக்கொண்டு சிவ ஸ்தலயாத்திரை புறப்படுவேன்.
அப்போது வேணுமானால் என் ஆயுதங்களை உம்மிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்."
"பின்னே, இப்போது எதற்காக என்னைத் தேடி வந்தாய்?"
"என்னுடைய
குதிரையைக் காட்டிலும் மேட்டிலும் விட்டுக் கொண்டு வந்தேன். இன்னும் வெகுதூரம்
போயாக வேண்டும். குதிரைகளின் கால் குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவதாமே! அது
உம்மால் முடியுமா?"
"ஆம், அரேபியா தேசத்தில் அப்படித்தான் வழக்கம்.
இங்கேயும் சிலர் இப்போது குதிரைக் குளம்புக்கு இரும்பு லாடம் அடிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் அந்த வேலையில் பழக்கம் உண்டு."
"என் குதிரைக்கு லாடம் போட்டுத் தருவீரா?"
"அதற்கு நேரம் அதிகம்
பிடிக்கும். கையில் உள்ள வேலையை முடித்துவிட்டுத் தான் உன் வேலையை எடுத்துக் கொள்ள
முடியும்."
வந்தியத்தேவன் யோசித்தான், அவனுக்கும் களைப்பாயிருந்தது.
குதிரையும் கஷ்டப்பட்டுப் போயிருந்தது. சிறிது நேரம் காத்திருந்து, அதன்
குளம்புகளுக்குக் கவசம் போட்டுக் கொண்டே போவது என்று முடிவு செய்தான்.
"கைவேலை முடியும் வரையில் காத்திருக்கிறேன், அப்புறமாவது உடனே செய்து
தருவீர் அல்லவா?"
"அதற்கென்ன, ஆகட்டும்!"
வந்தியத்தேவன் சற்றுநேரம்
கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"இந்த
வாள் அபூர்வமான வேலைப்பாடு அமைந்ததாயிருக்கிறதே? இராஜகுலத்து வாள் மாதிரி அல்லவா
இருக்கிறது? இது யாருடைய வாள்?" என்றான்.
"அப்பனே! இங்கிருந்து கொஞ்ச
தூரத்தில் அரிச்சந்திர நதி என்று ஓர் ஆறு ஓடுகிறது."
"நானும்
கேள்விப்பட்டிருந்தேன். அதனால் என்ன?"
"நான் அரிச்சந்திர நதிக்குச் சென்று
அடிக்கடி தலை முழுகி வருவது வழக்கம்."
"மிக்க நல்ல காரியம். போகும்
இடத்துக்குப் புண்ணியம்."
"ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும்,
பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன்."
"அதற்கு என்ன
ஆட்சேபம்? உம்மை யார் பொய் சொல்லச் சொன்னது? நான் சொல்ல்வில்லையே?"
"நீ
என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால், நானும் பொய்
சொல்லாமலிருக்கலாம்!"
"ஓஹோ! அப்படியா சமாசாரம்?" என்று வந்தியத்தேவன்
மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.
"நான் கேள்வியும் கேட்கவில்லை. நீர் விரத
பங்கமும் செய்ய வேண்டாம்.கைவேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு, என் வேலையை
எடுத்துக்கொண்டு செய்து கொடுத்தால் போதும்!"
கொல்லன் மௌனமாகத் தன் வேலையில்
கவனம் செலுத்தினான்.
வந்தியத்தேவன் வாளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தான். அதன் அடிப்பகுதியில், பிடியின் பக்கத்தில் மீன் உருவம்
பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தான். மீன் உருவம் எதற்காக? அதற்கு ஏதேனும்
பொருள் உண்டா? வெறும் அலங்காரத்துக்குத்தானா?
கொல்லன் அந்த மீன் உருவம்
உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான்
மீன் உருவம் தெரியாமல் மறைப்பதுதான் அவனுடைய நோக்கம் என்று தோன்றியது. எதற்காக
இக்காரியம் என்று வல்லவரையன் யோசனை செய்தான். யோசனை செய்து கொண்டிருக்கும் போதே,
அவன் கண்கள் சுழலத் தொடங்கின. பல நாளாக அவனால் விரட்டியடிக்கப்பட்டு வந்த
நித்திராதேவி இப்போது தன் மோக மாயவலையை அவன் பேரில் பலமாக வீச ஆரம்பித்தாள்.
வந்தியத்தேவன் அதிலிருந்து தப்ப முடியவில்லை. சிறிது நேரம் உட்கார்ந்தபடியே ஆடி
விழுந்தான். பிறகு அப்படியே கொல்லன் உலைக்குப் பக்கத்தில், படுத்துத் தூங்கிப்
போனான்.
தூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் கண்டான். கத்தியைப்
பற்றியே ஒரு கனவு. ஒருவன் வந்து கொல்லனிடம் கத்தியைத் திரும்பக் கேட்டான், கொல்லன்
கொடுத்தான். "என்ன கூலி வேண்டும்?" என்று அவன் கேட்டான். "கூலி ஒன்றும் வேண்டாம்.
பழுவூர் இளையராணிக்கு நான் அளிக்கும் காணிக்கையாயிருக்கட்டும்" என்றான் கொல்லன்.
"ஜாக்கிரதை! இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக, பழுவூர்
இளைய ராணியின் பெயரைச் சொல்லவே சொல்லாதே! சொன்னால் என்ன செய்வோம் தெரியுமா?..."
"நான் எதற்காக ஐயா, பழுவூர் ராணியின் பெயரைச் சொல்லப் போகிறேன்?
ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்."
"இதோ இங்கே யாரோ ஒரு வாலிபன்
படுத்திருக்கிறானே! சப்தம் போட்டுப் பேசுகிறாயே?"
"அவன் ஆழ்ந்த
நித்திரையில் இருக்கிறான். இடிஇடித்தாலும் அவனுக்குக் காது கேட்காது."
"ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக்
களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை தீர்த்துவிடு!"
இந்தச்
சம்பாஷணையின் முடிவில் கொல்லனும், கத்திக்கும் உடையனும் வந்தியத்தேவனை இழுத்துப்
போய் உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான். பிறகு அந்தக் கனவு
மாறியது.
வந்தியத்தேவனை யம தூதர்கள் நரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யம
தர்மராஜன் பூலோகத்தில் வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான். "பொய்
சொல்வதில் இவன் நிபுணன். எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் என்பதற்கு அளவே
கிடையாது" என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்துவிட்டு.
"இல்லை, இல்லை! எல்லாம் சக்கரவர்த்தி குடும்பத்தாரின் சேவையிலேதான்
சொன்னேன். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்காகச் சில பொய்களைச் சொன்னேன்."
"எதற்காகச் சொல்லியிருந்தாலும் பொய் பொய்தான். தள்ளுங்கள் இவனை நரகத்தின்
பெரிய நெருப்புக் குழியில்!" என்றான் யமன். உடனே நரகத்தின் உட்புறத்திலிருந்து
நூறாயிரம் குரல்கள் பயங்கரமாக ஊளையிட்டன.
யம தூதர்கள் அவனை அழைத்துப்
போனார்கள். பயங்கரமாகக் கொழுந்து விட்டெரிந்த பெரு நெருப்பில் அவனைத் தள்ளுவதற்கு
ஆயத்தம் செய்தார்கள். அந்த யம தூதர்கள் இருவரையும் பார்த்தார், முகங்கள்
பழுவேட்டரையர்களின் முகங்களைப் போலிருந்தன. அதைப் பற்றி அவன் திடுக்கிட்டு
நிற்கையில் குந்தவைதேவி அங்கே வந்தாள். "என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே
அவர் பொய் சொன்னார். ஆகையால், அவருக்குப் பதிலாக என்னை நெருப்பில் போடுங்கள்!"
என்று கூறினாள்.
இந்தச் சமயத்தில் நந்தினி தேவியும் அங்கு எப்படியோ வந்து
சேர்ந்தாள். "இரண்டு பேரையுமே சேர்த்து நெருப்பிலே போட்டு விடுங்கள்!" என்றாள்
அந்தப் புண்ணியவதி. யம தூதர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து நெருப்பில் தள்ளப்
போனார்கள். "ஐயோ வேண்டாம்" என்று வந்தியத்தேவன் அலறிக் கொண்டு திமிறினான்; கண்
விழித்து எழுந்து உட்கார்ந்தான். கண்டது கனவு என்ற எண்ணம் ஆறுதல் கொடுத்தது. ஆனால்
எல்லாம் உண்மையாக நடந்தது போலவே தோன்றிய படியால் அவன் உடம்பு இன்னும் நடுங்கிக்
கொண்டிருந்தது.
சேச்சே! இனிமேல் எக்காரணத்திற்காகவும் பொய் சொல்லக்கூடாது
என்று தீர்மானித்துக் கொண்டான்.
"ரொம்பநேரம் தூங்கிப்போய் விட்டேனா!" என்று
கொல்லனைப் பார்த்துக் கேட்டான்.
"அப்படி ரொம்ப நேரம் ஆகிவிடவில்லை, இரண்டு
ஜாமந்தான். அப்பனே! நீ கும்பகர்ணன் வம்சத்தில் வந்தவனோ? பட்டப்பகலில் இப்படித்
தூங்குகிறாயே? இரவிலே எப்படித் தூங்கமாட்டாய்?" என்றான் கொல்லன்.
"கடவுளே!
இரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன்? குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி
விட்டதா?"
"இனிமேல்தான் செய்யவேண்டும். ஆனால் உன்னைப் போன்ற தூங்கு
மூஞ்சிக்கு அதனால் என்ன பயன்? நீ குதிரையையே பறிகொடுத்து விடுவாய்! இன்னும் உன்னையே
கூடப் பறிகொடுத்து விடுவாய்!"
வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அவன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. எழுந்து ஓடிப் போய் வாசற் பக்கம் பார்த்தான்.
குதிரையை நிறுத்திய இடத்தில் அதைக் காணோம்!
"ஐயோ! குதிரை எங்கே?" என்று
இரைச்சல் போட்டுக் கொண்டே உடைவாளின் பிடியில் கை வைத்தான். பயப்படாதே! உன் குதிரை
பத்திரமாயிருக்கிறது. கொல்லைப்புறத்தில் போய்ப் பார்!"
வந்தியத்தேவன்
கொல்லைப்புறம் சென்று பார்த்தான். அங்கே மூன்று பக்கம் அடைக்கப்பட்ட கீத்துக்
கொட்டகையில் அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. கொல்லன் உலைக்களம் ஊதிய
சிறுபிள்ளை அதன் வாயில் புல் கொடுத்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனைப்
பார்த்ததும் குதிரை உடலைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது.
"ஐயா! இங்கே
வந்து கொஞ்சம் உங்கள் குதிரையைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் குளம்புகளுக்கு அளவு
எடுக்க வேண்டும்!" என்றான் பையன்.
வந்தியத்தேவன் குதிரை அருகில் சென்று
அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றான். பையன் குதிரையின் குளம்புக்கு அளவு
எடுத்தான்.
"இதை யார் இங்கே கொண்டு வந்து கட்டினார்கள்?" என்று
வந்தியத்தேவன் கேட்டான்.
"நான்தான் கட்டினேன்."
"எதற்காக?"
"அப்பா கட்டச் சொன்னார்."
"அது எதற்காக?"
இந்த ஊர்
வழியாகச் சற்று முன்னால் பெரிய பழுவேட்டரையரும், அவர் பரிவாரங்களும் போனார்கள்.
குதிரையை வாசலில் பார்த்திருந்தால் கட்டாயம் கொண்டு போயிருப்பார்கள்.
வந்தியத்தேவனுக்குப் பழைய ஞாபகம் - திரு நாராயணபுரத்து ஞாபகம் - வந்தது.
தான் செய்த தவறை எண்ணி வெட்கம் அடைந்தான். கொல்லனிடமும், அவன் மகனிடமும்
மனத்திற்குள் நன்றி உணர்ச்சி கொண்டான். குதிரையின் குளம்புக்கு அளவு எடுத்துக்
கொண்டதும் இருவரும் உலைக் களத்துக்குள் வந்தார்கள்.
கொல்லன்
இரும்புத்துண்டை எடுத்துக் குளம்பைப் போல் வளைத்து வேலை செய்யத் தொடங்கினான்.
"என் குதிரையைக் காப்பாற்றிக் கொடுத்தீரே? அதற்காக மிக்க வந்தனம்" என்றான்
வல்லவரையன்.
"என்னைத் தேடி வருகிறவர்களுடைய உடைமையை நான் காப்பாற்றிக்
கொடுக்க வேண்டுமல்லவா? அது என் கடமை."
"பழுவேட்டரையர் பரிவாரம் இந்தப்
பக்கம் போய் எத்தனை நேரம் இருக்கும்?"
"இரண்டு நாழிகைக்கு மேலேயிருக்கும்.
அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் நீ தூங்கிக் கொண்டிருந்தாயே, அதை நினைத்தால்தான்
எனக்கு வியப்பாக இருக்கிறது."
"நான்தான் தூங்கிப் போய் விட்டேன். இத்தனை
நேரம் நீர் வீணாக்கி விட்டீரே? அவர்கள் போன பிற்பாடாவது வேலையை உடனே
ஆரம்பித்திருக்கலாமே?"
"எப்படி ஆரம்பிப்பது? அவர்கள் கொண்டு வந்த
செய்தியைக் கேட்ட பிறகு, யாருக்கு வேலை செய்ய மனம் வரும்? உனக்காக மனத்தைத்
திடப்படுத்திக் கொண்டு இதை நான் செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய்?"
அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன வாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே
வந்தியத்தேவன், "இலங்கையிலிருந்து வருகிறேன்" என்றான்.
கொல்லன் அவனுடைய
முகத்தை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு, "இலங்கையில்
இருந்தபோது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்த்தாயா?" என்றான்.
உண்மையே
சொல்லுவதென்று சற்றுமுன் சங்கல்பம் செய்து கொண்டிருக்க வந்தியத்தேவன், "பார்த்தேன்"
என்றான்.
"கடைசியாக அவரை நீ எப்போது பார்த்தாய்?"
"இன்று காலையில்
பார்த்தேன்."
கொல்லன் வந்தியத்தேவனைக் கோபமாய் நோக்கினான்.
"விளையாடுகிறாயா தம்பி?"
"இல்லை ஐயா! உண்மையைத்தான் சொன்னேன்."
"இளவரசர் இப்போது எங்கேயிருக்கிறார் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே?"
"ஓ! கேட்டால் சொல்லுவேன்!"
"இளவரசர் எங்கே இருக்கிறார், சொல்
பார்க்கலாம்."
"நாகைப்பட்டினம், சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார்!"
"அப்பனே நானும் எத்தனையோ பொய்யர்களைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல்
கட்டுக்கதை புனைந்துரைக்கக் கூடியவர்களைப் பார்த்ததேயில்லை."
வந்தியத்தேவன்
தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு
எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். இது
நமது ஜாதக விசேஷம் போலும்!
"தம்பி! நீ இலங்கையிலிருந்து எப்போது
புறப்பட்டாய்?"
"நாலு நாளைக்கு முன்னால்!"
"அதனாலே தான் உனக்குச்
செய்தி தெரியவில்லை."
"என்ன செய்தி ஐயா?"
"பொன்னியின் செல்வரைக்
கடல் கொண்டு விட்டது என்ற செய்திதான்!"
வந்தியத்தேவன் கஷ்டப்பட்டுத்
திடுக்கிடுவது போல் பாசாங்கு செய்தான்.
"ஐயோ, அப்படியா! யார் சொன்னார்கள்?"
"நேற்று முதலாவது இங்கெல்லாம் அப்படிப் பேச்சாயிருந்தது. இன்றைக்குப்
பழுவேட்டரையர் இவ்வழியாகப் போனபோது ஊர்த்தலைவர்கள் அவரைக் கேட்டார்கள். அந்தச்
செய்தி உண்மைதான் என்று பழுவேட்டரையர் கூறினார். அந்தச் சண்டாளப் பாவியின் தலையில்
இடி விழவில்லையே!"
"ஏன் அந்தக் கிழவரை வைகிறாய்?"
"அவராலேதான் இது
நடந்திருக்கிறது. ஏதோ சூழ்ச்சி செய்து இளவரசரை அவரே கடலில் மூழ்க அடித்து விட்டார்
என்று ஊரார் சொல்கிறார்கள். அதனால் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த உபசாரங்களையும்
நிறுத்திவிட்டார்கள்."
"இளவரசர் மீது இந்த ஊராருக்கு அவ்வளவு பிரியமா?"
"கேட்க வேண்டுமா? ஊர் மக்கள் அவ்வளவு பேரும் இப்போது கண்ணீரும்
கம்பலையுமாயிருக்கிறார்கள். இந்த ஊரார் மட்டும் என்ன? சோழநாடு முழுவதும் ஒலமிட்டு
அழப் போகிறது. பழுவேட்டரையர்களைச் சபிக்கப் போகிறது. ஏற்கெனவே, சக்கரவர்த்தி
நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி கேட்டு என்ன பாடு பாடுவாரோ, தெரியாது.
இன்னும் என்னவெல்லாம் விபரீதங்கள் நடக்குமோ? சில நாளாக வானத்தில் தூம கேது தோன்றி
வருகிறதே? அதற்கு ஏதேனும் நடந்துதானே தீரவேண்டும்?"
நடக்ககூடிய விபரீதங்கள்
என்னவாயிருக்கக் கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணிப் பார்த்தான் தான் கூறியதை
இந்தக் கொல்லன் நம்பாமலிருந்ததே நல்லதாய்ப் போயிற்று. தான் இனிமேல் பொய்
சொல்லாவிட்டாலும், இளவரசரைப் பற்றிய உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இளையபிராட்டி ஏதோ முக்கிய காரணத்திற்காகத்தானே அவரைச் சூடாமணி விஹாரத்தில் இருக்கச்
சொல்லியிருக்கிறார்! இளவரசியைக் கண்டு பேசிய பிறகு, அவர் சொல்லும் யோசனைப்படி
நடந்து கொள்ள வேண்டும்.
"தம்பி! என்ன யோசிக்கிறாய்?" என்றான் கொல்லன்.
"நடுக்கடலில் சுழற்காற்றில் நானும் அகப்பட்டுக் கொண்டேன். கடவுள் அருளால்
நான் தப்பிப் பிழைத்ததை நினைத்துப் பார்த்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்."
"கடவுள் அருள் என்பது ஒன்று இருக்கிறதா, என்ன?"
"பெரியவரே! அது
என்ன அப்படிச் சொல்கிறீர்?"
"கடவுள் அருள் என்பதாக ஒன்று இருந்தால்
பழுவேட்டரையர்களின் அக்கிரமங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்குமா! பொன்னியின்
செல்வர் கடலில் மூழ்கியிருப்பாரா?"
"பெரியவரே! பழுவேட்டரையர் அதிகாரத்தில்
உள்ளவர்கள். அவர்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா? யார் காதிலாவது விழுந்தால்?
கொஞ்சம் ஜாக்கிரதையாயிருங்கள்."
"என்னைவிட நீதான் ஜாக்கிரதையாகயிருக்க
வேண்டும். நானாவது விழித்துக் கொண்டிருக்கும் போது பேசுகிறேன்.நீ தூக்கத்தில்
உளறுகிறாய்!"
"ஐயையோ? என்ன உளறினேன்?" பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று
சொன்னாய். பழுவூர் இளைய ராணியைப் பெண் பேய் என்று சொன்னாய். நீ சொன்னது என்னமோ
உண்மைதான். ஆனால் என்னைத் தவிர வேறு யார் காதிலாவது விழுந்தால் உன்கதி என்ன? நீ
அப்படிப் பிதற்றிக் கொண்டிருக்கிற சமயத்திலேதான் அந்தச் சாலை வழியாகப்
பழுவேட்டரையர்களின் பரிவாரங்கள் போயின. எனக்கு ரொம்பத் திகிலாய்ப் போய்விட்டது."
"நீர் என்ன செய்தீர்?"
"வாசற் பக்கம் போய் நின்று இந்த உலைக்
களத்தின் கதவையும் சாத்திக் கொண்டேன். அதற்கு முன்னால் உன் குதிரையைக்
கொல்லைப்புறம் கொண்டு போய்க் கட்டியாயிற்று."
"தூக்கத்தில் நான் இன்னும்
ஏதாவது உளறினேனா?"
"உளறலுக்குக் குறைவேயில்லை."
"ஐயோ! என்ன
உளறினேன்?"
"நீ இளவரசரைப் பழையாறைக்கு வரும்படி வற்புறுத்தினாய். அவர்
பழுவேட்டரையர் கட்டளைப்படி சிறைப்படுவேன் என்றார். இன்னும் என்னவெல்லாமோ சொன்னாய்.
தம்பி! பழையாறை இளைய பிராட்டியைக் குறித்துக் கூட ஏதேதோ சொன்னாய். ஜாக்கிரதை,
அப்பனே! ஜாக்கிரதை!"
வந்தியத்தேவன் வெட்கித் தலை குனிந்தான்.
இளையபிராட்டியைக் குறித்து அனுசிதமாக ஏதாவது பேசி விட்டோமோ என்று பீதி அடைந்தான்
இனிமேல் தூங்குவதாயிருந்தால் தனி அறையில் கதவைத் தாளிட்டுக் கொண்டு தூங்க வேண்டும்.
அல்லது மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலோ, பாலைவனத்திலோ, மலைக் குகையிலோ தூங்க
வேண்டும்.
"தம்பி! சுழற் காற்றில் நீ எப்படி அகப்பட்டுக் கொண்டாய்?
எப்படிப் தப்பிப் பிழைத்தாய்?"
"நான் ஏறி வந்த கப்பல் இடி விழுந்து கடலில்
முழுகி விட்டது. முறிந்த பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் மிதந்தேன்.
பிறகு ஓடக்காரப் பெண் ஒருத்தியின் உதவியால் தப்பிக் கரையேறினேன்."
"இளவரசரும் ஒருவேளை அவ்விதம் தப்பிப் பிழைத்திருக்கலாம் அல்லவா?"
"கடவுள் சித்தமாயிருந்தால் தப்பிப் பிழைத்திருக்கலாம்."
"நேற்றிரவு
நீ எங்கே தங்கினாய்?"
"கோடிக்கரையிலேதான் கடற்கரையோரத்தில் பழுவேட்டரையர்
பரிவாரங்கள் ஒரே கூட்டமாயிருந்தன. ஆகையால் குழகர் கோவிலில் சிறிது நேரம் படுத்துத்
தூங்கினேன். பொழுது விடிவதற்குள் புறப்பட்டு விட்டேன்."
"அதனால்தான் உனக்கு
இளவரசர் பற்றிய செய்தி தெரியவில்லை போலிருக்கிறது."
"நீர்
தெரியப்படுத்தியதற்காக வந்தனம், ஐயா! நான் பழையாறைக்குக் கூடிய சீக்கிரம் போக
வேண்டும் பழுவேட்டரையரின் பரிவாரத்திடம் சிக்காமல் போக வேண்டும். எந்த வழியாகப்
போவது நல்லது?"
"பழுவேட்டரையர் தஞ்சாவூர் இராஜபாட்டையில் போகிறார். நீ
முல்லையாற்றங் கரையோடு போனால் பழையாறையை அடையலாம்."
"நீங்கள் கொஞ்சம்
சீக்கிரமாகவே குதிரைக் குளம்புக்குக் கவசம் அடித்துக் கொடுத்தால் நல்லது."
"இதோ!" என்றான் கொல்லன். வளைத்துக் காய்ச்சியிருந்த இரும்பைச் சுத்தியினால்
அடிக்கத் தொடங்கினான்.
"இது பெரிய பழுவேட்டரையருக்கு! இது சின்னப்
பழுவேட்டரையருக்கு! இந்த அடி சம்புவரையருக்கு! இது மழவரையருக்கு!" என்று சொல்லிக்
கொண்டே அடித்தான். இதிலிருந்து அந்தச் சிற்றரசர்கள் பேரில் நாட்டு மக்கள் எவ்வளவு
கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருவாறு வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.
குதிரைக் குளம்புக்கு லாடம் அடித்து முடிந்தது. செய்து கொடுத்த வேலைக்காகக்
கொல்லனுக்குக் காசு தர வந்தியத்தேவன் யத்தனித்தான். கொல்லன் அதைப் பேற்றுக்
கொள்வதற்கு மறுத்து விட்டான்.
'நீ நல்ல பிள்ளை என்பதற்காகச் செய்து
கொடுத்தேன். காசுக்காகச் செய்து தரவில்லை" என்றான்.
வந்தியத்தேவன்
மறுபடியும் கொல்லனுக்கு நன்றி கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
புறப்படும் சமயத்தில் கொல்லன், "தம்பி! பழையாறைக்கு நீ எதற்காகப் போகிறாய்?" என்று
கேட்டான்.
"ஐயா! நீங்கள் என்னை அதைப் பற்றி ஒன்றும் கேட்காமலிருந்தால்,
நான் பொய்சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது" என்றான் வல்லவரையன். கொல்லன்
சிரித்துவிட்டு, "அப்பனே! நீ துரிதமாகக் கெட்டிக்காரன் ஆகி வருகிறாய்!
தூங்குகிறபோதும் இவ்வளவு ஜக்கிரதையாயிரு!" என்று சொல்லி, விடை கொடுத்து
அனுப்பினான்.
வந்தியத்தேவன் மறுபடியும் பிரயாணம் தொடங்கிய போது சூரியன்
அஸ்தமிக்கும் நேரமாகி விட்டது.சிறிது நேரதுக்கெல்லாம் அந்தி மயங்கி இருள் சூழ்ந்து
வந்தது. இதற்குள் முல்லையாற்றங்கரையை வல்லவரையன் பிடித்து விட்டான். அதற்கு மேல்
ஆற்றங்கரையோடு போக வேண்டியதுதான். வழி விசாரிக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது.
முன்னிருட்டு வேளைதான். ஆனால் வானத்தில் ஆயிரங்கோடி நட்சத்திரங்கள்
ஒளிச்சுடர்களாக விளங்கின. முல்லை நதியின் கரைகளில் மரங்கள் அதிகம் இல்லை. சிறிய
சிறிய புதர்கள்தான் இருந்தன. ஆகையால் வழி கண்டு பிடித்துப் போவதற்கு வேண்டிய
வௌிச்சம் விண்மீன்கள் தந்தன.
வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களோடு
போட்டியிடுவது போல ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் நதிக் கரைப்புதர்களைச்
சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன.
வந்தியத்தேவனுடைய உள்ளத்தில்
உற்சாகம் ததும்பியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. நாடெல்லாம் இளவரசரைப் பற்றிய
கவலையில் ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு மட்டும் அவர் பத்திரமாயிருக்கிறார் என்ற
செய்தி தெரிந்திருந்தது. இளவரசரிடம் சோழ நாட்டு மக்கள் எவ்வளவு பிரியம்
வைத்திருக்கிறார்கள் என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. மந்திரவாதி ரவிதாஸனை
அவன் மறுபடியும் ஏமாற்ற முடிந்ததை நினைக்கக் குதூகலமாயிருந்தது. இதையெல்லாம் விடக்
குந்தவை தேவியைச் சீக்கிரத்தில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அவனுக்கு
எல்லையில்லாத மனக் கிளர்ச்சியை அளித்தது.
வெறுமனேயா பார்க்கப் போகிறான்?
இளைய பிராட்டி கூறிய காரியத்தைச் செய்து முடித்து விட்டுப் பார்க்கப் போகிறான்!
அந்தக் காரியத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களையெல்லாம் நினைத்து, அவற்றையெல்லாம் தான்
எதிர்த்து வெற்றி கொண்டதையும் எண்ணி அவன் பெருமிதம் அடைந்தான். நாளை மாலை இந்த
நேரத்துக்குள் இளையபிராட்டியைச் சந்தித்து விடுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகா!
அந்தச் சந்திப்பைக் குறித்து எண்ணும்போதே அவனுக்கு மெய்சிலிர்த்தது.
நட்சத்திரச் சுடர்களால் விளங்கிய வானமும், மின்மினி பறந்த பூமியும்,
சலசலவென்ற சப்தத்துடன் ஓடிய முல்லையாற்று வெள்ளமும், மந்த மந்தமாக வந்த குளிர்ப்
பூங்காற்றும் வந்தியதேவனைப் பரவசமடையச் செய்தன. வானமும் பூமியும் ஒரே ஆனந்த மயமாக
அவனுக்கு அச்சமயம் தோன்றின. பழைய காதல் பாட்டு ஒன்று அவனுக்கு நினைவு வந்தது. தான்
வாய்விட்டு உற்சாகமாகப் பாடுவதற்குத் தகுந்த இடந்தான் இது. சுற்றுப்புறமெங்கும்
மனித சஞ்சாரமே கிடையாது. ஏன் பட்சிகள் கூடக் கூடுகளிலே சென்று அடங்கிவிட்டன. அவன்
பாடுவதற்குத் தடை என்ன இருக்கிறது? இதோ அவன் பாடிய பாட்டு.யாரை மனத்தில் நினைத்து
கொண்டு பாடினான் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?
"வானச் சுடர்க ளெல்லாம்
மானே உந்தனைக் கண்டு மேனி சிலிர்க்குதடி-அங்கே மெய்மறந்து நிற்குதடி!
தேனோ உந்தன் குரல்தான்
தென்றலோஉன் வாய் மொழிகள்
மீனொத்த விழி மலர்கள்-கண்டால்
வெறி மயக்கம் தருவதேனோ?"
வந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ, அவனுடன் போட்டி போடுவது
போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின.
அதே சமயத்தில் மனிதக் குரலில்
கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் சிறிது மிரண்டு சுற்றும்
முற்றும் பார்த்தான். அவனுடைய கை உடைவாளில் சென்றது.
புன்னைமரம் ஒன்றின்
கரிய நிழலிலிருந்து ஓர் உருவம் வௌிப்பட்டது.
"தம்பி உன் பாட்டு பிரமாதம்!
நரிகளின் போட்டி கானம் அதைவிடப் பிரமாதம்!" என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும்
சிரித்தான். பக்க
தலைப்பு
பதின்மூன்றாம் அத்தியாயம் விஷ பாணம்
அந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும்,
வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன்
வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. நடுக்கடலில்
சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் சொன்ன
செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்று
கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் செயலில்
ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் இந்த
நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்தான். அவனிடமிருந்து
தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று ஒரு கணம்
எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்! தூரத்தில் தீயின்
வௌிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும். ஏதோ ஒரு மண்ணுடல்
தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை
எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும்? எத்தனை இன்ப துன்பங்களை அது
அநுபவித்திருக்கும்! அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி
சாம்பல்தான்! உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்;
மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு
இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே!
திகில் வந்தது போலவே
திடீரென்று விட்டுப் போய் விட்டது. இந்த வேஷ வஞ்சகக்காரனுக்குப் பயந்து எதற்கு ஓட
வேண்டும்? ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே?
ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று
மறைந்து கொண்டவன் இவன் தான் போலும்! அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம்.
அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா? இவனுடன் கொஞ்சம்
பேச்சுக் கொடுத்தால் புதிய செய்தி ஏதேனும் தெரிய வரக்கூடும்.
ஆகையால்
குதிரையை மெதுவாகவே செலுத்தினான் வல்லவரையன். முதன் முதலில் புதிது புதிதாக லாடம்
அடிக்கப் பெற்ற அந்தக் குதிரையும் நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது.
அதை விரட்டியடிக்க மனம் வரவில்லை.
"இங்கே எப்படி அப்பா, திடு திப்பென்று
வந்து முளைத்தாய்!" என்று கேட்டான் வல்லவரையன்.
"நான் அல்லவா அந்தக்
கேள்வியைக் கேட்க வேண்டும்? உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு
வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய்?" என்றான் தேவராளன்.
"உனக்கு மட்டும்
தான் மந்திரம் தெரியும் என்று நினைத்தாயோ? எனக்கும் கொஞ்சம் தெரியும்!"
"மந்திரத்தில் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி.
என்னுடைய மந்திர சக்தியினால் நீ இங்கே தனியாகப் போய்க் கொண்டிருப்பாய் என்று நானும்
அறிந்து கொண்டேன். அதனால்தான் நான் முன்னால் வந்து காத்திருந்தேன்."
"ஏன்
காத்திருந்தாய்? என்னிடம் உனக்கு என்ன காரியம்?"
"நீயே யோசித்துப் பார்!
அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி!"
"உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில்
என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை
என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த இரசியங்களை நான் மறந்துவிடத் தீர்மானித்து
விட்டேன். யாரிடமும் சொல்லப் போவதில்லை..."
"அதைப்பற்றி நானும்
கவலைப்படவில்லை. எப்போது நீ அந்த இரகசியங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று
நினைக்கிறாயோ அப்போது உன் நாக்கு துண்டிக்கப்படும். நீ ஊமையாவாய்!"
வந்தியத்தேவனுக்கு உடல் சிலிர்த்தது. தஞ்சையிலும் இலங்கையிலும் அவன்
சந்தித்த ஊமைப் பெண்களைப் பற்றிய நினைவு வந்தது. சற்றுத் தூரம் சும்மா நடந்தான்.
இந்தப் பாவி எதற்காக நம்மைத் தொடர்ந்து வருகிறான்? இவனிடமிருந்து தப்பிச்
செல்வதற்கு என்ன வழி? கோடிக்கரையிலிருந்து போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம்
இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும்? அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப்
போகலாமா? அதில் பயனில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் கிடையாது. வேறு வழி ஒன்றும்
இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உடைவாள். அதை எடுக்க வேண்டியதுதான்.
"தம்பி, நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது
கைகூடாது. வீண் முயற்சியில் இறங்காதே!"
வந்தியத்தேவன் பேச்சை மாற்ற
விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்குச் சிறிது சாவகாசம் வேண்டும். அதுவரை
ஏதேனும் பேச்சுக் கொடுத்து வரவேண்டும்.
"உன் கூட்டாளி ரவிதாஸன் எங்கே?"
தேவராஜன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "அது உனக்கல்லவா
தெரியவேண்டும்? ரவிதாஸன் எங்கே?" என்று கேட்டான்.
வந்தியத்தேவன்
திடுக்கிட்டான். ரவிதாஸனைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருக்கக்கூடாது; எடுத்தது
தவறு. ரவிதாஸனை இவன் பார்த்துப் பேசிவிட்டு நம்மை ஆழம் பார்க்கிறானா? அல்லது...
"என்ன, தம்பி சும்மா இருக்கிறாய்? ரவிதாஸன் எங்கேயென்று சொல்லமாட்டாயா?
போனால் போகட்டும்! அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலி எங்கே? அதையாவது சொல்!"
வந்தியத்தேவன் பாம்பை மிதித்தவன் போல் பதறினான். மேலே பேசுவதற்கே
அவனுக்குத் தயக்கமாயிருந்தது.
"அவளைப்பற்றியும் நீ ஒன்றும்
சொல்லமாட்டாயாக்கும். போனால் போகட்டும். அவளை நீ காப்பாற்ற நினைப்பதற்குத் தக்க
காரணம் இருக்கலாம். தம்பி! சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே? அவளை
நினைத்துப் பாடினாயா?"
"இல்லை, சத்தியமாய் இல்லை!" என்று வல்லவரையன்
பரபரப்போடு கூறினான்.
"ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு? ஏன் இவ்வளவு
ஆத்திரம்?"
"சரி, சரி! அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது
அவகாசம் இல்லை. ஏன் என் குதிரையின் முகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்?
விட்டுவிடு! நான் போகிறேன், அவசர காரியம் இருக்கிறது."
"நான் வந்த
காரியத்தை நீ இன்னும் கேட்கவில்லையே?"
"சொன்னால்தானே கேட்கலாம்?"
"இந்த முல்லையாற்றங்கரைக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. இங்கே யார் எதை
விரும்புகிறார்களோ, அது உடனே அவர்களுக்குச் சித்திக்கும்."
"நான் ஒன்றும்
விரும்பவில்லையே."
"அது பொய்! நீ யாரை நினைத்துக் கொண்டு உன் காதல்
பாட்டைப் பாடினாயோ அவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்! நீ இஷ்டப்பட்டால்
பார்க்கலாம்."
"எப்போது?"
"இன்றிரவே பார்க்கலாம்."
"இது
என்ன கதை?"
"கதையல்ல தம்பி! அதோ பார்!" என்று தேவராளன் சுட்டிக்காட்டினான்.
அவர்கள் சென்ற வழியில் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தது.
வந்தியத்தேவன் உற்றுப் பார்த்தான். அது ஒரு பல்லக்கு - மூடு பல்லக்கு என்று
அறிந்தான்.
ஆகா! அந்தப் பல்லக்கு! எங்கே பார்த்திருக்கிறோம்? ஏன், பழுவூர்
இளையராணியின் பல்லக்கு அல்லவா அது? ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன?
அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவனால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை. குதிரையை
அந்தப் பல்லக்கின் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். பனைச் சித்திரம் போட்ட
பல்லகில் மூடுகுதிரை தெரிந்தது.திரை அசைவது போலவும் இருந்தது.
உடனே
வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான். அதே கணத்தில் தேவராளன்
தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான சப்தம் வௌிவந்தது. அக்கம் பக்கத்திலிருந்து
புதர்களின் மறைவிலிருந்து ஏழெட்டுப் பேர் திடும் திடும் என்று எழுந்து பாய்ந்து
வந்தார்கள் வந்தியத்தேவன் மீது விழுந்தார்கள் அவனால் மீறி அசையவும் முடியாதபடி
பிடித்துக் கொண்டார்கள். கால்களையும், கைகளையும் துணியினால் கட்டினார்கள்.
கண்ணையும் ஒருவன் கட்டினான் உடைவாளை ஒருவன் பலவந்தமாக எடுத்துக் கொண்டான். பிறகு
வந்தியத்தேவனை அந்தப் பல்லக்கினுள்ளே தூக்கிப் போட்டார்கள். சிலர் உடனே பல்லக்கைத்
தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னும் சென்றார்கள்.
தேவராளன் முன்னால் வழிகாட்டிக் கொண்டு சென்றான். ஒருவன் குதிரையைப்
பிடித்துக்கொண்டு நடந்தான்.
இவ்வளவும் அதிவிரைவில் நடந்து விட்டன. 'கண்
மூடித் திறக்கும் நேரத்தில்' என்று சொல்வதும் மிகையாகாது. வந்தியத்தேவன் தன்னைப்
பலர் வந்து ஏககாலத்தில் தாக்கியதும் திகைத்துப் போய்விட்டான். அத்தகைய தாக்குதலை
அவன் எதிர்பார்க்கவேயில்லை. பல்லக்கில் அவனைத் தூக்கிப் போட்டுப் பல்லக்கு நகர
ஆரம்பித்தவரையில் அவனால் எதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. என்ன நடக்கிறதென்று
தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.
ஆனால் பல்லக்கு நகர ஆரம்பித்ததும் சிறிது
சிறிதாக மனம் தௌிவடைந்தது. கண்ணின் கட்டுச் சுலபமாக நழுவிவிட்டது. கட்டியிருந்த
கைகளினால் பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பார்த்தான். நதிக்கரையிலிருந்து
குறுக்கே இறங்கிப் பல்லக்கு எங்கேயோ போகிறது என்பதை அறிந்து கொண்டான்.
அவனுடைய கையின் கட்டுக்களையும், காலின் கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு
விடுதலை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியம் அன்று. பல்லக்கிலிருந்து குதிப்பதும்
எளிதாகத்தான் இருக்கும். குதிரையோ பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த ஏழெட்டுப்
பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறிச் செல்வதும் அவனுக்கு
முடியாத காரியமாகாது. அவ்விதம் செய்யலாமா என்று யோசித்தான். ஆனால் ஏதோ ஒன்று
குறுக்கே நின்று தடை செய்தது. அந்தப் பல்லக்கினுள்ளே ஓர் அபூர்வமான மணம்
சூழ்ந்திருந்தது. அது முதலில் அவனுக்கே உற்சாகத்தை அளித்தது. அதன்
கவர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு போக எளிதில் மனம் வரவில்லை. இந்தப்
பல்லக்குத் தன்னை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறது? நந்தினியிடந்தான்
சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற
ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக
வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை
விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை? என்னத்துக்காகத்தான்
அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே? ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து
கொள்ளலாமே? சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும்?
மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான்.
தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம்.
அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை
அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே?...
"ஆம்; ஆம்! நந்தினியைப் பார்க்க
வேண்டும் என்பதற்கு இன்னொரு அவசியமான காரணமும் இருந்தது.
இலங்கையில் அவன்
பார்த்த அந்த ஊமை அரசி! அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா? அதைத்
தெரிந்து கொள்ள வேண்டாமா?
இவ்விதம் வந்தியத்தேவன் யோசித்துக்
கொண்டிருக்கும் போதே அவன் தலை சுழன்றது. தூக்கம் வருவது போலத் தோன்றியது. இல்லை,
இல்லை! இது தூக்கம் இல்லை! பகலிலே தான் அவ்வளவு நேரம் தூங்கியாகி விட்டதே! இது ஏதோ
மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ!
இது என்ன பயங்கர அபாயம்! பல்லக்கிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்.
வந்தியத்தேவன் கைக்கட்டை அவிழ்த்துக் கொள்ள முயன்றான்; முடியவில்லை, கைகள்
அசையவேயில்லை. எழுந்து உட்கார முயன்றான்; அதுவும் முடியவில்லை. கால்களை அடித்துக்
கொள்ளப் பார்த்தான்; கால்களும் அசைய மறுத்தன. அவ்வளவுதான்! கண்ணிமைகள்
மூடிக்கொண்டன; அறிவு விரைவாக மங்கியது, மயக்கம் அவனை முழுவதும் ஆட்கொண்டது.
வந்தியத்தேவன் மயக்கம் தௌிந்து கண் விழித்த போது பழைய நினைவுகள் வந்து
பல்லக்கிலிருந்து குதிக்க முயன்றான். ஆனால் விந்தை! விந்தை! அவன் இப்போது
பல்லக்கில் இல்லை! விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால்
பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது! ஆனால் பழைய மாதிரி
மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை
மயக்கிய மணம், இது அறிவைத் தௌிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து
உட்கார்ந்தான்! சுற்று முற்றும் பார்த்தான். கதவு ஒன்று திறந்திருந்தது.
வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான்.
திறந்த கதவின் வழியாக நந்தினி வந்தாள்.
வந்தவளைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய வியப்புக்கும்,
திகைப்புக்கும் பல காரணங்கள் இருந்தன. வர்ணனைக் கெட்டாத அவளுடைய சௌந்தரியம் ஒரு
காரணம். எதிர்பாராத முறையில் அவளைச் சந்திக்கும்படி நேர்ந்தது இன்னொரு
காரணம்.இலங்கையில் அவன் பார்த்திருந்த மூதாட்டியின் உருவத்தோடு இந்த யுவதியின்
உருவம் எவ்வளவு ஒத்திருக்கிறது என்ற எண்ணம் மற்றொரு காரணம். உருவங்கள்
ஒத்திருக்கின்றவா? அல்லது அந்த மூதாட்டி தான் உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்தபடியினால்
இப்படித் தோற்றமளிக்கிறாளா?
இனிய கிண்கிணி நாதக்குரலில், "ஐயா! நீர்
மிகவும் நல்லவர்!" என்று கூறினாள் நந்தினி.
வந்தியத்தேவன் "வந்தனம்!"
என்றான்.
"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போவதுதானே? தஞ்சை
அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா!" என்றாள்
நந்தினி.
வந்தியத்தேவன் நகைத்தான்.
"தஞ்சைக் கோட்டைக்குள்
வருவதற்கு உமக்கு நான் உதவி செய்தேன். என் கைவிரலிலிருந்து பனை முத்திரை மோதிரத்தை
எடுத்துக் கொடுத்தேன். அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டாவது போயிருக்க
வேண்டாமா?"
வந்தியத்தேவன் வெட்கித்து மௌனமாக நின்றான்.
"எங்கே?
இப்போதாவது அதைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா! அதன் உபயோகம் தீர்ந்து
போயிருக்குமே? மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே?" என்று
கூறி, நந்தினி தன் அழகிய மலர்க் கரத்தை நீட்டினாள்.
"தேவி! அந்த முத்திரை
மோதிரத்தை இலங்கைத் தளபதி பூதி விக்கிரம கேசரி கைப்பற்றிக் கொண்டு விட்டார்.
ஆகையால் அதைத்திருப்பிக் கொடுக்க இயலவில்லை, மன்னிக்க வேண்டும்" என்றான்
வந்தியத்தேவன்.
"என்னுடைய ஜன்ம சத்துருவிடம் நான் உமக்குக் கொடுத்த
மோதிரத்தைக் கொடுத்து விட்டீர் அல்லவா? மிக்க நன்றியுள்ள மனிதர் நீர்."
"நானாகக் கொடுத்து விடவில்லை. பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்."
"வாணாதி ராயர் குலத்தில் உதித்த வீராதிவீரர் பலவந்தத்துக்கு உட்பட்டு ஒரு
காரியம் செய்தீரா? என்னால் நம்பமுடியவில்லை!"
"அம்மணி! இங்கே இச்சமயம் நான்
வந்திருப்பதும் பலவந்தம் காரணமாகத்தானே? தங்களுடைய ஆட்கள்..."
"உண்மையாகச்
சொல்லும், ஐயா! நன்றாய் நினைத்துப் பார்த்துச்சொல்லும்! பலவந்தத்தினால் மட்டும்
நீர் இங்கே வந்தீரா? இஷ்டப்பட்டு வரவில்லையா? பல்லக்கில் ஏற்றப்பட்ட பிறகு கீழே
குதித்து ஓடுவதற்கு உமக்குச் சந்தர்ப்பம் இல்லையா?" என்று நந்தினி கேட்ட கேள்விகள்
கூரிய அம்புகளைப் போல் வந்தியத்தேவன் நெஞ்சைத் துளைத்தன.
"ஆம்?
இஷ்டப்பட்டுத்தான் வந்தேன்" என்றான்.
"எதற்காக வந்தீர்?"
"தாங்கள்
எதற்காக என்னை அழைத்துவரச் செய்தீர்கள்?"
"என் முத்திரை மோதிரத்தைத்
திருப்பிக்கேட்பதற்காக"
"அது மட்டும்தானா?"
"இன்னும் ஒரு காரணம்
இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்புக்கு உட்பட்ட பொக்கிஷ நிலவறையில் நீர் அன்றிரவு
இருந்தீர் அல்லவா?" வந்தியத்தேவன் திடுக்கிட்டான்.
"எனக்குத் தெரியாது
என்றா எண்ணினீர்? அழகுதான்! எனக்குத் தெரிந்திராவிட்டால் அன்றிரவு நீர் தப்பிச்
சென்றிருக்க முடியுமா?"
"தேவி..."
"ஆம்! எனக்குத் தெரியும், பெரிய
பழுவேட்டரையருக்கும் தெரியும். உம்மை அங்கேயே கொன்று போட்டுவிடும்படி பழுவேட்டரையர்
சுரங்க வழிக்காவலனுக்குக் கட்டளையிட்டார். அவர் அப்பால் சென்றதும் நான் அந்தக்
கட்டளையை மாற்றிவிட்டேன் அதனால் நீர் பிழைத்தீர். உம்முடைய அழகான நண்பன் ஆபத்துக்கு
உள்ளானான். இல்லாவிடில், அந்தப் பொக்கிஷ நிலவறையில் முத்துக் குவியல்களுக்குப்
பக்கத்தில் உம்முடைய எலும்புகள் இப்போது கிடைக்கும்!"
வந்தியத்தேவன்
வியப்புக்கடலில் மூழ்கினான். அவள் கூறியவையெல்லாம் உண்மையென்று அவனால்
நம்பமுடியவில்லை. உண்மையில்லாவிட்டால் தான் அன்று அங்கு ஒளிந்திருந்தது எப்படி
தெரிந்தது? சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி,
"அம்மணி...!" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
"வேண்டாம்! மனத்தில் இல்லாததை
வௌியில் எதற்காகச் சொல்லப் பார்க்கிறீர்? எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம்!"
"இல்லை தேவி..."
"உம்முடைய உயிரை அன்று காப்பாற்றியதைப் பற்றி
எதற்காகச் சொன்னேன் தெரியுமா? உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச்
சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே
இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா?"
"மறுபடியும் அந்தப் பக்கம் போகும் உத்தேசமே எனக்கு இல்லை."
"அது
ஏன் இருக்கப் போகிறது? உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே?
உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே
எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன்.
அதில் உமக்குத் திருப்திதானே? அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத்
துரோகமும் உம்முடன் பிறந்ததா?"
நந்தினியின் வார்த்தை ஒவ்வொன்றும்
விஷபாணத்தைப் போல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. அவன்
துடிதுடித்து மௌனமாயிருந்தான்.
"உம்முடன் கோடிக்கரைக்கு வந்த வைத்தியர்
மகனைத் தான் உமக்குப் பதிலாகப் பிடித்துக் கொடுத்து அனுப்பினீர்; அவன் என்ன ஆனான்
என்று விசாரித்தீரா?"
"தங்களைக் கேட்க எண்ணினேன்."
"சொல்கிறேன்;
ஆனால் உம்முடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன ஆனார்?
அதைச் சொன்னால் நான் வைத்தியர் மகனைப் பற்றிச் சொல்லுவேன்."
வந்தியத்தேவனுக்கு உடம்பை ஒரு உலுக்கி உலுக்கிப் போட்டது. இளவரசரைப் பற்றி
அறிவதற்காகத்தான் தன்னை இவள் இப்படிப் பாடாய்ப் படுத்தினாளோ என்று தோன்றியது.
ஏமாந்துபோகக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.
"அரசி! அதைப்பற்றி
மட்டும் என்னைக் கேட்கவேண்டாம்" என்றான்.
"ஆம்! அதைப்பற்றி மட்டும் கேட்கக்
கூடாதுதான்! கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும்.
உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள்? அதைப்பற்றியாவது எனக்குச் செல்லலாமா?"
வந்தியத்தேவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. "யாரைச் சொல்லுகிறீர்கள்?
ஜாக்கிரதை!" என்றான்.
"ஆகா! நான் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறேன்.அந்தப்
பழையாறை மகாராணியைச் சொல்வதாக எண்ண வேண்டாம். அவள் உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க
மாட்டாள். தன் காலில் ஒட்டிய தூசிக்குச் சமானமாக உம்மை மதிப்பாள். உம்மை இலங்கையில்
கொண்டு சேர்த்துத் திரும்பியும் அழைத்து வந்தாளே, அந்த ஓடக்காரப்பெண்ணைப்பற்றிக்
கேட்கிறேன்.பூங்குழலி உமது காதலி அல்லவா?"
"இல்லை, இல்லவே இல்லை! அவளுடைய
காதலர்களை அவளே எனக்குக் காட்டினாள். நள்ளிரவில் கோடிக்கரைச் சதுப்பு நிலத்தில்
கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினாள். அவர்கள்தான் தன்னுடைய
காதலர்கள் என்று சொன்னாள்."
"அவள் பாக்கியசாலி! ஏனெனில் அவளுடைய காதலர்கள்
ஒளிவடிவம் பெற்றிருக்கிறார்கள். பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள். என்னுடைய
காதலர்களோ இருள் வடிவமானவர்கள்! உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும்
மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தி படுத்திருந்ததுண்டா? வௌவால்களும்,
ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில்
உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா? அம்மாதிரி வடிவங்கள்
என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன.
என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன!
அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன? எங்கே போகின்றன? ஏன் என்னைச்
சுற்றிச்சுற்றி வட்டமிடுகின்றன? ஐயோ! உமக்குத் தெரியுமா?" - இவ்விதம் கூறிவிட்டு
நந்தினி வெறிகொண்ட கண்களால் அங்குமிங்கும் பார்த்தாள்.
வந்தியத்தேவனுடைய
வயிர நெஞ்சமும் கலங்கிப் போயிற்று. ஒரு பக்கம் இரக்கமும், இன்னொருபக்கம் இன்னதென்று
தெரியாத பயமும் அவன் மனத்தில் குடிகொண்டன.
"தேவி! வேண்டாம்! கொஞ்சம் சாந்தி
அடையுங்கள்!" என்றான்.
"என்னைச் சாந்தி அடையும்படி சொல்வதற்கு நீர் யார்?"
என்று கேட்டாள் நந்தினி.
"நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன். தாங்கள்
யார் தேவி!"
"நான் யார் என்றா கேட்கிறீர்? அதுதான் எனக்கும் தெரியவில்லை.
அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா?
அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா?"
"இல்லை, இல்லை! தெய்வ
லோகத்திலிருந்து தவறி விழுந்த தேவப் பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா? தெய்வ
சாபத்தினால்..."
"ஆம்! தெய்வ சாபம் என் பேரில் ஏதோ இருக்கிறது. அது
என்னவென்று மட்டும் தெரியவில்லை. நான் யார், எதற்காகப் பிறந்தேன் என்பதை அறிவேன்.
இதுவரையில் ஒரே ஒரு சூசகத்தை மட்டும் தெய்வம் எனக்கு அளித்திருக்கிறது. இதோ
பாரும்!" என்று கூறி நந்தினி அவள் அருகில் இருந்த வாளை எடுத்துக் காட்டினாள்,
புதிதாகச் செப்பனிடப்பட்ட அந்தக் கூரிய வாள் தீப வௌிச்சத்தில் பளபளவென்று
ஜொலித்துக் கண்ணைப் பறித்தது.
வந்தியத்தேவன் அந்த வாளைப் பார்த்தான்.
பார்த்த உடனே அது கொல்லன் பட்டறையில் தான் பார்த்த வாள் என்பதைத் தெரிந்து
கொண்டான். இதுவரையில் நந்தினியின் வார்த்தைகளாகிற விஷபாணங்களினால் அவன்
துடிதுடித்துக் கொண்டிருந்தான். இப்போது இரும்பினால் செய்த வாளாயுதத்தைப்
பார்த்ததும் அவனுடைய மனம் திடப்பட்டது. ஏனெனில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள்
அவனுக்குப் பழக்கப் பட்டவை.பிறந்தது முதலாவது அவனுடன் உறவு பூண்டவை, ஆகையால்
பயமில்லை. நந்தினி அந்த வாளைத் தன் பேரில் பிரயோகிப்பதாயிருந்தாலும் பயம் கிடையாது!
"தேவி! பார்த்தேன்! வாளைப் பார்த்தேன்.வேலைப்பாடு அமைந்த வாள்! அரச
குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட
தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது? அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும்
சூசகந்தான் என்ன?" என்று கேட்டான்.
பக்க
தலைப்பு
பதினான்க |