|

கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan முதலாவது பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 51-57
ஐம்பத்தொன்றாம்
அத்தியாயம் - மாமல்லபுரம் ஐம்பத்திரண்டாம்
அத்தியாயம் - கிழவன் கல்யாணம் ஐம்பத்து
மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம் ஐம்பத்து
நான்காம் அத்தியாயம் - "நஞ்சினும் கொடியாள்"
ஐம்பத்தைந்தாம்
அத்தியாயம் - நந்தினியின் காதலன் ஐம்பத்தாறாம்
அத்தியாயம் - அந்தப்புர சம்பவம் ஐம்பத்தேழாம்
அத்தியாயம் - மாயமோகினி
ஐம்பத்தோராம் அத்தியாயம் மாமல்லபுரம்
நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது
அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.
மகேந்திர பல்லவரும் மாமல்ல
நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு
சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு இப்போது முந்நூறு ஆண்டுகளுக்கு மேலேயே
ஆகி விட்டன.
நகரத்தின் தோற்றம் ஓரளவு மங்கியிருக்கிறது. மாறுதல் நம்
மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை.
மாடமாளிகைகள் இடிந்து விழுந்து பாழடைந்து
கிடக்கின்றன. வீதிகளிலும் துறைமுகத்திலும் முன்போல் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை.
வர்த்தகப் பெருக்கமும் அவ்வளவாக இல்லை. பெரிய பெரிய பண்டக சாலைகள் இல்லை.
வீதிகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்திருக்கவில்லை.
கடல் பூமிக்குள் புகுந்து ஆழம் மிகுந்த கால்வாயாக அமைந்து கப்பல்கள் வந்து
பத்திரமாய் நிற்பதற்குரிய இயற்கைத் துறைமுகமாக இருந்ததை முன்னர் பார்த்தோம்.
இப்போது அந்தக் கால்வாயில் மணல் அடித்து அடித்துத் தூர்ந்து போய் ஆழம் வெகுவாகக்
குறைந்து போயிருக்கிறது. ஆழமற்ற அக்கடற்கழியில் சிறிய படகுகளும் ஓடங்களும்தான்
வரக்கூடும். நாவாய்களும் மரக்கலங்களும் சற்றுத் தூரத்தில் கடலிலே தான் நிற்க
வேண்டும். படகுகளில் வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் சென்று அந்த மரக்கலங்களில்
சேர்ப்பிக்க வேண்டும்.
மேலே கூறிய இடைக் காலத்தில் மாமல்லபுரம் சில புதிய
சிறப்புக்களையும் அடைந்திருந்ததைக் குறிப்பிட வேண்டும்.முக்கியமாக கடற்கரையோரத்தில்
விளங்கிய அழகிய கற்கோயில் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றது. அது மகேந்திரன்
- மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்ட குன்றுகளைக் குடைந்தெடுத்த கோவில்களைப்
போன்றதல்ல. குன்றுகளிலிருந்து கற்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து கட்டப்பட்ட
கோயில். சமுத்திர ராஜனுடைய தலையில் சூட்டப்பட்ட அழகிய மணிமகுடத்தைப் போல்
விளங்குகிறது. அடடா! அந்தக் கோயில் அமைப்பின் அழகை என்னவென்று சொல்வது?
இதைத் தவிர நகரத்தின் நடுவே மூவுலகும் அளந்த பெருமாள் சயனித்திருக்கும்
விண்ணகரக் கோயில் ஒன்றும் காட்சி அளிக்கிறது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு
கண்களைப் போல எண்ணிப் போற்றி வளர்த்த பரமேசுவர பல்லவன் திருப்பணி செய்த விண்ணகரம்
அது. திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலுக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய
காலத்திலேகூடப் பல்லவ சாம்ராஜ்யம் பெருகி வளர்ந்த சிறப்புடன் விளங்கியது என்பதையும்
மாமல்லபுரம் செல்வம் கொழிக்கும் துறைமுகமாக விளங்கியது என்பதையும் பின்வரும்
பாசுரத்தின் மூலம் நன்கு அறியலாம்:-
"புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!"
திருமங்கையாழ்வாரின் காலத்துக்குப் பிற்பட்ட நூறாண்டுக் காலத்தில் பல்லவ
சாம்ராஜ்ய சூரியன் அஸ்தமித்துவிட்டது. 'கல்வியில் இணையில்லாத காஞ்சி' மாநகரின்
சிறப்பும் குறைந்து விட்டது. 'கலங்கள் இயங்கும் கடல் மல்லை'யின் வர்த்தக வளமும்
குன்றி வந்தது.
ஆனால் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளிப்பதற்கென்று அமைந்த
அந்த அமர நகரத்தின் அற்புதச் சிற்பக் கலைகளுக்கு மட்டும் எந்தவிதக் குறைவும்
நேரவில்லை. பாறைச் சுவர்களில் செதுக்கப்பட்ட சித்திர விசித்திரமான சிற்பங்களும்
குன்றுகளைக் குடைந்து எடுத்து அமைத்த விமான ரதங்களும் முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் அவற்றை அமைத்த காலத்தில் விளங்கியது போலவே இன்றைக்கும் புத்தம் புதியனவாக
விளங்கின. பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்காக வந்த வர்த்தகர்களின் கூட்டத்தைக்
காட்டிலும் சிற்பச் செல்வங்களைக் கண்டு களித்துப் போவதற்காக வந்த ஜனக் கூட்டம்
அதிகமாயிருந்தது.
*******************
மாமல்லபுரத்து வீதிகளின்
வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரதம் ஒன்று சென்றது.குதிரைகளின்
அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும், பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில்
மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல் விதானமும் அதில் இருந்தவர்கள் அரச
குலத்தினராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.
ஆம்; அந்தப் பொன் ரதத்தின்
விசாலமான உட்புறத்தில் அரசகுலத்தினர் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன்
தான், வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன். மிக
இளம்பிராயத்திலேயே இவன் போர்க்களத்துக்குச் சென்று செயற்கரும் வீரச் செயல்கள்
புரிந்தான். மதுரை வீரபாண்டியனை இறுதிப் போரில் கொன்று, "வீரபாண்டியன் தலை கொண்ட
கோப்பரகேசரி" என்று பட்டப் பெயர் பெற்றான். வீரபாண்டியன் வீர சொர்க்கம் அடைந்து
பாண்டிய நாடு சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் வந்த உடனடியாகத்தான் சுந்தரசோழர்
நோய்வாய்ப்பட்டார். ஆதித்த கரிகாலனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்பதை ஐயமற
நிலைநாட்ட அவனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்தார். அது முதலாவது
கல்வெட்டுக்களில் தன் பெயரைப் பொறித்துச் சாஸனம் அளிக்கும் உரிமையும் ஆதித்த
கரிகாலன் பெற்றான்.
பின்னர், தொண்டை மண்டலத்தை இரட்டை மண்டலத்துக் கன்னர
தேவனுடைய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுவிக்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன்
வடநாட்டுக்குப் பிரயாணமானான். அங்கேயும் பல போர்க்களங்களில் செயற்கரும் வீரச்
செயல்களைப் புரிந்தான். இரட்டை மண்டலத்துப் படைகளை வட பெண்ணைக்கு வடக்கே
துரத்தியடித்தான். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்குப் படை பலத்தைப்
பெருக்கிக் கொள்ளுதல் அவசியமாயிற்று. ஆதலின் காஞ்சியில் வந்து தங்கிப் படை
திரட்டவும் மற்றும் படையெடுப்புக்கு அவசியமான ஆயுத தளவாட சாமக்ரியைகளைத் திரட்டவும்
தொடங்கினான். இந்த நிலையில் பழுவேட்டரையர்கள் அவனுடைய முயற்சிக்குத் தடங்கல்
செய்யத் தொடங்கினார்கள். இலங்கைப் போர் முடிந்த பிறகுதான் வடநாட்டுப் படையெடுப்புத்
தொடங்கலாம் என்று சொன்னார்கள். இன்னும் பலவிதமான வதந்திகளும் காற்றிலே மிதந்து வரத்
தொடங்கின. இலங்கையில் போர் செய்யச் சென்றுள்ள படைக்குச் சோழ நாட்டிலிருந்து வேண்டிய
உணவுப் பொருள் போகவில்லையென்று தெரிந்தது. இதனாலெல்லாம் ஆதித்த கரிகாலனுடைய வீர
உள்ளம் துடித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
நமது கதை நடந்த
காலத்துக்கு முன்னும் பின்னும் சுமார் முந்நூறு ஆண்டு காலத்தில் தமிழ் அன்னையின்
திருவயிற்றில் இதிகாச காவியங்களில் நாம் படிக்கும் மகா வீரர்களையொத்த வீரப்
புதல்வர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். வீமனையும் அர்ச்சுனனையும் பீஷ்மரையும்
துரோணரையும் கடோத்கஜனையும் அபிமன்யுவையும் ஒத்த வீரர்கள் தமிழகத்தில்
அவதரித்தார்கள். உலகம் வியக்கும்படியான தீரச் செயல்களைப் புரிந்தார்கள். போரில்
அடைந்த ஒவ்வொரு வெற்றியும் இவர்களுடைய தோள்களுக்கு மேலும் வலி அளித்தன. வயது
முதிர்ந்த கிழவர்கள் மலையைப் பெயர்த்தெடுக்கும் வலிமை பெற்றிருந்தார்கள். பிராயம்
ஆகாத இளம் வாலிபர்கள் காற்றில் ஏறிச் சென்று வான முகட்டை அடைந்து விண்மீன்களை
உதிர்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.
இப்படிப்பட்ட வீரர்கள் இருவர்
அச்சமயம் ஆதித்த கரிகாலன் ஏறிச் சென்ற ரதத்தில் அவனுடன் சம ஆசனத்தில்
உட்கார்ந்திருந்தார்கள்.
இவர்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான். இவர்
ஆண்ட மலையமானாடு வழக்கத்தில் பெயர் சுருங்கி 'மலாடு' என்றும் 'மிலாடு' என்றும்
வழங்கியது. ஆகையால் இவருக்கு 'மிலாடுடையார்' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டிருந்தது.
சுந்தர சோழ சக்கரவர்த்தியின் இரண்டாவது பத்தினியாகிய வானமாதேவி இவருடைய
செல்வத் திருமகள்தான். எனவே, ஆதித்த கரிகாலனுடைய பாட்டனார் இவர். முதிர்ந்த
பிராயத்திலும் நிறைந்த அறிவிலும் இவர் கௌரவர்களின் பாட்டனாரான பீஷ்மரை
ஒத்திருந்தார். ஆதித்த கரிகாலன் இவரிடம் பெரும் பக்தி வைத்திருந்த போதிலும் இவருடைய
புத்திமதி சில சமயம் அந்த வீர இளவரசனின் பொறுமையைச் சோதித்தது.
ரதத்தில்
இருந்தவர்களில் இன்னொருவன் பார்த்திபேந்திரன். இவன் பழைய பல்லவர் குலத்திலிருந்து
கிளை வழி ஒன்றில் தோன்றியவன். ஆதித்த கரிகாலனை விட வயதில் சிறிது மூத்தவன்.
அரசுரிமை அற்றவனாதலால் போர்க்களத்தில் தன் ஆற்றலைக் காட்டி வீரப் புகழை நிலை நாட்ட
விரும்பினான். ஆதித்த கரிகாலனைச் சென்றடைந்தான். வீரபாண்டியனோடு நடத்திய போரில்
ஆதித்த கரிகாலனுக்கு வலது கையைப் போல இருந்து உதவி புரிந்தான். இதனால் ஆதித்த
கரிகாலனுடைய அந்தரங்க நட்புக்கு உரியவனானான். வீரபாண்டியன் விழுந்த நாளிலிருந்து
இருவரும் இணை பிரியாத் தோழர்கள் ஆனார்கள்.
இந்த மூவரும் ரதத்தில் சென்றபோது
தஞ்சாவூரிலிருந்து பராபரியாக வந்த செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இந்தப் பழுவேட்டரையர்களின் அகம்பாவத்தை இனிமேல் என்னால் ஒரு கணமும்
சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாளுக்கு நாள் அவர்கள் வரம்பு கடந்து போகிறார்கள்.
நான் அனுப்பிய தூதன் பேரில் 'ஒற்றன்' என்ற குற்றம் சுமத்துவதற்கு இவர்களுக்கு
எத்தனை அகந்தை இருக்க வேண்டும்? அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொன்
வெகுமதி கொடுப்பதாகப் பறையறைவித்தார்களாமே? இதையெல்லாம் நான் எப்படிப் பொறுக்க
முடியும்? என் உறையிலுள்ள வாள் அவமானத்தில் குன்றிப் போயிருக்கிறது. நீங்களோ பொறுமை
உபதேசம் செய்கிறீர்கள்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"பொறுமை உபதேசம் நான்
செய்யவில்லை. ஆனால் இந்த மாதிரி முக்கியமான காரியத்துக்கு வந்தியத்தேவனை அனுப்ப
வேண்டாம் என்று மட்டும் அப்போதே சொன்னேன். அந்தப் பதற்றக்காரன் காரியத்தைக்
கெடுத்து விடுவான் என்று எனக்குத் தெரியும்! வாளை வீசவும் வேலை எறியவும் மட்டும்
தெரிந்திருந்தால் போதுமா? இராஜ காரியமாகத் தூது செல்கிறவனுக்குப் புத்திக் கூர்மை
இருக்க வேண்டும்..." என்று கூறினான் பார்த்திபேந்திரன்.
இளவரசன் கரிகாலன்
வந்தியதேவனிடம் காட்டிய அபிமானம் பார்த்திபேந்திரனுக்குப் பிடிப்பதில்லை. எப்போதும்
அவனைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பான். அவன் செய்யும் எந்தக்
காரியத்திலும் குற்றம் கண்டுபிடிப்பான். ஆகையால் இந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறு
குற்றம் சொன்னான்.
"ஆரம்பித்து விட்டாயா, உன் கதையை? வந்தியத்தேவன் பேரில்
ஏதாவது சொல்லிக் கொண்டிராவிட்டால் உனக்குப் பொழுது போகாது. அவனுக்குப் புத்திக்
கூர்மையில்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்கிறது? எந்த விதத்திலாவது, எப்படியாவது,
சக்கரவர்த்தியிடம் நேரில் ஓலையைக் கொடுத்து விடவேண்டும் என்று நான் இட்ட கட்டளையை
அவன் நிறைவேற்றி விட்டான். அதனால் பழுவேட்டரையர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள்.
இதில் வந்தியத்தேவனின் தவறு என்ன?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.
"தாங்கள் சொல்லி அனுப்பிய காரியத்தோடு அவன் நின்றிருக்க மாட்டான். வேறு
வேண்டாத காரியங்களிலும் தலையிட்டிருப்பான்!" என்றான் பார்த்திபேந்திரன்.
"நீ சற்றுச் சும்மாயிரு! தாத்தா! ஏன் இப்படி மௌனமாயிருக்கிறீர்கள்?
தங்களுடைய கருத்து என்ன? ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு சென்று தஞ்சாவூரிலிருந்து
சக்கரவர்த்தியை மீட்டு காஞ்சிக்கு அழைத்து வந்துவிட்டால் என்ன? எத்தனை நாள்
சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருப்பது போல வைத்திருப்பதை நாம்
பார்த்துக் கொண்டிருப்பது? எத்தனை நாள் பழுவேட்டரையர்களுக்குப் பயந்து காலம்
கழிப்பது?" என்று பொங்கினான் ஆதித்த கரிகாலன்.
தம் வாழ் நாளில் அறுபத்தாறு
போர்க்களங்களைக் கண்டு அனுபவம் பெற்றவரான திருக்கோவலூர் மலையமான் - மிலாடுடையார் -
மறுமொழி சொல்லுவதற்காகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். இதற்குள் எதிரே கடல்
அலைகள் தெரியவும், "முதலில் இந்த ரதத்திலிருந்து இறங்குவோம், தம்பி! வழக்கமான
இடத்தில் போய் உட்கார்ந்து பேசுவோம். எனக்கு வயது ஆகி விட்டதல்லவா? ஓடுகிற ரதத்தில்
பேசுவது எளிதாக இல்லை" என்றார்.
பக்க
தலைப்பு
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் கிழவன் கல்யாணம்
மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு.
சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில
சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும். அவற்றில்
ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை.
அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து
அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.
அவ்விதம் சிறிய பாறைகள்
இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும்
அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கிச் சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு
சிம்மாசனங்களாகக் கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன்
அவர்களுக்குச் சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால்
வரையில் நனைத்துக் கொண்டிருந்தன. அலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில
சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில்
படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக்
கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற
பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
"இரட்டை மண்டலப்
படையெடுப்புக்காகச் சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக
வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.
"பின்னே என்ன செய்கிறது? சோழ நாட்டின் பொறுக்கி எடுத்த வீரர் படைகள்
இலங்கையில் இருக்கின்றன. அவர்கள் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி அடைந்து
வருகிறார்கள். ஆயிரம் வருஷமாக இலங்கை அரசர்கள் வீற்றிருந்து அரசு புரிந்த
அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஜயக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள்
பட்டினி கிடந்து சாகும்படி விட்டுவிடுவதா?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"அப்படி விட வேண்டும் என்று யார் சொன்னார்கள்? உணவுப் பண்டங்கள் அனுப்ப
வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டினத் துறைமுகத்தில் ஏறிப் போக
வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும்.
இந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன? அதிலும் நாம்
வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன்!"
என்றான் பார்த்திபேந்திரன்.
"அதை நினைத்தால் எனக்கும் உள்ளம் கொதிக்கத்தான்
கொதிக்கிறது. அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை.
எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது? தாத்தா! ஏன் இன்னும் பேசாமல்
வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்!" என்றான்
கரிகாலன்.
"குழந்தாய்! இந்தக் கடல் அலைகள் ஓயாமல் 'ஓ' வென்று
சத்தமிடுகின்றன. கடல் அலைகளோடு போட்டி போட்டுக் கொண்டு உன் தோழன்
பார்த்திபேந்திரனும் கூச்சலிடுகிறான். இதற்கு நடுவில் நான் என்னமாய்ப் பேசுவது?
எனக்கோ வயதாகித் தள்ளாமை வந்து விட்டது...!" என்றார் மலையமான் மிலாடுடையார்.
"பார்த்திபேந்திரா! சற்று நேரம் நீ சும்மா இரு. தாத்தா அவருடைய கருத்தைச்
சொல்லட்டும்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"இதோ வாயை மூடிக் கொண்டு விட்டேன்.
பாவம்! தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம்
சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா? இந்தக்
கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை! ஓயாமல் இரைந்து கொண்டிருக்கிறது! இதை
அடக்குவார் ஒருவரும் இல்லை. நம் மலை அரசரிடம் சமுத்திர ராஜனுக்குக் கொஞ்சமும்
பயமில்லை போலிருக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.
"தம்பி!
பார்த்திபேந்திரா! அப்படியும் ஒரு காலம் இருந்தது. திருக்கோவலூர் மலையமான் என்ற
பெயரைக் கேட்டு இந்தக் காசினியில் உள்ள அரசர்களெல்லாம் நடுநடுங்குவார்கள். இரட்டை
மண்டலத்துச் சளுக்கர்களும், வல்லத்து வாண கோவரையர்களும், வைதும்பராயர்களும்,
கங்கர்களும், கொங்கர்களும் மலையமான் பெயரைக் கேட்டதுமே இடி முழக்கம் கேட்ட
சர்ப்பத்தைப் போல் பொந்தில் ஒளிந்து கொள்வார்கள். சமுத்திர ராஜனும் கொஞ்சம் அடக்க
ஒடுக்கமாகத்தான் இருப்பான். இந்த உடம்பு கொஞ்சம் தளர்ச்சி அடைந்ததும் இப்போது
எல்லாரும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் வருஷத்துப் பழங்குடியைச் சேர்ந்த
என்னை நேற்றைக்கு மேற்கேயிருந்து வந்த பழுவேட்டரையர்கள் ஒழித்துவிடப்
பார்க்கிறார்கள்! அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை! கரிகாலா! பழுவேட்டரையர்களின்
நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாகச் சற்று முன்னால் சொன்னாய் அல்லவா!
அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள்! உன்னையும் உன் சகோதரனையும்
தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி
அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே
உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை
போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும்!
இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்....." என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன்
சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.
"இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு
நாளும் வெற்றி அடையப் போவதில்லை, தாத்தா! என் தம்பியையும் என்னையும் யாராகிலும்
பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம்
தோன்றுகிறது; - கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ! நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து
அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப்
போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு
இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா! சொல்லுங்கள்! இந்தப் பண்டங்கள் ஏற்றும்
கப்பல்களில் ஒன்றில் ஏறி நானும் இலங்கைக்குப் போகட்டுமா?" என்று கேட்டான் கரிகாலன்.
"அரசே! அருமையான யோசனை! பல நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததைத்
தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள்! இதற்குத் தாத்தாவை யோசனை
கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு!' என்றுதான் புத்திமதி
சொல்லுவார்! நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக்
கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே
நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப்
பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்...!" என்று பார்த்திபேந்திரன் பொறித்துக்
கொட்டினான்.
"கரிகாலா! பார்த்தாயா? நான் முதலிலேயே என்ன சொன்னேன்? இவன்
வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?"
"இதோ
வாயை மூடிக் கொள்கிறேன், தாத்தா! நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள்!"
என்று பார்த்திபேந்திரன் வாயைக் கையினால் பொத்திக் கொண்டான்.
"கரிகாலா! நீ
வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர்
பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த
களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து
சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப்
பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில்
பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள்
சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும்
பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது.
உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள்
இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு
யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான
காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது...."
"தாத்தா! இம்மாதிரி உபதேசம்
தாங்கள் இதற்கு முன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்..."
"செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா? பேசாமல் என்னை
ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா?"
"இல்லை, இல்லை! இப்போது நடக்க
வேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்."
"உன் சகோதரன் அருள்மொழியை உடனே
இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே
கூடாது..."
"தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை
யுத்தம் என்ன ஆகிறது?"
"இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு
வந்திருக்கிறது, அனுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி
நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல்
பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம்
இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடி மூடி வைப்பதில்
பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும்
பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே
இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம்
திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று
சொல்ல முடியாது.......''
"தாத்தா! இது என்ன இப்படி என்னைப்
பயமுறுத்துகிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்?
எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன? தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய
அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல....."
"பிள்ளாய்! நீ எப்படிப்பட்ட
தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா? ஆயினும், திருவள்ளுவர் பெருமான்
சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
"அஞ்சுவது
அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்!" என்று அந்த மகான்
சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது
அச்சம் கூடாது. அப்படிப் பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என்
வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப் போன வலுவிழந்த கையினால் வெட்டிப்
போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும்
கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த
நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில்
பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக்
கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்."
"தாத்தா! அப்படி என்ன
இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால்தானே
நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்...?"
"சொல்லத்தான் வருகிறேன். சில
நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு
கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன்
மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர்,
இரட்டைக் குடை ராஜாளியார் - இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு
வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம்......"
"வந்திருக்கட்டும்; அதனால் என்ன? எல்லாரும் நடுநிசி வரையில் கூத்தும்
கேளிக்கையும் பார்த்துவிட்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு, அதற்கு மேல்
மிடாமிடாவாய்க் கள்ளைக் குடித்து விட்டுத் தூங்கப் போயிருப்பார்கள். அதைப் பற்றி
நமக்கு என்ன. நீங்கள் சொன்ன தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன
புரட்டி விடுவார்கள்?"
"கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம்
இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன்? நானும் ஒரு கிழவன் தானே? அவர்கள்
எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..!"
"தாத்தா! கோபம் வேண்டாம். அந்தக்
கையினாலாகாத கிழங்களோடு தங்களை நான் சேர்த்து விடுவேனா? சரி, அப்புறம் என்ன
நடந்தது, சொல்லுங்கள்!"
"கையினால் ஆகாக் கிழங்கள் என்று மறுபடியும்
சொல்லுகிறாய்! அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம்
செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே! இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில்
அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்!"
கிழவனின்
கல்யாணத்தைப் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் ஆதித்த கரிகாலனுடைய முகத்தில் ஒரு
விசித்திர மாறுதல் உண்டாகியது. அவனுடைய கண்கள் திடீரென்று சிவந்து இரத்த பலி
கேட்கும் க்ஷூத்ர தேவதையைப் போல் விழித்தன.உதடுகள் துடிதுடித்தன. பற்கள் நறநறவென்று
கடித்துக் கொண்டன.
இதையெல்லாம் மலையமான் கவனிக்கவில்லை. ஆனால்
பார்த்திபேந்திரன் கவனித்துக் கொண்டான்.
"அந்தக் கலியாணப் பேச்சு இப்போது
என்னத்துக்கு, ஐயா! சம்புவரையர் அரண்மனையில் அப்புறம் என்ன நடந்தது என்பதைச்
சொல்லுங்கள்" என்றான் பல்லவ வீரன்.
"அதைத்தான் சொல்ல வந்தேன் ஆனால்
வயதாகிவிட்டது அல்லவா? புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா!
பார்த்திபேந்திரா! நீயும் கேட்டுக் கொள்! அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின்
கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன்
மகன் கந்தமாறன். இன்னொருவன்..." என்று தயங்கினதைப் பார்த்து, "யார், தாத்தா?
இன்னொருவன் யார்?' என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.
"உன்னுடைய பெரிய
பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் - மதுராந்தகத்
தேவன்தான்!"
இதைக் கேட்டதும் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும்
கலகலவென்று சிரித்தார்கள்.
"இது என்ன சிரிப்பு! இந்தச் சிரிப்புக்குப்
பொருள் என்ன? மறுபடியும் என்னைப் பரிகசிக்கிறீர்களா?" என்று மிலாடுடையார் கேட்டார்.
"இல்லை, தாத்தா! இல்லை! மதுராந்தகனைத் தாங்கள் 'வாலிபன்' என்கிறீர்களே?
அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா?
பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"கிழவனுக்குச்
சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா? அதுபோல்
மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப்
போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று,
இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா?....."
"செய்து கொள்ளட்டும். இன்னும் பல கலியாணம் செய்து கொள்ளட்டும்; அதனால்
என்ன?"
"தம்பி! மதுராந்தகனின் கலியாணங்கள் சாதாரண கலியாணங்கள் அல்ல.
இராஜரீகக் கலியாணங்கள். பழுவேட்டரையர்களின் அந்தரங்க சூழ்ச்சியைச் சேர்ந்த
கலியாணங்கள்...!"
"தாத்தா! இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக்
கொண்டிருக்கிறீர்கள்? விட்டுச் சொல்லுங்கள்! பழுவேட்டரையர்கள் என்னதான்
விரும்புகிறார்கள்? ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன?
மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்?" என்று ஆதித்த
கரிகாலன் கேட்டான்.
"வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய
உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற
எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத்
தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்!" என்றார்
மிலாடுடையார்.
பக்க
தலைப்பு
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் மலையமான் ஆவேசம்
அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று
முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய
வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்!
ஆயினும் சிறிது நேரம் செயல் இழந்து ஸ்தம்பித்து நின்று விட்டான்.
பார்த்திபேந்திரனும் வாயடைத்துப் போய் மௌனமாகி நின்றான்.கடலும் ஓசை அடங்கி
விட்டதாகத் தோன்றியது. தூரத்தில் படகிலிருந்து பண்டங்களை இறக்கி மரக்கலங்களில்
ஏற்றுவோரின் 'ஏலேலோ' சத்தங்கூட அச்சமயம் அடங்கி நின்று போயிருந்தது.
வியப்புக்கு இடங்கொடுத்து விட்டதற்காக வெட்கப்பட்ட ஆதித்த கரிகாலன்,
சட்டென்று பாட்டனார் முகத்தை நிமிர்ந்து நோக்கி, "தாத்தா! இப்படியெல்லாம் நாடு
நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது.அது வெறும் பொய் வதந்தி
என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து
கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!" என்றான்.
"ஏன் நடக்க
முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே
சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த
ராஜ்யத்தில் உண்டல்லவா?" என்றார் மலையமான் மிலாடுடையார்.
"இல்லவே இல்லை!
அந்த முழு அசடன், நாலு வார்த்தை பேசத் தெரியாதவன், கையில் வாள் எடுத்து அறியாதவன்,
பெண்ணாய்ப் பிறக்கத் தவறி ஆணாகப் பிறந்தவன் - அவனுக்கு இந்த இராஜ்யம் உரிமையா? பால்
மணம் மாறாத பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்தவர், வீர பாண்டியன் தலை
கொண்ட சிங்கம், தோல்வி என்பதையே அறியாத வீராதி வீரர், ஆதித்த கரிகாலருக்கு உரிமையா?
ஐயா! மிலாடுடையாரே! வயதாகி விட்டபடியால், தங்களுடைய அறிவு கூட மழுங்கி விட்டதா?"
என்று சீறினான் பார்த்திபேந்திரன்.
அவனைக் கரிகாலன் அதட்டி அடக்கி விட்டு,
"தாத்தா! எனக்கு இந்த இராஜ்யம் ஒரு பொருட்டு அல்ல. வேண்டுமானால் என் கை வாளின் உதவி
கொண்டு இதைப் போன்ற பத்து இராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொள்வேன். ஆனால் இதில் நியாயம்
எப்படி? முதலிலேயே மதுராந்தகனுக்குத்தான் இராஜ்யம் என்று சொல்லியிருந்தால் நான்
குறுக்கே நின்றிருக்க மாட்டேன். நாடு அறிய, நகரம் அறிய மக்கள் எல்லாரும் அறிய
எனக்குத் தான் அரசுரிமை என்று இளவரசப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, இப்போது எப்படி
மாறலாம்? உங்களுக்கு இது சம்மதமாயிருக்கிறதா?" என்று கேட்டான்.
"எனக்குச்
சம்மதமாயில்லை, ஒரு நாளும் நான் சம்மதிக்கப் போவதுமில்லை. நீ சம்மதித்து இராஜ்யத்தை
மதுராந்தகனுக்குக் கொடுப்பதாகச் சொன்னால், முதலில் உன்னை இந்த வாளால் கண்டதுண்டமாய்
வெட்டிப் போடுவேன்.பிறகு உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற உன் தாயை வெட்டிப்
போடுவேன். பிறகு உன் தாயைப் பெற்றவனாகிய நானும் என் கையினாலேயே வெட்டிக் கொண்டு
சாவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தச் சோழ ராஜ்யம் உன்னை விட்டுப் போக
விடேன்!" என்று அந்த வயோதிகர் கர்ஜித்தபோது, அவருடைய மங்கிய கண்களில் மின்னொளி
வீசியது. உணர்ச்சி ஆவேசத்தில் தளர்ந்து போயிருந்த அவர் உடம்பெல்லாம் நடுங்கியது.
பார்த்திபேந்திரன், "அப்படிச் சொல்லுங்கள், தாத்தா! அப்படிச் சொல்லுங்கள்!"
என்று கூவிக் கொண்டே ஓடிவந்து மலையமானைத் தழுவி கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீர்
பெருகிற்று.
கரிகாலனும் சற்று நேரம் ஆழ்கடலை நோக்கியவாறு இருந்தான். பிறகு
பாட்டனாரைப் பார்த்து, "தாத்தா! தங்களுடைய எண்ணம் அதுவானால் தயக்கம் ஏன்? உடனே படை
திரட்டிக் கொண்டு தஞ்சைக்குப் புறப்படுவோம். பழுவேட்டரையர்களையும் மற்றும்
அவர்களைச் சேர்ந்த மழுவரையர், சம்புவரையர், முத்தரையர், முனையரையர் எல்லோரையும்
ஒரேயடியாக ஒழித்து விட்டுத் தஞ்சைக் கோட்டையைப் பிடிப்போம். மதுராந்தகனைச் சிறையில்
அடைப்போம். சக்கரவர்த்தியை விடுதலை செய்வோம். தங்களுடைய ஆசி எங்களுக்கு இருந்தால்
போதும், நானும் பார்த்திபேந்திரனும் சேர்ந்தால், எங்களை வெல்லக்கூடியவர்கள் இந்தப்
பூவுலகில் யார்?" என்று பெருமிதத்துடன் கூறினான்.
"உங்களை போரில் வெல்ல
முடியாது; உண்மைதான். ஆனால் சூழ்ச்சியும் சதியும் சேர்ந்து எதிர்த்தால் நீங்கள்
என்ன செய்வீர்கள்? படையுடன் நீங்கள் தஞ்சையை நெருங்கும் போதே, பெற்ற தகப்பனுடன்
மகன் யுத்தம் செய்ய வருவதாகக் கதை கட்டி விடுவார்கள்! அந்த அவமானத்தைத் தாங்காமல்
சக்கரவர்த்தி உயிரை விட்டு விட்டார் என்றும் சொல்லி விடுவார்கள். அதை நம்புகிற
ஜனங்களும் இருக்கக்கூடும் அல்லவா? அந்த நிலைமையில், நீதான் என்ன செய்வாய்,
குழந்தாய்! உன் மனமும் தளர்ச்சி அடைந்து விடும்! பெற்ற தகப்பனோடு யுத்தம் செய்ய
வந்தவன் என்ற பழிச் சொல்லை உன்னால் தாங்க முடியுமா?"
ஆதித்த கரிகாலன் தன்
செவிகளைப் பொத்திக் கொண்டு, "சிவ சிவா! கேட்கச் சகிக்கவில்லை!" என்றான்.
"அதனால்தான் முதலிலேயே நான் சொன்னேன்;-- பெரிய அபாயம் நம்மைச்
சூழ்ந்திருக்கிறது என்று!"
"உபாயம் என்ன, தாத்தா! உபாயம் என்ன?"
"முதலில் இலங்கைக்கு நம்பிக்கையான ஆள் ஒருவனை அனுப்ப வேண்டும். அனுப்பி,
அருள்மொழியை அழைத்து வரச் செய்ய வேண்டும். அவன் போர்க்களத்தை விட்டு, தன் கீழுள்ள
போர் வீரர்களை விட்டு, இலேசில் வரமாட்டான். அவன் மனத்தைத் திருப்பி அழைத்து
வரக்கூடிய ஆற்றல் உள்ளவன் ஒருவனை அனுப்ப வேண்டும்......"
பார்த்திபேந்திரன்
முன் வந்து, "ஐயா! நீங்கள் சம்மதம் கொடுத்தால் நானே போய் அழைத்து வருகிறேன்!"
என்றான்.
"அது கரிகாலன் இஷ்டம்; உன் இஷ்டம். ஆனால் போகிறவன்
வந்தியத்தேவனைப் போல் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடக் கூடாது....."
"பார்த்தீர்களா? நான் சொன்னேனே?" என்றான் பார்த்திபேந்திரன்.
"வந்தியத்தேவனைப் பற்றித் தங்களுக்கு ஏதாவது தகவல் வந்திருக்கிறதா,
தாத்தா?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.
"அவனைப் பற்றி முதலில் எனக்குச்
சந்தேகமாகக் கூட இருந்தது, அவனும் நம் எதிரிகளுடன் சேர்ந்து விட்டானோ என்று.
அப்புறம் அந்தச் சந்தேகம் தௌிந்தது."
"பார்த்தாயா, பார்த்திபேந்திரா!"
என்றான் கரிகாலன்.
"அவர் முழுவதும் சொல்லட்டும். அதற்குள்
அவசரப்படுகிறீர்களே? ஐயா! வந்தியத்தேவன் பேரில் தங்களுக்கு என்ன சந்தேகம் வந்தது?"
"சம்புவரையர் மாளிகையில் கூட்டம் நடந்த அன்று அவனும் அங்கிருந்தான் என்று
அறிந்தேன். ஆனால் சதியில் அவனுக்குச் சம்பந்தமில்லையென்று பிறகு தெரிந்து
கொண்டேன்."
"தாத்தா! இதெல்லாம் எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?"
"கடம்பூர் மாளிகை விருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதிலேயே கொஞ்சம்
சந்தேகம் உண்டாயிற்று. பிறகு, அங்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் சென்ற
குன்றத்தூர்க் கிழாரை வழியில் சிறைப்படுத்தி என் மலைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு
போனேன். அவரிடமிருந்து அங்கு நடந்தவைகளையெல்லாம் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவன்
சம்புவரையர் மகன் கந்தமாறனின் சிநேகிதனாம்....."
"ஆமாம்; நம்முடைய
சைன்யத்திலே இருவரும் இருந்தவர்கள் தானே? வடபெண்ணைக் கரையில் இருவரும் காவல்
புரிந்தார்கள். அதிலிருந்து அவர்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டிருந்தது எனக்குத்
தெரியும்..."
"எப்படியோ, வந்தியத்தேவன் அன்றைக்கு அம்மாளிகையில் இருந்தான்.
அவன் சதியில் சம்பந்தப்பட்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது.
பிறகு அதற்கு ஒரு வழி கிடைத்தது. தஞ்சைக் கோட்டைக்குள் கந்தமாறனுடைய முதுகில்
வந்தியத்தேவன் குத்திவிட்டுத் தப்பித்துச் சென்று விட்டான் என்று தெரிந்ததும்..."
"தாத்தா! இதை ஒரு நாளும் நான் நம்பமாட்டேன். வந்தியத்தேவன் வேறு எது
செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒருவனுடைய முதுகில் குத்தக் கூடியவன் அல்ல. அதிலும்
சிநேகிதனுடைய முதுகில் குத்தக் கூடிய சண்டாளன் அல்ல....."
"அந்தச்
சிநேகிதன் தன் எஜமானுக்கு விரோதமான சதியில் ஈடுபட்டவன் என்று தெரிய வந்தால்?
இவனையும் அந்தச் சதியில் சேர்ப்பதற்கு அந்தச் சிநேகிதன் ஒருவேளை முயற்சி
செய்திருந்தால்?....."
"எப்படியிருந்தாலும் முகத்துக்கு முகம் நின்று
சண்டையிட்டிருப்பானே தவிர ஒரு நாளும் முதுகில் குத்தியிருக்க மாட்டான்!"
"உன் சிநேகிதனிடம் உன்னுடைய நம்பிக்கையை வியக்கிறேன், தம்பி! உண்மை
எப்படியோ இருக்கட்டும். கந்தமாறனுடைய முதுகில் குத்தியதாக வந்தியத்தேவன் பேரில்
பழுவேட்டரையர்கள் குற்றம் சுமத்தி அவனை வேட்டையாடி வருகிறார்கள். இவ்வளவுதான்
எனக்குத் தெரியும். ஆகையால், வந்தியத்தேவனுக்கும் கந்தமாறனுக்கும் ஏதோ ஒரு
விதத்தில் சண்டை வந்திருக்க வேண்டும். இதிலிருந்து அவன் உனக்கு எதிரான சதியில்
சேர்ந்திருக்கவில்லை என்று நிச்சயமாகிறதல்லவா?"
"அதற்கு இவ்வளவு தூரம்
சாட்சியம் வேண்டியதில்லை. வந்தியத்தேவன் நம் விரோதிகளுடன் சேர்வது என்றால், அப்போது
இந்தப் பூமியே தலைகீழாகி விடும். அலை கடல் வறண்டு விடும். வானம் இடிந்து விழும்.
சூரியன் இராத்திரியில் உதிப்பான். சோழர் குலம் சர்வ நாசத்தை அடையும்....." என்று
ஆதித்த கரிகாலன் பரபரப்போடு கூறினான்.
"இளவரசர் சொல்லுவதை நானும் ஒத்துக்
கொள்வேன். வந்தியத்தேவன் ஒருநாளும் நமக்குத் துரோகம் செய்து எதிரிகளுடன் சேர
மாட்டான். அவனிடம் நான் சொல்லும் குற்றம் ஒன்றே ஒன்றுதான். அழகான பெண் முகத்தைக்
கண்டால் வந்தியத்தேவன் தலை கிறுகிறுத்து விடுவான். அவனுடைய மதி மயங்கிவிடும்!"
இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் புன்னகை புரிந்தான். "அது
தெரிந்திருந்தபடியால்தான் சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு,
இளையபிராட்டியிடம் போகும்படி அவனை அனுப்பினேன். இளவரசியை ஒரு தடவை அவன் பார்த்து
விட்டால், அப்புறம் தப்புவது ஏது? அவளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதானே?"
என்றான்.
உடனே மலையமான் மிலாடுடையார், "ஓகோ! அப்படியா வந்தியத்தேவனுக்குச்
சொல்லி அனுப்பியிருக்கிறாய்? எனக்கு தெரியாமல் போயிற்றே? தஞ்சாவூரை விட்டுக்
கிளம்பிய பிறகு வந்தியத்தேவனிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? அல்லது
இளையபிராட்டியிடமிருந்தாவது செய்தி வந்ததா?" என்றார்.
"ஒவ்வொரு நிமிஷமும்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒன்றும் செய்தி வரவில்லை..."
"அருள்மொழி இவ்விடம் வந்த பிறகு உன் சகோதரியையும் இங்கே தருவித்து விட
வேண்டியதுதான். அப்புறம் நமக்கு ஒரு கவலையும் இல்லை.இளையபிராட்டியிடம் எல்லா
யோசனையையும் விட்டுவிட்டு அவள் சொல்கிறபடி நாம் கேட்டு நடந்து வந்தால் போதும்!..."
"தாத்தா! இது விஷயத்தில் வந்தியத்தேவனைக் காட்டிலும் தாங்கள்
மோசமாயிருக்கிறீர்களே?"
"ஆம் கரிகாலா! உன் சகோதரி இரண்டு வயதுக்
குழந்தையாயிருந்த போதே கொடுங்கோலைக் கையில் பிடித்து விட்டாள். என்னையும் உன்
பாட்டியையும் தாய் தகப்பனையும் தன் இஷ்டப்படி ஆட்டி வந்தாள். இப்போதும் என் வரையில்
அப்படித்தான். அவள் வைத்ததே எனக்குச் சட்டம். கரிகாலா! உன் சகோதரியைப் பற்றிச்
சொன்னால் உனக்கு அது குறைவு என்று நினைக்காதே! உனக்கு அது பெருமையே தவிர வேறில்லை.
இளையபிராட்டி குந்தவையைப் போன்ற அறிவுச் செல்வத்தைப் படைத்தவர் ஆண்களிலோ, பெண்களிலோ
இது வரையில் பிறந்ததில்லை. நமது முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர்
எப்படிப்பட்டவர் என்பது உனக்குத் தெரியுமில்லையா? அவரே இளையபிராட்டியிடம் யோசனை
கேட்பார் என்றால், வேறு என்ன சொல்ல வேண்டும்?" என்று மிலாடுடையார் ஒரே பரவசமாகப்
பேசினார்.
வந்தியத்தேவனிடம் அசூயை கொண்ட பார்த்திபேந்திரன், "அதெல்லாம்
சரிதான்; யார் இல்லை என்றார்கள்? ஆனால் ஒருவேளை வந்தியத்தேவன் இளையபிராட்டியைப்
பார்ப்பதற்கு முன்னால் வேறு ஒரு பெண் முகத்தைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன
செய்வது? உதாரணமாக, அந்தப் பழுவூர் இளையராணி என்கிற மோகினியைப்
பார்த்திருந்தால்?..." என்றான். கடைசி வார்த்தைகளை அவன் சற்றுத் தாழ்ந்த குரலில்
கூறியபடியால், கிழவரின் காதில் அது விழவில்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் காதில்
விழுந்தது. அவன் சட்டென்று திரும்பிக் கண்களில் தீப்பொறி பறக்கப்
பார்த்திபேந்திரனைப் பார்த்தான். அந்தப் பார்வை பல்லவ வீரனைக் கதிகலங்கச் செய்து
விட்டது.
மலையமான் பாறையிலிருந்து எழுந்து நின்று, "பார்த்திபேந்திரா! நீ
நாளைக்கே இலங்கைக்குப் புறப்படுகிறாய் அல்லவா? வாலிபர்களாகிய உங்களுக்குப்
பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும். நான் கிழவன், மெள்ள மெள்ள அரண்மனைக்குப் போய்ச்
சேர்கிறேன். நீங்கள் பேச வேண்டியதைப் பேசிவிட்டுச் சாவகாசமாக வந்து சேருங்கள்!"
என்றார்.
அவர் சற்றுத் தூரம் சென்ற பிறகு பார்த்திபேந்திரன் ஆதித்த
கரிகாலனைப் பார்த்து, "அரசே! என் தலைவா! தங்கள் மனத்தில் ஏதோ ஒரு சங்கடம்
குடிகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வேதனை தங்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.
அது பழுவூர் இளையராணி சம்பந்தமானது என்பதை நான் அறிவேன். பெரிய பழுவேட்டரையரின்
கலியாணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் தங்கள் தோற்றமே மாறிவிடுகிறது. தங்கள்
கண்கள் சிவந்து அனலைக் கக்குகின்றன. எத்தனை காலம் இந்த வேதனையைத் தங்கள்
மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்கப் போகிறீர்கள்? என்னைத் தங்கள் 'உயிருக்கு
உயிரான சிநேகிதன்' என்று ஆயிரந்தடவை கூறியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட
சிநேகிதனிடம் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டக் கூடாதா? வேதனை இன்னதென்பதை
எனக்குச் சொல்லக் கூடாதா? பரிகாரம் ஏதாவது கண்டுபிடித்துச் சொல்ல எனக்கு ஒரு
சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதா? தாங்கள் மனத்திற்குள்ளே வேதனைப்பட்டுப் புழுங்குவதைப்
பார்த்துக் கொண்டு எத்தனை நாள்தான் நான் சும்மா இருக்க முடியும்?" என்று அடங்கா
ஆர்வத்தோடு கூறினான்.
ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு,
"நண்பா! என் மன வேதனை என்றும் தீராத வேதனை.என் உயிரோடு மடிய வேண்டிய வேதனை.
அதற்குப் பரிகாரமே கிடையாது. ஆயினும் உன்னிடம் சொல்லக் கூடாது என்பதில்லை. இன்றிரவு
சொல்லுகிறேன். இப்போது கிழவருடன் அரண்மனைக்குப் போய்ச் சேர்வோம். அவரைத் தனியாக
அனுப்புவது உசிதமில்லை!" என்று கூறிப் பாறையிலிருந்து எழுந்தான்.
பக்க
தலைப்பு
ஐம்பத்து நான்காம் அத்தியாயம் "நஞ்சினும் கொடியாள்"
மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில்
அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும்
மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்று
கேள்விப்பட்டு அதைக் கேட்கப் போய் விட்டார். ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும்
அரண்மனை மேல் மாடத்துக்குச் சென்றார்கள்.
மேல்மாடத்திலிருந்து ஆதித்த
கரிகாலன் மாமல்லபுரத்தின் இரவுத் தோற்றத்தைச் சிறிது நேரம் பார்த்துக்
கொண்டிருந்தான். ஆங்காங்கு மினுக்கு மினுக்கு என்று சில தீபங்கள் மங்கலாகப்
பிரகாசித்தன. வீதிகளில் பெரும்பாலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. கோவில்களில்
அர்த்தஜாம பூஜை முடிந்து வௌிக் கதவுகளைச் சாத்திக் கொண்டிருந்தார்கள்.
சமுத்திரத்தின் கோஷம் 'ஓ' வென்று சோகத் தொனியாகக் கேட்டது.ஐந்து ரதங்களுக்குப்
பக்கத்தில் வில்லுப்பாட்டு வித்வானும் அவருடைய கோஷ்டியும் அரவான் கதை நடத்த,
அவர்களைச் சூழ்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனக் கூட்டம் தீவர்த்திகளின் ஒளியில்
கரிய நிழல் உருவங்களாகத் தெரிந்தனர்.
"இந்த முதிர்ந்த வயதில் கிழவர் கதை
கேட்கப் போய் விட்டார், பார்! என்ன இருந்தாலும் பழைய காலத்து மனிதர்கள்தான்
மனிதர்கள்! அவர்களுடைய உடல் வலிமையும் மனோதிடமும் இந்த நாளில் யாருக்கு உண்டு?"
என்றான் ஆதித்த கரிகாலன்.
"அரசே! தாங்களும் பழைய காலத்தின் பெருமையைப்
பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா? பழைய கால மனிதர்கள் சாதித்த என்ன காரியத்தை
நம் காலத்தில் நாம் சாதிக்கவில்லை? தங்களைப் போல் இளம் பருவத்தில் போர்க்களத்தில்
வீரச் செயல் புரிந்தவர்களைப் பற்றிக் கதைகளிலும் காவியத்திலும் கூடக்
கேட்டதில்லையே?" என்றான் பார்த்திபேந்திரன்.
"பார்த்திபா! நீ உண்மை உள்ளம்
படைத்தவன். மனத்தில் ஒன்று வைத்துக் கொண்டு வாயினால் ஒன்று பேசாதவன் என்பதை நன்கு
அறிந்திருக்கிறேன். இல்லாவிட்டால் நீ என்னுடைய நண்பன் அல்ல, இத சத்ரு என்றே
சந்தேகிப்பேன். அவ்வளவு தூரம் என்னைக் குறித்து நீ முகஸ்துதி செய்கிறாய்.
முகஸ்துதியைப் போல் ஒருவனைப் பாதாளப் படுகுழியில் தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை!"
என்றான் ஆதித்த கரிகாலன்.
"ஐயா! சுயநல நோக்கத்துடன் ஒருவனைப் பற்றி இல்லாத
உயர்வைப் புனைந்து சொன்னால் அது முகஸ்துதியாகும். தஞ்சாவூரில் பழுவேட்டரையர்களின்
அடிமையாக இருக்கிறானே மதுராந்தகன், அவனிடம் சென்று 'நீ வீராதி வீரன்' என்று நான்
புகழ்ந்தால் அது முகஸ்துதியாகும். அப்படி நான் எப்போதாவது செய்ததாகத் தெரிந்தால்
என்னை உடனே தங்கள் கையிலுள்ள வாளினால் கொன்று விடுங்கள். தங்களைப் பற்றி நான்
சொன்னதில் ஒரு வார்த்தை கூட அதிகம் இல்லையே? பழைய காலத்தில் எந்த வீரன் இவ்வளவு
இளம் வயதில் இத்தனை பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான்! தங்கள் பெரிய
பாட்டனாராகிய யானை மேல் துஞ்சின இராஜாதித்தியரை ஒருவேளை தங்களுக்குச் சமமாக
வேணுமானால் சொல்லலாம்; தங்களை விட அதிகம் என்று அவரையும் சொல்ல முடியாது..."
"நிறுத்து, பார்த்திபா, நிறுத்து! இராஜாதித்யர் எங்கே? நான் எங்கே? மகா
சமுத்திரம் போல் பொங்கி வந்த இராஷ்டிர கூடர்களின் மாபெரும் சைன்யத்தை ஒரு
சின்னஞ்சிறு படையை வைத்துக் கொண்டு எதிர்த்து நிர்மூலமாக்கி வீர சொர்க்கம் அடைந்த
இராஜாதித்தியரைப் பற்றிப் பேசுவதற்கே நாம் தகுதியற்றவர்கள். அவருடன் நம்மை
ஒப்பிட்டுக் கொள்வதா? சோழ குலம் இருக்கட்டும்; நீ பிறந்த பல்லவ குலத்தில்
முற்காலத்தில் எப்பேர்ப்பட்ட மகாபுருஷர்கள் இருந்தார்கள்! மகேந்திரவர்மரையும்
மாமல்லரையும் இனி இந்த நாட்டில் எப்போதாவது காணப் போகிறோமா? தெற்கே
துங்கபத்திரையிலிருந்து வடக்கே நர்மதை வரையில் ஒரு குடை நிழலில் ஆண்ட புலிகேசியை
வென்று வாதாபியை அழித்து ஜயஸ்தம்பம் நாட்டிய நரசிம்மவர்மர் எங்கே? நீயும் நானும்
எங்கே? இந்த மாமல்லபுரத்தைப் போல் ஒரு சொப்பனபுரியை நம்முடைய காலத்திலோ நமக்குப்
பிற்காலத்திலோ யாராவது சிருஷ்டி செய்ய முடியுமா?.... அடடா! ஒரு தடவை நாலு புறமும்
நன்றாய்ப் பார், பார்த்திபா! அதோ வில்லுப் பாட்டு நடக்கிறதே, அங்கே உற்றுப் பார்!
அம்மாதிரி கற்பாறைகளைக் குடைந்து அற்புத ரதங்களின் வடிவங்களிலே அமைத்தவர்கள் சாதாரண
மனிதர்களா? முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாமல்லபுரம் எத்தகைய
கோலாகலமான காட்சி அளித்திருக்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கு உடம்பு
சிலிர்க்கிறது! உனக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாகவில்லையா? உன் முன்னோர்களைப் பற்றி
எண்ணும்போது உன் தோள்கள் பூரிக்க வில்லையா?"
"அரசே! சற்று முன்பு தங்களை
முகஸ்துதி செய்வதாகச் சொன்னீர்களே? சில சமயம் தங்களிடமுள்ள குற்றங்குறைகளையும் நான்
எடுத்துச் சொல்வதுண்டு என்பதை மறந்து விட்டீர்கள். சிற்பம் - சித்திரம் - கலை என்று
வாழ்நாளை வீணாக அடிக்கும் பைத்தியம் தங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப்
பைத்தியம் பிடித்ததினாலேதான் என் முன்னோர்கள் அடைந்த வெற்றியெல்லாம் வீணாக ஆயிற்று.
வாதாபிக்குச் சென்று ஜயஸ்தம்பம் நாட்டி விட்டு மாமல்லர் திரும்பி வந்தாரே? பிறகு
என்ன செய்தார்? கற்களைச் செதுக்கிக் கொண்டும் பாறைகளைக் குடைந்து கொண்டும்
உட்கார்ந்திருந்தார்! அதன் பலன் என்ன? சில காலத்துக்கெல்லாம் மறுபடியும்
சளுக்கர்கள் தழைத்தோங்கினார்கள். பெரும்படையுடன் மீண்டும் பழிவாங்குவதற்கு
வந்தார்கள். காஞ்சியையும் உறையூரையும் அழித்தார்கள். மதுரை வரையில் சென்றார்கள்.
நெடுமாற பாண்டியன் மட்டும் நெல்வேலியில் சளுக்கர் படையைத் தடுத்து நிறுத்தித்
தோற்கடித்திராவிட்டால் இன்று வரை இத்தென்னாடு முழுதும் சளுக்கர் ஆட்சியில்
இருந்திருக்கும் அல்லவா?"
"இல்லை, பார்த்திபா, இல்லை! உலகில் எந்த அரச
குலமும் என்றென்றைக்கும் நீடித்திருந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை. இராமர் பிறந்த
இக்ஷவாகு குலத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. சளுக்கர்களை வீழ்த்த இரட்டை
மண்டலத்தார் தோன்றினார்கள். இராஜ்யங்கள் சில சமயம் உன்னத நிலைமை அடைவதும் சில சமயம்
தாழ்ச்சி உறுவதும் இயல்பு. சில இராஜ்யங்கள் சில காலம் எவ்வளவோ உன்னதமாக இருந்து
விட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன. என்னுடைய முன்னோர்களையே பார்!
கரிகால்வளவன், கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர்கள் எவ்வளவோ சீரும்
சிறப்புமாயிருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி இப்போது நமக்கு என்ன
தெரிந்திருக்கிறது? கவிஞர்கள் சிலர் அவர்களைப் புகழ்ந்து பாடியிருப்பதனால் அவர்கள்
பேரையாவது தெரிந்து கொண்டிருக்கிறோம். கவி பாடிய பாணர்கள் உண்மையைத்தான்
பாடினார்களோ, அல்லது நன்றாக மதுபானம் செய்துவிட்டு, மனம் போன போக்கில் பாடினார்களோ,
நமக்குத் தெரியாது. ஆனால் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் இந்தச் சிற்பபுரியைச்
சிருஷ்டித்தார்களே, இது ஆயிரமாயிரம் ஆண்டு காலம் அவர்களுடைய பெருமையை உலகத்துக்கு
உணர்த்திக் கொண்டிருக்கும். அவர்கள் செய்த காரியத்துக்கு ஈடாக நீயும் நானும் என்ன
செய்திருக்கிறோம்! போர்க்களத்திலே பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று
குவித்திருக்கிறோம்; இரத்த வெள்ளம் ஓடச் செய்திருக்கிறோம். உலகில் நம் பெயரை
நிலைநிறுத்த வேறு என்ன செய்திருக்கிறோம்?"
இதைக் கேட்ட பார்த்திபேந்திரன்
இவ்விதம் பேசுவது ஆதித்த கரிகாலன்தானா என்று ஐயுறும் பாவனையுடன் சிறிது நேரம்
திகைத்திருந்தான். பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, "அரசே! போரையும் வீரத்தையும்
குறித்துத் தாங்களே இவ்விதம் பேசுவது என்றால், நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது?
தங்களுடைய மனம் இன்று சரியான நிலையில் இல்லை. ஆகையினாலேயே இப்படிப் பேசுகிறீர்கள்!
ஐயா! தங்கள் மனத்திலுள்ள வேதனை இன்னதென்பதை எனக்குச் சொல்லலாகாதா? தங்களுடைய வயிர
நெஞ்சத்தைச் சிறிது திறந்து காட்டக் கூடாதா?" என்று ஆவலோடு கேட்டான்.
"பார்த்திபா! என் நெஞ்சைப் பிளந்து காட்டினேனாயின், அதற்குள்ளே என்ன
இருக்கும், - எவர் இருப்பர் என்று நினைக்கிறாய்?"
"அதைத்தான் தெரிந்து
கொள்ள விரும்புகிறேன், சுவாமி!"
"என்னைப் பெற்ற தாயும் தந்தையும் இருக்க
மாட்டார்கள். என் உயிரினும் இனிய தங்கையும் தம்பியும் இருக்க மாட்டார்கள். என்
உயிருக்குயிராகிய நண்பர்களாகிய நீயும் வந்தியத்தேவனும் இருக்க மாட்டீர்கள். வஞ்சகமே
வடிவான ஒரு பெண் அதில் இருப்பாள். பாவமே உருவான பழுவூர் இளையராணி அதில் இருப்பாள்.
நஞ்சினும் கொடியவளான நந்தினி என் நெஞ்சுக்குள்ளே இருந்து என்னைப் படுத்தி வைக்கும்
பாட்டை இன்று வரை வாயைத் திறந்து யாரிடமும் சொன்னதில்லை. உன்னிடந்தான் இன்று
சொன்னேன்!" என்று ஆதித்த கரிகாலன் கூறிய வார்த்தைகளில் தணலின் ஜூவாலை வீசிற்று.
"அரசே! அதை ஒருவாறு நான் ஊகித்தேன். பழுவூர் இளையராணியின் பேச்சு
வரும்போதெல்லாம் தங்கள் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து சொல்ல முடியாத மனவேதனையை
வௌியிட்டதைக் கொண்டு அறிந்தேன். ஆனால் இந்தத் தகுதியில்லா மோகம் எப்படித் தங்கள்
நெஞ்சில் இடம்பெற்றது? அன்னியப் பெண்களையெல்லாம் அன்னையெனக் கருதும் மரபில் தாங்கள்
வந்தவராயிற்றே? பழுவேட்டரையர் தங்கள் குலத்துக்கு நெடுங்கால உறவினர்; பிராயம்
முதிர்ந்தவர். இன்றைக்கு அவர்கள் நமக்குப் பகைவர்களானாலும் முன்னால்
அப்படியில்லையே? தங்கள் தந்தையும் பாட்டனாரும் அவரை எவ்வளவு மதித்து மரியாதை
செய்தார்கள்? அப்படிப்பட்டவர் அக்னி சாட்சியாக மணந்து கொண்ட பெண்ணை... அவள்
எவ்வளவுதான் கெட்டவளானாலும்...தாங்கள் மனத்திலும் கருதலாமா?"
"கூடாது,
பார்த்திபா, கூடாது! அது எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்?
தெரிந்திருப்பதினாலேதான் இந்த மனவேதனை. அவள் பழுவேட்டரையரை மணந்த பிறகு என்
நெஞ்சில் இடம் பெறவில்லை. அதற்கு வெகு காலம் முன்பே என் உள்ளத்தில் அவளுடைய மோக
விஷம் ஏறிவிட்டது. அதைக் களைந்தெறிய எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. குற்றம்
எல்லாம் அவள் பேரில் என்று தோன்றும்படி நான் பேசுகிறேன். குற்றம் யாருடையது
என்பதைக் கடவுளே அறிவார். பார்க்கப் போனால், பாவம் பழியெல்லாம் எங்களைப் படைத்த
கடவுள் தலையிலேயே விழ வேண்டும். அல்லது எங்களைச் சந்திக்கப் பண்ணிப் பின்னர்
பிரித்து வைத்த விதியின் பேரில் குற்றம் சொல்ல வேண்டும்!"
"அரசே! நந்தினி
பழுவூர் ராணியாவதற்கு முன்னால் தாங்கள் அவளைச் சந்தித்ததுண்டா? எங்கே, எப்போது
எப்படிச் சந்தித்தீர்கள்?"
"அது பெரிய கதை. இன்றைக்கு அதைக் கேட்க
விரும்புகிறாயா?"
"கட்டாயம் கேட்க விரும்புகிறேன். அதைத் தெரிந்து
கொள்ளாவிட்டால் எனக்கு மன நிம்மதியிராது. நாளைக்கு இலங்கை போகச் சொல்லுகிறீர்களே?
அங்கே சென்று என் கடமையைச் சரிவரச் செய்ய முடியாது. நிலைமை இன்னதென்பதைத் தெரிந்து
கொண்டு தங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனால்தான் என் உள்ளம் ஒருவாறு நிம்மதி
அடையும்!"
"நண்பா! எனக்கு ஆறுதல் சொல்லப் போகிறாயா? இந்த ஜன்மத்தில் எனக்கு
ஆறுதல் என்பது கிடையாது. அடுத்த பிறவியில் உண்டா என்பதும் சந்தேகம் தான். உன்னுடைய
மன நிம்மதிக்காகச் சொல்கிறேன். உன்னிடம் சொல்லாமல் நான் எதையோ ஒளித்து
வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு நீ இலங்கை போக வேண்டியதில்லை!"
இவ்விதம்
கூறி ஆதித்த கரிகாலன் சிறிது நிதானித்தான். பிறகு ஒரு நெடிய பெருமூச்சு விட்டு
விட்டுச் சொல்லத் தொடங்கினான்.
பக்க
தலைப்பு
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் நந்தினியின் காதலன்
"முதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை
நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர்
ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.
விளையாட்டு முடிந்து ஓடத்திலிருந்து இறங்கிப் பூஞ்சோலை வழியாக அரண்மனைக்குச்
சென்றோம். வழியில் எங்கள் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியின் குரல் கேட்டது.
நாங்கள் மூன்று பேரும் பாட்டியிடம் செல்லமாக வளர்ந்தவர்கள். பாட்டியிடம் நாங்கள்
ஓடம் விட்டதைப் பற்றிச் சொல்வதற்காக அவருடைய குரல் கேட்ட கொடி வீட்டுக்குள்
புகு |