|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |

Etext Preparation : Mr. Ganesh Mohan, Chennai, Tamilnadu, India
Proof-reading: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம்
நிலைமண்டில ஆசிரியப்பா
கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி
முனைவேன் முருக னெனவிவர் முதலிய
திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த
சங்கமென்னுந் துங்கமலி கடலுள்
அரிதி னெழுந்த பரிபாட் டமுதம் 5
அரசுநிலை திரீஇய வளப்பருங் காலம்
கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்
பாடிய சான்றவர் பீடுநன் குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற்
றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் 10
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற்
சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற 15
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பிற் றெல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன்
நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே 21
நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின்
வரும்பரிசு புள்ளுரு மாலே - சுரும்பு
வரிபாட லின்சீர் வளர்துளவந் தோளாய்
பரிபாட லின்சீர்ப் பயன்.
-------------------------------
1. திருமால்
அரு மறைப் பொருள்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.
துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68
------------------------------------------
கடவுள் வாழ்த்து
2. திருமால்
பாடியவர் :: கீரந்தையார்
இசையமைத்தவர் :: நன்னாகனார் இசை
பண் :: பாலையாழ்
திருமாலின் பெருமை
ஊழிகளின் தோற்றம்
தொல் முறை இயற்கையின் மதிய
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15
வராக கற்பம்
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்
திருமாலின் நிலைகள்
நீயே, ‘வளையடி புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதாம்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.
திருமாலின் சிறப்பு
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35
படைச் சிறப்பு
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40
தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.
உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.
பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே. 76
-------------------------------------
கடவுள் வாழ்த்து
3. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ்
திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்புபறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94
--------------------------------
கடவுள் வாழ்த்து
4. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ்
புகழ்தலை ஒழியோம்
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;
இரணியனைத் தடித்தமை
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமைபுருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
கருடக் கொடி
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
--------------------------------
5. செவ்வேள்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: கண்ணனாகனார்
பண் :: பாலையாழ்
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை! 10
வேலனது வெறிப்பாட்டு
மூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே; 15
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்பு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும், 20
ஏனோர் நின் வலத்தினதே;
முருகப் பிரானின் பிறப்புஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, 30
‘விலங்கு‘ என, விண்னோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; 35
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; 45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழா அது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
தேவர் சேனைக்குத் தலைவனாதல்ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்
தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையடு புகழ் வரம்பு இகந்தோய். 70
முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை-
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும், 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்;
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்-
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! 81
------------------------------
6. வையை
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்
வைகையில் பெரு வெள்ளம்
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல். 10
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.
வையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்
தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்
கொடி சேரா, திருக் கோவை காழ் கொளத் 15
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, 20
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: ‘ வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென, 25
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் 30
அணி அணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்;
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், 35
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்
ஆற்றினது நீரோட்டம்
சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, 40
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.
அந்தணர்கள் கொண்ட கலக்கம்நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. 45
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப ‘நலன் அழிந்து,
வேறாகின்று இவ் விரி புனல் வரவு‘ என, 50
சேறு ஆடு புனலது செலவு
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,
‘இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
புரைவது பூந் தாரான் குன்று‘ எனக் கூடார்க்கு 55
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே
தமிழ் வையைத் தண்ணம் புனல். 60
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்
‘விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,
‘தளிர் அறிந்தாய், தாம் இவை.‘
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்
‘பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?--
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் 65
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.‘
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என
‘புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
பெருக்கு அன்றோ, வையை வரவு?‘ 70
தலைவன் உரையை ‘உண்மை அன்று‘ என, அவள் மறுத்து உரைத்தல்
‘ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், 75
குருகு இரை தேரக் கிடக்கும்___பொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; 80
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் 85
கனற்றுபு காத்தி, வரவு!‘
தலைமகன் மேலும் கூறுதல்
‘நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்
கொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின் 90
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது?‘ என--
காதற் பரத்தை கூற்று
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு .
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
‘இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
தலை தொட்டேன், தண் பரங்குன்று!‘ 95
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
‘சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
வல் இருள் நீயல்; அது பிழையாகும்‘ என, 100
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு. 106
-------------------------------
7. வையை
(தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை, ‘நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக என்றாட்கு, அப் புனலாணி இன்பமும், பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, ‘என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்‘ என்றது.)
பாடியவர் :: மையோடக் கோவனார்
இசையமைத்தவர் :: பித்தாமத்தர்
பண் :: பாலையாழ்
வையைப் புனலின் வருகை
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, 5
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--
பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த
வந்தன்று, வையைப் புனல். 10
புனலின் செயல்
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
உய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி; 15
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் 20
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்‘கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய 25
பாவை சிதைத்தது‘ என அழ, ஒருசார்;
‘அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;
‘ஓதம் சுற்றியது ஊர்‘ என, ஒருசார்;
‘கார் தூம்பு அற்றது வான்‘ என, ஒருசார்; 30
‘பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென, 35
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து,
வையைப் புனலின் வனப்பு
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, 40
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
அலர் தண் தாரவர், காதில்
தளிர் செரீஇ, கண்ணி பறித்து; 45
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
எல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்ட
தானையான் வையை வனப்பு. 50
தோழி புனலணி இன்பம் கூறுதல்
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
கை புதைஇய வளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் 55
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
வையைப் பெருக்கு வடிவு. 60
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
கூர் நறா ஆர்ந்தவள் கண்.
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப் 65
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
‘என்னை வருவது எனக்கு?‘ என்று, இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, 70
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
தீர்விலதாகச் செருவுற்றாள்___ செம் புனல் 75
ஊருடன் ஆடுங்கடை.
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க; 80
பொருது இழிவார் புனல் பொற்பு-அ·து
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க---
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே. 86
-------------------------------
கடவுள் வாழ்த்து
8. செவ்வேள்
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்
திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்
மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---
பற்றாகின்று, நின் காரணமாக; 10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, 20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.
குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற, 25
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.
குன்றத்தின் முழக்கம்
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்
குன்றம் குமுறிய உரை. 35
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்‘தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல், 40
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும் 45
சிறப்பிற்றே---தண் பரங்குன்று.‘
தலைமகள் புலந்து உரைத்தல்
‘இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--
காலைப் போய் மாலை வரவு.‘ 50
தலைமகன் சூளும் தலைவி விலகலும்
‘இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
துனியல் நனி ‘நீ நின் சூள்.‘ 55
தோழி தலைமகனைச் சூள் விலகக்கூறுதல்‘என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீ, நின் சூள்;
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா; 60
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின், 65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு 70
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!‘
தலைமகனது உரை
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
‘நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,‘ நேரிழாய்!
கய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்; 75
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____
நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று___ நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்_____
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி, 80
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை_____முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!
தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்
‘தெரி இழாய் செல்க!‘ என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____ 85
எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்,
தலைமகளிரது செய்தி
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் 90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி, 95
சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
மணியும், கயிறும், மயிலும், குடாரியும், 100
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
‘கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக எனவரம் கொள்வோரும், 105
‘கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,
‘செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,
‘ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும், 110
துஞ்சாக் கம்பலை______
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை, 115
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையடு, புலம் வேறுபாடுறாக்
கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;
அரிவையர் அமிர்த பானம் 120
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;
பரங்குன்றை வாழ்த்தல்
என ஆங்கு,
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி, 125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு. 130
------------------------------
கடவுள் வாழ்த்து
9. செவ்வேள்
பாடியவர் :: குறும்பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்
முருகவேளை வாழ்த்துதல்
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, 10
தணி மழை தலையின்று, தன் பரங்குன்று.
தமிழது சிறப்பிற்குக் காரணம்
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: 15
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; 20
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் 25
கொள்ளார், இக் குன்று பயன்.
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
‘வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30
கேழ் இலார்____ மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?____
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!‘
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் 35
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
‘வருந்தல்‘ என, அவற்கு மார்பு அளிப்பாளை,
‘குறுகல்‘ என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப; 40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; 45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்____
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார்______நூழில் தலைக்கொள்ள:
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; 50
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார்___ 55
மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை____வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் ____உடன் சுற்றி, 60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
கோகுலமாய்க் கூவுநரும், 65
ஆகுலம் ஆகுநரும்____
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.
வாழ்த்தி வேண்டல்
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், 75
செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எ·கினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; 80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்____
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. 85
----------------------------
10. வையை(பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி
தூது விட, சென்ற பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு
அணியும், ஆங்குப் பட்ட செய்தியும், கூறியது.)
பாடியவர் :: கரும்பிள்ளைப் பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்
மலைவரை மாலை அழி பெயல்_____காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட____
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய 5
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்
போந்தது____வையைப் புனல்.
புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை 10
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், 15
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;
முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்____ 20
இரு திரு மாந்தரும் இன்னினியோரும்_____
விரவு நரையோரும் வெறு நரையோரும்_____
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல, 25
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி_____
கரை சேர்ந்த மகளிர் செயல்
(அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர் பரத்தையர்
இவர்களின் செயல்)
நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி, 30
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,
சேமத் திரை வீழ்த்து சென்று, அமளி சேர்குவோர்:
முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட, 35
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏழுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்_____ 40
களிறு பிடிகளின் ஒத்த அன்பு
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,
நலத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக் 45
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,
செய் தொழில் கொள்ளாது, மதி செத்துச் சிதைதர;
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து 50
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்______
இதையும் களிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம். 55
மகளிர், மைந்தர் இவர்கள் செயல்பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,
பல் சனம் நாணிப் பதைபதைப்பு_____மன்னவர்
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை 60
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை_____
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி, 65
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்
கரப்பார், களி மதரும் போன்ம்.
கள்ளடு காமம் கலந்து, கரை வாங்கும்
வெள்ளம் தரும், இப் புனல். 70
மகளிரது நீர் விளையாட்டுபுனல் பொருது மெலிந்தார் திமில் விட,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர், 75
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; 80
செங் குங்குமச் செழுஞ் சேறு,
பங்கம் செய் அகில் பல பளிதம்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்;
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை, 85
வித்தி அலையில், ‘விளைக! பொலிக! என்பார்;
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,
நல்லது வெ·கி, வினை செய்வார்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்; 90
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக் 95
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகைஆட்டு அயர்ந்து_____அரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்___________
பின்னும், மலர்க் கண் புனல்
புனல் விளையாட்டால் மெலியாத மைதர் செயல்தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், 100
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்,
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார், 105
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்
ஒளிறு இலங்கு எ·கொடு வாள் மாறு உழக்கி,
களிறு போர் உற்ற களம்போல, நாளும் 110
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.
புனலாடி மீண்டவாறுமதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; 115
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, 120
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
கால் திரிய ஆர்க்கும் புகை. 125
வையையை வாழ்த்துதல்
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க____
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே. 131
-------------------------
11. வையை
(வரைவு மலிந்த தோழி, ‘கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்டேம்‘
என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.)
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நாகனார்
பண் :: பாலையாழ்
மழை பொழிய வையையில் நீர் பொருகி ஓடுதல்
‘விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி 5
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த 10
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல். 15
தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்‘வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம், வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான்____ஆய் கோல்
வயவர் அரி மலர்த் துறை என்கோ? 25
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ?____பெரிய
திருமருத நீர்ப் பூந் துறை.‘ 30
கண்டார் கூற்று
‘ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி 35
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற! 40
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:‘
என ஆங்கு_______ 45
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு
வையை போர்க்களத்தை ஒத்தல்
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர், 50
கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,
புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,
கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், 55
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
பொரு களம் போலும் தகைத்தே____பரி கவரும் 60
பாய் தேரான் வையை அகம்.
இளவேனிற் காலத்து ஆடல்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினைப் பொலங் கோதையவரொடு, 65
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் 70
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.
தைந் நீராடல்
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
மகளிர் செயல்கள்
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று____
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
‘நில்லிகா!‘ என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____
மல்லிகா மாலை வளாய். 105
மகளிர் கருத்தும், வேண்டுகோளும்தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; 110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, ‘தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு‘ எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே____
சேய் உற்ற கார் நீர் வரவு.
‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்‘ என்மாரும், 115
‘ "கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்‘ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!‘ என்மாரும்,
‘ "கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், 120
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்_____
ஒருவன் உவந்தவை காட்டுதல்
‘கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: 125
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:
பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,
கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை 130
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.
என ஆங்கு________
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்
இன்ன பண்பின் நின் தைந் நீராடல்_______
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட 135
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்_____
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே! 140
----------------------
12. வையை
(கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம்
கூறி, ‘இல் வகைப்பட்ட இன்பத்தை உடைய நின்னையும் நினைத்திலர்‘ என,
வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, தோழி இயற்பழித்தது.)
பாடியவர் :: நல்வழுதியார்
இசையமைத்தவர்