|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஒப்பியல் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.
பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளின் ஒருவரும் பிறர்மொழியிலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்சமர்ப்பணம்
முன்னுரை
'ஒப்பியல் இலக்கியம்' என்ற தலைப்பிலே தொகுக்கப் பெற்றுள்ள கட்டுரைகள் நான் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதியவற்றிற் சில. பொதுப்பண்புடைய இப்பதினொரு கட்டுரைகளையும் ஒன்று சேரத்தொகுத்தபோது அவை ஓரளவு காலவரையறையையொட்டி அமைந்திருக்கக் காண்கிறேன். எமக்குக் கிடைக்கும் மிகப் பழைய சான்றோர் செய்யுட்களிலிருந்து தற்காலப் பாரதி பாடல்கள் வரை எனது கண்ணோட்டம் பாய்ந்திருக்கக் காணலாம். இலக்கியத்தின் தொடர்ச்சியில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. அது போலவே இலக்கியத்தின் உலகப் பொதுமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவன். இந்நம்பிக்கைகள் நெஞ்சிலே நெடுங்காலமாகப் பதிந்திருப்பனவாதலால் அவ்வப்போது எழுதுங்கட்டுரைகளில் அங்கங்கே வௌிப்படுவது இயல்பே.பொருளடக்கம்
ஒப்பியலின் தத்துவங்கள் - 1
தமிழில் ஒப்பியல் ஆய்வு - 23
தமிழ்
வீரயுகப் பாடல்கள் - 48
இரு கோட்பாடுகள் - 61
பெரும் பெயர் உலகம் -
79
பொற் காலமும் புதுயுகமும் - 89
காதலும் கட்டுப்பாடும் - 116
சித்தர்
தத்துவம் - 137
சிந்துக்குத் தந்தை - 160
பாரதியும் சுந்தரம் பிள்ளையும் -
196
பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - 219
உசாத் துணைநூல்கள் -
228
நூலாசிரியர் அகரவரிசை - 242
ஆசிரியரது இதர நூல்கள்
பண்டைத் தமிழர்
வாழ்வும் வழிபாடும்
தமிழ் நாவல் இலக்கியம்
அடியும் முடியும்
1. ஒப்பியலின் தத்துவங்கள்
நவீன ஆராய்ச்சியிற்
காணப்படும் முக்கிய பண்புகளிலொன்று பல துறைகள் மாறிமாறி ஒன்றை யொன்று ஊடுருவிப்
பாதிப்பதாகும். உதாரணமாக ஒரு காலத்தில் மொழிநூல் என்பது இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்ட
மொழி வரலாற்றாய்வாகக் கருதப்பட்டது.இன்று மொழியியலின் சில பிரிவுகளைச் செம்மையாகக்
கற்றுத் தேர்வதற்குக் கணிதவியல், புள்ளியியல், பௌதிகவியல் முதலியவற்றின் அறிவு
இன்றியமையாதிருக்கிறது. அது போலவே ஒரு காலத்தில் அகழாராய்ச்சி என்பது நிலத்தைத்
தோண்டி மறைந்து கிடக்கும் பொருள்களைக் கண்டெடுத்து விளக்கும் பயிற்சியாகக்
கருதப்பட்டது. இன்று இரசாயனம், பௌதிகம் முதலிய அறிவியற்றுறைகளின் அறிவு பெரிதும்
வேண்டப்படும் ஒரு புத்தம் புதிய ஆய்வுப் பகுதியாக அது வளர்ந்து வருகிறது. இப்பொதுப்
போக்கிற்கு இயைய இலக்கியமும் தற்காலத்திற் பிறதுறைகளின் தாக்கத்தைப் பெற்று
வருகின்றது. ஒரு காலத்தில் கவிதை என்பது கருவிலே திருவுடையாரால் படைக்கப் பெற்று
இன்பம் பயக்கும் இயல்பொன்றே அமைந்த "தூய" கலையாகக் கருதப்பட்டது. இன்றோ
பொறிமூளையாம் கணனி சுமாரான தரமுள்ள கவிதை செய்யுமளவிற்குக் கவிதைக் கலை அறிவியலின்
தாக்கத்தைப் பெற்றுள்ளது
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எமது யுகம்
விஞ்ஞானயுகம். விஞ்ஞானம் எமது வாழ்க்கை முழுவதையும் எண்ணற்ற வழிகளிலும் வகைகளிலும்
பாதிக்கிறது. ஆகவே வாழ்க்கையின் விளைபொருளாகவும் இலட்சியக் கனவாகவும் அமைந்த
இலக்கியம் அறிவியலின் செல்வாக்கைத் தவிர்த்து இயங்கமுடியுமா? முடியாது. விஞ்ஞான
யுகத்திலும் இலக்கியம் தனக்கெனவோர் இடத்தைப் பெற்றே உள்ளது. ஆனால்
அவ்விலக்கியத்தின் தன்மை நிச்சயமாக மாற்ற மடைகிறது. புதிய கருத்துக்களையும்
நம்பிக்கைகளையும் அது ஏற்றாலன்றிச் செயற்பட வியலாது.
படைப்பிலக்கியம் ஒரு
புறமிருக்க இலக்கிய ஆய்விலும் நோக்கிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு
சிறு உதாரணம் காட்டுவோம். சென்ற நூற்றாண்டின் பிற்கூறுவரை இலக்கிய வரலாறு எமது
மொழியில் எழுத முயன்றவர் எவருமிலர். ஏனெனில், காலவாராய்ச்சி முக்கியமாகக்
கருதப்படவில்லை. விஞ்ஞானப் பிரிவாகிய உயிரியலின் நியதியாகப் பரிணாமக் கொள்கை
தோன்றியதையொட்டி படிமுறை வளர்ச்சி என்னுங் கோட்பாடு சிந்தனையின் அங்கமாக அமைந்த
காலத்திலேயே இலக்கிய வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொருண்மை
சுட்டுவனவாயின.
இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே
ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின்
சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப்
பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு,
மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது.
மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல்,
புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும்.
சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு
வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல்
ஆய்வானது இலக்கியத் துறைக்குக் காலங் கடந்தே வந்து சேர்ந்திருக்கிறது. ஒப்பியற்
சட்டம், ஒப்பியல் மதம், ஒப்பியற் கல்வி, ஒப்பியல் அரசியல் என்பன ஓரளவு
வளர்ச்சிபெற்றவையாகக் காணப்பட ஒப்பியல் இலக்கியம் கடைக் குட்டியாக இருக்கிறது
எனலாம். ஆகவே அதனைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது.
இன்னொரு வகையிற்
பார்க்கும் பொழுது ஒப்பியல் நோக்கு இலக்கியக்கர்த்தாக்களிடத்துத் தொன்றுதொட்டுக்
காணப்படுகிறது. பிற நூலாசிரியனைப் பற்றிய அறிவும் பிற நூற் பயிற்சியும்
அடிப்படையில் ஒப்புநோக்குடையனவே. மிகப் பழங்காலத்தவரான சான்றோரைக் கணக்கெடுக்காது
விட்டால் எமது தலையாய நூலோரெல்லாம் வடமொழியறிவுடையோராகவே இருந்திருக்கின்றனர். அது
மட்டுமன்று. கம்பனைப் போன்ற புலவருக்கு வடமொழியோடு கன்னடம் முதலிய திராவிட
மொழிகளும் தெரிந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இலக்கியகாரரைவிட இலக்கணகாரரும்
இலக்கணகாரரைவிடச் சமய நூலாரும் பன்மொழிப் புலமையும் பரந்த ஒப்புநோக்கு
முடையவராயிருந்தனர்.
"தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவ ரானவர் தம்முளும் முந்திய
நாவி
னார்உரை யின்படி நான்தமிழ்ப்
பாவி னால்இது உணர்த்திய பண்பரோ"
எனக்
கம்பன் நூல் வரலாறு கூறும் போது தனக்கு முன் வடமொழியில் இராம காதையைப் பாடிய
மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறுகின்றனன்.
மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றிருப்பதாகக் கூறுகிறான்
கம்பன். இம்மூவரானவர் வான்மீகி, வியாசர், அகத்தியர் என்பது மலையாள மொழியிலுள்ள
ராமசரிதம் கூறுஞ் செய்தி. நகர் நீங்கு படலத்திலே
"தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு
எல்லை தேர்ந்தான்"
என்று கம்பன்
இராமனைக் குறித்துக் கூறுவது கம்பனது இரு மொழிநோக்குக்கு மற்றொரு சான்றாகும்.
ஆதிகவியின் பெருமையையும் பேராற்றலையும் பலபடப்போற்றும் கம்பன் எத்தனையோவிடங்களில்
கதையமைப்பு, பாத்திர வார்ப்பு முதலியவற்றில் வான்மீகியிலிருந்து வேறுபடுவதற்கு ஆதி
காவியத்தை மனத்திருத்தியமையே ஏதுவாகும். கம்பனைப் போலவே எமது யுகத்தின் மகாகவியான
பாரதியும் பன்மொழிப் புலவனாகத் திகழ்ந்தான். "யாமறிந்த புலவரிலே" என்று அவன்
பாடும்பொழுது ஒப்புநோக்கியேதான் கண்ட உண்மையை உரைக்கின்றான். அதுபோலப் பாஞ்சாலி
சபதத்தைப் பாடியபோது சிற்சில இடங்களில் வியாசரிலிருந்தும் வேறுபடுவதற்கும்
ஒப்புநோக்கே ஏதுவாகும். தற்கால ஆசிரியர் சிலர் ஐரோப்பிய மொழியறிவுடையராதலால்
இலக்கியத்தைப் படைக்கும் போதும் விமர்சிக்கும்போதும் ஐரோப்பிய இலக்கியங்களை
மனத்திலிருத்திக் கொள்கின்றனர்.
இலக்கிய ஆசிரியரை விட இலக்கண நூலார் ஒப்பு
நோக்கு அதிகம் கை வந்தவராயிருக்கின்றனர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்துச்
சேனாவரையர் எழுதிய உரையிலிருந்து ஒருதாரணம் பார்க்கலாம்:
"வட சொல்லாவது வட
சொல்லோடொக்குந் தமிழ்ச் சொல்லென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று: ஒக்குமென்று
சொல்லப்படுவன ஒருபுடையனொப்புமையும் வேற்றுமைமுடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை
எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கணமுடைமையான் இரண்டு
சொல்லெனப்படா: அதனால் ஒத்தல் யாண்டையது? ஒரு சொல்லேயார்மன்பது."
சேனாவரையரது
கருத்து ஒருபுறமாக, வட சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் ஒப்புநோக்கி அபிப்பிராயங்
கூறுந்தன்மையே இங்குக் கவனிக்கத்தக்கது. சேனாவரையர் போன்ற வட மொழிச் சார்புடையோரது
ஒப்புநோக்கு உண்மையில் ஒப்புநோக்கும் மனோ பாவத்தினடிப்படையில் தோன்றியதல்ல
என்பதையும் அதன் உள்ளார்ந்த குறைவுபாட்டையும் பின்னர் காட்டுவேன். ஆனால்
ஒப்புநோக்கின் பயன் விபரீதமாயமைந்த போதும் ஒப்புநோக்கிற்கு இன்றியமையாததான
பன்மொழிப்பயிற்சி எக்காலத்தும் வேண்டப்படுவதே என்பதை இலக்கண உரையியற்றிய இளம்பூரணரை
வன்மையாகக் கண்டிக்கும் வட நூற்கடலும் தென்தமிழ்க் கடலும் நிலைகண்டுணர்ந்த ஆசிரியர்
சிவஞானயோகிகள் அன்னாரின் பிறமொழியறிவின்மையைக் குறிப்பாகக் குத்திக்காட்டுவது மனங்
கொளத்தக்கது. தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியருள்ளிட்டோர் உரையை ஆசிரியர்
கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரும் மயங்குவாராயினர். இவ்வாறு உரையாசிரியரை
மட்டந்தட்டும் சிவஞான யோகிகள் வட நூற் கடலை நிலைகண்டறிந்த சேனாவரையர் என்று
புகழ்மாலை சூட்டுவதும் குறிப்பிடத்தக்கதே.
இலக்கண நூலார் இவ்வாறாக இவரினும்
கூடியளவு ஒப்புநோக்குடையராய் இருந்தனர். சமயவாதிகள் தருக்கம் முதலியனவற்றில்
மறுக்கப்பட வேண்டியனவற்றை ஒருவர் பூர்வபக்கஞ் செய்வது ஒப்புநோக்கின் உதவியைக்
கொண்டேயாகும். மணிமேகலைக் காப்பியத்திலே பல்வேறு சமயக் கணக்கரிடம் ஒட்டிய சமயத்
துறுபொருள் கேட்கும் மணிமேகலை ஒப்புநோக்கின் பயனாக பௌத்தத்தின் மகிமையை ஐயமின்றி
அறிந்து கொள்வதாகக் காட்டுகிறார் சாத்தனார். சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலொன்றான
சிவஞான சித்தியாரில் பரபக்கம், சுபக்கம் ஆகிய இரு பகுதிகளிலும் முறையே பரசமய
மறுப்பும் சைவ சித்தாந்த விளக்கமும் கூறப்படுவதற்கு ஒப்புநோக்கு இன்றியமையாதது. சமண
சமயத்தவராகிய தொல்காப்பியர் மரபியலிலே தந்திரவுத்திகளை விரித்துக் கூறுமிடத்து,
ஒப்பக்கூறல், தன்கோட்கூறல், பிறனுடம்பட்டது தானுடம்படுதல் என்பனவற்றை சமயஞ் சார்ந்த
ஒப்பியலின் வழிவந்த தருக்கத்திலிருந்தே எடுத்தாள்கிறார். இவையாவும் சமயக் கணக்கரின்
மதி வழிவந்த ஒப்பியலுக்கு உதாரணங்கள்.
இவ்வாறு எமது முன்னோர் ஒப்பு
நோக்குடையராயிருந்திருக்கவும் அதனைப் புதுவதாகக் கூற வேண்டுங் காரணம் என்னவெனச்
சிலர் எண்ணக் கூடும். அதற்கு விடை கூறுமுகத்தான் நவீன ஒப்பியலின் தத்துவங்களை
விளக்கிக் கூறலாம்.
இக் கட்டுரையின் தொடக்கத்திலே ஆற்றல் இலக்கியத்திலும்
அறிவிலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தைக் குறிப்பிட்டேன். நவீன
ஒப்பியல் இலக்கியம் இத்தாக்கத்தின் விளைவுகளில் ஒன்று. நவீன ஒப்பியலைப் பண்டைய
ஒப்பியலிலிருந்து (அவ்வாறு கூறக்கூடுமானால்) வேறுபடுத்துவது அதிற்கையாளும்
முறையேயாகும். விஞ்ஞான முறை விஞ்ஞானத்துக்கு முந்தியோ பிந்தியோ தோன்றுவதல்ல. அது
விஞ்ஞானத்தின் உடன் பிறவியேயாகும். அதுபோலவே, நவீன ஒப்பியல் நவீன முறையினின்றும்
தோன்றுவது. விஞ்ஞானத்தில் முறையையும் பொருளையும் பிரிக்க முடியாதது போல ஒப்பியல்
இலக்கியத்தையும் ஒப்பியல் முறையையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்து விட
இயலாது.
நாம் மேலே உதாரணங் காட்டிய இலக்கிய ஆசிரியரும் இலக்கண நூலாரும் சமய
வாதிகளும் தத்தம் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்பப் பொருள்களை ஒப்பு நோக்கினர்.
எனினும் அவர்களின் பிரதான நோக்கம் தமது நம்பிக்கையை அல்லது அபிப்பிராயத்தை உயர்த்தி
உறுதிப் படுத்துவதே. சித்தியாரில் பரபக்கமும் சுபக்கமும் அமைத்ததன் நோக்கம்
உண்மையில் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதல்ல. அது
ஓரளவிற்குத் தெரிந்து தௌிவதாகும். சமயவாதியாகிய சகலாகம பண்டிதர் மெய்ச்சமயமாகத்
தான்கைக் கொண்டிருந்த சைவத்தை நிலை நாட்டுவதற்கு இதர சமயங்களை நிராகரிக்க
வேண்டுமாதலால் பரபக்கத்தை அமைத்தார் சேனாவரையர். வட மொழியையும் தென் மொழியையும்
ஒப்பு நோக்கியதன் பயனாக இரண்டையும் மேலும் ஆழமாக அறியவில்லை. மாறாக, "தமிழ்ச் சொல்
வடபாடைக்கட் செல்லாமையானும் பட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை
வடசொல்லாய் ஈண்டு வழங்கப்படன வெனல் வேண்டும்" என்று ஒரு பாற்கோடியுரைத்தார். சிவஞான
யோகிகள் புகழ்வது போலச் சேனாவரையர் வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த வராயிருத்தல்
கூடும். ஆயினும் தமிழையும் வட மொழியையும் ஒப்பிட்ட போது இரண்டும் பன்னெடுங்காலமாக
அருகருகே வழங்கியமையால் தமிழ்ச் சொற்களும் வடபாடைக்குட் சென்றிருக்கலாம் என்ற
எண்ணம் அவருக்கத் தோன்றவில்லை. காரணம் வட மொழி தேவபாடை என்ற மூடநம்பிக்கையாகும்.
ஆகவே அவரது ஒப்புநோக்கு ஏலவே மனத்திலிடம் பெற்றிருந்த ஒரு தலையான தப்ெண்ணத்துக்கு
அரண்செய்வதாகவே அமைந்து விடுகிறது. அவரது ஒப்புநோக்குப் பெயரளவில் ஒப்பு
நோக்கேயன்றி உண்மையில் தவறான முடிவுகளைத் தவிர்க்கவும் தடுக்கவும்
முன்னேற்பாடுகளைக் கொண்ட தாயிருக்கவில்லை. சேனாவரையர் வட சொல் எல்லாத்தேயத்திற்கும்
பொது என்பது எத்துணைத் தவறானதோ அது போன்றதே அதற்கு மறுதலையாகத் திராவிடம் உலக
மொழிகளில் தாய் என்பது. ஒப்பியல் மொழி என்னும் பெயரைத் தாங்கினாலும் தேவ
நேயப்பாவாணர் போன்றோரது ஆய்வு நூல்கள் ஒரு தலைப் பட்சமானவையே. பாலூர் கண்ணப்ப
முதலியார் கூறியிருப்பதுபோல், தேவநேயப் பாவாணருக்கு "இருக்கும் தமிழ்ப்பற்று
அளவிடற்பாலதன்று" என நாமும் கூறலாமேயன்றி அவரது ஒப்பியல் ஆராய்ச்சி முறையைப்
பாராட்டவியலாது. கண்ணப்பமுதலியார் கூறுகிறார்: "வட மொழி எனக் கருதப்படும் பல
சொற்கள் தமிழ் சொற்களே என்று அச்சொற்களின் அடிச் சொற்களின் வழி நிறுவிக்காட்ட
வல்லவர்...தேவநேயப் பாவாணர்." தனிப்பட்ட ஒருவரது வல்லமையல்ல முக்கியம், அவர்
கைக்கொள்ளும் ஆராய்ச்சி முறை அப்பழுக்கற்றதா என்பதே கவனிக்க வேண்டியது.
சுநிதிகுமார், சட்டர்ஜி, பறோ முதலிய மொழிநூல் ஆராய்ச்சியாளரை உதாரணத்துக்காக
எடுத்துக் கொள்வோம். வட மொழியில் வழங்கும் திராவிடச் சொற்களை இவர்கள் எடுத்துக்
காட்டியிருக்கின்றனர். சுமார் எழுநூற்றுக்குமதிகமான திராவிடச் சொற்கள் பல்வேறு
காலப் பகுதிகளில் வட மொழியிற் சென்றடைந்திருப்பதைப் பேராசிரியர் பறோ
தொகுத்துள்ளார். ஆனால் இவர் இவ்வாறு கூறும் பொழுது திராவிடம் உலகத் தாய்மொழி
என்னும் தற்பெருமையோ அல்லது வட மொழி தேவபாடை என்னும் அகங்காரமோ இல்லாது
இருமொழிகளையும் ஒப்பநோக்கி ஒன்றையொன்று பாதித்து வந்தமையைச் சான்று காட்டி
நிறுவுவதே நோக்கமாயுள்ளது. அது மட்டுமல்லாது மொழிகள் ஒன்றையொன்று எவ்வாறு
பாதிக்கின்றன என்னும் மிகப் பொதுவான நியதியை உணர்த்துவதும் அவ்வாய்வின் பயனாக
அமைகிறது.
ஆனால் இவ்வாய்வு தனியொரு மனிதரின் வல்லமையாகவோ, சிலருக்குத்
திருப்தி தரும் முயற்சியாகவோ, இராமல் யாவரும் ஏற்றுத் தாமும் மேற்கொள்ளக்கூடிய
ஆராய்ச்சியாக இருக்க வேண்டுமாயின், ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல்
சார்ந்ததாயும் இருத்தல் அவசியம். உதாரணமாக வடமொழிக்கண் வழங்கும் திராவிடச் சொற்களை
நிருணயிக்க முனைந்த பறோ சில நடைமுறைகளை மேற்கொண்டார் வடமொழிக்கண் பயிலும் ஒரு சொல்,
திராவிடச் சொல்லாயிருக்கலாம் என்னும் ஐயமேற்பட்டதும் முதலில் அச்சொல் திராவிட
மொழிக் குடும்பத்திலே எவ்வாறு பரந்து காணப்படுகின்றது என்பதனை நோக்கினார். வட
திராவிட மொழிகளிலும் அச்சொல் வழக்காறுடையதாயின் அது திராவிடச் சொல்லாக இருத்தல்
கூடுமென்று ஓரளவு துணிந்தார். அதன் பின்னர் அச்சொல் இந்தியாவிலுள்ள ஆரிய மொழிகளில்
எத்தகைய வழக்காறுடையது என்பதனை நோக்கினார். அதன் பின்னர் பிற இந்தோ-ஆரிய மொழிகளில்
எவ்வாறு வழங்குகிறது என்பதை ஆராய்ந்தார். ஆரிய மொழிகளிலும் இந்தியாவிற்கு
வௌியேயுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் அதன் வரலாறு திருப்திகரமாக இல்லா விட்டால்
அது திராவிடத்திலிருந்தோ திராவிட மொழியொன்றிலிருந்தோ வட மொழிக்குச் சென்றிருத்தல்
வேண்டும் எனத் துணிந்தார். அதன் பின்னரும் வட மொழி நூல்களிலே எக்காலத்திலிருந்து
அச் சொல் பயின்று வருகிறது என்பதனை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவையாவற்றின்
இறுதியாகவே அச் சொல் ஏறத்தாழ இன்ன காலத்திலே தமிழிலிருந்தோ அல்லது மூலத்
திராவிடத்திலிருந்தோ வட மொழிக்குச் சென்றது என ஒருவாறு துணிந்து
கூறினார்.
மேற்கூறிய ஆராய்ச்சியைக் கவனித்தால் பேராசிரியர் பறோவுக்கு
"வடமொழி எனக் கருதப்படும் சில சொற்கள் தமிழ்ச் சொற்களே என நிறுவிக் காட்டும்
வல்லமை" அன்றி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் புடை பெயர்வதைக்
கண்டறியும் முறை கைவரப் பெற்றமை புலனாகும். இதை இன்னுஞ் சிறிது விளக்குவோம்.
தனியொரு மனிதனுடைய தனிச் சிறப்பான ஆற்றலை மாத்திரம் இவ்வாராய்ச்சிக்கு அளவு கோலாகக்
கொண்டால் அது பொதுவான நியதிகளுக்குக் கட்டுப்படாத தொன்றாகி விடுகிறது. அவ்வாறன்றிச்
சில விதிகளினடிப்படையில் நடை முறைகள் அனுட்டிக்கப் பட்டால் அவ்விதிகளைப்
பின்பற்றும் மாணவன் எவனும் அவ்வாராய்ச்சியைச் சிறிய அளவிலேனும் செய்தல் முடியும்.
முடிந்தால் அது பொதுவான பரிசீலனையாக அமைகிறது. விஞ்ஞானப் பரிசோதனைகளை எத்தனை பேரும்
எத்தனை தடவையும் செய்யலாம்; அவ்வடிப்படையிலேயே படிப்படியாக அறிவு
விருத்தியடைகின்றது.
மொழியாராய்ச்சி பற்றிய இவ்வுதாரணம் அறிவியல் முறை
எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஓரளவு விளக்குகிறது என எண்ணுகிறேன். இலக்கியத்தில்
இம்முறை பெருமளவு செயற்படுவது ஒப்பியல் ஆய்வியலாகும் எனினும் அதை விவரிக்குமுன்
மேற்கூறிய விஞ்ஞான முறையாது எனச் சுருக்கமாகக் கூற வேண்டும்.
ஒரு பொருளை
அல்லது நிகழ்வை விஞ்ஞானி கூர்ந்து நோக்கிக் குறித்துக் கொள்வனவற்றைத் தரவுகள்
என்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய தரவுகளுடன் பிறிதொருதொகுதித் தரவுகளை ஒப்புநோக்கும்
பொழுது இயற்கையான ஒருமைப்பாடுகள் சிலவற்றையும் பொதுக் குணங்களையும் காண்கிறோம்.
அதாவது பல முறை அவதானித்த தரவுகளின்றும் சில பொது முடிவுகள் அன்றி விதிகள்
வகுக்கப்படுகின்றன. சில சமயங்களில் தரவுகளைப் பெற முன்னரே ஏதாவதொரு பொதுமுடிவை
அல்லது விதியை ஊகமாகக் கொள்கிறோம். அதனையே கருதுகோள் என்பர். பரிசோதனையின்போது
கிடைக்கும் முடிவு முதற்கொண்ட கருதுகோள் சரியா தவறா என்பதைக் காட்டும். ஆயினும்
கருதுகோள், ஆய்விற்கு முதற்றேவையாக அமையும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வும் இவ்வாய்வு
முறையை ஒப்பியல் ஆராய்ச்சியின் மூலம் கலை இலக்கியத்துறைக்கும் ஏற்றதாக நாம்
அமைத்துக் கொள்ள இயலும். இதனைச் சிறிது விரித்துரைக்கலாம்.
விஞ்ஞான
ஆராய்ச்சியிலே எடுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக விஞ்ஞானிகள் இரு அடிப்படை
மெய்ம்மைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கு முதற்படியாக ஏற்றுக் கொள்வர். நடப்பவைக்
கெல்லாம் காரணம் இருக்கிற தென்பதும் ஒரே தன்மையான காரணங்கள் நிலைமைகள்
மாறாதிருக்குமானால் ஒரே மாதிரியான பயனையே அளிப்பன என்பதும் அவர்கள் ஏற்கும் இரு
எடுகோள்கள். முதலாவது எடுகோள் முடிவற்ற ஆராய்ச்சிக்கு ஏதுவாகவும் நம்பிக்கையும்
ஊக்கமும் அளிக்கும் சக்தியாகவும் அமைகிறது. இரண்டாவது எடுகோளினடிப்படையில் வெவ்வேறு
விஞ்ஞானிகள் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் திரும்பச்செய்து சரிபார்க்க வழி
பிறக்கிறது.
இவ்விரு எடுகோள்களை இலக்கிய ஆராய்ச்சியாளனும் முன்கூட்டியே
ஏற்றுக் கொள்வதற்கு தடையெதுவுமில்லை. ஒரு நூல் குறிப்பிட்ட காலப்பகுதியிலே
தோன்றுவதற்கு ஏதுக்கள் இருத்தல் வேண்டும். உலகம் உய்ய வேண்டுமென்பதற்காகத்
திருவுளங் கொண்ட பெரியார் திடீரென அருளிச் செய்வது இலக்கியம் என்ற ஐதீகத்தை நீக்கி,
காரண காரிய நியதிக்குள் இலக்கியத்தை அடக்க இவ்வெடுகோள் உதவுகிறது. அது முதற் பயன்.
காரணம் இருத்தல் வேண்டும் என்று நம்பினால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க அயராது
உழைத்தலவசியம். உதாரணமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சான்றோர் செய்யுள்கள்
சித்திரிக்கும் வீரயுகத்தை யடுத்து, அறவியல் நூல்களும் அவற்றுக்கு அடிப்படையான
தீமைக் கோட்பாடும் அதன் வௌிப்படையான சிணுங்கித்தனமும் தோன்றக் காண்கிறோம்.
வீரயுகத்திற் காணப்பட்ட நன்னம்பிக்கைக் கோட்பாடுகள் அதன் வௌிப்படான புலனின்ப
வேட்கையும் களிப்பார்வமும் இலக்கியத்தினின்றும் மறைந்து விடுகின்றன. அவை
தோன்றுமிடத்தும் இழித்துரைக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கவியல் உரைக்கும் நூல்கள்
தோன்றத்தக்க காரணம் இருத்தல் வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் அக்காரணத்தைக்
கண்டறிய வாய்ப்பேற்படும். பிரயாசைப் பட்டால் காரணத்தை அறிவது உறுதி. காரணத்தைத் தேட
முயலவும் வரலாற்றுப் பார்வை தவிர்க்க முடியாதவாறு வந்தமைந்து கொள்கிறது. அது
மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிற் காரணகாரிய ஆய்வைப் பயன் படுத்தும்பொழுது
குறிப்பிட்ட நூல்களின் தோற்றத்திற்குப் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள் காரணிகளாக
அமைகின்றன. இக் காரணிகள் புறநிலையில் வைத்து நோக்கியாராயத்தக்கன. இயற்கை
அறிவியற்றுறைக்குரிய முறைகளாம் 'சோதித்தறியும் தன்மை,' 'தற்சார்பற்ற நிலை,'
'மயக்கமின்மை' முதலியன இக்காரணிகளுக்குப் பண்பாயமைகின்றன. இவற்றைத் தரவுகளாகக்
கொள்ளுவோம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அற நூல்கள் தோன்றற்குரிய சூழமைவையும்
உந்தல்களையும் நியதிகளாகக் கருதிக் கொள்கிறோம்.
இனி, மேலே கூறிய இரண்டாவது
எடுகோளைக் கவனிப்போம்: ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே மாதிரியான பயனையே அளிக்கும்
என்பது. இது பரிசோதனைக்கு எம்மைத் தூண்டுவது தமிழ் வீரயுகத்தைப் போலவே கிரேக்கரது
வீரயுகமும் அமைந்திருந்தது. அவ்வாறாயின் அங்கும் வீரயுகத்தையொட்டி அறநூல்கள்
எழுந்தனவா எனப் பார்க்கலாம். அதாவது ஒத்த காரணங்கள் ஒத்த பயனையளித்துள்ளனவா எனச்
சரிபார்க்கலாம். அங்கும் அறநூல்கள் தோன்றியிருக்கக் கண்டால் எமது ஊகம் அல்லது
கருதுகோள் பிழையற்றது எனக் கொண்டு அதனை இலக்கிய வரலாற்று விதிகளிலொன்றாக்கலாம்.
உண்மையில் வீரகாவியங்கள் பாடிய சான்றோன் ஹோமரை யடுத்து ஹீசியொட் போன்ற அறநூற்புலவர்
கிரேக்கத்திலே தோன்றினர். எமது அறநூலாசிரியரைப் போல அவரும் பெண் வெறுப்பு,
புலனடக்கம், இறை பக்தி முதலியவற்றைப் பெரிதும் வற்புறுத்தினர்;புராணக் கதைகள்
பெருவழக்குப் பெற்றன. கவிஞர் போதகர்களாக மாறினர். இவற்றையெல்லாம் உற்று நோக்கும்
போது தமிழிலும் கிரேக்கமொழியிலும் ஒரே தன்மையான சூழ்நிலைகள் ஒரே மாதிரியான இலக்கிய
வகையைத் தோற்றுவித்தமை உறுதிப்படும். இதன் பயனாக இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொதுமை
ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே ஒப்பியல் இலக்கியம் உலகப் பொதுவான இலக்கியத்தோடு
ஒன்றுபடுகின்றது.
ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான
தெயின்(Hippolyte Taine, 1828-1893), ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக்
கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்லல் வேண்டும் என்றே கருதினார். பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த தெயின், ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளன் கவனஞ் செலுத்த
வேண்டிய பொருள்களைக் குறிப்பிடுமிடத்து, இனம், சூழமைவு, காலம், மனத்திறன்
என்பனவற்றை வற்புறுத்தினார். சூழமைவிலே புவியியற் காரணிகள் அடங்கும். இவற்றிற் சில
இன்று அத்துணைச் சிறப்புடையவனாகக் கொள்ளப்படுவதில்லை. சில புதிய காரணிகளை நாம்
இன்று சேர்த்துக் கொள்ளுதல் கூடும். ஆனால் "இலக்கிய ஆராய்ச்சியை ஒரு விஞ்ஞானப்
பரிசோதனை போல நடத்தவும், அதனைச் சரிபார்க்கவும், மேலும் மேலும் திருத்தமுறச்
செய்யவும்" முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியவருள் ஒருவர்
தெயின்.
இக்கூற்றிலும் முறை, அழுத்தம் பெறுவதைக் கவனிக்கலாம். இதன்
முக்கியத்தை எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். பழைய விஞ்ஞானத்துக்கும் புதிய
விஞ்ஞான நோக்குக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் கூறுதல் பொருத்தம். தொகுத்தறிமுறை
முற்காலத்திலிருந்தே வெவ்வேறு வகையில் வழங்கி வருகிறது. எமது பண்டை நூலோர் கூறும்
காட்சியளவை தொகுத்தறிமுறையைச் சேர்ந்ததே. ஆனால் பழைய தொகுத்தறிமுறையில் கருதுகோள்
முக்கியம் பெறவில்லை. அம்முறையில் இயற்கையில் யாவும் மறைந்து கிடப்பதாகவும்,
அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஒருவர் செய்யக் கூடியதாகவும் கருதப்பட்டது.
இவ்வடிப்படையிலேயே பண்டைய அறிவாராய்ச்சி இயல் (Epistemology) அமைந்தது. இது
விஞ்ஞானத்தின் தோற்றத்தைப் பெற்றிருப்பது போலக் காணப்பட்டாலும் உண்மையில்
விஞ்ஞானத்துக்கு முற்பட்ட நோக்கேயாம். ஏனெனில் பண்டைய தொகுத்தறிமுறையும் அறிவு
ஆராய்ச்சி இயலும் நவீன விஞ்ஞானத்துக்குப் போதிய அடிப்படையும், நெறியும் ஆகா. நவீன
விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இடையறாத பரிசோதனையாகும். இப்பரிசோதனைகளுக்கு
அநுசரணையாகத் துணிகரமான கருதுகோள்கள் கைக்கொள்ளப் படுகின்றன. இவற்றின் பயனாகத்
தாமாகத் தோன்றும் உண்மைகளேயன்றிப் புதிய உண்மைகளும் நிலை நாட்டப் படுகின்ற
தொகுத்தறிமுறையும் அறிவாராய்ச்சி இயலும் மூட நம்பிக்கைகளையும் இறைக்
கோட்பாடுகளையும் விமர்சனஞ் செய்ய உதவக் கூடும். ஆனால் புதிய புதிய கருதுகோள்களின்
அடிப்படையில் தொடர்ந்து பரிசோதனைகள் நடாத்திப் பொருள்களுக்கிடையே புதிய உறவுகளையும்
தொடர்புகளையும் காண்பதற்கு மட்டுமின்றிப் புதிய பொருள்களையே கண்டுபிடிக்க அவை உதவா.
இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞானப்புரட்சியானது அதற்கு முற்பட நிலவிய
விஞ்ஞான முறைகளை வழக்கறச் செய்தது. சார்புக் கொள்கையும், சொட்டுக் கொள்கையும், உளப்
பகுப்பாய்வியலும் புதிய ஆராய்ச்சி முறைகளை இன்றியமையாதனவாக்கின.
எமது
சம்பிரதாயமான இலக்கிய ஆய்வு முந்திய தொகுத்தறிமுறையை ஒத்ததாகவேயுள்ளது.
இலக்கியங்கள் மேதைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற் சிறந்த கருத்துக்கள்
கூறப்பட்டிருக்கின்றன. நூற்பயிற்சியுள்ளோனொருவன் இவ்விலக்கியங்களைப் படித்தால்
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவே பொதுவான நம்பிக்கையாய்க் காணப்படும். இதன்
தருக்கரீதியான முடிவாக ஒருவன் யாவுமுணர்ந்தவனாக இருப்பான் அல்லது ஒன்றுந்
தெரியாதவனாயிருப்பான். ஆனால் நவீன விஞ்ஞானி தான் செய்கின்ற முயற்சியெல்லாம் ஆகக்
கூடிய அளவில் உண்மையின் ஒரு பகுதியே என்று உணர்கிறான். பழைய கல்வி முறைப்படி ஒருவன்
இலக்கண இலக்கியத்தின் வரம்பு கண்டவனாகக் கொள்ளப்படலாம். ஆனால் இன்று அவ்வாறு கருத
முடியுமோ முடியாது. உதாரணமாகத் திருக்குறளை எடுத்துக் கொள்ளுவோம். இதன்பால் இல்லாத
எப்பொருளும் இல்லை என்னும் குருட்டு நம்பிக்கை ஒரு புறமிருக்க திருக்குறளைக்
கரைகண்டவராகப் பலர் புகழப் படுவதைக் காண்கின்றோம். குறளிலுள்ள ஆயிரத்து முந்நூற்று
முப்பது பாக்களையும் ஓதியுணர்ந்தவரும் உள்ளனர். ஆயினும் குறள் பற்றிய பல ஆதாரச்
செய்திகள் தாமும் இன்னும் எமக்குத் தௌிவாகத் தெரிந்தில.
குறள் தோன்றிய
காலம், அதன் நோக்கம், அது எடுத்துரைக்கும் வாழ்க்கைத் தத்துவம், அதன் மொழி நிலை,
அதனாசிரியர் மதம், குறள் காட்டும் சமுதாய நோக்கு, இலட்சியம், அதன் குறைபாடுகள்,
முரண்பாடுகள், என்பன போன்ற பொருள்களுக்குத் தீர்க்கமான விளக்கம் கூறப் படவில்லை.
இதனைத் தனியொரு மனிதன் செய்து முடிக்கலாம் என எண்ணுவதும் தவறு. ஏனெனில் நவீன
விஞ்ஞானம் ஐயமின்றிக் காட்டுவது போல "பூரண அறிவு எந்த ஒருவனது சிந்தனைக்கும்
அப்பாற்பட்டதாகும்." திருவற்றுவ மாலைப் புலவரும் தற்காலக் கருத்துரைகாரர் சிலரும்
கூறியுள்ளவற்றை மாத்திரம் குறள் பற்றிய முடிந்த முடிபாகக் கொள்ள வியலாது. அது
மட்டுமல்ல. இன்று குறள் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருக்கிறது. மாறுபட்ட
கருத்துக்களுக்குக் குறட்பாக்கள் இடமளிப்பதைக் குறள் உரையாசிரியரே எமக்குக்
காட்டியுள்ளனர். இந்நிலையில் குறளாராய்ச்சி இது காலவரை, கூறியது கூறலாகவோ, அன்றிக்
குதர்க்கமாகவோ இருந்து வருகிறது. இவ்வவல நிலையிலிருந்து இருதலைக் கொள்ளி எறும்பு
நிலையிலிருந்து குறளாராய்ச்சி விடுதலையடைந்து பயனுள்ளதாய் அமைய வேண்டுமானால் புதிய
ஆய்வு முறை கைக்கொள்ளப்படல் வேண்டும். மொழியியல், வரலாறு, சமுதாயவியல்,
ஒப்பியற்சமயம், மெய்யியல், அரசியல் முதலிய பல துறையைச் சேர்ந்தவரும் ஒன்று சேர்ந்து
யாவரும் அங்கீகரிக்கும் விதிமுறைகளுக்கேற்ப ஆராய்ந்தால் ஒருவாறு உண்மை
துலக்கமடையும். சுருங்கக் கூறுவதாயின் முறை திருந்தவேண்டும். ஆனால் முறை
செயற்படுவதற்கு முதற்றேவையாகக் கருதுகோள்கள் அவசியம். கருதுகோள்கள் கனவிலே
தோன்றுவனவல்ல. அந்தராத்மாவின் குரல் இது. விஷயத்தில் அத்துணைப் பயனளிக்காது.
இவ்விடத்திலே ஒப்பியல் நோக்கும், சான்றுகளும் கைகொடுத்து உதவக் கூடியன.
திருக்குறளைப் போன்ற பிற அறநூல்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் கூர்ந்து
அவதானிக்கத் தக்கன. தம்மபதம், கொன்பூசியஸ் போதனைகள், மார்க்கஸ் ஔரேலியஸ்
சிந்தனைகள், வடமொழித் தரும சாத்திரங்கள் குறிப்பாகக் கௌடில்யரது அர்த்தசாஸ்திரம்
முதலியன குறளாராய்ச்சிக்கு உதவுவன. இவற்றைப் பற்றிய செய்திகளையும் கணக்கெடுப்பதன்
மூலம் இந்நூல்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை முதலிற் காண்டல் கூடும். அதன்
பின்னர் இவற்றின் வளர்ச்சி ஒழுங்கு பற்றிச் சில பொது நியதிகளை வகுக்கலாம். ஒரேதன்மை
வாய்ந்த நியதிகளை ஒன்றாக நிரைப்படுத்துவதன் மூலம் கூடிய விளக்கம் ஏற்படுகிறது.
தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரின் தனித்திறமையொரு புறமிருக்க "ஒரே மாதிரியான
சூழ்நிலைகள் நிலைமைகள் மாறாதிருந்தால் ஒரே மாதிரியான" நூலைத் தோற்றுவிக்கின்றன
என்னும் அடிப்படை உண்மை நிரூபணமாகிறது. அதன் வாயிலாகவே குறள் உண்மையான உலகப்
பொதுமையைப் பெறுதல் முடியும். மற்றைய நூல்களிலும் சிறந்தது என்பதனால் குறளுக்கு
உலகப் பொதுமை வராது. மற்றைய அறநூல்களிற் காணப்படும் பண்புகளே திருந்திய வடிவத்திற்
காணப்படுகின்றன என்பதனாலேயே அதற்குப் பொதுமதிப்பு ஏற்படும். அப்பொழுதுதான் குறளின்
பொதுப்பண்பும் தனிச்சிறப்பும் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதுகாலவரை
பெரும்பான்மையான எமது தமிழ் ஆராய்ச்சியாளர் குறள் உலகிலேயே தலை சிறந்த வாழ்வியல்
நூல் என்னுமடிப்படையிலே தமது ஆய்வுகளை நடாத்தி வந்துள்ளனர். இவ்வடிப்படைத்
தப்பெண்ணத்தினால் ஒரேவழி காணப்ட்ட ஒப்பு நோக்கும் அர்த்தமற்றுப் போய்விட்டது.
ஏனெனில் ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கூறவது விஞ்ஞான முறையன்று. ஆசிரியர் ஒருவர்
கூறியுள்ளது போல, "உயிருள்ள பொருள்கள் மீது ஆவலும், அவை எவ்வாறு உலகியற்
பொருள்களுள் அடங்குகின்றன என்பது பற்றி ஆர்வமும் காட்டுகின்றானேயன்றி, அவை ஏன்
உயிருடன் இருக்கின்றன என்ற கேள்விக்கு விஞ்ஞானி இடங் கொடுக்கமாட்டான். அவனுக்குப்
பொருள்கள் மீதே கவனம்-அவற்றின் பெறுமதியில் அன்று". இதனையே விடயச் சார்ச்சி அல்லது
புறநிலை மெய்ம்மை என விஞ்ஞானம் கூறுகிறது. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிக்கு இது
மிகவும் வேண்டப்படுவது. இல்லா விட்டால் எமது நூலாய்வு முற்றிலும்
அகநிலைப்பட்டதாகிவிடும். இதனை ஒருதாரணத்தால் விளக்குவோம். மனோன்மணீயம் பாயிரத்தில்
சுந்தரம் ,பிள்ளையவர்கள்
"வள்ளுவர் செய்திருக் குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
யொருகுலத்துக் கொருநீதி"
எனப் பாடுகின்றனர். திருக்குறளையும் மநுதரும
சாத்திரத்தையும் ஒப்புநோக்கி குறள் நன்று, மநுதருமம் தீது என்கிறார் ஆசிரியர். இது
உண்மையில் ஒப்பு நோக்கல்ல. ஏனெனில் குணத்தின் அடிப்படையில் அபிப்பிராயங்
கூறப்படுகிறது. ஆனால் பொருள்கள் நல்லவையா அல்லது கெட்டவையா என்பதை அறிவதுதான்
விஞ்ஞானத்தின் நோக்கமன்று. மநுதருமத்திற்கும் குறளுக்கும் வேறுபாடிருப்பது உண்மையே.
ஆனால் சுந்தரம் பிள்ளை கூற்றுப்படி மநுதருமம் இருள்; குறள் ஒளி; இஃது பொருந்தாது.
மநு ஒருவகையான சமூகஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டால், குறளாசிரியர் இன்னொருவகையான
ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொள்ளுகிறார். ஆக இருவரும் ஏற்றத் தாழ்வை நிராகரித்தவர்
அல்லர். அதிலே பொதுமை காணப்படுகிறது. ஆனால் சுந்தரம் பிள்ளை கூற்றுப்படி குறள்
ஏற்றத் தாழ்வை ஏற்காதது எனவே அது பற்றிய ஆராய்ச்சி அநாவசியமாய்ப் போகிறது. போகவும்
குறள் பற்றிய முற்சாய்வான மனப்பதிவு உறுதிப்படுகின்றதேயன்றிப் புதிய விளக்கம்
எதுவும் பெறப்படவில்லை.
நல்லது கெட்டது என்ற தீர்ப்பு உண்மையில் அறவியல்
சம்பந்தமானது. அது மட்டுமல்ல. அவ்வாறு தீர்ப்புக்கூறுவது நிலையியல் நோக்கின்
விளைவாகமுள்ளது. ஆனால் நவீன விஞ்ஞானமோ இயக்கவியல் நோக்கை ஆதாரமாகக் கொண்டது. உலகைக்
கண்டறிந்து விவரிப்பது மட்டுமின்றி அதனை எமக்கேற்றவாறு அமைக்கவும் நவீன விஞ்ஞானம்
முயலுகிறது. அது போலவே விழுமிய இலக்கியத்தைக் கற்றறிவது மட்டுமல்லாது அதனைப் புதிய
கோணத்திற் பார்த்துப் புதிய பொருளைக் கண்டறியும் வழி
காணவேண்டும்.
இயற்கையையும் சமுதாயத்தையும் மாற்ற விரும்புபவர்கள்
அம்முயற்சிக்கு முதற்தேவையாக அவற்றின் இயக்கவிதிகளைத் தௌிந்து தெரிவதுபோல,
இலக்கியத்தைப் பூரணமாக நமதாக்குவதற்கு அதன் இயக்கவிதிகளைத் தெரிந்து கொள்ளல்
இன்றியமையாதது. இயக்கவிதிகள் விடயச் சார்பானவை;புறநிலை மெய்ம்மையானவை. எனவே அவற்றை
நன்கு விளக்கிக் கொள்ளுவதற்கு மனத்திலே பசையிருத்தலாகாது. வைத்தியன் எத்துணை
முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சத்திர சிகிச்சை செய்கின்றானோ அத்துணை
தற்சார்பற்ற முறையில் இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறன்றி
எமது சொந்த விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தாது அவற்றைத் துணைக் கொள்வோமானால்
புறநிலைக்குரிய உண்மைகளைக் கண்டறிய வியலாது. இதனை ஒருதாரண மூலம்
விளக்குவோம்.
தமிழ் வீர யுகத்திலே அரசருக்கும் புலவருக்கும் அத்தியந்த உறவு
நிலவியது. புலவரைப் போற்றி வாழ்ந்தனர் மன்னர். அவர்களுக்கு வரையாது வழங்கினர்.
பாணர், விறலியர், புலவர் முதலியோரைப் புரத்தலைப் பாண்டகன் எனக் கொண்டனர். இச்
செய்திகள் சான்றோர் செய்யுட்களிலிருந்து பெறப்படுவன. இவற்றைக் கண்ணுற்ற தற்கால
எழுத்தாளர் சிலர் புலவரைப் பேணுதலும் கொடையும் கற்றோரைப் போற்றுதலும் பழந்தமிழ்
மன்னரது தனிச் சிறப்பியல்புகள் எனக் கூறவராயினர். அம்மட்டில் நில்லாது
புலவரைப்போற்றி வாழ்ந்த பண்பு பழந்தமிழ் மன்னரிடத்து மாத்திரம் காணப்படுவது என்றும்
தேற்றமாகக் கூறினர். இத்தகைய எண்ணமும் கூற்றும் இனப்பற்றிலிருந்தும்
மொழிப்பற்றிலிருந்தும் எழுவன. ஆனால் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி வழி நின்று
நோக்கும்போது தமிழ் வேந்தர்க்கே உரிய இம்மரபு பிற சமுதாயங்களிலும்
காணப்படும்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் போற்றியதைப் போலவே பழங்கால
வெல்ஷ், ஐரிஷ், ஜெர்மானிய, கிரேக்க அரசரும் பிறரும் புலவரைப் பெருமதிப்புடன்
நடாத்தினர். எனவே தமிழ் வேந்தரது அருங்குணத்தைப் புகழ்ந்து வீண் பெருமை
கொள்ளுவதற்கப் பதிலாகப் புராதன சமுதாயங்களிலே மண்ணாள் வேந்தரும் பிறரும் புலவரைச்
சிறப்பித்தமைக்குக் காரணம் காண முற்படுதல் விவேகமான செயலாகும். உலக இலக்கியங்கள்
பலவற்றை நுணுகியாராய்ந்த திருமதி. நோரா சாட்விக் கூறுகிறார்: எழுத்துக்கலைப்
பயிற்சியற்றுப் பெரும்பாலும் வாய் மொழி இலக்கியத்தையே பயன்படுத்தும் மக்கள்
கவிதையையும் சொல் வன்மையையும் மிக உயர்வாக மதித்தல் இயல்பே. அது மட்டுமல்லாது எமது
காலத்தில் வழங்கும் வெகுஜன சாதனங்களுக்குப் பதிலாக அச்சமுதாயங்களிற் புலவரே
விளங்கினர். இக்கூற்றைக் கருதுகோளாகக் கொண்டு எமது சான்றோர் செய்யுட்களை
ஆராய்ந்தால் உண்மையாயிருக்கக் காண்போம். புராதன சமுதாயங்களிலே மனிதனது அறிவு
முழுவதும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு,
புராணம், அறிவியல், இயற்கையறிவு முதலிய யாவும் பன்னெடுங்காலமாகச் செய்யுள்
வடிவிலேயே வழங்கி வந்தன. புலம் என்ற சொல்லின் பொருளைக் கவனித்தால் இச்செய்தி
புலனாகும். புலம் என்றால் இந்திரியம், இந்திரிய உணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு,
நூல், வேதம், இடம் என்றெல்லாம் பொருள்படும். புலமை என்பதற்குக் கல்வி, மெய்ஞ்ஞானம்
செய்யுளியற்றும் ஆற்றல் என்ற பொருளுண்டு. புலமையோர் என்றால் கவி, கமகன், வாதி,
வாக்கி என்ற நால்வகைக் கல்வியாளரும், கற்றோரும், நிபுணரும் கருதப்படுவர். புலவரை
அறிவர் என்றும் அழைத்தனர். அது மட்டுமல்லாது கிரேக்கர் அபோலோவும், தமிழர் முருகனுமே
புலமைக் கடவுளர் என நம்பினர். இது காரணம் பற்றியே திருமுருகாற்றுப்படையில்,
"புரையநர் இல்லாப் புலமையோய்", "நன்மொழிப் புலவரேறே", "அறிந்தோர் சொன் மலை", "நூலறி
புலவ" என்றெல்லாம் பெரும் பெயர் முருகன் துதிக்கப்படுகின்றான். புலமைத்
தெய்வத்திடம் புலவர் ஆற்றுப் படுத்தப்படுதல் இயல்பே. இவ்வாறு முருகனது
பக்தர்களாகவும் வாய்மொழி வல்லவராகவும் கட்டுரையாளராகவும் விளங்கிய புலவரைச்
சர்வக்ஞராகக் கருதிப் புராதன சமுதாயம் போற்றியதில் வியப்பெதுவுமில்லை. ஒப்பியல்
இலக்கிய ஆராய்ச்சி இவ்விளக்கம் பிறக்க வழி செய்கிறது. அதை விடுத்துத்
தமிழபிமானத்தால் மன்னரின் சிறப்பியல்பு பேசுவது மடமை மட்டு மல்லாது உண்மைக்குப்
புறம்பானதுமாகும். பற்று கண்ணை மறைக்காவிடின் பழமைக்கும் புது விளக்கம்
காணலாம்.
விஞ்ஞானத்தின் பண்புகளில் ஒன்று அது 'இருக்க வேண்டும்'
'இருக்கப்படாது' என்ற சொற்களின் பொருளுக்குக் கட்டுப்படாததாகும். பழங்கால இலக்கிய
ஆய்வு பெரும்பாலும் இலக்கணம் போல விதிமுறையிலமைந்தது.
"அந் நிலை மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய வென்ப"
அறம்
பொருளின்பமென்னும் மூன்று முதற் பொருட்கும் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்ற
நால்வகைப்பாவும் உரியன எனக் கூறுவது விதிமுறை. 'இருத்தல் வேண்டும்'. 'இருத்தலாகாது'
என்பனவற்றிற்கும் நல்லது கெட்டது என்பனவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆகவே
விஞ்ஞானி விதிப்பதிலும் விவரித்து விளக்குவதையே சிறந்த முறை யெனக்கருதுகிறான்.
ஏனெனில் புதுப் புதுச்சான்றுகளும் செய்திகளும் கிடைக்கக் கிடைக்க விஞ்ஞான
விளக்கத்தை மாற்றியமைக்கின்றான். இருத்தல் வேண்டுமென ஒரு விதியைக் கொண்டால் அது
மாற்ற முடியாததாகிறது. ஆனால் விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஒன்று விஞ்ஞான விதியை
எந்நேரமும் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாம். விதிப்படி நாம்
எதிர்பார்ப்பதற்கு மாறான ஒரு நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டால் இந்நிலை ஏற்படும். சில
சமயங்களில் அவ்விதியை அடியோடு கைவிடவேண்டியும் நேரும். புதிய நிகழ்விற்கு ஏற்பப்
புதிய விளக்கமும் விவரணமும் அமைகின்றது. இதற்கோர் உதாரணங்
காட்டுவோம்:
கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் தமது இதிகாசத்தை எழுதினார் என்ற
நம்பிக்கையே பல காலமாகக் கிரேக்க இலக்கிய அறிஞரிடையே நிலவி வந்தது. அவ்வாறுதான் அது
இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார். உயர் தனிக் காவியமாகிய இலியாது, ஒதீசி
முதலியன நனிமிகு நாகரிகம் செழித்து வளர்ந்த காலப் பகுதியில் மகாகவியால் எழுதப்
பெற்றிருக்க வேண்டும் எனக் கொண்டனர். ஆனால் கிரேக்க உயர் தனிக் காவியங்களை கேவலம்
யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்பு நோக்கிய ஓர் அமெரிக்க
ஆராய்ச்சியாளர் அவ்விரு தொகுதிப் பாடல்களும் பெரிதும் ஒத்திருக்கக்கண்டார். வாய்
மொழிப் பாடல்களை அவர் காதாரக் கேட்டு அவற்றைப் பாடிய புலவர்களது உத்திகளைக்
காட்சியளவையால் அறிந்திருந்தார். உறுதியாகத் தெரிந்த வாய் மொழி இலக்கியப்பண்புகள்
பலவும் எழுதியனவாக நம்பப்பட்டு வந்த செம்மைசான்ற காவியங்களில் காணப்படும் போது என்ன
செய்வது? கிரேக்க காவியங்களும் வாய்மொழிப் பாடல்களாக வழங்கி வந்து பிற்காலத்திலே
எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும் என்ற எண்ணத்தைக் கருதுகோளாகக் கொண்டு, இரு
தொகுதி நூல்களையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தார். ஐயத்துக்கிடமின்றிக் கிரேக்க
காவியங்கள் வாய் மொழிப் பாடல்களே என்று தெரிய வந்தது. வரவும் அதைப் புதுக்
கொள்கையாக வகுத்தார்.
நம்பிக்கையில் வாழ்ந்த கிரேக்க இலக்கிய உலகம் நம்ப
மறுத்தது. ஆனால் புதிய கொள்கையை வெகுகாலம் எதிர்க்க முடியவில்லை. புதுக் கொள்கையைக்
கூறிய மில்மன் பரி விஞ்ஞான முறையை-ஒப்பியல் ஆய்வு முறையைக் கையாண்டமையாலேயே அவரது
விளக்கம் உண்மையாயமைந்தது. முதலிலே ஏளனஞ் செய்தவர்கள் பின்னர் உண்மையை ஏற்றுக்
கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிக்குப் பின் வந்தோர் அவரை விஞ்ஞானியாகவே
போற்றுகின்றனர். வேட்ஜெரி என்பார் "பரி ஹோமர் ஆராய்ச்சிக்கு வாய்ந்த டார்வின்"
என்றார். காப்பென்றர் என்பர், "அவரது கண்டுபிடிப்பின் மெய்ம்மை இயுகிளிட் நிறுவிய
மெய்ப்பீடுகளின் உண்மை போன்றது" என்றார். இப்பாராட்டுகளுக்கு விளக்கம்
வேண்டாம்.
பரியின் புதிய விளக்கம் அவருக்குத் தெரிந்த அளவில் சான்றுகளுக்கு
ஏற்றாக இருந்தது. ஆனால் பரி அதனை முடிந்த முடிபாகக் கருதினார் அல்லர். தனது
"விளக்கம்" உண்மையாக இருந்து, மேலும் புதிய வினாக்களுக்கு விடையளிக்கக்கூடிய புதிய
ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் என எண்ணி மகிழ்ந்தார். அவரது கண்டு பிடிப்பிலும்
பார்க்க இம் மனோ பாவமே அவரது விஞ்ஞான நோக்கை வௌிக்காட்டுவதாயுள்ளது. "ஏனெனில் புதிய
விஷயங்களை அறிவதில் விஞ்ஞானிக்குள்ள ஆர்வம் ஒருபோதும் திருப்திப்படுவது கிடையாது."
தமிழராய்ச்சி தற்போதுள்ள நிலைமையைக் கண்டு மன நிறைவு அடைபவர்கள் இக்கூற்றை உன்னுதல்
தகும்.
ஒப்பியலின் தத்துவங்கள் இவ்வாறாக, இவை தமிழிலே தழைத்து வளராமைக்குக்
காரணங்கள் யாவை எனச் சிறிது சிந்தித்தால் பொருத்தமாகும். தமிழரிடையே
பெருவழக்காயுள்ள தத்துவம் அவரது வரலாற்றுணர்வின் தன்மை. இன்றைய சமுதாய நிலை முதலியன
இத்துறையின் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணங்களாயுள்ளன. இக்காரணிகளிற் சில அடுத்து
வரும் கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கின்றன. இவ்விடத்திலே துணைக் காரணம் ஒன்றைக்
குறிப்பிட விரும்புகிறேன். எமது நவீன இலக்கியப் படைப்பும், திறனாய்வு முறைகளும்
பெரும்பாலும் ஆங்கில நூல் வழி வருவனவே. இதன் விளைவாக ஆங்கில இலக்கிய மரபிற்காணும்
குறைபாடுகள் பல எம்மத்தியிலும் பரவியுள்ளன. இவற்றில் ஒன்று ஒப்பியல் இலக்கிய
ஆராய்ச்சியின் தாழ்ந்த நிலை. பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், ரஷ்யர் முதலினோருடன்
ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது ஆங்கிலேயர் இத்துறைக்கு ஆற்றிய சேவை பெருமைப்
படத்தக்கதல்ல. ஒப்பியல் இலக்கியம் என்ற சொற்றொடரை 1848இல் புகழ் பெற்ற திறனாய்வாளர்
ஆர்னல்ட் (Matthew Arnold, 1822 - 1888) ஆங்கிலத்திலே முதன் முதலாக வழங்கினார்.
ஆர்னல்ட் பிரெஞ்சு இலக்கியத் திறனாய்வு முறைகளைப் பெரிதும் மதித்தவர். அம்மொழியில்
இப்பொருள் தருஞ் சொற்றொடர் எனவே, (1829) பயன்படுத்தப்பட்டது. இவர்களுக்கும்
முன்னதாக ஜெர்மானியர் 'ஒப்புமை இலக்கியத் துறை' என்னும் சொற்றொடரைப்
பிரயோகித்திருந்தனர். ஆர்னல்ட் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் இக்கருத்தை
ஆங்கிலேயருக்கு அறிமுகப்படுத்திய போதும் அது ஆழமாக வேரூன்றவில்லை. ஆனால்
அமெரிக்காவிலே ஒப்பியலின் குழந்தையான சமூகவியல் செழித்து வளர்ந்தமையால் அந்நாட்டில்
ஒப்பியல் இலக்கியமும் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தியடைந்தது. கிரேக்க இலக்கிய
ஆராய்ச்சியில் புரட்சி செய்த மில்மன் பரி ஓர் அமெரிக்கராயிருந்தது தற்செயல்
நிகழ்ச்சியன்று. ஆயினும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப்
பேராசிரியராயிருந்த எச்.எம்.சாட்விக் என்பாரும் அவரது மாணவியும் மனைவியுமான நோரா
சாட்விக் என்பாரும் சேர்ந்து எழுதிய இலக்கிய வளர்ச்சி (The Growth of Literature)
என்னும் பாரிய நூல் இந்நூற்றாண்டிலே ஆங்கிலேயருக்கு மாத்திரமல்லாது உலகின் பல
பாகங்களிலுள்ள ஆராய்ச்சியாளருக்கும் ஆதர்ஷமாக இருந்து வந்திருக்கிறது. தமிழில் எஸ்.
வையாபுரிப்பிள்ளை எழுதத் தொடங்கிய இலக்கிய உதயம் என்ற நூலும் வேறு சிலவும்
முற்கூறிய நூலினால் உந்தப்பட்டனவே. எனினும் சுமேரிய இலக்கிய ஆய்வாளரான கிறேமர்,
ரஷ்ய இலக்கியம், கிரேக்க இலக்கியம் என்பனவற்றை ஆராய்ந்த பரி, லோட் முதலிய
அமெரிக்கர் சாட்விக் தம்பதிகளின் மகத்தான நூலைப் பயன்படுத்திப் பயனடைந்ததைப் போல
ஆங்கிலேயர் எவரும் பயனடைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயரிடத்துக் காணப்படும்
இப்பெருங்குறைபாடு குடியேற்றக் கல்வியின் பயன்களில் ஒன்றாக எம்மிடையே நிலைத்து
விட்டது. இதனை உணர்ந்தால் இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்யச் சிலராவது
முயலக்கூடும்.
ஒப்பியல் இலக்கியம் எம்மிடையே போதியளவு வளராமையால் விஞ்ஞான
முறைகள் இலக்கியக் கல்வியில் இடம் பெறாதது மட்டுமினறி ஓரளவுக்கு ஆங்கிலேயரிடம்
காணப்படுவது போல எமது இலக்கியத்திறனாய்வும் பூரணத்துவம் பெறமாட்டாதிருக்கிறது.
இப்பொருள் குறித்து ரெனிவெல்லாக், ஓஸ்டின்வாரன் ஆகிய இருவரும் இலக்கியக் கொள்கை
(Theory of Literature) என்னும் நூலிற் குறிப்பிடுவது பொருத்தமாகக் காணப்படுகிறது.
எல். குளோறியா சுந்தரமதியின் மொழி பெயர்ப்பைத் தருகிறேன்:
"பொதுவாக ஒர்
இலக்கியத்தைப் பாராட்டுதல், சுவைத்தல், அதில் ஆர்வங் காட்டுதல் போன்றவை தனிப்பட்ட
முறையில் இலக்கியத்தை இரசிப்பவர்களுக்கே உரியவை என ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, திடமான
இலக்கியப் புலமை பெறும் இலக்கியக் கல்வியினின்று, இவை அகற்றப்பட்டுள்ளன;இந்நிலை
வருந்தத்தக்கது. இவ்வாறு இலக்கியப் புலமை ஒருபுறமும் இலக்கியத்தைப் பாராட்டும் நிலை
மறுபுறமாக அமைந்த இரட்டை நிலை, ஒழுங்கான அதே அளவில் இலக்கியப் போக்குடைய பாராட்டு
ஆய்விற்கு உரிய வழிவகைகளை அமைக்காது. கலையை அதிலும் குறிப்பாக இலக்கியக் கலையை
எவ்வாறு அறிந்து தௌியக்கூடிய நிலையில் கற்பது என்பதே பிரச்சினை."
இலக்கியக்
கொள்கை என்ற நூலின் ஆசிரியர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை எம்மவரையும்
எதிர்நோக்குகிறது. மேற்கூறிய ஆசிரியர்கள் தாம் எழுதிய பிச்சினைக்கு இறுக்கும் விடை
திருப்திகரமானதல்ல. இலக்கியத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஆராய்வதே தக்க ஆய்வு
முறையென்றும், ஒப்பியல் இலக்கிய ஆய்வு இலக்கியத்துக்குப் புறம்பான செய்திகளையும்
வகைகளையும் புகுத்துகிறது என்பதும் இவர்கள் கருத்தாகத் தெரிகிறது. தெயின் போன்ற
ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளை இக்கண்ணோட்டத்திலேயே இவர்கள் தள்ளி
வைக்கின்றனர். ஆனால் அறிவாராய்ச்சியையும் அழகியலையும் வேறுபடுத்தும் இரட்டை நிலை
பேணப்படும் வரை இப்பிரச்சினை தீராது. எனினும் தவிர்க்க முடியாதபடி இலக்கியங்களின்
உலகப் பொதுமையை ஒப்பும் ரெனிர்வல்லாக்கும் அவரது சகாவும் பின்வருமாறு
கூறியுள்ளனர்:
"உலக இலக்கியங்களின் வரலாறு பற்றிய கொள்கையில் சிக்கல்கள்
பலவிருக்கலாம். ஆயினும் இலக்கியத்தை முழுமையாகக் கருதுவதும் மொழி வேறுபாடுகளைக்
கருதாது இலக்கியத்தின் வளர்ச்சியைக் காண வேண்டியதும் மிக இன்றியமையாதவை. பொது
இலக்கிய வரலாற்று வல்லுநரது நோக்கங்களையும் ஆர்வங்களையும் நாம் முன்னரே
பின்பற்றியிருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. இலக்கிய வரலாற்றை ஒரு
தொகுப்பு என்ற நிலையிலும் தேச வரையறையைக் கடந்து அமைந்தது என்ற நிலையிலும் இனிமேல்
தான் எழுத வேண்டும். இப்பொருளில் நாம் ஒப்பு இலக்கியத்தை அமைப்பதனால் நமது
அறிஞர்களது மொழியியல் திறன் அதற்கு மிகத் தேவை. மேலும் நமது நோக்கை விரிவாக்க
வேண்டும். நாட்டு உணர்வுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதை எளிதாகப் பெற இயலாது.
எனினும் கலையும் மக்களினமும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளனவோ அது போன்று இலக்கியமும்
ஒன்றே. இக்கருத்தின் அடிப்படையிலே வரலாற்று இலக்கியத்தின் அடிப்படைக் கருத்துக்கள்,
இலக்கிய உருவங்கள், இலக்கிய வகைகள் ஆகியவற்றின் வரலாறு உலக இலக்கியங்கள்
அனைத்திற்கும் பொதுவான ஒரு வரலாறு என்பது தௌிவு. யாப்பமைப்பின் வரலாறு அந்தந்த
மொழியின் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது. எனினும் அவையும் எல்லா மொழிகளுக்கும்
பொதுவானவை...."
உன்னிடத்து உணர வேண்டிய இக்கருத்துடன் இக்கட்டுரையை
முடித்தல் விரும்பத்தக்கதாகும்.
2. தமிழில் ஒப்பியல் ஆய்வு
சமீப காலம் வரை தமிழறிஞாின் கவனம் ஒப்பிலக்கியத்துறையிற் செல்லவில்லை. நூல்களின் காலவாராய்ச்சியிலேயே அவாின் சிந்தனை சென்றது. சுந்தரம்பிள்ளை, சிவராசபிள்ளை, வையாபுாிப் பிள்ளை, இராகவ ஐயங்கார், சேஷையர், கிருஷ்ணசாமி ஐயங்கார், இராசமாணிக்கனார் முதலிய தமிழிலக்கிய ஆராய்ச்சியாளர், சான்றோர் செய்யுள்களின் கால வாராய்ச்சிலேயே தமது திறமைகளைச் செலவிட்டனர். ஒரு வகையில் இப்போக்கு, தவிர்க்க முடியாததாய் அமைந்தது என்று கூறலாம். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பழந்தமிழ் நூல்கள் - அதாவது சான்றோர