|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > 20th Century Ceylon Tamil Literature > அழியா நிழல்கள்: ஒரு கவிதைத் தொகுப்பு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
![]() அழியா நிழல்கள்: ஒரு கவிதைத் தொகுப்பு (ஆசிரியர் : எம்.ஏ.நுஹுமான்)
To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here] " ...இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் மகத்தான சிருஷ்டிகள் என்று நான் கருதவில்லை. மகத்தான கவிதைகளைப் படைப்பது என் நோக்கமும் அன்று. எனது அனுபவங்களையும், உணர்வுகளையும் சிந்தனைகளையும் நான் கவிதைகளாகப் பரிவர்த்தனை செய்கின்றேன் அவ்வளவுதான். நான் ஒரு சாதாரண மனிதன்; எனது கவிதைகளும் சாதாரணமானவை..." 1. முன்னுரை 2. விளையாட்டு 3. மீட்சி 4. நம்பிக்கை 5. கவிதை உள்ளம் 6. கனவும் காரியமும் 7. அழகிய தீமை 8. மழையில் நனைபவளுக்காக 9. இறப்பில்லா இறந்தகாலம் 10. வைகறை நிலவு 11. இரவுக்கு வாழ்த்து 12. உன் வரவுக்காக 13. இனி நாங்கள் பொழுதெல்லாம் மகிழ்ச்சி கொள்வோம் 14. தூரத்து மின்னல் 15. அழியா நிழல்கள் 16. நிலவு பொழிந்த ஓர் இரவு வேளையில் 17. காலி வீதியில் 18. நான் வளர்ந்த கருப்பை 19. நீலாவணன் நினைவாக 20. தனிமை இரவு 21. ஒரு தோழனின் மரணம் 22. வாழ்வும் மரணமும் 1964 முதல் 1979 வரையுள்ள காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட தனிஉணர்வு சார்ந்த (Personal) கவிதைகள் சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகளிற் சில, நான் 'சித்தாந்த வெறுமையில்' இருந்த எனது ஆரம்பகாலப் படைப்புகள். முற்போக்கு அரசியல், இலக்கியக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு எழுதிய கவிதைகள் சிலவும் இத்தொகுப்பில் உள்ளன. ஆயினும் இவற்றில் எதுவும் நேரடியான சமூக, அரசியல் பிரச்சினைகள் சார்ந்தவையல்ல. அதே வேளை இவையெல்லாம் முற்றிலும் தனி ஆளுக்குரியவையும் (Private) அல்ல. ஆனால் பொதுவாக அரசியலுக்கு புறம்பானவை என்று சொல்லலாம். எனது சமூக, அரசியல் சார்பான கவிதைகளைப் படித்திருப்பவர்கள் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அவற்றிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காண்பார்கள். இந்த வித்தியாசத்தை எனது முரண்பாடாகக் கருதுவோரும் உளர். வேறுபாட்டுக்கும் முரண்பாட்டுக்கும் இடையே பேதம் காண முடியாமையின் விளைவே இது. இதுபற்றிப் பிறகு விளக்குவேன். முதலில், முற்போக்கு இலக்கியக்காரரை (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இத்தொகுப்பு திருப்திப்படுத்தாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இதிலே சமூக அரசியற் பிரச்சனைகள் பற்றிய கவிதைகள் எதுவும் இல்லை. இக்கவிதைகள் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வோ, வழிகாட்டலோ தரா; மக்களைப் போராட்டத்துக்குத் தட்டி எழுப்பா. யாரோ ஒருவனுடைய தனிப்பட்ட மன உணர்வுகளையும் அவசங்களையும் படிப்பதால் சமூகத்துக்கு என்ன லாபம்? என்று அவர்கள் கேட்பார்கள், இது நியாயமான கேள்விதான். ஆனால் ஒருபக்க நியாயமே. இலக்கியத்திலே சமூக, அரசியல்
பிரச்சினைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை
உடையவன் நான். ஆனால் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமே
இலக்கியத்தில் இடம் உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. முற்போக்கு
எழுத்தாளர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றியே எழுதவேண்டும்,
இவற்றுக்குப் புரம்பான (காதல் போன்ற) தனிப்பட்ட விசயங்களை எழுதக்கூடாது
என்று பல முற்போக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இது அபத்தமான கருத்து
என்பது என் அபிப்பிராயம். அவை கவிதைகளில் வெளிவருவது தவிர்க்க முடியாதது. அவற்றுக்கும் ஒரு தேவையும் முக்கியத்துவமும் உண்டு. சிலவேளை ஒரு சமூகப்பிரச்சினையும் ஒரு தனிப்பட்ட அனுபவமும் உறவுடையவையாக ஒன்றாகவே இருக்கலாம். சிலவேளை அவை உறவற்று வேறுவேறாக இருக்கலாம். உதாரணமாக காதல் ஒரு தனிப்பட்ட அனுபவம், ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினையும்தான். ஒரு சமூகப் பிரச்சினை என்ற வகையில் அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ தனிப்பட்ட அனுபவம் என்ற வகையிலும் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் உண்டு. மனித வாழ்வில் இருந்து காதலைப் பிரிக்க முடியாது. ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் அதைப் பிரிக்க முடியாது. இது போன்றதுதான் ஒரு நண்பனின் ஒரு குழந்தையின், ஒரு தாயின்
பிரிவுக்காக, மரணத்துக்காக இரங்கிக் கலங்குவதும்; ஒரு இயற்கை வனப்பில்
மனதை இழப்பதும் இதுபோன்றதுதான். இவற்றுக்கு அரசியல் முக்கியத்துவம்
இல்லாவிடினும் இலக்கியத்திலே இவை எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் உண்டு.
ஏனெனில் இவை மனித அனுபவங்கள் என்று சிலவற்றை ஒதுக்குவதும் முற்போக்கை
எதிர்க்கும் சுத்த இலக்கியவாதிகள் அரசியல் விசயங்கள் என்று சிலவற்றை
ஒதுக்குவதும் அபத்தமானது; இது என் கருத்து. அப்படியானால் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியே பெறுமதியற்றதாகி
விடும். சமூகக் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு
படைப்பாளிக்கு எவ்வளவு இயல்பானதோ அதுபோல் தனக்கே உரியா தனி அனுபவ
உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இயல்பானதுதான். நிலமென்னும் நல்லாளும்',
'அழியா நிழல்களும்' எனது அனுபவங்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள்தாம்.
ஒன்று சமூக உணர்வு, மற்றது தனி உணர்வு இரண்டும் முரண்பட்டவை அல்ல ;
வேறுபட்டவை. இத்தனைக்கும் அவரும் ஒரு கவிஞர். முதலி அந்தக் கவிதை சென்டிமென்ட்லாக உருகித்தள்ளுவதல்ல என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு கவித்துவ உணர்வு அவருக்கு! அறுபதுகளின் பிற்பகுதியிலே ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் வரட்டுவாதம் மேலோங்கி இருந்தபோது (அது இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை). இத்தகைய சிறு அனுபவங்களும் கவிதையாக எழுதப்படலாம் என்பதைக்
காட்டுவதற்காகவே நான் அதை எழுதினேன். சன நெரிசலின் மத்தியில், அவசர
காரியமாகச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்ணின் அழகின் ஈர்ப்பு
ஏற்படுத்திய ஒரு கணச் சலனம், அதே அவசரத்தில், கார்களும் பஸ்களும்
இரைந்து கலந்த நெருசலில் அவசரமாகவே கலைந்து போவரைத்தான் அக்கவிதை
கூறுகின்றது. புதுமைப் பித்தனின் 'இது மிஷின் யுகம்' கதையில் வரும்
மனிதயந்திரம் மாதிரி அதிலே 'சென்டிமென்டலான உருகல்' எதுவும் இல்லை. ஒரு
மார்க்சீயவாதியாக இருப்பதற்கு இத்தகைய அனுபவங்களை எழுதுவதற்கும் என்ன
முரண்பாடு? இக்கவிதை மார்க்சீயக்கோட்பாட்டோடு எப்படி மோதிக் கொள்கின்றது?
என்பது எனக்கு புரியவில்லை. நீண்ட நெடும்பாதை; நெஞ்சோ சுமை கனக்கும் பாண்டம். அதற்குப் பரிகாரம் தேடுவதற்கு வேண்டி நடக்கின்றேன். வீதி அருகினிலே காலம் கடந்து கழித்த சுவடுகளின் கோலம் வரைந்து, குளிர்ந்த நிழலுக்கோர் பாலம் அமைக்கும் பழைய மருதமரம். மந்தி கொறித்து மகிழ்ந்த கனிகளினைச் சிந்தும் கிளைகள் சிலிர்க்க இனியவளை முந்திப் பிடிக்க முனைந்த மகிழ்ச்சியிலே கீச்சென்றும், இன்பக் கிளர்ச்சி தவழ்ந்தோடும் பேச்சில் மகிழ்ந்தும், பிணைந்தும் உணர்ச்சிகளை மேய்ச்சல் புரியும் விருப்பில் மனிதத்தின் ஆதங்கம் இன்றி நடக்கும் அணிற்பிள்ளைக் காதல் விளையாட்டில் கவலைக்கிடமுண்டோ? வீதி கிடக்கும் வெறுமைக்கு, இது ஒன்று போதாதோ இன்பப் பொலிவை விளைவிக்க. மாதாள், கணவன் மனதை இழுத்து, இருண்ட பாதை குறுக்காகப் பாய்ந்தாள்; அணில் கூட ஆணன்றோ? அந்த அணங்கைத் துரத்துவதும் வீணாகிப்போமோ? விரட்டிக் கொண்டோடுகையில் வாணாளைப் போக்குதற்கு வந்ததுவே இவ்வண்டி நீண்ட தெருவில் நெரிந்து கிடந்தாய் நீ. பேச்சிழந்து, அன்புப் பிணைப்பிழந்து மண்மீது மூச்சும் துறந்து முடிந்த உனைப் பார்த்துக் 'கீச்' சென்றாள்; இன்பக் கிளர்ச்சி தவழ்ந்ததுவா? ஆண்ட இனிமை அனைத்தும் இழந்த உனைத் தீண்டி எடுத்தேன். திணித்தாய் எனது மனப் பாண்டத்துள் மீண்டும் பழு. ** 24.01.1964 நீ ஒரு நாள், உன் நினைவுப் பெட்டகத்தை என்பால் நீட்டியதும் நான் அதற்குள் நித்திரையில் ஆழ்ந்தேன். வேய்ங்குழலின் மெல்லிசையாம் மெத்தையிலே, கண்கள் வீசுகின்ற அன்பின்இள மென்வளியின் ஊடே ஓய்வெடுக்க வேண்டுவதன் உன்நினைவோ? இல்லை. ஊறிவரும் தண்புனலில் இன்கனவு காணப் பாய்விரித்த ஓடத்தில் பள்ளி கொள்ளுகின்றேன். பாழ்வெளியில் ஓர் சுனையைப் பார்த்து ரசிக்கின்றேன். நம் இதயம் மாறியதை நாம் அறிந்து கொண்டோம். நள்ளிரவில், விண்வெளியில் வெள்ளிகளை எண்ண எம்மிடையே எண்ணளவு இன்றுவரை இல்லை. என்கனவை எண்ணுவதும் எண்ணரிய தொல்லை. தம்உணர்வுப் பொய்கை, ஒரு தாமரையின் கேணி. தண்மனத்தைச் சிந்துவதற்காய் அங்கு முளைத்துள்ள செம்முளரியின் முகையின் மெல்லிதழ்கள் சேர்த்து தெள்ளியஅவ் வோடையிலே விட்டு மகிழ்கின்றேன். வெண்முகிலை வீழ்த்துதற்காய் வெள்ளிகளும் ஓடும். வெள்ளிகளை வீழ்த்துதற்காய் வெண்முகிலும் ஓடும். தண்ணிலவு மெல்லொளியால் சித்திரங்கள் தீட்டித் தந்திருக்கும் இவ்வினிய வேளையிலே, நான்என் கண்இமைகள் மூடுகிறேன். காண்பதற்கு நல்ல காட்சிகளாய் இல்லை எனும் காரணத்தால் அல்ல. விண்வெளியின் மெல்லமைதி மெய்யுணர்வை மீட்க மீண்டும் உளத் தண்புனலில் இன்கனவு காண்பேன். 16-05-1964 கண்ணீர்த் துளியின் கருத்தென்ன என் இனிய பெண்ணே? வசந்தப் பெருநிலவில் வெள்ளிகளை நோக்கி எதற்கிந் நெடுமூச்சு? நுண் உணர்வைத் தேக்கும் உனது சிறுநகையில் என் உயிரைக் கட்டி இழுத்த அக் காலத்தை உன்நினைவு வட்டமிடல் கூடும். எனுனிம் மனம் வெதும்பித் துன்பத்தில் கண்ணீர் உகுக்கும் துயர் எதையும் அன்பே, அதில் நான் அறியேனே; உன்மீதென் நெஞ்சில் விளைந்து நிறைந்த முழு அன்பினையும் துஞ்சும் பொழுது உறுதி தொலையாத நம்பிக்கையோடும் பிணைந்து, நறுமலரின் தும்பியாய்ப் பாடித் துதித்தேன். எனினும் நீ எல்லாம் நடிப்பென்றே எண்ணுவையோ இல்லையெனில் சொல்லுக என் அன்பே; துயர்நிறைந்த, சந்தேகக் கல்நிறைந்த பாதையில் நீ கால் நோகச் செல்லாதே. மெல்லிய உன் பாதத்தில் வீழ்ந்து, என் தனி இயல்பைக் காணிக்கை செய்யென்று, அக் கண்ணீரைக் காட்டாதே. நாணம் நிறைந்த நறைவிழியில் நம்பிக்கை அங்குசமாய் நின்றால் அடுத்துன் துயரெல்லாம் எங்கோ மறையும். இருவர் இதயத்தும் செம்பொன் சுடர்ந்து செழுமை பேற வேண்டில் நம்பிக்கை வேண்டும் நமக்கு. 16-01-1965 வெண்முகிலோடு நாமும் மிதக்கலாம்; வீசுகின்ற தண்ணிய தென்றலூடும் தளிர்களின் மென்மையூடும் பண்ணுடன், உணர்வைப் பெய்யும் பசுங்கிளைக் குயில்களோடும் தண்ணீரும் தண்ணீரும் போல் கலந்துற வாடலாமே. கொட்டைப் பாக்கன்ன சின்னக் குருவிகளோடு நாமும் ஒட்டலாம். அவற்றின் நீண்ட ஊசி மூக்கோடு சேர்ந்து மொட்டலர் மலரில் தேனை முகரலாம்; இழைகள் பின்னும் பட்டுநூற்பூச்சியோடும் பலகதை பேசலாமே. மல்லிகைப் பூவில், நெஞ்சம் மகிழலாம்; மறுகால் அந்த மெல்லிதட் செறிவில் தெய்வ மேன்மையை உணரலாம், செவ் வல்லியின் அமைவில் தூய்மை அடையலாம்;மணத்தைச் சிந்தும் முல்லையில் காதற் பெண்ணின் முறுவலைக் காணலாமே. குழந்தையின் சிரிப்பில் நெஞ்சம் குழையலாம்; புலரிப் போதில் விழும்பனித் துளியில்; புல்லின் விளிம்பினில்; தரையில் குந்தி எழும் சிறு புள்ளின் வண்ண இறக்கையின் துடிப்பில் நெஞ்சம் தளம்பலாம்: அவற்றில் இன்பத் தனிச்சுவை காணலாமே. இயற்கையின் அசைவு தோறும் இன்பத்தை நுகரலாம்;விண் வயல்களில் உலக வாழ்வின் மறைபொருள் தெளியலாம்; நம் அயலவர் துயரில் பங்கும் அடையலாம் எனிலோ, வாழ்வின் கயமைகள் கழிய நாமோர் காவியம் பாடலாமே. 10-06-1965. கூந்தலைக் கையால் பற்றிக் கோதினாள் கோதை; தூணிற் சாய்ந்தனள்; இருந்தாள்; கையில் ஆய்ந்தமென் பூங்கொத்தைப் போல் ஆடினாள்; பின்னால் செய்தே வேய்ந்தனள் நெஞ்சிற் காதல் வேட்கையை; எழுந்து சென்றாள். துடைப்பத்தைக் கொண்டு முற்றம் துலக்கினாள்; இடுப்பில் கையை மடக்கியவாறு நின்றாள்; மறுபுறம் திரும்பிச் சென்றாள். கிடைத்ததை எல்லாம் சற்றே கிழிக்கிறாள்; கசக்குகின்றாள் இடைக்கிடை முகத்தில் வேர்வை கசிவதைத் துடைத்தல் செய்தாள். செயல்களின் பொருள் யாதொன்றும் தெரிகிலாள்; விழியின் உள்ளே புயல்வரும் போல் ஓர் தோற்றம் புதைக்கிறாள்; எனினும் வெட்டை வயல்வெளி போல் ஓர் தோற்றம் வதனத்தில் காட்டுகின்றாள். மயல்கொளும் மார்க்கம் ஓவ்வோர் அசைவிலும் வரைந்தே உள்ளாள். குடத்துடன் நடந்து சென்றாள் குளிர்ந்த நீர் மொண்டு வண்ண நுடக்குடன் அசைந்தசைந்து நொசிகிறாள்; வருகிறாள், பின் அடுப்படி சென்று குந்தி, அதரங்கள் குவித்துத் தீயை முடுக்கினாள், நிலவை மேகம் மூடுதல் காட்டுகின்றாள். கண்களை விரல்கள் கொண்டு கசக்கினாள், முகத்தில் வீழும் விண்களை கொள்ளவந்த மேகத்தை ஒதுக்கி, எல்லாப் பெண்களைப் போலும் சேலை பின்புறம் செருகிக் குந்தி உண்கலம் அனைத்தும் தேய்த்து உரசியே கழுவுகின்றாள். உணவினை முடித்தாள் போலும் உளத்திடை உருளுகின்ற நின€வினை விழியிற் கூட நிகழ்த்தினாள்: இளமை காணும் கனவுகள் இடையில் வீட்டுக் காரியம் வந்தால் என்ன? தினமும்போல உணர்வின் இன்பச் சிலிர்ப்பினில் தளம்புகின்றாள். 6-07-1965 மையிருட் போதில், வானில் மலர்ந்துள பூக்களின்கீழ் வையகம் உறங்கும்போது வழியிலும் இருள் தூங்கிற்று, கையில் ஓர் விளக்கை ஏந்தி கவிந்துள இருளினூடு பைய, என் இல்லம் நோக்கிப் பாதையில் நடந்து சென்றேன். காட்டிடை மலர்ந்த பூக்கள் கமழ்ந்தன; நுகர்ந்ததால், ஓர் பாட்டென துள்ளத்துள்ளே பதுங்கிப் பின் வெளியே றிற்று. நாட்டிய விழியிற் காதை நடுவிலே, சிறிது தள்ளி காட்டிய விளக்கில் ஏதோ கவினுற ஒளிரக் கண்டேன். பெருகிய ஒளியில் நீலம் பிறந்தது: கறுப்பு வெள்ளை மரகத நிறங்கள் சேர்ந்த வரிகளால், மணியின் கோவைச் சுருளெனச் சுருண்ட சின்னச் சுடர் உருக் கண்டேன்; ஆம் ஓர் இருதலை ராகம் கண்டவ் வெளியிலே கவர்ச்சி கொண்டேன். ஒளிர்கிற அதனை நெஞ்சம் உவந்தது; தோளில் மார்பில் தழுவலாம் என என் நெஞ்சுட் தாபமும் மேலோங்கிற்று தழுவலாம், ஆயின் நச்சுத் தன்மை உண்டன்றோ? ஆம், ஓர் அழகிய தீமை போன்ற அதனை நான் அடித்தே கொன்றேன் 26-12-1966 செருப்புப் போடாது செல்லும் சேயிழாய், சற்று நில்: இச் சுருப்புக்குள் உனது பாதம் தோய்கிறதே, ஐயோ, என் விருப்புக்கும் உரிய பெண்ணே, வீதியில் மழைபெய்யுங்கால் குருத்துப் போல் உனது மென்கால் சேற்றிலே குமையலாமோ? குடைப்பிடித்துள்ளாய்; ஆனால் கொட்டுமிப் பெருமழை உன் உடைகளை நனைத்தால் உன்றன் உள்ளாடை தெரியுமன்றோ? நடைதவிர்; சற்று நில், நீ நனைதலைத் தவிர்த்த பின்னர் விடை தருகிறேன், இன்னும் வேகமாய் போகலாமே. மழையிலே நனையும் பெண்ணே வா, சற்றே ஒதுங்கி நிற்போம். வழி எங்கும் சக்தியேல், எவ் வாறு நீ மட்டும் சொந்த அழகுடன் போதல் கூடும், ஆதலால் மழை ஓயட்டும் மழையிலே நனையும் பெண்ணே வா, சற்றே ஒதுங்கி நிற்போம். 4-10-1966 வீதியில் போகும்போதுன் விழிகளைப் பார்த்தேன், என்றன் காதலி, நீயோ என்னைக் காணாது போல் செல்கின்றாய், மாதங்கள் சிலமுன், அன்பால் மகிழ்ந்து நாம் கலந்திருந்தோம் பேதங்கள் அற்றோம் என்று பேசினோம்: பிணைந்து நின்றோம். புன்னகை ஒன்று செய்தேன் பூவை நீ வருதல் கண்டு என்னகை மலரைக் கண்டாய் எனினும் நீ திரும்பிச் சென்றாய் முன்னெலாம் அன்பில் நாங்கள் முழுகினோம்; நினைக்கும் போதே இன்புற்றோம், முறுவல் பூத்தோம் இதயத்தில் மலர்ச்சி கொண்டோம். இன்று நீ அவற்றையெல்லாம் ஏன் அழிக்கின்றாய்? நாங்கள் சென்றநாள் வாழ்ந்ததெல்லாம் செயற்கையா? பொய்யா? என்றே இன்று எனதிதயத்துள்ளே எழுந்தன வினாக்கள்; உண்மை ஒன்று பின் பொய்'ய் மாறில் ஓ, அது பெரிய துன்பம்! வெறுப்புற்று வாழ்தல் அன்பே இயற்கைக்கு விரோதமாகும். வெறுப்புறும் போதே நாங்கள் துன்பத்தில் விழுகின்றோம் விருப்புறல், அன்பு செய்தல் இயல்பான வேட்கையாகும் விருப்பினை, அன்பைக் கொன்றால் துன்பமே மிகுந்துபோகும். என் விழிகளினைக் காண இயலாது திரும்புமாறும் என் முறுவலினை ஏந்த இயலாது குனியுமாறும் உன் உளம் பலம்குன்றிற்றா? உண்மையில் அன்பு செய்த முன்னைய நிலையை மூட முனைந்தனையா இப்போது? இறப்புற்ற கணங்களெல்லாம் உண்மையில் இறப்பதில்லை. பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின் பின்புறம் தொடர்ந்து நிற்கும். மறப்புற்று வாழ்தல் பொய் அம் மணித் துகள்களினை. நாங்கள் இறப்புற்ற போதும் அந்தக் கணங்களோ இறப்பதில்லை. 9-3-1967 வைகறை நிலவு வாசலில் விழுந்தது நெய் உறைந்தது போல் நீண்ட வானில் மேற்கே கவிழ்ந்து விழப்பார்க்கிறது. மேகக் கூட்டம் மிதந்து சென்றது போகப் போகப் புதைந்து புதைந்து வெள்ளிப் பூக்கள் மிளிர்ந்தன மங்கி வெள்ளிப் பூக்கள் மேகக் கூட்டம் தள்ளித் தெரியும் தனித்தனி மரங்கள் வைகறை நிலவு வரைந்த நிழல்கள் வைகறை நிலவு வாசலில் விழுந்தது இலைகளுக் கூடே நிலவு வழிந்தது நிலவுத் துளிகள் நெளிந்தன மண்ணில் வைகறை நிலவு மணக்கும் பூக்கள் பனிக்குளிர் சுமந்து பரவும் காற்று... அமைதி அழகை அணைத்துப் புணர்ந்தது. அடுத்த அறையில் குறட்டைச் சத்தம் இடைக்கிடை கேட்கும், எனினும் வைகறை நிலவு வாசலில் விழுமே!. 7-1-1968. இரவே, நீ வாழி! இளமைக் கனவு தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும் போர்வை போர்த்துவந் துள்ளாய் பொழுது புலர்வதன் முன் சேர்ந்து முயங்கச் சிறிதே துகில் களைந்தோம் எங்கள் துயரை எரித்துப் பொசுக்க இதோ, கங்குற் பொழுதே, நீ காதல் நெருப்பேற்றி இங்குவந்துள்ளாய் இளமை கனிகையில், நாம் மூச்சோடு மூச்சை உரசி முயங்குகிறோம். ஆழ்ந்த இரவின் அமைதி இளம் கனவைச் சூழ்ந்து கிடக்கும் சுகம் பெரிது நீ வாழி. இரவே நீ வாழி! இனிய உறக்கம் தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும் போர்வை போர்ந்துவந் துள்ளாய் பொழுது புலர்வதன் முன் நூர்ந்த அடுப்பை எரிக்க இனி மீண்டும் வேர்த்துக் களைத்து வெறி கொண்டு போராடிச் சேர்த்து வருதற்காய் சிறிது களைப்பாற நீ வந்து நிற்கின்றாய் நீண்ட பகற் பொழுது காய்ச்சி எடுத்த கனலைத் தணிக்கின்றாய். இரவே நீ வாழி! இனிய அமைதி பரவ வருகின்றாய். அமைதி பரவுகையில்.. பல்லி ஒலி செய்யும் 'பக்கிள்' என்று ஓர் மரத்தில் குந்தி இருந்து குரல் கொடுக்கும் அவ்வோசை விட்டு விட்டுக் கேட்கிறது. வீதிகளில் நீள்வெறுமை ஒட்டித் துயில் கிறது. எங்கோ ஒரு நாயின் சத்தம் எழவும், தொடர்ந்து சிலசத்தம் கேட்டு மறைகிறது நெஞ்சில் கிளர்ந்துவரும் பாட்டை மெதுவாய்ப் படிக்கும் இனந்தெரியாச் சிற்றுயிர்கள் செய்யும் சிறுசத்தம் கேட்கிறது. உற்றுணர்ந்தால் நெஞ்சம் உவக்கும் இவைதவிர பற்றி எரியும் பகற் பொழுதின் அல்லோலம் சற்றேனும் அற்ற இரவு தரும் கரிய போர்வைக்குள் நாங்கள் புகுந்து எம் துயர் மறப்போம் வேர்வை தணிய விழிமூடி நாம் துயில்வோம். பூக்கள் துயிலும் புழுதி மணலோடு தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் பனிக்கசிவில் சில்லிட்டுப் போன சிறுபுல் நுனிமீதும் காற்றுத் துயில் செய்யும் நாங்கள் கனவுகளை ஏற்றுத் துயில்வோம் இரவும் துயில் செய்யும். இரவே நீ வாழி இனிய உறக்கம் தரவந்து நிற்கின்றாய் தழுவும் கரும்போர்வை போர்த்துவந் துள்ளாய் பொழுது புலர்வதன்முன் இற்றைப் பகலில் இழந்தவற்றை நாம் மீட்கும் வெற்றிப் பொழுதாய் விடிய உனது கரும் போர்வைக்குள் நாங்கள் புகுந்து பலம் பெறுவோம். எங்கள் துயரங்கள் எங்கள் உளக்குமுறல் எங்கள் பொறாமை எங்கள் குரோதங்கள் எங்கள் சபலங்கள் எங்கள் உணர்ச்சிவெறி இத்தனையும் சற்றே இழந்து நாம் உன்வரவால் புத்தம் புது உலகுள் போய் புகுந்து காலைவரை எம்மை மறந்து கிடப்போம் அதனால்.... ஆ! இரவே நீ வாழி இனிது. 25-3-1968. உன்னுடைய முன்னிலையில் நான் துரும்பாய் ஆவதையும் உவப்பேன். அன்பே, இன்னும் இன்னும் நான்சிறிய உருவாகி கடைசியிலே இல்லாதாகி என்னை அழித்திடுவதற்கும் இணங்கிடுவேன் ஆயினும் நீ எங்கே உள்ளாய்? இன்னும் இங்கு தோன்றாத உலகிடையா? இங்கேதான் இருக்கின்றாயா? இன்றுவரை நான் அறிந்த எல்லோரும் உயர்ந்த ஒரு பீடத் த |